Advertisement

மயக்கும் மான்விழியாள் 30-1

மதுமிதாவிற்கு நிவேதா கூறிய பிறகே ரூபன் காவல்துறை அதிகாரிகளிடம் என்ன கூறியிருப்பான் என்ற நினைவு வர அவனை தேடினாள்.அவனோ பூமிநாதனின் அறையில் சுந்தரியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.தன் முன் முகம் மூடி அழுது கொண்டிருந்த தங்கையை தேற்றிவிட்டு தன் தந்தை இருக்கும் அறைக்கு சென்றாள் மது.

பூமிநாதனுக்கோ ரூபனைக் கண்டதிலிருந்து மனதில் சொல்லானா நிம்மதி என்று தான் சொல்லவேண்டும்.தனக்கு பிறகு மகளின் வாழ்க்கை என்னவாகும் என்ற நினைவிலேயே உழன்றவருக்கு ரூபனைக் கண்டவுடன் மனதின் ஓரத்தில் சிறிய நம்பிக்கை கீற்று உருவானது.ரூபன் தன் மகளை கைவிடமாட்டான் என்று நினைத்தாலும்,தான் முன்பு செய்த செயல்கள் மகளின் வாழ்வை பாதிக்குமோ என்ற பயமும் இருந்தது.தன் மகள் ரூபனை அன்றி வேறு ஒருவனை மனதால் கூட நினைக்கமாட்டாள் என்பது திண்ணம்.அதை அவனும் புரிந்துகொள்ள வேண்டுமே என்பதே அவரின் கவலையாகி போக தன்னையும் மீறி அவரின் கண்கள் கலங்கியது.

ரூபனுக்கு பூமிநாதனைக் கண்டதிலிருந்து தன் தந்தையின் நினைவு தான் வந்தது.அவரும் இவ்வாறு தானே படுக்கையில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவனுக்கு தெரியும் தானே.அதனாலே என்னவோ அந்த அறைக்கு வந்ததில் இருந்து பூமிநாதனை தவிர எதையும் பார்க்கவில்லை.சுந்தரி பூமிநாதனின் உடல் நிலை பற்றிக் கூறும் போது கூட செவிகளால் கேட்டானே தவிர பார்வையை பூமிநாதனை விட்டு அகற்றவில்லை.

ரூபனுக்கு பூமிநாதனின் மீது கோபம் இருந்தாலும் இப்போது அவரை இவ்வாறு பார்க்கவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.தன்னைக் கண்டவுடன் அவரின் முகத்தில் வந்து போன உணர்ச்சிகளை அனைத்தையும் பார்த்தவனுக்கு அவரின் கண்கள் கலங்குவது எதற்கு என்று புரிய அவரின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டு,

“மது இனி என் பொறுப்பு…அவளை பத்தி இனி நீங்க கவலைபடாதீங்க…”என்று அவரது மனசஞ்தலத்தை போக்க பூமிநாதனுக்கோ அதுவரை கட்டுப்படுத்தியிருந்த அனைத்து உணர்வுகளும் வெளி வந்தது.ரூபனின் கைளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர் கண்களால் தன் செயலுக்கான மன்னிப்பை வேண்டினார்.திடீர் என்று பூமிநாதன் வெடித்து அழவும் அனைவரும் பதட்டமாகினர்.அப்போது அறையின் உள் வந்த மது தன் தந்தை ரூபனின் கைகளை பற்றிக் கொண்டு அழுவதை பார்க்க முடியாமல்,

“அப்பா…என்னப்பா இது…அழாதீங்க உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது ப்ளீஸ்…”என்று கெஞ்ச சுந்தரியோ பூமிநாதனை ஒரு வெறுமையான பார்வை பார்த்தாரே தவிர வெறு எதுவும் சொல்லவில்லை.பூமிநாதனின் அழுகையை கேட்ட நிவேதாவும்,நித்யாவும் கூட அறைக்கு ஓடி வந்திருக்க அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலை.ரூபனுக்கோ மிகுந்த தர்ம சங்கடமாகி போனது.அவனோ பூமிநாதனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று புரியாமல் விழிக்க சுந்தரி தான் அவனின் நிலை புரிந்து பூமிநாதனை சமாதானப்படுத்தினார்.என்னதான் சுந்தரி சமதானமாக பேசினாலும் பூமிநாதன் ரூபனிடம்,

“என் மகளை கைவிட்டுடாதீங்க தம்பி…”என்று கை கூப்பிக் கேட்டுவிட்டார்.ஒரு தந்தையாக பூமிநானுக்கு மற்ற அனைத்தும் பின்னுக்கு சென்று மகளின் வாழ்வு மட்டுமே தெரிந்தது.மதுவிற்கோ மனதின் சக்தி வடிந்துவிடும் போல இருந்தது தன் தந்தையை அவ்வாறு காண்கையில்.என்ன தான் தந்தை தவறு செய்த பொழுதிலும் அவர் இவ்வாறு மன்றாடுவது,அதுவும் தன் வாழ்விற்காக என்றாலும் மனது தாளவில்லை.ரூபனோ அவரின் கைகளை பற்றி,

“நீங்க சொல்லனும்னு அவசியமே இல்லை…அவ தான் என் மனைவி இதுல்ல எந்த மாற்றமும் இருக்காது…நீங்க என்னை நம்பலாம்…”என்று அவருக்கு நம்பிக்கை தர அப்பொழுது தான் பூமிநாதனின் முகம் தெளிவடைந்தது.அதுவரை இருந்த கடினமான சூழல் மறைந்து சற்று இலகுவாக இருந்தது ரூபனின் வார்த்தைகளால்.சுந்தரிக்கு மனதிற்குள் தேவகி என்ன கூறுவாறோ என்ற பயம் இருந்தது தான் இப்போது ரூபன் இவ்வளவு கூறிய பின் சற்று நம்பிக்கை வந்தது.ரூபன் பூமிநாதனிடமும்,சுந்தரியிடமும் ஏதோ பேசிக்கொண்டிருக்க மதுவோ தான் கேட்க வந்ததைக் கூட மறந்து ஏதோ யோசனை செய்தபடி அந்த அறையை விட்டு வெளியேறிருந்தாள்.

சுந்தரியிடம் பூமிநாதனின் சிகிச்சை பற்றி சிலவற்றை கேட்டுவிட்டு கிளம்பும் நேரம் மதுவை தேட அவளோ தன் அறையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.அவளது முகமே கூறியது ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிறாள் என்று.

“ப்ச்…இப்ப இவ என்ன யோசிக்கிறானு தெரியலையே…”என்று நொந்தவாறு அவளின் அருகில் அமர்ந்த ரூபன் அவள் கைகளை பற்றி,

“விழி ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை…”என்று கேட்டவாறு அவளின் முடிச்சிட்ட நெற்றியை நீவியபடி கேட்டான்.முதலில் மதுவிற்கு ரூபன் என்ன கூறிகிறான் என்பதே புரியவில்லை அதனால்,

“என்னத்தான் சொல்லறீங்க….எனக்கு ஒண்ணும் புரியல…”என்று விழிக்கவே செய்தாள்.ரூபனுக்கு சிரிப்பு பீரிட்டது அவளது புரியாத பாவனையில் இருந்தும் தன் சிரிப்பை தன் இதழ்களுக்குள் அடக்க அவன் மிகவும் சிரமபட,அப்போது தான் மதுவிற்கு அவன் தன்னை ஏதோ கிண்டல் செய்கிறான் என்று புரிய,

“அத்தான்….என்ன நினைச்சீங்க சொல்லுங்க…சொல்லுங்க…”என்று சிறுபிள்ளை போல அவனின் தோள்களை அடிக்க ரூபனுக்கு மேலும் புன்னகை விரிந்தது.அவளது கைகளை தன் கைகளுக்குள் அடக்கியவறே,

“ஏய்..நான் என்ன சொன்னேன்…உன்கிட்ட இல்லாத மூளையை ஏன் கசக்கிட்டு இருக்க…அதனால தான் ரொம்ப கஷ்டபடாதனு சொன்னேன்..”என்று கூறி அவளிடம் மேலும் சில அடிகளை வாங்கினான்.இவ்வளவு நேரம் இருந்த கனமான மனநிலை மறைந்து மனது சற்று இலகுவானது இருவருக்கும்.மனம்விட்டு சிரித்துக் கொண்டிருந்த மதுவின் தலையை செல்லமாக ஆட்டியவன் அவளிடம்,

“இப்ப சொல்லு…என்ன ஓடுச்சு இங்க…”என்று அவளின் தலையை தொட்டு கேட்கவும்,மதுவின் முகம் மீண்டும் இறுகி யோசனைக்கு செல்ல அதனை கலைத்தான் ரூபன்,

“விழி…”என்று அவன் அழைக்கவும் அவனது முகத்தை பார்த்தாள்,

“என்ன யோசனை சொல்லு…”என்று சற்று அழுத்தமாக கேட்டான்.

“அத்தான்….அது…”என்று தயங்கியவள் பின் தானாகவே,

“அத்தான்…நீங்க போலீஸ் கிட்ட என்ன சொன்னீங்க…முதல்ல அத சொல்லுங்க…”என்று மாற்றி கேட்க ரூபனுக்கு அவள் கேட்க வந்தது வேறு என்று நன்கு புரிந்தது.அதனால் அவன் முறைத்துக் கொண்டே எழ முற்பட அவனது கைகளை பற்றியவள்,

“அத்தான்..ப்ளீஸ்…கோப பாடாதீங்க…”என்று கெஞ்சலாக கேட்க ரூபனோ,

“என் கிட்டயே நீ பேச்சை மாத்தி பேசுற இல்ல…”என்றவன் கோபமாகவே முகத்தை திருப்பினான்.அவனது கோபத்தை உணர்ந்த மதுவிற்கு மனது மீண்டும் பழைய சம்பவங்களை நினைக்கத் தொடங்கியது.எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்று அஞ்சியவளுக்கு வார்த்தைகள் வராமல் போக கண்கள் குலம் கட்டியது.அவள் தான் கோபட்டாலாவது மனதில் உள்ளதை கூறுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக போக அவளது அழுகை மேலும் அவனை வருத்தியது.

“விழி…என்னடி ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் அழுகுற…ப்ச் சொன்னாதான தெரியும்…”என்று சலிப்பாகவே வந்தது அவனது குரல்.அவனும் என்ன தான் செய்வான் மனதில் எதையோ போட்டு உழட்டுகிறாள் என்று கேட்டாள் அதற்கு பதில் கூறாது பேச்சை மாற்றி பேசுபவளிடம் என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை.

மதுமிதாவிற்கு ரூபனின் சலிப்பான குரலில் கோபம் உண்டாக,

“நீங்க ஒண்ணும் என் கிட்ட சொல்ல வேண்டாம் போங்க போங்க..”என்று அவனை பிடித்து தள்ள ரூபனுக்கு மனதில் இருந்த அத்தனை சோர்வு மறைந்து உற்சாகம் பிறந்தது அவளது சிறுபிள்ளை தனத்தில்.தன் மார்பில் கை வைத்து தள்ளிக் கொண்டிருந்த மதுவை சற்றென்று இழுத்து அணைத்தான் ரூபன்.திடீர் என்று அவன் அணைப்பான் என்று அறியாத மது சற்று தடுமாறி அவன் மீது மோதி நின்றாள்.தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த ரூபன்,

“ஓய்….என்னடி ரொம்ப தான் விரட்டுற…இது என் மாமியார் வீடு பார்த்துக்கோ…”என்று கூற அவனது நெஞ்சில சாய்ந்து கொண்டு கேட்பவளுக்கு இதமாக இருந்த போதிலும் புத்தியில் ஏதோ அலாரம் அடிக்க அவனை விட்டு விலகினாள்.மதுவின் ஒவ்வொரு அசைவும் ரூபனுக்கு அத்துபடி அவளது விலகிலேயே அவள் எதை பற்றி யோசனையில் உழல்கிறாள் என்று புரிந்து கொண்டான்.இருந்தும் அவள் வாய் மொழியாக சொல்ல வேண்டும் என்று மீண்டும் கேட்டான்,

“சொல்லு விழி…என்ன நினைக்கிற உன் மனசுல்ல…எனக்கு தெரியும் நீ சொல்லு…”என்று அவளை ஊக்கினான்.இதற்கு மேலும் அவனிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்தவள்,

“அத்தான்…நீங்க சொல்லுற மாதிரி…நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குமா??அத்தை இதுக்கு ஒத்துக்குவாங்களா??”என்றவள் பின் மீண்டும்,

“அப்படியே அத்தை ஒத்துக்கிட்டாளும் என்னால இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியாது…நீங்க கோப படுவீங்கனு எனக்கு தெரியும்…ஆனா எனக்கு வேறு வழி தெரியில…என் குடும்ப சூழல்…”என்று மேலும் ஏதோ கூற வந்தவளை தடுத்தது ரூபனின்  குரல்,

“அது என்ன உன் குடும்பம் விழி…அப்ப நான் யார் உனக்கு…”என்று ரூபன் மீண்டும் துவங்க இம்முறை மது அவனின் வாயில் ஓங்கி ஒரு அடி வைத்தாள்.

“மூச்…நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் நீங்க எதுவும் பேசக் கூடாது….”என்று கட்டளையிடுவது போல கூற ரூபனோ,

“சரி நான் பேசல..நீ பேசு…”என்றுவிட்டு மீண்டும் அவளை இடை வளைத்து,தன் முகத்தை அவளது கழுத்தில் புதைக்க மதுவின் பாடு தான் திண்டாட்டமாக போனது.கதவு வேறு திறந்து இருக்க யாராவது வந்துவிட்டால் என்னவாவது என்று பயந்தவள் அவனை விலக்க முயற்சி செய்தாள்.ஆம் முயற்சி தான் செய்ய முடிந்தது அவளாள், அந்தளவிற்கு ரூபனின் பிடி இறுகி இருக்க மதுவால் அவனை விலக்க முடியவில்லை.

ஏதோ விளையாட்டு போல தான் அவளை அணைத்தான் ரூபன் ஆனால் இப்போது அவனாலே அவளிடம் இருந்து விலக முடியும் என்று தோன்றவில்லை.அதனை நிரூபிப்பது போலவே இருந்தது அவனின் அடுத்த செய்கை,இடையினை வளைத்திருந்த கைகள் மெல்ல ஊர்ந்து அவளின் மேனியில் ஊர்வலம் வர,அதற்கு போட்டி போடுவது போல அவனது இதழ்களும் அவளது நெற்றி,கன்னம் என்று சிறு சிறு முத்தங்களை வைத்தவன்,அவளின் பட்டு அதரங்களை முற்றுகையிட நெருங்கும் நேரம் மதுவின் கைகள் வேகமாக அவனது அதரங்களை மூடியது.

ரூபனோ தனது செயல் தடைபடுவது போல் இருக்க தன் கைகளால் அவளது விரல்களை விலக்க முற்படும் நேரம் அவனின் பிடியில் வெளி வந்த மது ரூபனை முறைக்க,ரூபனோஏதோ மாய வலை அறுப்பட்டது போல நின்றான்.ரூபன் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளி வராமல் இருக்க தன் அருகில் இருந்த தலையனையால் மொத்த தொடங்கினாள்.

“என்ன வேலை பார்க்கிறீங்க நீங்க…உங்கள..”என்று திட்டிக் கொண்டு அவனை மொத்தினாள்.

தான் செய்யவிருந்த செயலை நினைத்து சற்று வெட்கி தான் போனான் ரூபன்.தன் தலையை அழுந்த கோதி தன்னை நிலை படுத்திக் கொண்டவன் மதுவிடம் அசடு வழிய நின்றான்.அவன்  நின்ற விதத்தை கண்ட மதுவிற்கு கோபம் போய் சிரிப்பு வந்தது.

“ஓய் சாரிடி…எதுக்கும்  நம்ம கல்யாணம் முடியற வரை நீ தள்ளியே இரு…”என்று கூற மதுவிற்கு முகமும்,அகமும் மலர்ந்தது.அவளது சிவந்த முகத்தைக் கண்டவன் அவளிடம்,

“இப்ப சொல்லு…நான் கேட்கிறேன்…”என்று நல்லபிள்ளை போல கூற மதுவிற்கு தான் என்ன பேச வந்தோம் என்பதே மறந்து போனது அவனின் செயலால்.

“ச்ச்…போங்க அத்தான் நான் மறந்துட்டேன்…நீங்க முதல்ல போலீஸ் கிட்ட என்ன சொன்னீங்க சொல்லுங்க…இந்த நிவி வேற பயந்து அழுதுக்கிட்டு இருக்கா…”என்று நிவி கூறியதை கூற அதுவரை இருந்த இலகு தன்மை நீங்கி முகம் இறுகியது ரூபனுக்கு.

“நான் போலீஸ் கிட்ட அந்த நிர்மலும்,சுனிலும் சேர்ந்து நம்ம வீட்ல நகை எல்லாம் திருட முயற்சி செஞ்சாங்கனும்,இந்த வீட்ட அபகரிக்க திட்டம் போட்டாங்கனு தான் கம்பெளைன்ட் கொடுத்திருக்கோம்…நிவியை இதுல நாங்க கொண்டு வரல…”என்று கூற மதுவோ,

“நாங்கனா???யார் யார் அத்தான்???”என்று கேட்டாள்.ரூபன் அவளிடம்,

“நான் கொடுக்கல மண்டு…உங்க பெரியம்மாவும்,நித்யா அக்காவும் கொடுக்கிற மாதிரி செஞ்சிருக்கேன்…”என்று கூற மதுவிற்கு இப்போது நித்யா அந்த காவல் அதிகாரிகளிடம் பேசியது நினைவுக்கு வந்தது.மதுவிற்க்கு இப்போது மனது சற்று நிம்மதியாக உணர்ந்தாள் நிவேதாவிற்கு எந்த பிரச்சனையும் வராது என்றதும் முகத்தில் சற்று தெளிவு பிறந்தது.அப்போது அவளின் அருகில் வந்த ரூபன்,

“விழி…அப்புறம் நம்ம கல்யாணத்தை பத்தி நீ எந்த கவலையும் படாத…கண்டிப்பா அம்மா நம்ம கல்யாணத்திற்கு ஒத்துக்குவாங்க…நீ உன்னோட வீட்டாளுங்க பத்தியும் கவலைபடாத…நான் உனக்கு வேத்து ஆளா இருக்கலாம் ஆனா நீ எனக்கு எப்பவும் என்னோட அத்தை பொண்ணு தான்…அதனால அவங்கள நான் பார்த்துகிறேன்….”என்று ரூபன் மென்மையாக தான் கூறினான்.

“அப்போ இத்தனை நாள் நான் உங்க அத்தை பொண்ணுன்றது உங்களுக்கு நியபகம் இல்லையா அத்தான்…”என்று கேட்டாள் மது.அவள் வேண்டும் என்று கேட்கவில்லை தன்னையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்திருந்தன.

அதுவரை இருந்த இதமான சூழல் மறைந்தது ரூபனின் முகம் மாறத் துவங்க மதுவிற்கு அப்போது தான் கேட்டது தவறு என்று உரைக்க அவன் என்ன கூறுவானோ என்று நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.பழைய விஷயங்களை இருவரும் மறக்க நினைத்தாலும் தங்களை அறியாமலே அதன் தாக்கம் வெளிபட இருவருக்குள்ளும் ஒரு கசப்பான சூழல் உருவானது.இருவர் மனதிலும் அளவுகடந்த காதல் இருந்த போதிலும் சில விஷயங்களில் ரூபனும் அவனின் நிலைபாட்டில் இருந்து இறங்க மறுக்க மதுமிதவும் பிடிவாதம் பிடிக்க என்று மீண்டும் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது.

Advertisement