Advertisement

மயக்கும் மான்விழியாள் 29

தன் வீட்டின் வாசலை நெருங்கும் போதே மதுமிதாவிற்கு யாரோ அழும் குரல் போல கேட்டது தான்,அவள் வசந்தா தான் டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே நெருங்க நெருங்க வீட்டில் சத்தம் அதிகம் கேட்கவும் சற்று பயந்தவாறே உள்ளே ஓடினாள்.வீட்டின் உள்ளே வருவதற்குள் அவளுள் பல எண்ணங்கள் யாருக்கு என்னவாயிற்று என்று பயந்தவாறே உள்ளே ஓடிவற அங்கே அவள் கண்ட காட்சியில் உள்ளம் நடுங்கி தான் போயிற்று.

வீட்டின் ஹாலில் நடுநாயகமாக நிர்மல் கையில் மது பாட்டில் உடன் அமர்ந்திருக்க,அவனது தம்பி சுதீப் நிவேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.வீட்டில் உள்ள மற்றவர்களை அவரவர் ரூமிலேயே அடைத்து வைத்திருந்தனர் அண்ணன்னும்,தம்பியும்.அனைவரும் அவரவர் ரூமில் இருந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.வீட்டில் உள்ள தொலைபேசி,கைபேசி என அனைத்தும் உடைந்து கிடந்தது.அவர்கள் தான் உடைத்திருப்பனர் என்று புரிந்தது மதுவிற்கு.இவ்வளவு யோசித்திருக்கின்றனர் என்றால் எல்லாம் திட்டமிட்டு தான் செய்திருக்கிறார்கள் என்று மதுவிற்கு புரிந்தது.

மதுவிற்கு மூளையே ஒருநிமிடம் வேலை செய்யவில்லை இப்போது தான் உள்ளே சென்றாலும் தானும் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.வெளியில் சென்று யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிலேயேயும் சிக்கல் ஏற்பட தான் வாய்ப்புக்கள் அதிகம்.ஏனென்றால் நடக்கும் சம்பவம் ஒரு பெண்ணுடன் சம்மந்தபட்டது அக்கபக்கம் உள்ளவர்கள் பார்த்தால் தங்களுக்கு தான் அசிங்கமாகிவிடும்.என்ன செய்வது என்ன செய்வது என்று மூளையை பதட்டத்துடன் கசக்கும் நேரம் அவள் மனதில் மின்னலென வந்தான் சிவரூபன்.தன் கைபேசியை எடுத்து அவனுக்கு அழைக்கலாம் என்று மது கைபை துழவ அவளது கைபேசி கிடைக்காமல் போனது எங்கோ தவறவிட்டால் போலும் அய்யோ கடவுளே என்று தன் நிலையை நொந்து கொண்டு இனியும் தாமதிக்க முடியாது எப்படியேனும் தன் தங்கையை காப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்தாள்.

நிர்மல்,சுதீப் இருவருமே நன்கு குடித்திருந்தனர் அதனால் சற்றும் நிதானமில்லாமல் தான் இருந்தனர் இருவரும்.மது அவசரமாக வெளியில் துழவினாள் ஏதேனும் கட்டை கிடைக்கிறாதா என்று வீட்டின் மூளையில் ஒரு கட்டை இருக்கவும் அதை எடுத்து வந்தவள் மெதுவாக முதலில் நிர்மலை நெருங்கி அவன் தலையில் ஓங்கி அடித்தாள்.தன் தலையில் அடிவிழவும் அலறியவறே கீழே விழுந்தான் நிர்மல்.அதுவரை சத்தம் போட்டுக்கொண்டிருந்த சுதீப் நிவியின் கையை விட்டுவிட்டு மதுவை பிடிக்க வேகமாக வர அவனையும் அந்த கட்டையால் ஓங்கி அடித்திருந்தாள் மது.அதற்குள் நிவேதா மதுவை வந்து கட்டிக் கொண்டாள்.

நிவேதாவிற்கு உடலெல்லாம் நடுங்கியது மது மட்டும் வரவில்லை என்றால் அடுத்து என்ன என்று நினைக்கும் போதே நெஞ்சில் குளிர் எடுத்தது.நிவேதாவின் முதுகை தடவியவாறே நின்ற மதுவிற்கும் கை,கால்கள் நடுங்க தான் செய்தது.தான் கண்ட காட்சியில் இருந்து அவள் வெளிவரும் முன்னரே ரூம்மில் உள்ளவர்கள் மேலும் கத்தினார்கள் மது என்ன என்று உணரும் முன் அவளது கைகளை வலுவாக பிடித்திருந்தான் நிர்மல்.

“ஏய் என்ன என்னையவே அடிக்கிறியா…உன்னை என்ன செய்யிறேன் பாரு…”என்று குழைந்தவறே அவளை நெருங்கினான்.நிவேதாவோ நிர்மலைக் கண்டு மேலும் நடுங்கி கத்த தொடங்கினாள்.வீட்டில் உள்ள மற்றவர்களும் சேர்ந்து கத்த மதுவும் நிர்மலை தள்ளிவிட முயன்று கொண்டிருந்தாள்.நிர்மலின் பிடி இரும்பு போல இருக்க அவனிடம் இருந்து போராட ஆரம்பித்தாள்.மதுவின் சக்தி வடிந்துவிடும் போல் இருக்க பயம் பிடித்துக் கொண்டது எங்கே நிர்மலிடம் சிக்கிவிடுமோ என்று பலமாக போராட துவங்கினாள்.அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலின் மூக்கில் ஓங்கி யாரோ குத்த அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

மதுவிற்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது.யார் நிர்மலை அடித்தார்கள் என்று கை,கால்கள் நடுங்க திரும்பியவள் அங்கே ருத்ரமூர்த்தியாய் நின்றுகொண்டிருந்த ரூபனைக் கண்டு மனதில் உள்ள அத்தனை சக்தியும் திரட்டி,

“சிவு அத்தான்…”என்று கத்தினாள்.நிவேதாவோ கத்தியே அரை மயக்க நிலைக்கு சென்றிருந்தாள்.அவளை ஒரு தோளில் தாங்கிக் கொண்டு நிர்மலை தள்ளிக் கொண்டிருந்தாள் மது.மதுவிற்கு மயக்கம் வருது போல இருக்க அவளின் நிலையை ஊகித்த ரூபன் அவளை வேகமாக ஓடி வந்து அவளை ஒரு கையால் தாங்கி கீழே கிடந்த நிர்மலை மேலும் கால்களால் இரு மிதி மிதிக்க அவன் முழுமையாக மயங்கினான்.தன் தோள்களில் இருந்த மதுவையும்,நிவியையும் பிடித்து அருகில் அமரவைத்துவிட்டு,வேகமாக அடைந்து கிடந்தவர்களையும் திறந்துவிட அனைவரும் குழுமிவிட்டனர் மதுவிடமும் மற்றும் நிவியிடமும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நடந்த சுழலில் இருந்து மீளாமல் இருக்க ரூபன் அவ்வாறு இருக்கவில்லை தன் கைபேசி மூலம் கௌதமிற்கு தகவல் தந்தான்.கௌதம் வரவும் அவனிடம் சில வேலைகளை தந்தான்.கௌதமும் ரூபன் கூறியபடி செய்துமுடித்தான்.

அடுத்த அரைமணிநேரத்தில் வீடே பரபரப்பானது வீட்டின் முன் காவலர்கள் வண்டி வந்து நிற்க அக்கம்பக்கத்தினர் மதுவின் வீட்டை சூழ்ந்துவிட்டனர்.அரைமயக்கத்தில் இருந்த மது தன் வீட்டின் உள்ளே காவலர்கள் வருவதைக் கண்டு பயந்து போய் ரூபனைக் காண அவனோ இறுகி முகத்துடன் உள்ளே வந்த காவலர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான்.நிவேதா இன்னும் மயக்கத்திலேயே இருக்க வீட்டில் உள்ளவர்களுக்கு பயமாக இருந்தது.

சுந்தரிக்கு ரூபனைக் கண்டது மனதின் ஓரத்தில் சந்தோஷம் தான் என்றாலும் வீட்டின் சூழ்நிலை அவரை அப்படி நினைக்கவிடவில்லை.ஒரு பக்கம் மது,மற்றொரு பக்கம் நிவேதா அதுமட்டும் இல்லாமல் சற்று முன் நடந்த கலவரத்தில் பூமிநாதன் பயத்தில் நடுங்கியபடி அவரின் ரூமில் கத்திக் கொண்டிருக்க யாரை முதலில் கவனிப்பது என்று தலைசுற்றியது அவருக்கு.மதுவை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு இருந்தவர் உள்ளே தன் கணவரின் நிலை என்ன என்று அவ்வபோது எழுந்து பார்த்துவிட்டு தான் வந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மயங்கிய நிலையில் இருந்த நிர்மலும்,சுனிலும் காவலர்கள் அழைத்து சென்றனர்.அவ்வபோது காவலர்கள் நித்யாவிடமும் ஏதோ கேள்விகள் கேட்க அவளும் எந்த தயக்கமும் இல்லாமல் பதில் கூறிக்கொண்டிருந்தாள். மதுவிற்கு இப்போது சற்று தெளிந்திற்க என்ன நடக்கிறது என்று பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர எதுவும் கேட்கவில்லை.அவளுக்கு இனி ரூபன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.ரூமில் இருந்து தந்தையின் குரல் கேட்கவும் தன் தாயின் தோளில் இருந்து எழுந்தவள் சுந்தரியிடம்,

“ம்மா….நீங்க அப்பாவ பாருங்க…எனக்கு இப்ப பரவல்ல….”என்று கூற சுந்தரி தயக்கத்துடன் மதுவையும்,பூமிநாதன் அறையையும் பார்க்க,அப்போது மதுவின் அருகில் வந்த ரூபன் சுந்தரியிடம்,

“அத்தை நீங்க போங்க…போய் மாமாவ பாருங்க….நான் பார்த்துக்குறேன்….”என்று கூறினான்.அவனை வாஞ்சையாக பார்த்த சுந்தரி சரி என்னும் விதமாக தலையாட்டிவிட்டு சென்றார்.சுந்தரி சென்றவுடன் மதுவின் அருகில் அமர்ந்த ரூபன் அவளை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு அவனது கைகளை அவளது தோள்களில் அரண் போல போட்டுக்கொண்டான்.மதுவிற்கு எதிலிருந்தோ தன்னை காப்பவன் போல இருந்தது அவனது செய்கை.இனி அனைத்திற்கும் அவன் இருப்பான் என்று மனது கூறினாலும் புத்தி இது நிலைக்குமா என்பதிலேயே சுழன்றது.மனதின் பயம் மதுவின் கை,கால்களை நடுங்க செய்ய தன் கைகளுக்குள் இருந்த மதுவின் கைகள் நடுங்குவதை உணர்ந்த ரூபன்,

“விழி…இப்ப எதையும் யோசிக்காத…கொஞ்ச நேரம் அமைதியா இரு…”என்றுவிட்டு அவளது முதுகை வருடி விட மதுவிற்கு அப்போது அந்த அறுதல் தேவைப்படுவதாகவே இருந்தது.அதனால் ரூபன் கூறியபடி எதைபற்றியும் யோசிக்காமல் அவனின் அணைப்பில் இருந்து விலக ரூபன்,

“இப்படியே இரேன் டி…”என்று கடிந்தான்.அவளோ அவன் கூறியதை காதில் வாங்காதவள் போல அவனிடம் இருந்து விலகியவள் அவன் மேலும் தன்னை திட்டும் முன் அவனின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டாள்.ரூபனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து முகம் சற்று போலிவு பெற்றது.சேயை தாங்கும் தாய் போல அவளை மடிதாங்கிக் கொண்டான்.அவளை இதமாக தட்டிக் கொடுத்தவனின் மனது சற்றுமுன் நடந்த சம்பத்திலேயே இருந்தது.தான் வர சற்று தாமதம் ஆகியிருந்தால் என்று நினைத்து பார்த்தவனுக்கு உள்ளம் உலைகளம் போல கொதிக்க தொடங்கியது.

மதுவை அவளது வீட்டில் இறக்கிவிட்டு உல்லாச மனநிலையுடன் தன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் சிவரூபன்.அப்போது கைபேசியின் ஒலி கேட்கவும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கைபேசியை தேடினான்.அது அவனது கைபேசியின் சத்தம் அல்ல அதனால் யாருடையாதாக இருக்கும் என்று யோசித்தவாறே தேட மது அமர்ந்திருந்த இடத்திற்கு கீழ் கைபேசிக் கிடைத்தது.

ரூபனுக்கு புரிந்து போனது இது மதுவுடையது என்று.அவளிடம் கொடுக்க வேண்டும் என்று மனதும்,மூளையும் ஒருங்கே கட்டளையிட அனைத்தையும் மறந்தவன் நேரே சென்று நின்ற இடம் மதுவின் வீடு.அவளது வீடு வரும் வரை இல்லாத தயக்கம் இப்போது வர என்ன செய்லாம் என்று யோசித்தவனுக்கு கிடைத்த விடை நிவேதா.அவளை அழைக்கலாம் என்று அழைக்க அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தூரம் வந்துவிட்டு மதுவைக் காணாமல் செல்லவும் மனதில்லை.அதுவும் மாலையில் தனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட நெருக்கம் ரூபனின் மனதில் காதல்,மோகம் அனைத்தையும் தூண்டிவிட்டிருக்க ஆழ்ந்த மூச்சொன்றை விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான்.

ரூபன் உள்ளே நுழையும் போதே உள்ளிருந்து குரல்கள் கேட்டன முதலில் ஏதோ பேசுகிறார்கள் என்று தான் நினைத்து தான் சற்று தயங்கியவரே உள்ளே நெருங்க நிவேதா கத்துவதும்,மது கத்துவதும் மற்றவர்கள் அலறுவதும் கேட்க வேகமாக உள்ளே நுழைந்தான்.அங்கே வரவேற்பறையில் அவன் கண்ட காட்சி உள்ளத்தை உலுக்க,நிர்மலின் கரம் தன்னவளின் மீது படும் முன் அவனை ஓங்கி குத்தியிருந்தான் ரூபன்.

அதன்பின் அங்கிருந்த சூழ்நிலையை கவனித்தவன் மனதில் சில திட்டங்களை வகுத்தவாறே தனக்கு தெரிந்த காவல் அதிகாரியை அழைத்து அவரிடம் இங்கு நடந்த விஷயத்தை பகிர்ந்தான் அவரும் அவனிடம் சில விபரங்களை கூறிவிட்டு தான் வருவதாக வைத்தார்.உடனடியாக கௌதமிற்கும் தகவல் சொன்னான்.அதன் பிறகு ரூபனின் திட்டப்பிடியே அனைத்தும் நடந்தது.

நிவேதா சற்று மயக்கம் தெளிந்து இருந்தாலும் வசந்தாவை விட்டு நகரவில்லை.அவளுக்கு மனது சற்று முன் நடந்த சம்பவத்திலேயே இருக்க கை,கால்கள் நடுங்க தன் அன்னையை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.வசந்தாவிற்கோ தன் மகனை போல எண்ணிய மருமகன் இன்று செய்த காரியம் நெஞ்சத்தை நடுங்க தான் செய்திருந்தது.

நித்யாவோ ஓய்ந்து போய் ஒரு தூணில் அமர்ந்திருந்தாள் அவளது நினைவுகள் எல்லாம் சற்று பின்னோக்கி பயணித்து,

நித்யாவிற்கு சிறிது காலமாக நிர்மலின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்தது.யாருடனோ கைபேசியில் ரகசியமாக பேசுவது பின் தன்னைக் கண்டால் பேசாதது போல மறைப்பது என்று இன்னும் சில விஷயங்கள்.நித்யா அவனது கைபேசியை ஆராயலாம் என்று ஒருமுறை இரவு அவன் குளிக்கும் நேரம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக நிர்மல் வர அவனிடம் மாட்டிக் கொண்டாள்.

நித்யாவின் சந்தேகத்தை ஊர்ஜிகப்படுத்தும் விதமாக அடுத்தநாள் நித்யா தன் தோழி ஒருத்தியின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும் போது ஒரு வீட்டில் இருந்து ஆணும்,பெண்ணும் பேசிக்கொண்டே வருவதைக் கண்டாள் முதலில் யாரோ என்று சாதாரணமாக நினைத்து பார்வை விலக்கியவள் மூளையில் சற்று என்று ஏதோ தோன்ற அந்த பெண்ணுடன் வரும் ஆணை ஊன்றி கவனித்தாள் அது நிர்மல் போலவே தோன்ற அவர்கள் வரும் வீட்டின் ஓரமாக தன்னை மறைத்தபடி நின்றவளுக்கு கண்கள் இருண்டது.ஏன்னென்றால் அவளது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக் கொண்டு எங்கோ வெளியில் சென்று கொண்டிருந்தான்.

நித்யாவிற்கு அவர்களை கண்டதுமே புரிந்து போனது இது இன்று நேத்து வந்த உறவல்ல என்பது.அதன்பின் நிர்மல் அறியாவண்ணம் அவனை கவனித்தவளுக்கு அவனது உண்மையான சுயரூபம் தெரிந்தது.தான் மாட்டிக் கொண்டிருப்பது புதைகுழி என்பது புரிய அதில் இருந்து வெளி எப்படி வருவது என்பதே நித்யாவை வாட்டியெடுத்தது.இதில் நிர்மல் சில நாட்களாக நித்யாவை சந்தேக கண்ணோடு பார்த்தது அவளின் நடவடிக்கைளில் ஏற்பட்ட வித்தாயசத்தை உணர்ந்தது என்று எதுவும் அவளுக்கு தெரியாமல் போனது.  

நித்யாவிற்கு தன் மேல் சந்தேகம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த நிர்மல் இனியும் தாமதிக்காமல் இந்த சொத்தை அடைந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.அவனுக்கு இந்த வீட்டை எப்படியேனும் தன் கைகளுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது மட்டுமே,அந்த ஒரு காரணத்திற்காகவே நித்யாவின் ஆசை கணவன் போல நாடகம் ஆடிக்கொண்டிருந்தான்.தன் தம்பியை எப்படியேனும் இந்த வீட்டின் சிறிய மாப்பிள்ளை ஆக்கிவிட்டாள் வீட்டை அடைவது சுலபம் என்று தான் அந்த பெண் பார்க்கும் ஏற்பாடு செய்தது.ஆனால் அவன் நினைத்த காரியம் தான் நிறைவேறாமல் போய்விட்டது.

நிர்மலுக்கு மனதில் இந்த வீட்டில் உள்ளது மொத்தம் மூன்று ஆண்கள் அதில் தன்னை எதிர்கொள்ளும் அளவிற்கு மற்ற இருவரும் இல்லை என்பது திண்ணம்.இதில் மதுவை தவிர மற்றவர்களுக்கு வெளி உலகமும் தெரியாது,அதனால் அவர்களை பயமுறுத்துவது சுலபம் என்று எண்ணி தான் தன் தம்பி சுதீப் உடன் இணைந்து வெகு நாட்களாக திட்டம் தீட்டினான்.அதன்படி நிவேதாவை தங்கள் பிடியில் வைத்து அனைவரிடமும் பயத்தை உருவாக்கி பத்திரங்களில் கையெழுத்து வாங்குவது என்பது தான்.

இதில் மதுமிதா ஒரு ஆளை எப்படி சமாளிப்பது என்பதை தான் நிர்மல் இது நாள் வரை யோசித்துக் கொண்டிருக்க அதற்கும் வழி சொன்னான் தமையன்.தானும் நிவேதாவும் நெருக்கமாக இருக்குமாறு சில புகைப்படங்களை காட்டி மதுவையும் தங்கள் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்பது தான் அவர்களின் திட்டம்.இன்று நடந்ததும் அவர்களின் திட்டப்படி தான் நடந்தது ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று சிவரூபனின் வருகை.அவனின் வருகைக்கு பின் அனைத்தும் மாறிப் போனது.

மதுமிதாவின் வீடே ஏதோ புயலில் சிக்கியது போல சிதைந்து கிடந்தது.எவ்வளவு நேரம் மது ரூபனின் மடியில் உறங்கியிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.ரூபனும் மது நல்ல உறக்கத்திற்கு சென்றவுடன் அவளது தூக்கத்தை கலைக்காமல் தலையணையில் வைத்துவிட்டு சுந்தரியிடம் வேலையிருப்பதாக கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றிருந்தான்.கௌதமிடம் நான் வரும் வரை பார்த்துக்கொள்ளும் படி கூறி சென்றிருந்தான்.கௌதமும் ரூபன் கூறியபடி வீட்டின் மூளையில் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.அவனது கண்கள் அவனை அறியாமல் அவ்வபோது நிவேதாவை தீண்டி சென்றது.தன் அன்னை மடியில் சிறு குழந்தை போல அழுது கொண்டிருக்கும் நிவேதாவைக் காண்கையில் கௌதமின் மனதில் சிறிய வலி உண்டானது.

சுந்தரிக்கு பூமிநாதனை சமாளிப்பதே பெரிய வேலையாகி போக அவர் மற்ற எதையும் நினைக்கும் நிலையில் இல்லை.தன் கணவரின் மீது ஒரு கண்ணும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதுவின் மீது ஒரு கண்ணையும் வைத்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்தார்.தன் வீட்டிற்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திற்கே திரும்பி வந்திருந்தான் ரூபன்.அவன் வந்தவுடன் நேராக கௌதமிடம் சென்று,

“ரொம்ப தேங்க்ஸ் கௌதம்…”என்று கூற கௌதமோ,

“சார் தேங்க்ஸ் சொல்லாதீங்க…”என்று கூற அவனை பார்த்து புன்னகைத்த ரூபன்,

“சரி கௌதம் நீங்க கிளம்புங்க…நான் பார்த்துக்கிறேன்…”என்றான்.கௌதமும் ரூபனிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றான்.கௌதமை அனுப்பிவிட்டு ரூபன் உள்ளே வர அப்போதும் மது நல்ல உறக்கத்தில் இருந்தாள்,நிவேதாவோ வசந்தாவின் மடியிலேயே விசும்பியபடி படுத்திருக்க நேரே அவளிடம் சென்ற ரூபன்,

“ஏய் நிவிமா…என்ன இது இப்படி அழுதுக்கிட்டு இருக்க…நான் நீ ரொம்ப பிரேவ் கேர்ள்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்…”என்றவன் நிவேதாவின் கைகளை பற்றி எழுப்ப வசந்தவோ கண்கள் கலங்க அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றார்.நித்யா எதையும் நினைக்கும் நிலையில் இல்லை என்பது அவள் அமர்ந்திருக்கும் விதத்திலேயே தெரிந்தது.

“ம்ம் போ..போ முகத்தை அலம்பிட்டு வா…”என்று அவளை குளியலறைக்கு அனுப்பிவிட்டு வசந்தாவிடம் திரும்பிய ரூபன்,

“நீங்க அவங்கள பாருங்க…”என்று நித்யாவை காட்டினான்.எப்போதும் எதிர் கேள்விகள் கேட்கும் வசந்தா இன்று அனைத்தும் வடிந்து ரூபன் கூறியதை போல நித்யாவின் அருகில் சென்று அவளின் தோளைத் தொட அதுவரை தன் மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தவள் தன் அன்னையின் கால்களைக் கட்டிக் கொண்டு வெடித்து அழத்துவங்கினாள்.

நித்யாவின் அழுகை சத்தத்தில் பதறி அடித்து எழுந்த மது என்ன என்று நித்யாவின் அருகில் செல்லப் பார்க்க அவளது கைகளை பிடித்துக் கொண்ட ரூபன்,

“அவங்க அழட்டும் விடு விழி…”என்று கூற மதுவிற்கு தன் அக்காவின் அழுகை பார்க்க முடியாமல் கண்கள் கலங்க நின்றாள்.நிவேதாவும் நித்யாவின் அழு குரலைக் கேட்டு ஓடி வந்திருக்க அவளையும் தடுத்த ரூபன் நித்யாவிடம்,

“உங்க மனசவிட்டு அழுது முடிச்சுடுங்க….இனி அவனுக்காக நீங்க அழவே கூடாது…”என்ற கூற அதுவரை ரூபனின் கை பிடியில் நின்ற மது அவனிடம் இருந்து விலகி,

“அக்கா…ப்ளீஸ் இவ்வளவு அழாத…இதுக்கெல்லாம் அவன் தகுதியே இல்ல….”என்று கூற நித்யாவிற்கு தான் குற்ற உணர்ச்சியாக போய்விட்டது.எத்தனை முறை மதுவை உதாசீனப்படுத்தியிருக்கிறாள்,ஆனால் அவளோ தன் நலனுக்காக இவ்வளவு பேசவும் மனது லேசாவதற்கு பதிலாக கனமாகியது.மதுவின் கைகளை பற்றிக் கொண்ட நித்யா,

“என்னை மன்னிச்சிடு மது…நான் எத்தனை தடவை உன்னை உதாசீனப்படுத்தினேன்…..நீ…நீ இல்லனா இன்னக்கி நிவேதா…”என்று கூறும் போதே அவளது கை,கால்கள் நடுங்கத் துவங்கியது.வசந்தவோ இடிந்து போய் அமர்ந்துவிட்டார்.இவ்வளவு நாள் பணத்தைக் கொண்டு அனைத்தையும் வளைத்து விடலாம் என்ற மமதையில் இருந்தவருக்கு நிர்மல் நல்ல பாடத்தை கற்பித்துவிட்டான்.

“அக்கா…என்ன இது மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு…அழதா…”என்று நித்யாவை தோள்களில் அணைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்க நிவேதா,

“மதுக்கா..இன்னக்கி போலீஸ் எல்லாம் வந்தாங்கல…அப்போ அக்கம்பக்கத்திலேயும் விஷயம் தொரிஞ்சிருக்கும்ல…”என்று தன் முகத்தை மூடிக் கொண்டு அழ மதுவிற்கு அப்போது தான் ரூபன் காவல்துறையிடம் என்ன கூறினான் என்ற சிந்தனையே தோன்றியது.அவனிடம் பேசவேண்டும் என்று அவனைத் தேட அவனோ பூமிநாதனின் அறையில் இருந்தான்.  

Advertisement