Advertisement

மயிலிறகு பெட்டகம் 18

இடையூரில்லாத நிம்மதியான தூக்கம் அனுரதிக்கு! இருந்த எரிச்சல் எல்லாம் இடம் தெரியாமல் காணா போயிருந்தது. அலாரம் ஒலி கூட அற்புதமாய் இனிக்க எழுந்து அணைத்தவள், பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள். அவனில்லை! அந்த அறையிலேயே இல்லை. இரவு இங்குதான் இருந்தானா என்றுகூட தெரியாது. ஆனாலும் அவள் முகம் புன்னகையை பூசித்தான் இருந்தது. அவளுக்கு இப்பொழுது இந்த திறப்புவிழாவெல்லாம் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. எப்பொழுது இரவு வருமென்றிருந்தது.

முடிவெடுத்தபின் காத்திருப்பது மிகுந்த சிரமமாகிப் போயிற்று.

“இன்னைக்கு ஒருநாள் காத்திருக்க கஷ்டமாயிருக்கா…அப்போ…” என்று மனசாட்சி அவளை கேட்கவரும் கேள்வி அவளுக்கு புரியாமலில்லை. அவளுக்கே அது ஆச்சர்யம் தான்!

தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவள், “இன்னைக்கு சொல்லிடனும் கண்டிப்பா…”என்று முணுமுணுத்தவாறே எழுந்தாள். வேகமாய் கிளம்பவேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் தலையை ஒதுக்கியவாறே ட்ரெஸிங் டேபிளின் முன் நிற்க,

அவனது செல்ல மயில் பொம்மையின் அருகில் தங்கநிறத்தில் ஒரு கவர், எடுத்துப் பார்த்தாள். உள்ளே நீளமாய் இருந்த அட்டைப்பெட்டியை பிரிக்க, மயில்கழுத்து நிறத்திலான பட்டுப்புடவையில் வெள்ளி ஜரிகை அணையாய் அமைந்திருந்தது. அங்கங்கே தோகை விரித்தபடி நின்றிருந்த மயில்களில் உள்ளம் கொள்ளை போக, ஆசையாய் வருடிக் கொடுத்தாள். உள்ளே இன்னுமொரு பெட்டி சிறியதாய் இருப்பது கருத்தில் பட, எடுத்துத் திறந்தவள் சத்தமாய் சிரித்தே விட்டாள்.

புடவையின் ஜரிகைக்கேற்ப வெள்ளி நிற நகைகள்! தோடு, கழுத்தை ஒட்டிய ஆரம், சிறிது நீளமான செயின் போன்ற நெக்லஸ், வளையல் என அனைத்தும் மயில்களும் முத்துகளுமாய்!

“ரசிகன்டா….நீ…”என்று மானசீகமாய் கொஞ்சியவள் அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்ப சென்றாள்.

கிளம்பி வெளியே வந்தவளது கண்கள் இருக்கமாட்டான் என்று தெரிந்தும் தேட,

“விக்ரம் கிளம்பிட்டான் மா…நம்மளையும் சீக்கிரம் வரசொன்னான்…” என்றவாறே வந்த கமலா, அருகில் வந்து மருமகளை பார்த்து மனநிறைவுடன் திருஷ்டி கழித்தார்.

“என் கண்ணே பட்டுடும் அனு…”என்று கன்னம் வழித்தவறை பார்த்து சிரித்தவள்.

“வாங்க அத்தை போகலாம்…”எனக் கிளம்பிவிட்டாள், அவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும்!

ஜெகன் வீட்டிலும் எல்லோரும் கிளம்பிவந்துவிட அடுத்தடுத்து காரில் பயணமானார்கள். அனுரதிக்கு அந்த இருபது நிமிட பயணம் இருநூறு மணிநேரமாய் தோன்றியது. அவன் முதன் முதலாக வாங்கி கொடுத்த புடவையில் அவனுக்காக பார்த்து பார்த்து அலங்கரித்து…! விட்டால் இறங்கி ஓடிச்சென்றடைந்து விடும் வேகத்தில் இருந்தாள். ஒருவாறாக அவளை மேலும் சோதிக்காமல் இடம் வந்துவிட,

ஏதோவொரு பதற்றம்! எல்லோரும் உள்ளே செல்ல ஆரம்பிக்கும் பொழுது தான் காரை விட்டே கீழிறங்கினாள். குனிந்த தலை நிமிராமல் பாதையில் கவனமாய் அடிப்பிரதோஷனம் செய்தவளுக்கு சட்டென்று மூளையில் மின்னல் வெட்ட நிமிர்ந்து பார்த்தாள்.

“A R டைல்ஸ் அண்ட் இம்போர்ட்டர்ஸ்…” கம்பீரமான கட்டடத்தில் ஊதா நிற எழுத்துக்கள் தங்க நிற விளிம்புகளுடன் மின்னின…

இதயம் நின்று துடித்தது அனுரதிக்கு! பார்த்தது பார்த்தபடியே இருக்க மூளை வேலைநிறுத்தம் செய்தது போல நின்றுவிட்டாள். கண்கள் குளமாகி பார்வையை மறைக்க இருட்டிக்கொண்டு வரும்போல இருந்தது. அப்பொழுது தன் கையோடு இன்னோரு கை இணைந்த உணர்வில் திரும்பி பார்த்தாள்.

விழியிலிருந்து நீர் இதோவென நின்றது,

“ஷ்……” என்றபடி தலையசைத்து விட்டு பிடித்திருந்த கையை இன்னும் இறுக்கியபடி அவளோடு கடைக்குள் ஒன்றாய் காலெடுத்து வைத்தான்.

உள்ளே அவளோடு சேர்ந்து பூஜையில் கலந்து கொண்டவனுக்கு அதன்பின் நிற்க நேரமில்லாமல் வேலைகளால் சூழப் பட்டு சுழன்று கொண்டிருந்தான் விக்ரமாதித்தியன். ஆனால் அனுரதியின் பார்வை அவளின் மேல் பதிந்தே விட்டது.

அவன் எங்கு சென்றாலும் அவளது விழிகளும் அவன்மீதே நிலைத்திருந்தது. வெற்றி மெதுவாய் அனுவிடம் வந்து,

“அனு நீயே உன் புருஷனை கண்ணு வச்சிடுவ போலேயே….” என்று கேலியாய் சொல்லி கூட விட்டான்.

அதையெல்லாம் அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மதிய உணவு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருக்க, அங்கேயே அவர்களை உணவு முடித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேலைகளை பார்க்க அங்கேயே இருந்து விட்டான் விக்ரமாதித்தியன்.

வீட்டிற்கு வந்தவளுக்கு எதுவுமே செய்ய பிடிக்கவில்லை. நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த மனமும் மூளையும் ஓய்விற்கு கெஞ்ச அறைக்குச் சென்று அப்படியே படுத்து கொண்டாள். கண்விழித்த போது அறை நிசப்தமாய் இருந்தது. காற்றாடி கூட போடாமல் நகை புடவையோடு படுத்ததால் வியர்வையில் நனைந்திருக்க, லேசான காட்டன் புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

குளித்துவிட்டு வந்து தலையை துவட்டியவள் முடியை அப்படியே விட்டுவிட்டு காபியை எடுத்துக்கொண்டு வந்து பால்கனியில் அமர்ந்து கொண்டாள்.மனமிருக்கும் நிலைமையில் தனிமை தேவைப்பட்டது. எதிர்வீட்டை பார்த்தபடி காபியை பருகி கொண்டிருந்தவளுக்கு காற்றிலாடும் ஊஞ்சல் ஆசுவாசத்தை தர, யோசனையுடன் எழுந்தவள் ,கமலாவிடம் சொல்லிவிட்டு எதிர்வீட்டிற்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

இன்னதென இனம்புரியா உணர்வுகள் மனதை சூழ்ந்திருந்தன. தலை முழுக்க கேள்விகள், இன்பமா, துன்பமா என்று சொல்லதெரியாத அளவிற்கு யோசனைகள். காலையில் எழுந்ததும் எதற்காக இரவை வேண்டினாளோ…! அது தன்னை இப்படி புரட்டிபோட்டு தாக்கிவிடும் என்று நினைக்கவில்லை. பதிமூன்று வருடமாய் பண்ணிக்கொண்டிருந்த ‘ஆதி’ ஜெபத்திற்கு விடையாய்! அவளது காத்திருப்பிற்கு பலனாய் அவளை நோக்கி வந்தவனின் காலடி சப்தத்தில் உணர்ச்சி கலவையில் சிக்கி இருளில் தன்னை தொலைத்தவாறு அமர்ந்திருந்தவளின் செவிகள் சிலிர்த்தன…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement