Advertisement

மயிலிறகு பெட்டகம் 13

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் அதிர்ச்சிகளை அள்ளி இறைத்தான் விக்ரமாதித்தியன். அதில் முதல் அதிர்ச்சி என்னவோ அவன் இவ்வளவு பேசுவான் என்பதே! அதுவும் அனுவிடம்! ஆரம்ப நாட்களுக்கும் சேர்த்து பேசுவது போல இயல்பாய் பேசினான் ம்ஹிம் சொல்லப்போனால் அதைவிட மேலாய்…இப்படி யோசனையுடன் அறைக்குள் நுழைந்தவள் எதிர்பார்த்தது வழக்கமாக மடிக்கணினிக்குள் மூழ்கி முத்தெடுக்கும் விக்ரமைத் தான். ஆனால் அவனோ சிறுபிள்ளை போல போனில் ‘கலர் காம்பினேஷன்’ விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். மனதில் தோன்றிய ஆச்சர்யத்தை மறைத்து கையிலிருந்த பாலை மேஜையில் வைப்பதற்காக அருகில் செல்ல ஒரு மெல்லிய புன்னகையுடன் நிமிர்ந்து தம்ளரை கையில் வாங்கி கொண்டு மீண்டும் விளையாட்டில் கவனத்தை பதித்தான். ஏனோ அன்று உடனே தூங்க தோன்றவில்லை அனுவிற்கு! ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தவள் சிறிய இடைவெளியில் அவன் ஜெயித்தால் எழுப்பும் குட்டி சிரிப்பு சத்தத்தில் ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்த்தாள்.

முதல்முறையாக விழித்திருக்கும் பொழுது அழுத்தமில்லாமல் இளகிய முகமும் விரிந்த சிரிப்புமாக சிறுப்பிள்ளையாய் வெற்றியில் மகிழ்ந்து சிரிப்பவனை பார்க்கிறாள்! அவனது பல்வரிசைக்கு அவன் இதழ்விரித்து சிரிப்பது மிகவும் அழகாய் இருந்தது! கன்னத்தில் வேறு லேசாய் குழி போல….இன்னும்…

“எத்தனை மார்க் பேபி…” என்றான் போனிலிருந்து பார்வையை எடுக்காமலேயே!

எண்ணவோட்டம் சட்டென்று அறுபட திகைப்புடன் அவன் முகம் பார்த்தாள்!

குரல் இயல்பான அழுத்தத்துடன் இருக்கவும் முதலில் என்ன கேட்கிறான் என்றே அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை கற்பனையா என்று யோசித்தவளுக்கு அவன் கண்களில் இருந்த சிரிப்பு சந்தேகத்தை எழுப்ப, ஒரு நொடிக் கழித்து தான் புரிந்தது. பதிலேதும் இல்லாததால் சற்றுப்பொருத்து நிமிர்ந்து பார்த்தவனை பார்த்து அவள் முறைக்க, என்னவென்பதாய் இடது புருவத்தை ஏற்றி இறக்கினான் அவன்.

சட்டென்று மூச்சடைக்க தடுமாறியவள் நொடியில் பதட்டத்தை மறைத்து குனிந்து கொண்டாள். பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இதழ்கடையில் அழகாய் புன்னகை பூக்க மேலும் அவளை சோதிக்காமல் படுத்து உறங்கிப்போக அனுவிற்கு தான் நித்திராதேவி எட்டாத தூரத்தில் நின்று கதகளி ஆடினாள். கண்மூடும் போதெல்லாம் கணவனே வந்தான்! அவனுக்கு அவளை பிடிக்காதென அவள் சத்தியமே பண்ணுவாள்! அப்படியிருக்கையில் அவன் இப்பொழுது நடந்துகொள்ளும் விதம் அவளை மொத்தமாய் குழப்பியது. இப்படி யோசித்து யோசித்து மண்டை குழம்பி விடிகாலையில் உறங்கி வெயில் முகத்தில் அடிக்கும்பொழுது அடித்து பிடித்து எழுந்தது தான் மிச்சம்!

இப்படியாக இப்பொழுதெல்லாம் அனுரதியால் இயல்பாக இருக்கவே முடிவதில்லை. ஒன்று நடப்பதை தடுக்க இயலாமல் கோபத்தோடு மௌனமாய் இருந்தாள், இல்லையெனில் மொத்தமாய் குழம்பி போய் நின்றாள். ஒரு மாறுதலுக்காக மதியம் உணவை முடித்து விட்டு எதிர்வீட்டிற்கு போனால், முகம் முழுக்க சிரிப்புடன் அவளை எதிர்நோக்கினார் அகல்யா,

“என்னமா… குட் நியூஸ்…? ” என்று அன்னையின் மனமறிந்து அனு கேட்க,

“ உங்கண்ணனுக்கு பொண்ண பிடிச்சு போச்சு அனு,ரெண்டு பேரும் நல்லா பேசுவாங்க போல, இப்போதான் போன் பண்ணி மேற்கொண்டு விஷயத்தை பாருங்கன்னு உங்க அண்ணன் சொன்னான்…” என்று சந்தோசத்தில் அவர் மூச்சு விடாமல் பேச,

“அம்மா அம்மா ரிலாக்ஸ் இன்னும் கல்யாணவேலைய ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள நீ இப்படி பேசி எல்லா எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணிடாத…” என்று கேலி பண்ணி சிரிக்க,போடி என்று செல்லமாய் ஒரு போடு போட்டவர், அவளுக்கு கொறிக்க கொடுத்து விட்டு கமலாவை பார்க்க சென்றார்.

பின் விஷயத்தை பரிமாற விசேஷத்திற்கு திட்டமிட என நேரம் பறந்தது. வரும்வாரம் வெற்றி வந்ததும் முதல் முகூர்த்ததிலேயே நிச்சயம் வைப்பதாக முடிவு செய்யப்பட்டு பெண்வீட்டாரிடம் கலந்தாலோசித்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெற்றி வந்ததும் மூன்றாவது நாள் நிச்சயதார்த்தமாய் இருந்தது. நெருங்கி வந்துவிட்ட விஷேச வேலையாக ஆளாளுக்கு ஒன்றில் மாட்டிவிட அண்ணனை அழைக்க ஏர்போர்ட் கிளம்பி கொண்டிருந்தவளை கூட்டி செல்ல யாரும் இல்லை.

வீட்டிற்க்கு வெளியே நின்று என்ன செய்வது என்று யோசித்தவள் பேசாமல் டாக்சி புக் பண்ணி போய்விடலாம் என முடிவு எடுத்தநேரம்,

காரை எடுத்து வந்து அவளருகில் நிறுத்தியவன்,

“வா அனு…” என்றுவிட்டு அமர்ந்த வாக்கிலேயே கதவை திறந்துவிட,

“இல்லை உங்களுக்கு முக்கியமா நிறைய வேலையிருக்கும். நான் பார்த்துகிறேன்…” என்று இயல்பாக பேசியே முடிக்க பார்த்தாள்.

“என் ப்ரெண்டை ரிசிவ் பண்றது விட எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை, நான் போறேன், உனக்கு ஓகே இல்லனா நீ டாக்சியில வா…” என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னவன் கார் கதவை இழுத்து மூடிவிட்டான்.

வெற்றியை அழைக்க தனி தனியாய் போவதா! அதுவும் இவர்கள் முன்! என்று வீட்டை பார்த்தவள்,பற்களை கடித்தவாறே கதவை திறந்து காரில் ஏறியமர்ந்து நங்கென்று கதவை சாத்தினாள்.

இம்முறை சிரிப்பை அடக்க முடியவில்லை விக்ரமால்! சன்னமான விசிலுடன் வண்டியை கிளப்பினான்.

 

Advertisement