Advertisement

மயக்கும் மான்விழியாள் 28

கௌதம் கூறியது போல அவனின் அலுவலகத்தில் இருந்தாள் மதுமிதா.முதலில் கௌதமிடம் வேலை வேண்டாம் என்று கூற தான் வர நினைத்தாள்.ஆனால் நேற்று ஆனந்த் கூறிய பிறகே அத்தியாவசிய செலவிற்கே பணம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தவளுக்கு,இப்போது வேலை என்பது முக்கியமானதாக போயிவிட மற்ற அனைத்தையும் தூர வைத்துவிட்டாள்.கௌதமிற்கும் மது வந்தவுடன் அவளுக்கு தன் கம்பெனி கணக்குகளை காண்பித்து அதில் செய்யவேண்டிய சில திருத்தங்களை கூறினான்.மது கௌதம் கூறிய அனைத்தையும் கவனமாக கேட்டாள்.அவளுக்கு புரியாத சில கணக்களுக்கு அவனிடமே கேட்டு தெரிந்து கொண்டாள்.இவ்வாறு அன்று மதியம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.

மதியம் தன் அலுவலக வேலைகளை முடித்த ரூபன் சைட் செல்வதற்கு முன் கௌதமிடம் பேசுவதற்காக அவனின் கம்பெனிக்கு சென்றான்.அவன் சென்ற நேரம் உணவு இடைவெளி என்பதால் ஆபிஸில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.நேற்று மது என்ன பேசினாள் என்பதை கேட்கவே ரூபன் கௌதமைக் காண வந்தது.கௌதமின் அறை நோக்கி செல்லும் போது ஏதோ உந்த கௌதம் ரூமின் வலது பக்கம் உள்ள ரூமை பார்க்க அங்கே மது ஏதோ தீவிரமாக பைல்களை புரட்டிக்கொண்டிருந்தாள்.ரூபன் ஒரளவு ஊகித்தான் மது இங்கு வேலை சேர்ந்திருகிறாள் என்று.மனதில் ஒரு வலி ஏற்பட்டது. எப்போதும் சிரிப்பில் விரியும் அவளது கண்களில் இப்போது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தவனுக்கு தோல்வியே மிஞ்சியது.

மதியவேளை உணவிற்கு வீட்டிற்கு செல்வதற்காக தன் அறையிலிருந்து வெளி வந்த கௌதம் அங்கே ரூபன் மதுவையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு,

“இவரு எப்ப வந்தாரு…எப்போதும் வரதுக்கு முன்னாடி போன் பண்ணுவாரு…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் ரூபனிடம் நெருங்கி,

“சார்…”என்றான்.அதுவரை மதுவையே பார்த்துக் கொண்டிருந்த ரூபன் கௌதமிடம் திரும்பி,

“ஹாய்….கௌதம்…உங்க பிரண்டு இப்ப உங்க கம்பெனியில வேலை சேர்ந்திருக்காங்க போல….”என்றான்.ரூபன் நக்கலாக கூறுகிறானோ என்று நினைத்து அவனின் முகத்தை பார்த்தான் கௌதம்.கௌதமின் பார்வையை உணர்ந்த ரூபன்,

“நானே உங்கிட்ட கேட்கலாம்னு இருந்தேன்….இப்ப தான் கொஞ்சம் டென்ஷன் குறைஞ்ச மாதிரி இருக்கு…இங்க அவளுக்கு பாதுகாப்பாவும் இருக்கும்…தேங்க்ஸ் கௌதம்…”என்றான்.ரூபன் தன்னை தப்பாக நினைக்கவில்லை என்பதே கௌதமிற்கு நிறைவாக இருந்தது.

“சார் தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க…அவ என்னோட பிரண்ட்…”என்றான்.அவனைக் கண்டு மென்மையாக புன்னகை சிந்திய ரூபன்,

“ஆமாம்….ஆமாம்…உங்க பிரண்ட் தான்…நான் இல்லனு சொல்லலியே…இருந்தாலும் உங்க பிரண்ட் இவ்வளவு பொறுப்பா இருக்கக் கூடாது…சாப்பாட்டைக் கூட மறந்து வேலை பார்க்குறாங்க….”என்றான் சிரிப்போடு.அவனது நோக்கம் உணர்ந்த கௌதம்,

“சரி சரி…சாப்பிட சொல்லுறேன்…”என்றுவிட்டு மதுவின் அறைக்குள் சென்று அவளை சாப்பிடும் மாறு கூறிவிட்டு வந்தான்.அவள் பைலை மூடிவிட்டு உணவு பையை திறக்கவும் தான் வெளியில் வந்தான் கௌதம்.அவன் வெளியில் வந்தவுடன் ரூபனிடம்,

“சார் வாங்க…சைட்க்கு போகலாம்…”என்றான்.ரூபனும் சரி என்றுவிட்டு கௌதமுடன் சென்றான்.இருவரும் வேலைகள் எந்தளவிற்கு செல்கின்றன என்று பார்வையிட்டுவிட்டு பின் உணவருந்த சென்றனர்.தன் அலுவலகத்திற்கு வந்த ரூபனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்த போதும் எதிலும் மனம் செல்லவில்லை.மனது முழுவதும் மதுவே நிறைந்திருந்தாள்.

அன்று மது செய்தது தவறு தான் என்றாலும் அவளை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் ரூபனுக்கு என்றும் இருந்ததில்லை.தன் விருப்பத்திற்கு தேவகி என்றும் மறுப்பு கூற மாட்டார் என்று ரூபனுக்கு தெரியும் இருந்தும் அவரது மனதை வருத்தாமல் அவரிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தான்,ஆனால் மதுவின் நிலையை நிவேதா கூறிய பிறகு இனியும் தாமதிக்கக் கூடாது சீக்கிரம் தாயிடம் பேசவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.தன் வேலைகளை முடித்துவிட்டு மதுவைக் காண கௌதமின் அலுவலகத்திற்கு சென்றான்.

மதுவும் முதல் நாள் என்பதால் முதலில் பிழையுள்ள கணக்குளை சரிப்பார்க்கவே இன்றைய பொழுது சென்றிருந்தது அவளுக்கு.மாத இறுதி நெருங்கிக் கொண்டிருப்பதால் சம்பளப்பட்டியல் வேறு தயார் செய்ய வேண்டும்,அதனால் முதலில் பழைய கணக்குளை சரிப்பார்த்தாள்.பின் சரிபார்க்க வேண்டிய கோப்புகளை வரிசைபடித்துக் கொண்டிருக்கும் நேரம்,

“மது…”என்று அழைத்தபடி வந்தான் கௌதம்.அவனைக் கண்டவுடன் புன்னகைத்த மது,

“வாங்க சார்…”என்றாள்.

“ஏய்…என்ன கிண்டல் பண்றியா….”என்று கேட்டான் கௌதம்.அவனைக் கண்டு புன்னகைத்தவள்,

“ஆமாம் இனி நீ எனக்கு முதலாளி தான அதான்….”என்று கூற தன் கைகளால் தன் தலையை அழுந்த கோதிய கௌதம் வெட்கபட,

“வாவ் சாருக்கு வெட்கம் எல்லாம் வருது….”என்று மேலும் வம்பிழுக்க,

“போதும் போதும்…என்னை ஓட்டுனது…கிளம்பல டையம் ஆச்சு…”என்று கேட்டான்.

“இதோ கிளிம்பிக்கிட்டே இருக்கேன்…”என்று கூறிக் கொண்டே கையில் ஒரு பைலை எடுத்துக் கொண்டு தன் இடத்தில் இருந்து எழந்தாள்.கௌதமும் அவளுடனே வெளியில் வர அப்போது அவர்களை நோக்கி வந்து நின்றது ரூபனின் கார்.ரூபனின் காரைக் கண்டவுடன் மது கௌதமிடம்,

“சரி கௌதம் நான் கிளம்புறேன்…”என்றுவிட்டு நகர்ந்தாள்.காரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த ரூபன் கௌதமிடம் வெறும் தலை அசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு வேகமாக மதுவிடம் விரைந்தான்.கௌதமோ,

“போச்சு இப்ப என்ன நடக்க போகுதோ…”என்று நினைத்தான்.

ரூபன் வருவதற்கு முன் தன் வண்டியை கிளப்ப நினைத்த மது தன் வண்டி சாவியை வண்டியில் பொறுத்தும் நேரம் புயலென வந்த ரூபன் அவளது சாவியை பிடுங்கி தன் கையில் சுழற்றிய வரே,

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க…அப்புறம் புது வேலை,புது இடம் எல்லாம் எப்படி இருக்கு…”என்று வினவ மதுவோ அவனை பார்ப்பதையே தவிர்த்து வேறுபக்கம் பார்த்துக் கொண்டு நினாறாள்.அவளது கண்கள் கலங்கி இருந்தது.தன் மனம் கவர்ந்தவனும் தன் நிலையை எள்ளி நகையாடிவிட்டனே என்ற கோபம்,ஆத்திரம் எல்லாம் அவளின் கண்களின் வழியே கண்ணீராக வெளியேறியக் கொண்டிருந்தது.அதைக் கண்ட ரூபன்,

“ஏய் விழி…நான் சும்மா தான் சொன்னேன்…இதுக்கு போய் யாராவது அழுவாங்களா….”என்று கூறியபடி அவளது கண்களை துடைத்தான்.அவனது தொடுகையில் மேலும் தூண்டப்பட்ட மது,

“நான் எதுக்கோ அழுவுறேன் உங்களுக்கு என்ன…போங்க இங்கிருந்து…”என்று கோபமாக கத்தினாள்.அவளது கோபத்தை ரசித்த ரூபன்,

“ப்பா எவ்வளவு கோபம் வருது என் விழிக்கு…”என்று அவளது கன்னத்தைக் கிள்ள,அவனது கைகளை தட்டிவிட்ட மது,

“என்னை தொடுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க…”என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவள்,வண்டியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க தொடங்க ரூபனும் அவளுடன் நடக்கத் தொடங்க,

“ப்ளீஸ்…என்னை  தனியா விடுங்க…நான் இந்த வேலைக்கு வரக் கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா என் குடும்ப சூழ்நிலை சரியில்ல…எனக்கு இப்ப  வேலை ரொம்ப முக்கியம்…”என்று கெஞ்சவே தொடங்கினாள்.அவளது பதிலிற்கு எல்லாம் அசருபவனா ரூபன்,

“ம்ம் புரியுது விழி…நானும் ஒரு காலத்தில இந்த கஷ்டம் எல்லாம் பட்டுருக்கேன்…”என்று கூறியவாறே அவளது கரத்தை பற்றினான்.அவனின் செயலில் அதிர்ந்தவள் விலக நினைக்க அவளை விலக விடாமல் நிறுத்தினான்.

“விழி ஒண்ணு மட்டும் மறந்துடாத நான் எப்போதும் உன்கூட இருப்பேன்…”என்று கூறிக் கொண்டிருக்கையில் அவனை இடைமறித்த மது,

“நீங்க என் கூட இருப்பீங்க இத நான் நம்பனும்….நான் செஞ்சது தப்பு தான் இல்லனு நான் சொல்லல அதுக்காக என்னை விட்டுட்டு போனீங்க தான…இ்ப்ப மட்டும் என்ன…போயிடுங்க இங்க இருந்து…”என்று ஆவேசமாக பேச அதற்குள் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த கௌதம் அவர்களை நோக்கி வந்தான்.

கௌதம் வருவதைக் கண்ட ரூபன் மதுவிடம்,

“சரி சரி நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம்…உன் பிரண்ட் வரான்…”என்று கூற மதுவும் தன்னை சரி செய்துக் கொண்டாள்.அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த கௌதம் ரூபனிடம்,

“சார் வாங்க சைட்ல வேலை இருக்கு…”என்று அவனைக் கிளப்பும் விதமாக கூற ரூபனோ கௌதமின் நோக்கம் உணர்ந்தவனாக,

“போலாம் கௌதம்…”என்றுவிட்டு மதுவிடம் திரும்பி அவளது சாவியை தந்துவிட்டு,

“நீ என்ன சொன்னாலும் நான் உன்னை பிரியனும்னு என்னைக்குமே நினைச்சது இல்ல….அன்னைக்கு என் நிலைமையல நீ இருந்தாலும் நீயும் அத தான் செஞ்சுருப்ப….அதனால நான் உன்னை பிரிஞ்சிட்டேனு நீ நினைக்காத விழி….என் மனசுல எப்போதும் நீ மட்டும் தான் இருப்ப,அதே போல  உன் மனசுல நான் தான் இருக்கேன்….தேவையில்லாம விதண்டாவாதம் செய்யாத…”என்று கூறிவிட்டு கௌதமிடம்,

“வாங்க கௌதம் போகலாம்…”என்று அழைத்து சென்றான்.

மதுமிதா ரூபன் சென்ற திசையையே பார்த்தக்கொண்டிருந்தவள்,பின் தன் தலையை உலுக்கி விட்டுவிட்டு தன் வீட்ற்கு சென்றாள்.ரூபனை தன் மனதிற்குள் திட்டியபடியே விட்டின் உள் நுழைய ஹாலில் நித்யா அமர்ந்திருந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.அவளைக் கண்டவுடன் நேற்றைய நிகழ்வு நியாபகத்திற்கு வர அவளிடம் கேட்கலாம் என்று அவளை நோக்கி செல்ல அப்போது பூமிநாதனின் அறையில் வெளியில் வந்த சுந்திரி,

“மது எப்போடா வந்த…முகம் அலம்பிட்டு வா டீ போட்டுருக்கேன்….”என்றுவிட்டு சமையல் அறைக்கு சென்றார்.அதுவரை ஏதோ நினைவில் இருந்த நித்யா மது தன்னை நோக்கி வருவதைக் கண்டு வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்.அதற்குள் அவளை நெருங்கி இருந்த மது,

“நித்யாக்கா…நில்லு….”என்றவள் அவளது முகத்தை ஆராய்ந்தாள் அழுதிருப்பாள் போலும் கண்கள் சிவந்து இருந்தது.முகமே ஏதோ கலையிழந்தது போல இருக்க மது,

“அக்கா…என்ன பிரச்சனை…ஏன் ஒருமாதிரி இருக்க…”என்று கேட்டாள்.நித்யாவோ மதுவின் கேள்வியில் ஒருநிமிடம் தடுமாறினாலும் அவளிடம் கூற மனமில்லாமல்,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மது…சும்மா நீயா எதுவும் நினைச்சுக்காத…”என்றுவிட்டு தன் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள்.மதுவிற்கு நித்யாவின் செய்க்கை ஏதோ சரியில்லை என்று தான் தோன்றியது.என்ன விஷயமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு ஒன்று பிடிபடாமல் போக,தன் பெரியம்மாவிடம் கேட்போம் என்று அவரைத் தேடினாள்.வசந்தா அப்போது தான் கோவில் சென்றுவிட்டு சாமி அறையில் விளக்கேற்றி கொண்டிருந்தார்.

“பெரிம்மா….”என்று மது அழைக்க அவளை நிமிர்ந்து பார்த்த வசந்தா,

“என்ன…”என்றார்.அவருக்கு மது எதற்காக இங்கு வந்தாள் என்று யோசனை செய்தவரே அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருக்க மது,

“பெரிம்மா…நித்யா அக்கா ஏதோ சரியில்லை என்னனு பாருங்க…”என்று கூற வசந்தாவிற்கு கோபம் தலைக்கேறியது,

“ஏய் என் பொண்ணுக்கு என்ன அவ நல்ல தான் இருக்கா…உன் கண்ணு படாம இருந்தாலே நல்ல தான் இருக்கும்…வந்துட்டா பொறாமை புடிச்சவ….இவ வாழ்க்கை நல்லா அமையலனு அடுத்தவ வாழ்க்கையை நாசம் பண்ண….போ இங்கிருந்து இல்ல….”என்று மேலும் என்ன கூறியிருப்பாரோ அதற்குள் சுந்தரி மதுவை இழுத்து வந்திருந்தார்.

சமையல் அறையில் டீயுடன் வந்த சுந்தரி மது நித்யாவிடம் ஏதோ பேசி விட்டு பின் உள் இருக்கும் பூஜை அறை நோக்கி செல்வதை பார்த்தே அவள் வசந்தாவை பார்க்கத்தான் செல்கிறாள் என்று ஊகித்தவர் அவளை பின்தொடர்ந்துவர அதற்குள் மது வசந்தாவிடம் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாள்.எங்கே மது மேலும் பேசினால் அவர் வார்தைகள் எவ்வாறு இருக்குமோ என்று பயந்து தான் மகளை இழுத்து வந்தார்.

“ஏன்டி உனக்கு இது தேவையா….”என்று சுந்திர மதுவிடம் கேட்க அவளோ பெரும் மூச்சொன்றை இழுத்துவிட்டு விட்டு,

“ப்ச்…அம்மா…நித்யாக்கா ஏதோ போல இருக்கா…அதான் என்னனு கேட்டேன்….”என்று கூற சுந்தரியும்,

“நானும் பார்த்தேன்டி…நாம எல்லாம் சொன்னா அவங்க கேட்க மாட்டாங்க…நீ இந்த விஷயத்தை இதோட விடு…நீ உன் பிரண்டு கிட்ட வேலை கேட்க போறேன்னு போனியே என்ன ஆச்சு…வேலை கிடைச்சுதா…”என்று கேட்க மதுவும் தனக்கு வேலை கிடைத்தைக் கூறினாள்.

ஒருவாரம் கடந்திருந்தது மது கௌதமின் கம்பெனியில் வேலை சேர்ந்து.தினமும் மாலை ரூபன் மதுவை பார்த்துவிட்டு தான் செல்வான்.முதலில் மதுவிற்கு கோபமாக தான் வரும் நாட்கள் செல்ல அவனைக் கண்டுகொள்ளாதது போல கடந்து விடுவாள்.என்ன தான் மது ரூபனை கண்டுகொள்ளதது போல இருந்தாலும் மாலை வேலைகளில் மனது அவனின் வருகையை எதிர்பார்க்க தான் செய்யும்.

அன்றும் அதே போல் தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வண்டி எடுக்க வந்தவள்,சுற்றியும் பார்க்க ரூபனைக் காணவில்லை.எப்போதும் அவளின் வண்டியில் சாய்ந்தபடி நின்று கொண்டிருப்பான்.இன்று அவனை காணவில்லை என்றும் மனதில் சிறு சுணக்கம்.ஏன் இன்னக்கி வரல ஒருவேளை வேலை அதிகமோ,கௌதம் கூட சைட்ல வேலையிருக்குனு சொன்னானே…அங்க போயிருப்பாரோ…என்று சிந்தித்தவாறே தன் வண்டியை இயக்கி பாதி தூரம் வந்திருப்பாள் அப்போது வண்டி திடீர் என்று நின்றுவிட எவ்வளவு முயன்றும் மீண்டும் வண்டி இயங்கவில்லை.

“ச்ச இன்னக்கி நேரமே சரியில்லை…”என்று நொந்துக் கொண்டு வண்டியை தள்ளியபடி பக்கதில் ஏதாவது மெக்கனிக்கல் ஷெட் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேவர அப்போது அவளை உரசியபடி வந்து நின்றது ரூபனின் கார்.அவனை பார்க்காமல் சென்றுவிடுவோமோ என்று நொந்தபடி வந்து கொண்டிருந்தவளுக்கு அவனை நேரில் காணவும் முகமும்,அகமும் தன்போல் மலர்ந்தது.

ரூபனும் மதுவை சந்திக்க வேண்டும் என்று வேகமாக கௌதமின் கம்பெனிக்கு வர அப்போது தான் மது சென்றதாக கூறினார்கள்.எப்படியும் பாதி தூரம் சென்றிருப்பாள் என்று சிந்தித்த வாரே வேகமாக வர அவளோ வண்டியை தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.காரில் இறங்கியவன்,

“என்ன விழி…ஏன் வண்டியை தள்ளிக்கிட்டு போற…”என்று கேட்க ஏற்கனவே ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் சற்று பயத்தில் இருந்தவளுக்கு இப்போது ரூபனைக் கண்டவுடன் தான் நிம்மதியே வந்தது.அவனைக் கண்ட மகிழ்ச்சியில் மற்றதை மறந்தவள்,

“என்னனு தெரியலத்தான்…வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டிக்குது…”என்று கூற ரூபனோ மதுவின் அத்தான் என்ற அழைப்பிலேயே மனதில் இதுவரை இருந்த சோர்வு எல்லாம் நீங்கியது போல,

“என்ன சொன்ன விழி…திரும்பி ஒருதடவ சொல்லுடி…”என்று அவளை நெருங்கி கேட்க அப்போது தான் மதுவிற்கு தான் என்ன கூறினோம் என்று விளங்க,

“அது…அது தெரியாம சொல்லிட்டேன்…சாரி…”என்று கூறும் முன் அவளின் உதடுகளை தன் கைகளால் மூடியவன்,

“சாரி எல்லாம் சொன்ன….அப்புறம் நான் கொடுக்கிற தண்டனை வேற மாதிரி இருக்கும்….ரோடுனு கூட பார்க்கமாட்டேன்…”என்று அவளை தன் கை வளைவிற்குள் வைத்தபடி எச்சரிக்கை செய்ய அவனது தொடுகையில் மேனி சிலிர்க்க நின்றவள்,அவனை தன்னிடம் இருந்த விலக்க போரட,தானே அவளை விட்டவன்,

“முதல்ல வண்டி என்னாச்சுனு பார்க்குறேன்…அப்புறம் இருக்கு உனக்கு…”என்று வண்டியை பார்க்க மதுவோ அவனது அணைப்பில் இருந்தே விடுபடாதவள் போல ஒரு மாய உலகத்தில் இருந்தாள்.ரூபனோ மதுவின் வண்டியை ஆராய்ந்தவன் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஊகித்து தன் கைபேசியில் யாருக்கோ அழைத்து பேசினான்.அதுவரை ரூபனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மது.

தன் கைபேசியை வைத்துவிட்டு மதுவிடம் சொல்ல திரும்பியவன் கண்களில் மது தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய இவ ஒருத்தி ரோட்டுல வச்சு தான் இப்படி எல்லாம் பார்ப்பா என்று தன்னுள் கூறிக் கொண்டே அவளிடம் நெருங்கி சொடுக்கிட அதில் தன்னிலை பெற்ற மது இவ்வளவு நேரம் அவனை பார்த்தை நினைத்து அசடு வழிந்தவறே முகத்தை வேறு புறம் திருப்ப,

“விழி…நீ பார்க்கிறது தப்பில்ல…ஆன ரோட்டுல பார்க்காத…உனக்கு தான் அப்புறம் பிரச்சனையாகிடும்…”என்று விஷமமாக கூறினான்.அவனது பார்வை பேச்சு என்று அணைத்தும் மதுவை சிவக்க வைத்திருந்தது.தன் முக சிவப்பை அவனிடம் இருந்து மறைக்க மது திண்டாடி தான் போனாள்.அதற்குள் அவர்களை நோக்கி ஒரு வாகனம் வர அதில் சுயத்திற்கு வந்தனர் இருவரும்.

முதலில் தெளிந்த ரூபன் வண்டியில் உள்ள பிரச்சனைக் கூறி வண்டியை அருகே இருந்த ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவளின் வண்டி சாவியை தன் சட்டை பையில் போட்டவன் தனுக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்து வண்டியை எடுத்துக் கொள்வதாக கூறினான்.மதுவோ,

“அச்சோ இப்ப நான் எப்படி வீட்டுக்கு போறது…”என்று வாய்விட்டே புலம்ப அவளின் தலையில் செல்லமாக கொட்டிய ரூபன்,

“ஏன் நான் உன்னை வீட்ல விடமாட்டேனா…வா…”என்று அழைக்க மதுவிற்கு தான் சற்று தயக்கம்.அவனின் பார்வை பேச்சு என்று ஒருவித மாய சுழல் போல் தன்னை இழுத்து செல்வதை போல் இருந்தது.ரூபனோ அவளது தயக்கத்தை தவறாக நினைத்து,

“உனக்கு என் கூட வரது பிடிக்கலனா…நான் கௌதமுக்கு போன் பண்ணுறேன்…அவன் கூட போ…இருட்ட ஆரம்பிச்சிடுச்சு தனியா போகாத….”என்று உணர்ச்சகள் அற்ற குரலில் கூறினான்.அதுவரை இருந்த இதமான மனநிலை அறுந்தது போன்றதொரு உணர்வு ரூபனுக்கு.அவன் முன் வந்த மது,

“நான் அப்படி சொன்னேனா….உங்க பார்வை,பேச்ச இதெல்லாம் பார்த்தா நீங்க என்னை வீட்டல விடுவீங்களானு சந்தேகம்….அதனால தான் நான் யோசிச்சேன்…அதுக்குள்ள நீங்களா ஏதாவது யோசிச்சா நான் என்ன பண்ணறது…”என்று கேட்க அதுவரை ஆத்திரம் சுமந்து இருந்த ரூபனின் விழிகளில் இப்போது உற்சாகமும் குறும்பும் கூத்தாடியது.அவளை தன் பார்வைகளால் விழிங்கியவாறே,

“விழி நினைப்பெல்லாம் சரியில்லையே…நல்லபிள்ளைய இருக்குனும் நினைச்சா கூட நீ விட மாட்ட போல…”என்று மலரந்த முகத்துடன் தன் காரை கதவை திறந்துவிட சிவந்த முகத்துடன் அவனின் காரில் அமர்ந்தாள் மது.

இருவருக்குமான பயணம் அதுவும் தங்கள் இருவர் மட்டும்.மனதில் பல எண்ணங்கள் போட்டி போட்டாலும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.இருவரும் ஒருவருக்கொருவரின் அருகாமையை ரசித்தனர்.இந்த பயணம் இப்படியே நீண்டுவிடாதா என்று இருவருக்குமே தோன்றியது.அதே இதமான மனநிலையில் மதுவின் வீடு இருக்கும் பகுதியை அடைந்தனர்.மதுவின் வீட்டின் முனையிலேயே வண்டியை நிறுத்தினான் ரூபன்.

மதுவும் இதுக்குள்ள வீடு வந்துடிச்சா என்று மனதில் நொந்தவாரே ரூபனை பார்க்க அவளின் தவிப்பை உணர்ந்தவன்,

“எல்லாம் சரியாகிடும் விழி…மனச தளரவிடாத….நான் எப்போதும் உன்கூட இருப்பேன்….”என்று கூறி அவளது முன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விலக மதுவிற்கு தான் திரும்பவும் தவறு செய்கிறோமோ என்று தோன்றியது.அவளது முகமாற்றங்களை கவனித்தவனுக்கு அவள் எதை நினைத்து பயம் கொள்கிறாள் என்று புரிய அவளது கைகளை தன் கைகளுக்கள் வைத்துக் கொண்டு,

“விழி…நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது….நான் எல்லாம் பார்த்துக்குறேன்…”என்று கூற அப்போதும் மதுவின் முகம் தெளியாமல் இருக்க அவளது தலையை செல்லமாக ஆட்டியவன்,

“ரொம்ப யோசிக்காதடி…”என்றுவிட்டு அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு,

“சரி என்ன வீட்டுக்கு போறியா…இல்ல…”என்று ரூபன் விஷமாக பேச ஆரம்பிக்க அதற்குள் காரிலிருந்து இறங்கிய மது,

“ஒண்ணும் வேண்டாம் நான் போயிக்குவேன்…போங்க…”என்றுவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.மலர்ந்த முகத்துடன் துள்ளி குதித்து மான் போல செல்லும் அவளையே பார்த்தவாறு தன் வண்டியை எடுத்தான் ரூபன்.

வெகு நாட்களுக்கு பிறகு இனிய மனநிலையுடன் வீடு நோக்கி வந்தாள்.மதுவின் வீடு பழைய காலத்து வீடு என்பதால் சற்று உள்ளே இருக்கும்.அதனால் வீட்டின் உள்ளே எவ்வளவு சத்தம் எழப்பினாலும் வெளியில் கேட்காது.மது தன் காலணிகளை அகற்றிவிட்டு வீட்டின் உள்ளே நுழைய நுழைய ஏதோ சத்தம் கேட்டது.என்ன என்று யோசித்தவாறே வேகமாக உள்ளே வர அங்கு அவள் கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டாள்.  

     

Advertisement