Advertisement

அவள் முகத்திலிருந்த உணர்வுகளில் இருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அவளையே பார்க்க, பார்த்து நின்றவளுக்குத் தான் அந்த ஓரிரு நொடியும் அபத்தமாய் தோன்றியது. உடனே முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே மறைத்தவள் புன்னகையாய் ஒரு சிறு தலையசைப்புடன் உள்ளே சென்று விட்டாள்.

அங்கே தாமதமாய் வந்ததற்கு அகல்யாவில் ஆரம்பித்து அனைவரும் வரிசையாய் தாக்க, அவர்களை சமாளிக்கவும், சடங்குகளில் கவனத்தைத் திருப்பவும் மற்றதெல்லாம் மறந்து போயிற்று.

காலை எட்டு மணி முகூர்த்தத்திற்கு நான்கு மணிக்கே எழுந்து தலை அலசி விரித்து விட்டவாறே
கிளம்ப தயாராயிருந்த மகளை ஏன் இவ்வளவு சீக்கிரம் எனக் கேள்வி கேட்ட அன்னைக்கு,
“வேலை நிறைய இருக்குல்ல மா…நானும் ஹெல்ப் பண்றேன்” என்றவாறே கிளம்புவதில் குறியாகி விட்டாள்.

இலைபச்சை உடலில் செந்நிற கரையிட்ட சேலையுடுத்தி பச்சையும் சிவப்புமாய் கற்கள் பதித்த ‘ஆன்டிக்’ ஆரத்தையும் குடை ஜிமிக்கியையும் மாட்டியவள், அதே நிறத்தை கலந்து வளையல்களை அடுக்கினாள். இருமுழம் மல்லிப்பூவும் அடர்த்தியான கண்மையும் இட்டவள், வட்டமாய் மெரூன் வண்ண பொட்டோடு வெளியே வர,

அறை வெளியே பேசிக்கொண்டிருந்த அகல்யாவும் கமலாவும் ஆச்சரியமாய் அருகில் வந்தனர். கமலா அனுவின் கன்னத்தை வழித்து திருஷ்டி கழிக்க,
அகல்யா, “ அழகா இருக்க டா…. என மகளை பூரிப்புடன் பார்த்தார்.

வெண்பற்கள் வரிசைகாட்டி சிரித்தவள், மண்டப வாசலுக்கு செல்ல, வழியில் இருந்த பன்னீர் தட்டில் இருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் கீற்றாய் தீட்டிவிட்டு கோலமாவோடு களத்தில் இறங்கினாள்.

வாசலுக்கு ஏற்றவாறு பெரிதாய் வெண்மாவில் ரங்கோலி இட்டுவிட்டு வண்ணப்பொடியை தூவ ஆரம்பித்திருந்த நேரம் அழகாய் பாவாடை சட்டையிட்டு நின்ற கொலுசு கால்களை கண்டுவிட்டு நிமிர,

“அக்கா… நானும் கலர் அடிக்கட்டுமா…” எனக்கேட்ட குட்டி பெண்ணிடம் சிரிப்புடன் கிண்ணத்தை நீட்டியவள் எங்கெங்கு என்ன நிறம் என சொல்லிவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

சிறிதுநேரம் சென்றபின், நீண்ட கால்கள் இரண்டு கோலத்தில் மிதித்து விடாமல் தாண்டி நடக்க, நிமிராமலே யாரென்று தெரிய அவள் கோலத்தில் முழுமூச்சாக கவனத்தைக் காட்டிக் கொண்டிருக்க,

“ விக்ரம் மாமா…அந்த ரெட் பூவில கால் வெச்சுட்டீங்க…” என அருகிலிருந்த குட்டிப்பெண் சொன்னது தான் தாமதம், அதுவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த புன்னகை மொத்தமாய் சேர்ந்து வெளியே வர அவள் மேலும் தலை குனிந்து கொண்டாள். இதை அடிபிறலாமல் கவனித்து விட்ட விக்ரமிற்கு சுறுசுறுவென ஏற,

“வாசலுக்கு கோலம் போடுறீங்களா ..? இல்ல கேட் போடுறீங்களா…?! மண்டபத்துக்கு இது மட்டும் தான் வழி அர்ஷி… இப்படி கோலம் போட்டு மிதிக்கவும் கூடாதுனா… மேம்பாலம் கட்டித்தான் போகனும்…” என நக்கலாய் பேசிக்கொண்டே போனவனை, நிமிர்ந்து இவள் முறைத்தாள்.

“ பெரிய இவன்… வந்துட்டான்.. காலையிலே என்னைய வம்பு இழுக்கலைனா பொழுது போகாது போல… என்னமோ நான் மிதிக்காம போக சொன்ன மாதிரி என்னைய ஜாடை பேசுறான்…” என அவனை முறைத்தவாறே ஏகத்துக்கும் அர்ச்சித்துக் கொண்டிருந்தவளைப் பற்றி தெரிந்ததோ என்னவோ! அர்ஷியிடம் இருந்து பார்வையை விலக்கியவன், அவளுக்கு சற்றும் சளைக்காமல் முறைத்து விட்டு வண்டியை கிளப்பிச் சென்றுவிட்டான்.

போட்டவரை போதும் என ஓரளவுக்கு கோலத்தை ஒழுங்காய் முடித்துவிட்டு உள்ளே சென்றவள் கடுகடுவெனவே சுற்றினாள். அதுவும் அவன் கண்ணில் பட்டுவிட்டால் முகத்தில் எள்ளும் கொள்ளும் தெறித்தது!

அவனுக்கோ, “ என்னடா இவ! விட்டா நெற்றிக்கண் திறந்து எதிர்ல இருக்கிறவங்களை பொசுக்கிடுவா போல… இப்படி ஓவர்டோஸ் ஆகிற அளவுக்கு என்ன நடந்துச்சு…?! நம்ம அப்படி ஒன்னும் செய்யலையே?! “ என்ற யோசனை ஓடினாலும், வெளியே வழக்கம்போல் அலட்சியமாகவே அவளை சிறிதும் பொருட்படுத்தவில்லை.

எல்லாம் முடிந்து பூரணி பெங்களுர் சென்றபின் அதிகம் பாதிக்கப்பட்டது எப்பொழுதும் கூடவே சுற்றிய அனுரதி தான். கம்பனியில் வேலை , தொழில் தொடர்பான வெளியூர் பயணம் என விக்ரமிற்கு தான் அவ்வளவாக எந்த பாதிப்பும் இல்லாமல் போனது, கமலாவும் முரளியுமே பூரணியில்லாமல் கஷ்டப்பட்டு போயினர். அதை உணர்ந்த அகல்யா கமலவோடு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கோவில் கடைவீதி என சென்றுவந்தார்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து ஜிம்மிற்க்கு சென்றுவிட்டு கூடவே அதனருகில் உள்ள மைதானத்திற்கு சென்று ஜாகிங்கை முடித்து எட்டு மணிக்கு மேல் வீடு திரும்புவது விக்ரமின் வழக்கம். இப்பொழுது வீட்டில் இருப்பவர்களை அக்காவின் பிரிவு வாட்டுவது புரிய சிரமமே எனினும் தன்னால் முடிந்தவரை வீட்டில் இருக்க முயற்சி செய்தான். காலை வெளியே செல்பவன் ஏழு மணிக்கே வீடு திரும்பி கமலாவோடு சிறிது நேரத்தை கழித்தான். இரவும் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்களாவது சீக்கிரமே வீடு திரும்பினான்.

இதனால் அனுவிற்கு தான் அந்த வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு குறைந்தே போனது. அவளும் அதைவிடுத்து வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். மாலை வந்து அவளுக்கு பிடித்த கலைப்பொருட்கள் செய்வதில் மூழ்கி போனாள்.

இந்நிலையில் காஞ்சியில் மட்டும் இயங்கி கொண்டிருந்த முரளியின் தொழிலான டைல்ஸ் மொத்த , சில்லறை வியாபாரக்கிளை தரம் உயர ஏற்கனவே டைல்ஸ் கூடவே மற்ற இன்டீரியர் பொருட்களும் விற்கும் பெரிய ஷோரூம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற முரளியின் கனவோடு சேர்த்து சென்னையிலும் இருகிளைகள் ஆரம்பிக்கும் தன் எண்ணத்தையும் செயலாக்க முழுமூச்சாக இறங்கிவிட்டான் விக்ரமாதித்தியன். ஜெய்ப்பூர் சென்று டைல்ஸ் கொள்முதல் பற்றி முடிவு செய்வது புதுகடைக்கு இடம் பார்ப்பது, காஞ்சியில் ஷோரூம் கட்டிட பணிக்கு ஆட்களை பார்ப்பது என நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தான்.

வேலைப்பளு முன்னை விட தனக்கு குறைந்திருந்தாலும் வயதும் பூரணியின் திருமண வேலைகளில் ஆரம்பித்த பரபரப்பு, மகளின் பிரிவு போன்ற காரணங்களால் சில நாட்களாய் மிகவும் சோர்வாய் உணர்ந்த முரளிக்கு இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் மகனிடம் இதைப்பற்றி சொல்ல விருப்பமில்லாமல் போனது ஒருநாள் வியர்த்துக் கொட்டி மயங்கி சரிந்த பொழுது தான் தவறென்று புரிந்தது.

வேலை விஷயமாக கோயம்புத்தூர் வரை சென்றிருந்த விக்ரமாதித்தியன் விஷயமறிந்து பதட்டமாய் வந்தபொழுது பார்த்தது சில இணைப்புகளுடன் ஐ. சி. யூ வில் படுத்திருந்த தந்தையை தான்.

மருத்துவரைப் போய் பார்த்தபொழுது ‘மைல்ட் அட்டாக்’ என்றார். வேதனையில் முகம் கசங்க வெளியே வந்தவன், தான் தேற்றவேண்டியவர்கள் கண்முன்னே இருப்பதை உணர்ந்து தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு வந்து ஜெகன் அருகில் அமர்ந்தான்.

“என்னப்பா சொன்னார்…டாக்டர்…?” என ஜெகன் கரகரப்பான குரலில் கேட்க,
கண்களில் நீருடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கமலாவின் பார்வையை உணர்ந்தவன்,

“ஒன்றும் இல்லை மாமா…வேலை அது இதுன்னு ஸ்ட்ரெஸ் ஆகிடுச்சு, மைல்ட் அட்டாக் மாதிரி இருக்குனு தான் டாக்டர் சொன்னார். இனி ரொம்ப வேலையை இழுத்துக்காம மெனக்கெடாம இருக்க சொன்னார். வேற எந்த பிரச்சினையும் இல்லை… இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் ரூம்க்கு மாத்திருவாங்க, நாளைக்கு மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சொன்னாங்க மாமா…” என விஷயத்தை பக்குவமாய் சொல்லியபடி தெம்பாய் பேசியவன் தன் வார்தைகளிலேயே தனக்கும் ஆறுதல் தேடிக்கொண்டான்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அனுரதிக்கு அவன் வேதனை புரியாமல் இல்லை, மற்றதை பற்றி நினைக்காமல் அவனுக்கு சென்று ஆறுதல் சொல்லலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் மற்றவரிடம் தன்னைக் காட்டக்கூடாது என நினைப்பவன் தான் போய் ஆறுதல் சொன்னால் என்ன செய்வான்,அதுவும் தான் போனால்! ஆடிவிட மாட்டானா…! பேசாமல் அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.

நார்மல் அறைக்கு மாற்றியவுடன் சிறிது நேரம் சென்று அனைவரையும் மறுநாள் வரலாம் என வீட்டுக்கு கிளப்பியவன், தான் இருப்பதாக கூறிவிட, ஜெகனுக்கும் வீட்டுக்கு செல்ல மனமில்லாததால் அவரும் அங்கேயே தங்கிவிட்டார்.

கடைசியாக அறையை விட்டு வெளியே வந்த அனுரதி விக்ரமை காணவில்லை என்ற யோசனையுடன் நடந்துவர, படிகளுக்கு பக்கவாட்டில் சிறிது தள்ளியிருந்த மாடிச்சுவரை இறுகப் பற்றியபடி நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ! மீண்டும் முரளி அறைக்குச் சென்று சிலநிமிடங்கள் கழித்து திரும்பும்பொழுதும் அவன் அதேநிலையில் இருக்க,

ஒரு நீளமூச்சோடு அவனருகில் சென்று கைப்பிடி சுவரில் கைவைத்தவள் அவன் பார்வையிருந்த இடத்திலேயே தன் கண்களையும் பதித்து,

“மாமாவுக்கு எதுவும் ஆகாது, அதான் எல்லாரும் இருக்கோமே… இனி டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கலாம்…” என்றவளை அவன் முதலில் ஆச்சரியமாய் திரும்பி பின் ஆழமாய் பார்ப்பதை உணர்ந்தும் அவன் பார்வையை சந்திக்காமலேயே திரும்பி சென்று படிவழியாக இறங்கிவிட்டாள்.

Advertisement