Advertisement

மயிலிறகு பெட்டகம் 17

புதிதாக கிளை தொடங்கும் வேலை தலைக்குமேல் இருக்க, விக்ரமாதித்தியனின் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்றநேரத்தையெல்லாம் அவ்வேலைகள் விழுங்கி கொண்டன. அவனது உழைப்பு அனுரதியை அசைக்க, அவளாகவே அவன் வேலையை பிடுங்கி செய்ய ஆரம்பித்திருந்தாள் . சகஜமாய் பேசவில்லையெனினும் வழக்கம்போல் அவனது உணவு மற்ற விஷயங்களை முழுமையாய் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் வேலை விஷயத்திலும் உதவி செய்ய அரம்பித்தாள்! ஒரே ஒரு மனக்குறை,  அவன் கஷ்டப்படுகிறானே என இவள் போய் பார்த்தால் அவன் சந்தோசமாய் விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க போவான்.

“ இவன் ரெஸ்ட் எடுக்கட்டுன்னு நான் வேலை பார்த்தா, இவன் என்ன பண்றான்…” என்று மனதிற்குள் திட்டி தீர்ப்பவள் பிறகு கடை ஆரம்பிக்கும் வரை தானே என அவளே சமாதானம் ஆகிக் கொள்வாள்.

அவனும் அவளது உதவிகளை எந்தவொரு அலட்டலுமில்லாது ஏற்று கொள்வது  மட்டுமல்லாமல்  அவளுக்கு தெரியாததை பொறுமையாய் சொல்லிக் கொடுப்பது,  சின்னதாக ஏதாவது செய்தால் கூட மனமாற நன்றி நவிழ்வது என அனுவை ஈர்த்துக் கொண்டிருந்தான். இப்படி அவளிடம் அவன் மதிப்பு ஏற, அவனுடைய சேட்டைகளை கண்டுகொள்ளாமல் மன்னிக்க பழகி சில்லறை முறைப்புகளை கைவிட்டிருந்தாள் அனுரதி. (முறைக்க வரவில்லை என்பது வேறு விஷயம்!)  இப்படியாக அதிகபட்ச சேதாரங்கள் இல்லாமல் வாழ்க்கை செல்ல ஆரம்பித்திருந்தது.

ஆனாலும் ஒருவிஷயம் சின்ன சந்தேகமாய் முளைத்து இப்பொழுது உறுதியாய் உறுத்தி கொண்டிருந்தது! விக்ரமாதித்தியன் என்னதான் எல்லா வேலைகளிலும் அனுவை சேர்த்துக் கொண்டாலும் கடையின் பெயர் குறித்த விஷயங்கள் அது தொடர்பான வேலைகளில் மட்டும் அவளை நெருங்கவிடவே இல்லை!

முதலில் புரியாமல் இருந்த அனுரதிக்கு போக போக மெலிதாய் விஷயம் விளங்க, அதென்னவென்று அறியும் ஆவல் அதிகரித்தது. ஆனால் அதை விக்ரமிடம் கேட்கவும் தயக்கம். இப்படியிருக்கையில் ஒருநாள் அவளுக்கேத்த சமயமாக வெற்றியின் கையில் பெயர் பதிவு செய்யும் ஆவணங்கள் இருந்த பைலை பார்த்தவள், ஆவலாய் அதை வாங்க போக சட்டென்று அவன் கையை இழுத்து கொள்ளவும்,

ஆச்சரியமாய் “ என்னண்ணா நீயுமா…” என்றாள். அவள் சொல்ல வருவது புரிய,

“ நான் இல்லம்மா… உன் புருஷன் தான் பைலை கொடுக்கும் போதே உன்கிட்ட காட்டவோ கொடுக்கவோ வேணாம்னு சொன்னான்…” என்று உண்மையை கூற,

“ஏன்…” என்றாள் பெருகி கொண்ட ஆவலுடன்,

“அதென்னமோ சர்ப்ரைஸ்ன்னு சொன்னான்… நீ இப்போ பார்க்க வேண்டாமாம்…” எனவும்,

இம்முறை என்னவென்றல்லாம் கேட்க தோன்றவில்லை அனுவிற்கு! யோசனையுடன் தலையாட்டியவளின் முகத்தில் இருந்து ஒன்றும் விளங்காமல் ஒருவேளை கோவித்து கொண்டாளோ என்ற நினைப்புடன்,

“சரி….இந்தா பார்க்கிரியா…” என்று தமையனாய் பைலை நீட்ட,

கையை மடக்கிக்கொண்டு ம்ஹிம் என்ற தலையாட்டினாள் வேகமாய்!

அவளது செய்கையின் அர்த்தம் புரியாமல் ,

“நான் விக்ரம் கிட்ட சொல்லமாட்டேன் அனு…” என்றான் சிரிப்போடு,

“ப்ச்…” என்று செல்லமாய் அண்ணனை முறைத்தவள்,

“அவர் இவ்வளவு தூரம் சொல்லி இருக்காரு, அதை மீறி பார்க்கிறது சரியா அண்ணா…” என்று அவள் கேட்க, வெளிப்படையாகவே அசந்துபோனான் வெற்றிமாறன்!

“அடியாத்தி… என்னடா நடக்குது” என்றவன் தன் கையை நறுக்கென அவனே கிள்ளிக்கொள்ளவும்,

“ஓவரா பெர்பார்மன்ஸ் பண்ணாத அண்ணா, என்ன புதுசா கேட்குற, அவரை நான் மதிக்காம இருந்ததை எப்போ நீ பார்த்த…” என்றவள் அதற்குமேல்  அங்கிருப்பது சரியில்லையென நகர்ந்துவிட,

அவளது பதிலை கேட்ட வெற்றிக்கு ஆமாமென தான் தோன்றியது! அனு எங்கேயுமே விக்ரமை விட்டுக்கொடுத்தது இல்லையே! திருமணத்திற்கு முன்கூட தனியாய் அவனை பார்த்து முறைப்பதெல்லாம் இருந்தாலும் தன்னிடமும்  முகிலனிடமும் கூட அவனைப் பற்றி புறம் பேசியதில்லை என்பது இப்போது புரிய! ஏதோ சொல்லவொண்ணா திருப்தி வந்து வெற்றியின் நெஞ்சில் அமர்ந்துகொள்ள நிம்மதியாய் வேலையை பார்க்க போனான்.

புதுக்கடை திறப்பதற்கான நாள் நெருங்கி கொண்டிருந்தது. முக்கியமான டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஏற்றிக் கொண்டு இருந்தாள் அனுரதி. நிசப்தம் லேசாய் பாதிக்க திரும்பி பார்த்தாள். அறை வெறுமையாய் இருந்தது. லேசாய் சலிப்பு எட்டி பார்த்தது அவளுக்கு. இப்பொழுது இருக்கும் நிலைமை முன் எப்பொழுதும் விட பிடித்தமானது தான்.விக்ரமிற்கும் அவளுக்கும் இடையே ஒரு அழகான சரியாய் விவரிக்க இயலாத வகையில் ஒரு பிணைப்போ, நெருக்கமோ ஏதோவொன்று உருவாகியிருந்தது! இன்னும் கடை விஷயத்தை தவிர வேறேதும் பேசிக்கொள்ளவில்லை தான், ஆனாலும் அவன் பார்வை, நடந்து கொள்ளும் விதம் அனைத்தும் அவள்மேல் உரிமையாய் விழுந்தது.

அதற்கான அர்த்தங்கள் புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் பிடித்திருந்தது! ஆனால் இப்பொழுது அதையும் தாண்டி தன் மனது எதையோ விரும்புவதை ஏக்கமாய் உணர்ந்தவளுக்கு  பெருமூச்சுதான் வந்தது. இருந்த யோசனையில் வேலையும் ஏதோ குழம்பி சதி செய்ய, சரி செய்ய முயன்றவள் இன்னும் சிக்கலாக்கி கொண்டது தான் மிச்சம். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் “ப்ச்…” என்று எழப் போனவள்,

ஷாக் அடித்தது போல் அப்படியே அமர்ந்து விட்டாள்.மவுசை பிடித்திருந்த அவள் கையின் மேல் கைவைத்து அவள் உட்கார்ந்திருந்த அளவிற்கு குனிந்து அவள் வேலையை சுலபமாக்கி அவளை தவிக்க வைத்து கொண்டிருந்தான் விக்ரமாதித்யன்.

அவனுக்கே உரித்தான நறுமணம் அவளை மொத்தமாய் தாக்க, கணினியை பார்க்க குனிந்திருந்தவனின் தாடை தோள்பட்டையில் லேசாய் பட, மொத்தமாய் வீழ்ந்து தான் போனாள்.

அது எதுவுமே தெரியாமல் அவளது அவஸ்தை புரியாமல் அவன் அவளுக்கு வேலையை பற்றி  சொல்லிக்கொண்டிருக்க, இவன் ஏன் இவ்வளவு பக்கத்தில் நின்று தொலைக்கிறான் என்று அவள் மனம் தத்தளித்தது.

கன்னத்தில் அவன் அசையும் போது உரசிய அவனது லேசான ரோமங்கள் அவளது உயிரை மொத்தமாய் உருக்கின! அதற்குமேல் தாங்கமாட்டாதவளாய் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

அவனது பேச்சு சற்று நேரத்தில் நின்றுவிட்டது புரிந்தது.அவன் தன்னை பார்க்கிறான் என்பது புரிந்தது. அவள் நெற்றியில் அரும்பியிருக்கும் வியர்வை துளிகளும் நடுங்கும் இதழ்களும் அவளை காட்டி கொடுத்து விடும் என்பதும் புரிந்தது. ஆனால் அவளால் தான் கண்களை திறந்து இயல்பாக முடியவில்லை.

அவனது மூச்சுக்காற்று  கன்னத்தில் விழவும், பதறியவள் சிரமப்பட்டு இமைகளை பிரிக்க, வெகு அருகில் அவளைத்தான் ரசித்து கொண்டிருந்தான் அவளது கணவன்! அவனது கண்களை சந்திக்க முடியாமல் கீழே குனிந்ததும் அவன் அவளது கையை லேசாய் அழுத்த, என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் வேகமாய் அதனது இணையோடு சேர்ந்து கொண்டன. அதன் பின் ஏதோ மாயஉலகில் கலந்து விட்டதை போன்ற உணர்வுதான். மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அவனது கண்களோடு கலந்து மயங்கி இருந்தாள்.

இன்னும் அருகில் சென்றான் விக்ரமாதித்யன். அவனது மூக்கு அனுரதியின் மூக்கோடு உரச, மயக்கும் புன்னகையுடன் அவளை பார்த்தான் . அடுத்து வருவதை அறிந்தவளாய் அவள் விழிகள் சட்டென்று மூடிக்கொள்ள,

விக்ரமின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு, சிரிப்போடு அவளது தலையில் லேசாய் முட்டியவன், அவள் கண் திறந்ததும் இவன் விழிகளை விலக்கி, திரையில் பதித்து “ இவ்வளவு தான் அனு…பாரு முடிஞ்சுது…”என்று அவள் சிக்கலாக்கி இருந்த வேலையை முடித்து விட்டு நிமிர்ந்து கொண்டான்.

Advertisement