Advertisement

மயிலிறகு பெட்டகம் 16

இப்பொழுதெல்லாம் அனுதினமும் அணுஅணுவாய் அனுவின் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான் விக்ரமாதித்தியன்! இதற்கு முன் ஹைதராபாத்தில் இருந்து வந்தபொழுது அவனின் மாற்றம் அவள் அறிந்தது தான். ஆனால் அவையாவும் அவன் விருப்பத்தை அவளுக்கு காட்டுவது போலவும் கூடவே அவன் அன்று செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டுவது போலவும் தான் இருக்கும். ஆனால் இப்போது கண்டிப்பாக அப்படி தோன்றவில்லை! அவனது மாற்றம்,அவன் காட்டும் உரிமை, முக்கியமாக அவனது பார்வை! அவளை மொத்தமாய் படுத்தி வைத்தது. இன்னும் சரியாக சொன்னால் அவனது இந்த நெருக்கம் அவளது சிந்தனையையே செயலிழக்க வைத்திருந்தது.

இப்படி எண்ணங்களின் பிடியில் கட்டுண்டு இயந்திரமாக அடுக்களையில் வேலையாயிருந்தவள் வெளியே செல்ல திரும்புகையில் எதிரே வந்தவனை கவனிக்காமல் மோத போய் கடைசி நொடியில் சுதாரித்து சட்டென்று பிரேக் போட்டு நிற்க முயற்சித்தாலும் அவன்மேல் உரசிய பின் தான் பின்பக்கம் நகர்ந்து நிற்கும் படி ஆயிற்று.

திடீரென நடந்த களேபரத்தில் விதிர்த்து போனவளுக்கு இயல்பிற்கு திரும்பவே சிலநேரம் பிடித்தது. ஒருவழியாக மீண்டு, நல்லவேளை இடிக்கவில்லை என்று ஆசுவாசப்பட்டு கொண்டு நிமிரும்பொழுது தான் கவனித்தாள் அவன் அவ்வளவு நேரமும் அங்கே அப்படியே தான் நின்று கொண்டிருக்கிறான் என்பதை! பதட்டத்தை மறைத்து மெல்ல நிமிர்ந்தாள். கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரமாதித்தியன். அவன் நின்ற தோரணையே அவனுக்கு அங்கிருந்து நகரும் உத்தேசம் இல்லை என்பதை காட்ட, அவளுக்கு இன்னும் பதட்டம் கூட ஆரம்பித்திருந்தது! அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தத்தளித்தவளது இதழ்கள் தானாய்,

“சாரி…”என்றன.,

இத்தனை நாட்களாக இடித்தால் கூட மன்னிப்பு கேட்காதவள் இன்று அநியாயத்திற்கு சொதப்பிக் கொண்டிருந்தாள். கண்கள் மட்டும் அவளை துளைத்துக் கொண்டிருக்க, அப்பொழுதும் அவன் சிலையாய் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் , கொஞ்சமாய் இயல்பிற்கு திரும்பியிருந்தவள்,

“என்ன…?” என்றாள் முறைப்போடு,

அவள் கேட்பதறக்காகவே காத்திருந்தவன் போல ,

“தண்ணி….” என்றவன் அவளை பார்த்தவாறே நெருங்கிவந்து அவளுக்கு பின்னால் மேடையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கைநீட்டி எடுத்துக்கொண்டு  திரும்பி சென்றுவிட்டான்.

போகப்போக அவளை இன்னும் படுத்தி வைத்தான் அவன். அவள் தெரியாமல் இடித்துவிட்டு திட்டுவானோ என்று பயந்தோடிய காலம் போய், அவன் இயல்பான முகத்தோடு வேலையின் ஊடே இடித்துவிட்டு சன்னமாய் சாரி கேட்டுவிட்டு செல்வது வழக்கமானது! அதுவும் ஹாலில் , வெளியில் அவசரமாய் செல்லும்போது இப்படி. அப்பொழுது அவன் முகத்தை பார்த்தால் உண்மையிலேயே தீவிரமாக தான் இருக்கும். அதனால் அவனிடம் முறைக்கவும் முடியாமல் கேட்கவும் முடியாமல் இன்னும் தான் குழம்பி போவாள். இப்படிதான் ஒருநாள் விடுமுறை நாளில் அக்கம்பக்கத்து குழந்தைகளோடு அவள் விளையாடிக் கொண்டிருந்தாள். மாடியில் மேல் படி வளைவில் ஒழிந்து கொண்டிருந்த பொழுது சட்டென்று அவளை அவன் பின்னால் இழுக்க, யாரென்று பார்க்கும் முன்னரேஅவன் இழுத்ததில் நிலையிழந்து அவன்மேலே சாய, பதறி நிமிர்ந்தவளுக்கு அவனை பார்த்ததும் ஒருபக்கம் ஆசுவாசமாய் இருந்தாலும் சுறுசுறுவென கோபம் ஏறியது!

“இவன் என்னதான் நினைச்சிட்டு இருக்கான்…நான் அமைதியா இருந்தால் என்ன வேணாலும் செய்வானா…” என்று கோபம் பொங்க, அவனை பேச வாயெடுத்த நேரம்,

அவள் இடையில் கைவைத்து அவன் மேலும் தன்பக்கம் இழுக்க, மொத்தமாய் அவன் மேல் சாய்ந்தவளுக்கு சுற்றுப்புறம் மறந்து போனது, அவன் சட்டையை இறுக்கி பிடித்தவாறே நின்றவள் அவனின் விழிகளை சந்திக்க, அவனோ விவரிக்க முடியா பார்வையுடன் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அதன்பின் கலந்துவிட்ட விழிகளை பிரிப்பது இருவருக்குமே சிரமமாக இருந்தது போலும்! இருவரும் முயற்சி எடுக்கவே இல்லை. மேலும் சிலநொடிகள் இப்படியே கழிய, முதலில் அந்த மோனநிலையை கலைத்தது அவன்தான்! அவள் காதருகே வந்து,

“நல்லவேளை அவன் போயிட்டான்., நான் மட்டும் வரலைனா இந்நேரம் நீ அவுட் ஆகி இருப்ப…” என்று கிசுகிசுப்பாய் சொல்ல,

அவளிருந்த நிலையில் அவன் என்ன பாஷை பேசுகிறான் என்று சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை. இடையில் இருந்த அவனது கைவேறு இம்சிக்க, அவன் பேச்சில் வழிதவறிய குழந்தையை போல் அவள் விழிக்க, அவளை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு இந்த நிமிடம் இப்படியே உறைந்து போய்விடாதா என்ற எண்ணம் தான்! கூடாதே! இப்படியே நின்றுவிட்டால் எப்படி…….! வேகமாய் தலையசைத்தவன் , அவளை மேலும் தவிக்க விடாமல் அவளை தேடி வந்த குட்டிபையன் திரும்பி செல்லும் திசையை காட்ட, சூழ்நிலை சிறிது சிறிதாய் அப்பொழுது தான் புரிய சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றவள் தன் உணர்வுகளை மறைத்து அவனை முறைப்பதற்காக நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ என்னவென்று ஒரு புருவத்தை ஏற்றி பார்த்தான், அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் படிகளில் இறங்கி உள்ளே ஓடிவிட்டாள் அனுரதி.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement