Advertisement

மயிலிறகு பெட்டகம் 11

ஊருக்குப் போய் சேர்ந்ததும் முரளிக்கு அழைத்து விஷயம் தெரிவித்தவள் தான்! அப்பொழுதும் , 

“ எல்லார்கிட்டையும் நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லிடுங்க மாமா, இனி வேலையில்லாத நேரம் நானே கூப்பிடுறேன்…” என்றுவிட்டாள். அதன்பின்னும் வாரம் ஒருமுறை ஜெகன், முரளி இருவரில் ஒருவருக்கு அழைத்து தன் நலம் கூறிவிட்டு அங்கிருப்பவர்கள் நலம் விசாரித்து விட்டு அதற்குமேல் பேச்சை வளர்க்க வழியே கொடுக்காமல் நேரமில்லை என முடித்து விடுவாள். பெரியவர்களுக்கு ஏதோ இருக்கிறது என்று புரிந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே செல்வது சரியில்லை என்ற எண்ணம் ஒருபுறம். மேலும் ஆரம்பத்திலிருந்தே அதிகம் ஒட்டாத விக்ரமும் அனுவும் ராசியாக கொஞ்சம் அவகாசம் அவசியம் என்று உணர்ந்தவர்களுக்கு இந்த பிரிவு எதாவது நல்லதிற்கு வழிவகுக்கும் என்று தோன்றவே கண்டும் காணாமல் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர். அதிலும் விக்ரமாதித்தியன்,அனுரதி இருவருமே விஷயங்களை திறமையாய் கையாளுவதில் பொறுப்பானவர்கள். அவர்களிடையே வீணாய் தலையிட்டு குட்டையை குழப்ப யாருமே விரும்பவில்லை. 

நாட்கள் இவ்வாறாக செல்ல அனுரதிக்கு எப்படியோ விக்ரமாதித்தியனுக்குள் பெரும் மாற்றம். அவள் ஊருக்கு சென்ற மறுநாள் தாமதமாக வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவனது கண்கள் தானாய் உணவுமேஜையின் பக்கம் செல்ல, பாதி தூங்கிய விழிகளுடன் அமர்ந்திருக்கும் அனுரதியே கண்களுக்குத் தெரிந்தாள்! திடுக்கிட்டு நின்றவன் தலையை உலுக்கிக்கொண்டு அறைக்கு போய்விட்டான். ஆரம்பத்தில் பரவாயில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல விக்ரமை முழுதாய் அனுரதியின் எண்ணங்களே ஆக்கிரமித்தன. 

ஒரு இயல்பான மனைவியாய் அவனிடம் அவள் பேசி,பழகி சிரிக்கவில்லையே தவிர ஒரு மனைவியாய் கணவனுக்கு செய்யும் அத்தனை கடமைகளையும் செய்திருக்கிறாள் என்பது இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அவன் வீட்டில் உண்ணும் அனைத்து நேரங்களிலும் உணவு பரிமாறுவது, இரவு எவ்வளவு நேரமானாலும் விழித்திருப்பது, எப்பொழுது வெளியே சென்று வீடு திரும்பினாலும் தண்ணீர் சொம்போடு நிற்பது! அவனுக்கு பிடித்ததை அவன் சொல்லாமலே செய்வது! இதுது தான் அவனுக்கு ஆச்சரியமே! சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி அறிந்து வைத்திருந்தாள் என்று! இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்! 

உன்னிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் என்றுவிட்டு இப்படி மொத்தமாய் அவளையே சார்ந்திருந்திக்கிறான்! அதற்கு கூட அவன் வருத்தப்படவில்லை. ஏனென்றால் அவள் இவ்வளவும் செய்கிறேன் உனக்கு என்று அவனை உணரவைத்ததே கிடையாது! இயல்பாய் அவனது விஷயங்களில் அவனறியாமலே ஒட்டிக் கொண்டாள். இப்பொழுதும் கூட அவள் செய்ததையெல்லாம் நினைத்து சந்தோஷமே! சொல்லப் போனால் இப்பொழுது அவன் தவிப்பெல்லாம் இவ்வளவு தூரம் செய்தவளுக்கு தான் செய்தது என்ன?, அவளைப் பற்றி யோசிக்க கூட இல்லையே என்பது தான்.

இப்படி உறுத்தலில் ஆரம்பித்த அவனது தவிப்பு அடக்க வழியில்லாமல் பெருகி நேசமாய் உருவெடுத்ததை மனப்பூர்வமாக உணர்ந்து ரசிக்க ஆரம்பித்திருந்தான் விக்ரமாதித்தியன்! ஆம் நேசமென்பது நூறு சதவீத உறுதியே! முதலில் குற்றஉணர்வில் தவித்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வுணர்வு மாறி அவனது செயல், எண்ணம் ,மனம் என முழுவதிலும் வியாபிக்க ஆரம்பித்தாள் அனுரதி! எப்பொழுதும் இப்படி அவள் நினைவுடன் சுற்றிக் கொண்டிருந்தான் விக்ரமாதித்தியன். முக்கியமாய் அவனறையில் காலையும் இரவும் உறங்கும் நேரங்களில் அவள் நினைவுகள் அவனை பாடாய் படுத்தும்! சோபாவையே ஏக்கமாய் தழுவும் அவனது கண்களை மேலும் கஷ்டப்படுத்தாமல் அந்த சோபாவிலேயே படுத்து உறங்குவதை வழக்கமாக்கி விட்டான்.  

இப்படியாக அவனின் அருகில் இருந்தபொழுது தூண்டாத பல உணர்வுகளை இப்பொழுது அவனுக்குள் எழுப்பிக் கொண்டிருந்தாள் அவள். அவனுக்கு அனுவை தன் மனம் தேடுவது புரிந்ததுமே தோன்றும் அத்தனை உணர்வுகளும் ஒருவிதத்தில் சுகமாய் தான் இருந்தன. காத்திருப்பதும் இனிக்கவே ஒருவித எதிர்பார்ப்பும் ஆவலுமாய் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் அவன்!  

Advertisement