Advertisement

மயிலிறகு பெட்டகம் 17 2

அனுவின் நிலைமை தான் மோசமாய் போனது. தலையும் புரியாத காலும் புரியாத நிலைமை! என்ன ஆரம்பித்தான் எதற்கு முடித்தான் எதுவும் விளங்கவில்லை. கையில் வைத்திருந்த மிட்டாயை பறிகொடுத்த குழந்தையின் நிலைக்கு தள்ளப்பட்டாள். மனம் முழுக்க குப்பென்று ஏக்கம் பரவ, அதற்கு மேல் தாங்க முடியாமல் வேகமாக தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால் அறையில் விக்ரம் இல்லை, சென்றிருந்தான்! அவ்வளவு எரிச்சல் வந்தது அனுவிற்கு.

விடிந்தால் திறப்புவிழா…முக்கியமாய் வெளியே செய்ய வேண்டிய வேலையெல்லாம் முடித்துவிட்டு மடிகணினியோடு அறையில் அமர்ந்து விட்டான் விக்ரமாதித்தியன்.

இரவு உணவின் பொழுது கமலா,

“காலையில நேரமே கிளம்பனும் அனு, இப்பவே புடவை, நகை எல்லாம் எடுத்து வைச்சுக்கோ…” என்றுவிட,

அதையெல்லாம் எடுத்து வைக்கிறேன் என்ற பேரில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள். அலைந்து கொண்டிருந்தாளே தவிர ஒரு வேலையும் நடந்த பாடில்லை.

நடக்க வைக்கும் நிதானம் சிறிதளவும் இல்லை. முன்தினம் விக்ரமின் செயல்கள், அதனால் தோன்றிய உணர்வுகள் எல்லாமாக சேர்ந்து அவளை படுத்தி வைக்க, மனம் முழுக்க எரிச்சல் மண்டி இருந்தது. எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க சுற்றி கொண்டிருந்தவளை பார்த்தும் பார்க்காமல் கவனித்து கொண்டிருந்தான் விக்ரம்.  அவளது எண்ணவோட்டங்களை அவள் முகத்திலிருந்தே அறிந்து கொண்டவனுக்கு  ஏனோ அவளை சீண்டும் எண்ணம் தோன்ற, அவளறியாமல் அவன் இதழ்களில் ரகசிய புன்னகை!

மெதுவாய் தலைநிமிர்ந்து அவளை பார்த்தான் , கட்டிலுக்கும் அலமாரிக்கும் நடுவில் இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருக்க, ஒவ்வொரு தடவையும் சேலைகளை எடுக்க, மெத்தையில் போட்டு பார்க்க, என அவள் அவனை கடந்து தான் போய் வந்து கொண்டிருந்தாள்.

சாவகாசமாய் குனிந்தவன் சரியாய் அவள் அருகில் வரும்பொழுது சோம்பல் முறிப்பதாய் மடிக்கணினியை முன்னாடி இருந்த டீபாயில் வைத்துவிட்டு கண்களை மூடி கைகளை முறுக்கி கால்களை அவள் பாதையில் நீட்டி மடக்க, அதை எதிர்பார்த்திராதவளோ தடுமாறி முன்பக்கம் சாய்ந்து விட அவனும் சட்டென்று பிடிக்க மெத்தென்று அவன் மேலேயே விழுந்துவிட்டாள்.

தடுமாறுவாள், கைபிடிக்கலாம் , கேலிசெய்து குறும்பாய் பேச்சை வளர்க்கலாம் என்று நினைத்தவன் சத்தியமாய் இதை  எதிர்பார்க்கவில்லை.

பூக்குவியல் போல தன்மேல் விழுந்தவளை இமை தட்டாமல் ரசிக்க ஆரம்பித்தான். அனுவிற்கோ இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. கூட காதருகே அவன் இதயத்துடிப்பு கேட்க, பரவசமான பதட்டம் தான்! மெதுவாய் எழுவதற்கு நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையில் உறைந்தே போனாள்.

வெகுஅருகில் அவள் முகத்தை பார்த்தவனது பார்வை மெல்ல மாற, விளையாட்டு விபரீதமானது புரிந்தும், அவளை விலக்க தோன்றவில்லை. மூச்சுக்காற்று பலமாய் வீச அவளருகில் சென்றபோது, பதட்டத்தில் நெஞ்சில் கைவைத்து சட்டையோடு சேர்த்து அவனையும் இறுக்க, விக்ரமின் நிலைமை இன்னும் மோசமாயிற்று. முன்தினம் போல அவன் அவளை விட்டு விலகவில்லை. நிதானமாய் அவளை தன்பக்கம் இழுத்து இன்னும் தன்னோடு நெருங்க வைக்க, அனுரதிக்கு மொத்தமும் மறந்தது. அதுவரை இருந்த பதட்டம் பயமெல்லாம் போய் மனது சிறகடிக்க,துடிக்கும் இதழ்கள் கூட நிதானத்தை அடைந்து சிரிக்கவா என்பதை போல விரிவதற்கு தயாரானது. மனதின் போராட்டங்கள் நின்று ஆழ்கடலில் பதிந்து போன சிற்பி முத்தாய் இருந்த அடிமனது நேசம் தலைதூக்க,நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள் அனுரதி.

விக்ரமிற்கு ஏதோ புரிவது போலிருந்தது. அவனுக்கு தான் இப்பொழுது பதட்டம் தலைதூக்கியது. கையெல்லாம் சில்லிட்டு போக பரவசத்துடன் அவன் அவளை பார்க்க, அவளும் அவன் நெஞ்சில் கைவைத்தவாறு அவனை பார்க்க, விழிகள் நிறையவும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளுக்கு இணையான உணர்ச்சி கலவையால் அவனும் திணற, ஒரு முடிவெடுத்தவனாய் அவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு எழுந்தவன், அவளின் முகத்தை கவனமாய் தவிர்த்து விட்டு கட்டிலில் கிடத்தி போர்வையை போர்த்தி விட்டான்.

அனுவின் விழிகள் விரிந்தன. அவளது கண்களில் தெரிந்த கேள்வியை உணர்ந்தவன், உணராதது போல ஒரு புன்னகையை சிந்திவிட்டு,

“தூங்கு அனு… காலையில சீக்கிரமா எழனும்….” என்றவாறே நெற்றியில் இதழ் பதித்தான்.

முதல் இதழ் ஒற்றலில் தேகம் சிலிர்க்க கண்களை மூடித் திறந்தாள் அனுரதி. அந்த ஓரிரு நொடிகளே போதும் போன்ற நிறைவு! கண்கள் கலங்கியிருந்தன ஆனால் எந்த கேள்வியும் கேட்கவில்லை. சோபையாய் இதழ் விரித்தவளின் விழிகள் தானாய் மூடிக்கொண்டன!

Advertisement