Advertisement

மயிலிறகு பெட்டகம் 12

“ஹாய் மாம்…இன்னைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்?!…வழக்கம்போல இட்லியா…அதென்னமா வாரத்தில நாலு நாள் இட்லி தான் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா..என்ன?!…” என்று விடாமல் பேசியபடியே வந்தமர்ந்த தன் மகனை இப்பொழுது வழக்கமாகியிருக்கும் அதே ஆச்சர்யப்பார்வை பார்த்தார் கமலா..!

அதற்கும் அவரது புத்திரன், “ என்னமா…அப்படி பார்க்கிறீங்க..அவ்வளவு அழகாவா இருக்கேன் இன்னைக்கு..” என்று குறும்பாய் கேட்க, அடக்கமாட்டாமல் வாய்விட்டு சிரித்து விட்டார் கமலா.

“ என்னாச்சு என் பையனுக்குனு தான் பார்க்கிறேன், பத்து வார்த்தை பேசினா ஒரு வார்த்தையில பதில் சொல்ற என் விக்ரமா இது…!” என்று கமலா ஆச்சர்யத்துடன் கேட்க,

“ச்சு…போங்கம்மா.. கிண்டல் பண்றீங்க…” என்றான் அவன் செல்லமாய் அதுவும் அவனுக்கு அழகாய் தான் இருந்தது.

“என்ன சிரிப்பு சத்தம் ரூம்வரை கேக்குது,என்கிட்டேயும் சொன்னா நானும் சிரிப்பேன்ல..” என்றபடியே வந்தமர்ந்த முரளியிடம்,

“அது ஒண்ணுமில்லைப்பா… நான் இன்னைக்கும் இட்லியான்னு அம்மாகிட்ட கேட்டேனா…அதுக்கு அம்மா நீதாண்டா குறை சொல்ற, உங்க அப்பாவை பாரு, ஏதாவது சொல்றாரா…பார்த்துக் கத்துக்கோ… அப்படின்னு சொன்னாங்க,

ஏம்பா…உண்மையாவே அம்மா செய்ற இட்லியை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா என்ன…?” என்று மகன் சீரியஸாக கேட்ட கேள்விக்கு,

“உனக்கென்னப்பா, ஊருக்கு போயிருக்க பொண்டாட்டி வந்ததும் விதவிதமா சமைச்சு போடுவா… நீ பாட்டுக்கு இப்ப பேசிட்டு போயிடுவ, அப்போ நான் என்ன பண்றது, என் வாயை கிளறி என் பொழப்புல மண்ணை அள்ளி போட்டுறாத…” என சோகமாக முடித்த வேகத்தில், கமலா முரளியை முறைக்க,

“அம்மா இதுக்கு நான் பொறுப்பில்லை, நான் சும்மா ஜெனரல் நாலேட்ஜ்க்காக தான் கேட்டேன்,மத்த எதுக்கும் நான் காரணம் இல்லை… அப்புறம் அப்பா…. அனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சோ கவலைப்படாதீங்க உங்களுக்கும் சேர்த்தே சமைப்பா… சரி மணியாச்சு நான் கிளம்பறேன்,…” என்று ஒரே மூச்சில் வேகமாய் இரண்டு பக்கமும் பாதகம் இல்லாமல் பேசி வைத்துவிட்டு கிளம்பி வாசலுக்கு விரைந்தவன் மறக்காமல் தன் போனை எடுத்து சிலபல அழுத்தங்களை கொடுத்து விட்டு புன்னகையுடன் கிளம்பினான்.

இங்கு மகனின் மாற்றம் உத்தேசமாய் எதையோ உணர்த்த மனநிறைவோடு புன்னகைத்தனர் அவ்வீட்டுப் பெரியவர்கள்.

எதிர்வீட்டில் வெற்றியைக் கேட்டு நல்லவரன் ஒன்று வர அவன் போட்டோவை அனுப்புங்கள் பார்த்து விட்டு பிடித்தால் சொல்கிறேன் மற்றதை நான் அடுத்தமாதம் நேரில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றான். அனுவிடம் கேட்டதற்கு அண்ணன் சொல்வது சரி இருவருக்கும் பிடித்திருந்தால் அண்ணன் வரும் பொழுது முடித்துவிடலாம் என்றுவிட்டாள்.

வந்தவேலை எந்த பிரச்சினையுமில்லாமல் முடிந்து மறுநாள் இரவு ஊருக்கு திரும்பி செல்வதாக இருக்கவே, துணிகளை மடித்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் அனுரதி. பிடித்த விஷயத்தை நல்லபடியாக கற்றுக்கொண்ட மனநிறைவும் வெகுநாட்களுக்கு பிறகு ஊருக்கு செல்லும் இதமும் மனதை நிறைத்திருக்க இயல்பாக புன்னகை இதழில் உறைந்திருந்தது. பொறுமையாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை சிலநொடிகள் ஒளிர்ந்து அணைந்த கைப்பேசி கலைக்க, எடுத்துப் பார்த்தாள்.

“ எல்லாம் மறக்காம எடுத்து வைச்சுக்கிட்டீயா…நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புற அனு…?” வந்திருந்த குறுந்செய்தியை பார்த்தவளுக்கு ஒருநொடி புன்னகை! மறுநொடி முகம் சுருங்கி கூடவே ஒரு பிடிவாதமும் வந்து அமர்ந்து கொண்டது. வழக்கம்போல அதைக் கண்டுகொள்ளாமல் கட்டிலில் போட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

சிலநொடிகள் கடந்த பின்னர் மீண்டும் அவளது அலைபேசி சிணுங்கி அடங்க, இவனுக்கு வேற வேலை இல்லை போல என்று நினைத்தபடியே அசுவராசியமாய் போனை எடுத்துப் பார்த்தவள் திகைத்து தான் போனாள்! “பேபி…ஆர் யு தேர்…?”!! உடனே நம்பர் அவனது தானா என்று சரிபார்த்தவளுக்கு அதற்கு பிறகு எதுவுமே புரியவில்லை அப்படியே நின்றுவிட்டவளின் கவனத்தை மீண்டும் கலைத்தது அலைபேசி, முரளியிடம் இருந்து அழைப்பு!

குழப்பத்துடனே எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

“என்னமா வேலையா இருக்கியா…தொந்தரவு பண்ணிட்டேனா…” என்று முரளி கேட்க,

“பேக் பண்ணிட்டு இருந்தேன் மாமா…என்ன விஷயம் சொல்லுங்க மாமா…”எனவும்,

விக்ரம் உனக்கு மெசேஜ் பண்ணி உன்கிட்ட இருந்து ரொம்பநேரமா எந்த ரெஸ்பான்சும் இல்லைன்னு பதட்டமா சொன்னான். அதான் அனு நான் கூப்பிட்டேன், அவன் இப்போ ஒரு முக்கியமான டின்னர்ல இருக்கான். போன் பண்ண முடியாது நீயே மெசேஜ் பண்ணி சொல்லிடுரியா…” எனக் கேட்டு நிறுத்த, ஒன்றும் சொல்லமுடியாமல்,

“ம்…சரி மாமா …”என்றபடியே போனை வைத்தவள் அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை மறுபடி பார்த்தாள். சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை! அவளறிந்த விக்ரம் தானா இது! அழுத்தமாய், திமிராய் அவளை பார்க்கும் விக்ரமை தான் அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தெரியும்! இப்படி பேபி அது இதுவென பேசி தன் பதிலுக்காக அப்பாவை தூது விடும் விக்ரமை அல்ல!

இந்த மெசேஜ், பேபி விஷயமெல்லாம் திடீரென ஒருநாள் முளைத்து இன்றுவரை தொடர்கிறது. அவளது மனநிலையிலும் இருக்கும் கோபத்திலும் இன்றுவரை அவனது செய்திகளுக்கு அவள் பதில் அனுப்பியது கிடையாது. ஆனாலும் அவன் சளைக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கிறான். இன்றுதான் என்னவோ ஆயிற்று! அதெல்லாம் அவளுக்கு பெரிதாய் தோன்றவில்லை. இந்த பேபி விஷயம் தான் அவளை குழப்பியது! இப்படியே யோசனையுடன் நின்றவளுக்கு மேலும் பேசாமல் நேரம் கடத்தினால் அவன் மீண்டும் ஏதாவது செய்வான் என்று தோன்ற, ட்ரெயின் நேரத்தை மட்டும் செய்தியாக அனுப்பிவிட்டு பேசாமல் படுத்துகொண்டாள்.

ரெயிலின் குலுக்கலில் விழிப்பு வந்துவிட கண்களைத் தேய்த்தவாறு மணியை பார்த்தாள். ஐந்தாகி அரைமணிநேரம் கடந்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இறங்க வேண்டும் என்பதால் அதற்குமேல் தலையை சாய்க்காமல் கைகளை சேர்த்து தேய்த்து கன்னத்தில் ஒற்றியவாறு எழுந்தமர்ந்தவள், ஜன்னல் வழியே பார்வையை பதிக்க, கிழக்கில் வெளிச்சம் கசிய ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எழுந்து சென்று முகம் கழுவி ,தலை ஒதுக்கி நெற்றியில் பொட்டை ஒட்டிவிட்டு பைகளை எல்லாம் தயாராய் எடுத்து வைத்தவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் இறங்கிவிட்டாள்.

 முன்தினம் போனில் ஜெகன் தான் வருவதாய் சொல்லி இருந்தார். அவர் ஸ்டேஷனுக்கு வெளியில் தான் நிற்பார் என்பது தெரிந்ததால் நிமிர்ந்து பார்க்காமல் பாதையில் கவனமாய் தன் போக்கில் நடந்தவள் திடீரென தன்னோடு இணைந்து கொண்ட கால்களை பார்த்து திடுக்கிட்டு நிமிர,

இலகுவாக அவள் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு மலர்ந்த முகத்தோடு,

“வெல்கம் பேக் அனு…” என்று கூறியவனை சத்தியமாய் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

நெடுநாட்களுக்குப் பின் அருகாமையில் விரிந்த விழிகளுடன் நின்றவளை பார்த்தவனுக்கு அதன் பின் வார்த்தைகள் மறந்து போக, ஓரிரு நொடிகளை இதமான மௌனம் சூழ்ந்து கொண்டது.

அதற்குள் அனுவிற்கு தன் கோபம், தங்களது உடன்படிக்கை எல்லாம் ஞாபகம் வர அவள் முகம் சட்டென இறுகிவிட்டது. அவளது முகம் மாற்றம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. இளகிய முகமும் உதட்டில் புன்னகையுமாய் முன்னே நடந்தவனை அனுதான் குழப்பத்துடன் பின் தொடர வேண்டியிருந்தது.

“காபி குடிக்கலாமா அனு…” என்று அவன் கேட்க,தரையை பார்த்து நடந்தவள் அப்படியே வேண்டாம் என்பதாய் தலையசைத்தாள், மீண்டும் ஒரிரு நொடிகளுக்குப் பின் அவன் அதே கேள்வியைக் கேட்க,

“என்னதான் நினைச்சிட்டு இருக்கான்…”என்று சுறுசுறுவென மனதிற்குள் கோபம் பொங்க நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனோ இவள் புறம் திரும்பாமல் கடையில் பார்வையை பதித்தவாறு கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“ப்ச்…” என்ற சலிப்புடன் “இல்லை வீட்டுக்கே போயிடலாம்…” என்றுவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

வந்தசிரிப்பை கட்டுப்படுத்த படாதபாடு பட்டவன் ஒருவழியாய் மறைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.

வீட்டிற்கு வந்தபின் இருவீட்டாரின் அன்புகடலில் மொத்தமாய் மூழ்கிவிட்டாள் அனுரதி. முகிலன் கூட கேலி செய்தான்

“எவ்வளவு ஸ்பெஷல் அயிட்டம் கா…ரொம்பத்தான்…. வெற்றி அண்ணாக்கு கூட இவ்வளவு உபச்சாரம் நடக்காது போல….” எனவும் போடா என அழகு காட்டியவள், முகிலனின் அருகில் தன்னை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தவனை பார்த்ததும் உணவில் கவனம் போல குனிந்து கொண்டாள்.

பேசும்போது கூட என்னைப்பார்த்து பேசியது போல நினைவில்லை. இப்பொழுது என்ன! போடா…. என உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள். இரவு வரை இருவீட்டிற்கும் மாறி மாறி நடைபயின்று கொண்டிருந்தவளுக்கு பயணக்களைப்பு, உண்டமயக்கம் எல்லாம் சேர்ந்து களைப்பூட்ட சீக்கிரமே அறைக்கு திரும்பினாள்.

பால்கனியில் நின்றுகொண்டிருந்தவன் அரவம் கேட்டு திரும்பினான். அவளின் கையில் இருந்த பால் தம்பளரை பார்த்ததும் இதழ்கள் அழகாய் விரிய, “ உனக்கு இல்லையா…” என்று ஆரம்பிக்க,

“ இல்லை எனக்கு பழக்கமில்லை…” என்று பட்டென்று அவன் மேலும் பேச இடமில்லாமல் கத்தரித்து விட்டு மேஜையில் தம்ளரை வைத்தவள் அதேவேகத்தில் சோபாவிற்கு சென்று படுத்து போர்வையை போர்த்திக் கொண்டாள்.

ஒரு மெல்லிய பெருமூச்சோடு

“ரொம்பக் கஷ்டம்…” என்று முணுமுணுத்தன விக்ரமின் இதழ்கள்!

Advertisement