Advertisement

மயிலிறகு பெட்டகம் 10

வயிற்றில் உற்பத்தியாகிய அமிலம் தொண்டைவரை வந்து அடைத்து மொத்தமாய் அவனை இறுக்கிப் பிடிப்பதை போன்ற உணர்வுடன் தவித்தவன் அதற்குமேல் எதையும் யோசிக்க பிடிக்காதவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி விரைந்தான். கதவு திறந்திருந்தது! கோவிலின் வெளியே போடப்பட்டிருந்த விளக்கின் ஒளி உள்ளே ஒரளவுக்கு தெரிந்தது.

அவ்வொளியிலேயே முடிந்தவரை மரத்தடியில் இருந்தவர்களின் கவனத்தை கவராமலேயே செயல்பட்டவன், பெயரை அழைக்காமலேயே அவளை தேடத்தான் நினைத்தான். ஆனால்…!

தேடியவரை எந்த சலனமும் இல்லாமல் நிசப்தமாய் இருக்க,

பயத்தில் உடம்பு முழுவதும் வியர்த்து, தன் இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கே கேட்டது. முகத்தை அழுந்த துடைத்து விட்டு திடத்தை கொண்டுவந்தபடி,

“அனு….” என்றழைத்தான் உரக்க, எந்த அரவமும் இல்லாமல் இருக்க, சோர்ந்தவன் திரும்ப அழைக்க எத்தணிக்கையில் பின்னால் மிக மெலிதாய் கேட்ட மெட்டி சத்தத்தில் சட்டென்று திரும்பினான்.

அம்மன் சிலை இருந்த கதவு வெறுமனே சாத்தப்பட்டிருக்க சிறிதாய் திறந்திருந்த இடைவெளி வழியே பார்த்து விட்டு மெதுவாய் வெளியே வந்தாள் அனுரதி.

வியர்வையில் மொத்தமாய் குளித்து கண்கள் சிவந்து பளபளக்க,பற்களால் இதழ்களை அழுந்த கடித்தவாறு இருந்தவளை பார்த்ததுமே பேச நா எழவில்லை விக்ரமிற்கு. உணர்ச்சியே இல்லாத முகம்வேறு இன்னும் பதட்டப்படுத்த,

“சா…சாரி அனு, ஐயம் ரியலி சாரி…நா…வேணும்னு செய்யல சாரி…” என வேகமாக கூறியவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் முன்னே நடந்தாள். அவ்வளவு வேகமாய்…! விக்ரமாதித்தியனே கொஞ்சம் ஓடிவந்து தான் அவள்நடைக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது.

கூடவே வந்து மன்னிப்பு கேட்டவன் பக்கம் கூட திரும்பாமல் காரின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். வண்டியில் ஏறிய வரை பெரிது என்றெண்ணியவனும் நேரத்தை கடத்தாமல் வண்டியை எடுத்தான். இடையில் கண்ணாடி வழியே பார்த்து அவன் பேச வாயெடுக்கும் போது கண்ணை மூடி இருக்கையில் தலையை சாய்த்துக் கொண்டாள்.

விக்ரமாதித்தியன் இன்னும் அதிர்ந்தது ஹாலில் அமர்ந்திருந்த அகல்யா, கமலா இருவரும் இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் அவள் அறைக்குள் நுழைந்துவிட்ட பொழுது தான்! விக்ரமும் அவள் கூட இருந்ததால் அவர்கள் பிரச்சினை என்ற நோக்கில் நினைக்கவில்லை போலும், ஒருவாறாக சந்தேகம் வராதபடி சமாளித்துவிட்டு அவனறைக்குள் நுழையும் பொழுது அறையை இருள் நிறைத்திருந்தது. லைட்டைப் போட்டுப் பார்த்தான் தலை முதல் கால் வரை போர்த்தியிருந்தாள்.

தயக்கத்தோடு, “அனு…” என்றழைத்தான்.

நிமிஷங்கள் கரைந்ததே தவிர பதிலேதும் வரவில்லை. மெதுவாய் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.

திருவிழாவிற்கு போய்விட்டு வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. கடைசியாக விளக்குபூஜைக்கு கிளம்பும்போது போய் வருகிறேன் என்று அனைவரிடமும் கூறிவிட்டு அவனைப்பார்த்து தலையசைத்து சென்றவள் தான். அன்றிலிருந்து இதுநாள் வரை அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து என்னவென்று கேட்கக்கூடும் என்று மறுநாளே எந்த வேறுபாடுமின்றி இயல்பாய் நடந்து கொண்டாள் தான். நடப்பதுபோல் காட்டிக்கொண்டாள் என்பதை உணர்ந்துக் கொண்டான் விக்ரமாதித்தியன். தன்னிடம் மட்டுமல்ல தன் பிறந்த வீட்டினரிடமும் கூட யாருமறியா வண்ணம் ஒருமாதிரி விலகிவிட்டாள். இப்படி தன்னுள்ளே இறுகி போனவளிடம் போய் பேசி மன்னிப்பு கேட்டு, அன்றைய நாளில் தன்னிலையை விளக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை அவள். திடீரென ஒருநாள் உணவுவேளையில் தான் படித்துக்கொண்டிருக்கும் கோர்ஸ் சம்பந்தமான ஒர்க்சாப் ஹைதராபாத்தில் நடக்கப்போகிறது எனவும் இந்தவார இறுதியில் அதற்க்காக கிளம்ப வேண்டும் என்றும் கூறியபின் திரும்பிவர ஆறுமாதம் ஆகுமென இடியை இறக்கினாள். தனியாக எப்படி..கண்டிப்பாக போகவேண்டுமா… போன்ற கேள்விகள் அத்தனையும் சமாளித்து அனைவரையும் சம்மதிக்கவும் வைத்து விட்டாள்.

சிந்தனையோடு மெதுவாக படியேறிய விக்ரமதித்தியன் அறைக்குள் நுழைந்த பொழுது அடுத்தநாள் கிளம்புவதற்காக பெட்டியில் துணிகளை அடுக்கி கொண்டிருந்தாள். இப்பொழுது மன்னிப்பு என்று ஆரம்பித்தால் எழுந்து போய் விடுவாள் என்று தோன்ற யோசித்து,

“நாளைக்கு எத்தனை மணிக்கு ட்ரெயின் …” கேட்டான் அவன்,

“ அஞ்சு மணிக்கு…” பதில் வந்தது.

“ அங்கே இருந்து எப்படி…” கேள்வியோடு அவன் நிறுத்த,

“ தெரிஞ்சவங்க இரண்டு பேர் வர்றாங்க, சேர்ந்து போயிடலாம்…” என்றவள் வேலையிலேயே கவனமாய் இருந்தாள்.

வேற முக்கியமான கேள்விகளுக்கும் மறுக்காமல் பொறுப்பாய் பதில் சொன்னாள்.

பெட்டியை மூடிவிட்டு எழுந்தவளிடம், பேசும் அவசியத்தை உணர்ந்து,

“அனு…. ஐயம்.. ரியலி சாரி பார் தட் டே.. அன்னைக்கு நான் வேணும்னு அப்படி செய்யல…” போய்விடுவாளோ என்று வேகமாக சொல்லிக்கொண்டே போனவனிடம்

“தெரியும்…” என்று ஒருவார்த்தையில் முடித்து விட்டு அவனை தாண்டி அறையை விட்டு வெளியேறினாள் அனுரதி.

தெரியுமா…! மொத்தமாய் குழம்பி நின்று விட்டான் அவன்!

அறையை விட்டு வெளியே வந்தவள் தன்னறையில் முக்கியமான பொருட்கள் எடுக்கவேண்டும் என்று கமலாவிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள். ஆறுமாத பிரிவு என அங்கே நடந்த பாசப்படலத்தில் சிறிது நேரத்தை கரைத்தபின் தன்னறைக்கு சென்றவள், உள்பக்கமாய் தாழிட்டு விட்டு தேவையான பொருட்களை எடுத்தவளின் பார்வை தலையாட்டி பொம்மைகளின் மேல் பட, 

உணர்வுகள் துடைத்த முகத்தோடு அதனருகில் சென்று அமர்ந்து அதைப் பார்த்தாள்.

தன்னையும் மீறி கண்களில் இருந்து நீர் கடகடவென வழிய ஒரு ஆவேசத்துடன் துடைத்து விட்டு நிமிர்ந்தவள் பெண்பொம்மையை சட்டென்று தட்டிவிட்டாள். தலையை ஆட்டியபடியே பரிதாபமாக விழுந்த பொம்மை நல்லவேளையாக கார்பெட்டில் உருளவும் முனைகளில் தவிர பெரிய சேதம் எதுவுமில்லாமல் தப்பித்தது. கசப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு எழுந்து அலமாரியை திறந்தவளுக்கு கால்கள் பலவீனமாக அப்படியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

நிதானமாக கிளம்பினாள் அனுரதி. யாரும் வேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் நீங்கள் ஸ்டேஷன் வரை வந்தால் ட்ரெயின் ஏறும்போது எனக்கு கஷ்டமாயிருக்கும் என்றுவிட்டாள். எனினும் சரியாக கிளம்பும் நேரத்திற்கு வந்து அவளுடனே டாக்சியில் ஏறிய விக்ரமை அவளால் எதுவும் செய்யமுடியவில்லை.

சிலநெடிய மௌன நொடிகளுக்குப் பின்,

“ எல்லாம் எடுத்துகிட்டியா…” என்றவனுக்கு ‘ம்’ மட்டும் கொட்டினாள்.

தனியாக வெளியே போகவேண்டாம் , கூட தங்கியிருப்பவர்கள் தெரிந்தவர்கள் ஆனாலும் முழுதாக நம்பிவிட வேண்டாம், எப்பொழுதும் கவனம் வேண்டும் போன்ற எல்ல பேச்சுக்கும் ‘ம்’ மட்டுமே!

அதற்குமேல் என்ன பேச என்று அவனுக்கு தெரியவில்லை. ட்ரெயின் வந்து ஏறி அமர்ந்ததும்

“நீங்க கிளம்புங்க…” என்றாள் நீண்ட நாட்களுக்கு பின் அவள் வாயிலிருந்து வந்த நீண்ட வாசகம்!

“இல்லை நான் போய்க்கிறேன்..” என்றவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ட்ரெயின் கிளம்பும் நேரம் இன்னதென்று புரியா உணர்வுடன் நின்றான் விக்ரமாதித்தியன். அவளுமே எதற்கோ தடுமாறுவது போல தெரிந்தது. ஆனால் ஒருநொடி கண்மூடி திறந்தவள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் அமர்ந்து கொண்டாள்.

வேற எதுவும் பேச தோன்றாதவனாய் …”பத்திரம்…” என்றவனுக்கு அசைத்தாளா என்று சந்தேகிக்கும்படி சிறு தலையசைப்போடு போயே விட்டாள்.

Advertisement