Advertisement

மயிலிறகு பெட்டகம் 14

அண்ணனைப் பார்த்ததும் ஆசையாய் அருகில் ஓடியவள்,

“அண்ணா…”என்றழைத்தபடி அவன் கையை பிடித்துக்கொண்டாள். வெற்றிமாறனுக்கும் மகிழ்ச்சியில் கண்கள் பனிக்க, பாசமாய் அவள் தலையை தடவியவாறு,

“எப்படிடா இருக்க…” என்றான் லேசாய் கரகரத்த குரலில்,

“இதுவரை பாசமலர் படத்தை டீவில தான் பார்த்திருக்கேன். இப்போதான் நேரா பார்க்கிறேன்…அடடா…” என்றபடி வந்த விக்ரமை இவனா பேசுவதென்று ஆச்சர்யமாய் பார்த்தான் வெற்றிமாறன்.

“வெல்கம் பேக் வெற்றி…” என்றபடி விக்ரம் சிரிக்க,

“எப்படிடா இருக்க…” என்றபடி லேசாய் கட்டியணைத்து விடுவித்தான் வெற்றி. அதைப் பார்த்த அனு லேசாய் தலையை சிலுப்ப, அதைக் கண்டுகொண்டவன்,

“பொறாமை..”என்றான் சிரித்தபடியே,

அதற்கு ஒருமுறைப்பை பதிலளித்தவள் வேறு பக்கம் திரும்பி கொண்டாள். அதை பார்த்ததும் விக்ரம் பயந்தது போல் ஒருகையால் வாயை மூடிக்கொள்ள, இதை அச்சுபிசகாமல் பார்த்துக் கொண்டிருந்த வெற்றிமாறனுக்குத் தான் தலை கிறுகிறுப்பதை போலிருந்தது. தன் இயல்பிற்கு மாறாக தலைகீழாய் நடந்தவர்களை பற்றி சிந்தித்தவாறே ஒருவாறாக வீடு வந்து சேர்ந்துவிட்டான்.

 திருமண வேலைகள் களைகட்டியது. துணிமணி நகை வாங்க என பரபரப்பாய் அணைவரோடு சேர்ந்து சுற்றினாலும் அனுவின் கவனத்தில் ஒரு ஓரம் மட்டும் விக்ரமின் வசமே!

அன்றும் முகூர்த்த அலங்காரத்திற்கு ப்யூட்டிஷனை கலந்து ஆலோசிக்க பூரணியும் அனுவும் மணமகளோடு சென்றிருக்க, அகல்யா வீட்டிலிருந்த நேரம் பரபரம்பரையாக மாங்கல்யம் செய்து கொடுக்கும் ஆசாரி அதுவிஷயமாக பார்க்க வர அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் சட்டென்று ஒன்று தோன்றியது அகல்யாவிற்கு! அகல்யாவின் மாமியாருக்கு அனுரதி என்றால் உயிர். சிறுவயதிலிருந்தே அவளுக்கு அரிய விலைமதிப்புள்ள அழகான பொருட்களை வாங்கி சேர்ப்பது அவரது வழக்கமாயிருந்தது! அதில் பொக்கிஷமானது நவரத்தினம் பதித்த ஐம்பொன் தட்டில் வீற்றிருக்கும் இரு அன்னப்பறவைகளின் நடுவே இருந்த குங்குமச்சிமிழ்! சிறுவயதில் இருந்தே அனுவிற்கு அதன்மேல் கொள்ளை இஷ்டம். பொக்கிஷமாக பாதுகாத்தாள். இப்பொழுது அகல்யாவின் எண்ணமோ அனுரதிக்கு சொந்தமானது அதை அவள் எப்போதிருந்தாலும் புகுந்தவீட்டிற்கு எடுத்து போய் விடுவாள். அவளின் அம்மா கொடுத்தது போலவே ஒன்று இங்கு இருக்க வெற்றியின் மனைவிக்கு செய்து கொடுத்தால் என்ன என்பதே! தான் ஆசைப்பட்டாலும் மகளின் அபிப்பிராயத்தையும் கேட்டுவிட நினைத்தவர் உடனே அனுவிற்கு அழைத்து விஷயத்தை உரைக்க,

“இதில என்கிட்ட கேட்க என்னமா இருக்கு…எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆமா நானே நினைச்சுட்டு இருந்தேன், அந்த சிமிழை அங்க எடுத்துட்டு போய் குங்குமம் வச்சி தினமும் எடுத்துக்கனும்னு…நீங்க சொல்றது சரி தான்…. நம்ம வீட்டில அண்ணிக்கு செஞ்சி கொடுங்க , அழகா இருக்கும்…” என்றுவிட சந்தோசமாய் போனை வைத்தவர் ஆசாரியிடம் இதைப்பற்றி விளக்க, அவரும் சரியென்று விட்டு அளவிற்கு அனுவுடையதை கேட்டார்.

திருமண அலங்காரங்கள் ஜாக்கெட் வேலைப்பாடுகளின் ஆலோசனைகளில் இருந்தவளின் கவனத்தை மீண்டும் அலைபேசி கலைக்க, செல்லை காதுக்குக் கொடுத்தவள், அகல்யாவின் பேச்சில் முழுகவனம் வைக்காமல் சிமிழ் இருந்த இடத்தை சொல்லிவிட்டு போனை அணைத்தாள்.

அந்நேரம் பார்த்து வீட்டிற்குள் வந்த வெற்றியையும் விக்ரமையும் பார்த்தவர்,

“வெற்றி போய் அனு ரூம்ல மர அலமாரியில் பாட்டி கொடுத்த குங்குமச்சிமிழ் இருக்கும், எடுத்துட்டு வா, “என்றுவிட்டு சாவி இருந்த இடத்தையும் சொல்ல,

சரியென்றவன் விக்ரமோடு அனுவின் அறைக்குச் சென்றான். ஒவ்வொரு பொருளும் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்த விதமும் சுவரின் நிறத்திற்கு ஏற்ப மாட்டப்பட்டிருந்த திரைசீலைகளும் இதர அலங்காரப்பொருட்களும் பார்த்ததுமே இதமளிக்க, இதழ்களில் புன்னகையுடன் அறையை சுற்றிப்பார்த்தான் விக்ரமாதித்தியன். கல்யாணம் ஆகி இத்தனை நாட்களில் அனுவின் அறைக்கு வந்திருப்பது இதுவே முதல்முறை! வந்தால் ஹாலோடு….எங்கே ஹாலுக்கு இயல்பாய் வந்துபோவது கூட திருமணத்திற்கு பிறகுதானே!

முன் எப்படியோ இப்பொழுது அவள் அறையை பார்க்க பார்க்க இனித்தது அவனுக்கு. வெற்றியை கண்டுகொள்ளாமல் அறையை சுற்றி வந்தவன் பால்கனிக்குச் சென்று எதிரே இருந்த தங்களின் அறையை ஆசையாய் பார்த்து விட்டு வந்தான். அதற்குள் அலமாரியின் சாவியை தேடி எடுத்திருந்த வெற்றி,

“ஒரு சாவியை எவ்வளவு பத்திரமா வச்சிருக்கா பாரு விக்ரம்! ஏழு கடல் ஏழு மலை தாண்டி மாதிரி பத்து டப்பா தாண்டி…..” என்று அலுத்துக்கொண்டே அலமாரியை திறக்க, முறுவலுடன் அவனருகில் வந்த விக்ரம் ஒரு ஆர்வத்துடன் அலமாரியின் தட்டுகளில் பார்வையை பதிக்க, பதித்த பார்வையை அதற்குமேல் விலக்கவே முடியாமல் போயிற்று! சொல்லவொண்ணா உணர்வு உடம்பு முழுவதும் தாக்குவதைப் போல உணர்ந்தவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்படவே, வெற்றியை எப்படி கிளம்புவது என்று வேகமாக அவன் மூளை சிந்திக்க புண்ணியமாக அந்த நேரம் அகல்யா வெற்றியை அழைக்கவே, சட்டென்று சுதாரித்தவன்,

“நீ போ வெற்றி, நான் பூட்டிட்டு வந்துடுறேன்…” என்றான் இயல்பாக்கிய குரலில்,

அவன் சென்றதும் ஆழ மூச்செடுத்துவிட்டு நின்றவனுக்கு தான் என்னமாதிரி உணர்கிறோம் என்றே புரியவில்லை. ஆயிரம் மின்னல் தாக்கிய அதிர்வுடன் அசையாமல் நின்றான் விக்ரமாதித்தியன்!

Advertisement