Advertisement

மயக்கும் மான்விழியாள் 26

மதுமிதா தான் எதற்காக வீட்டை வெளியில் என்பதை அந்த அதிகாரியிடம் கூறி முடித்த நேரம் காவல்நிலையத்தின் உள்ளே புயலென வந்தனர் பூமிநாதனும்,அருணாச்சலமும்.வேகமாக உள்ளே வந்த பூமிநாதன் தேவகியின் அருகில் நின்ற மகளை கைபிடித்து இழுத்து,

“ஏன்டி எவ்வளவு தைரியம் இருந்தா அவன் கூட ஓடிப்போயிருப்ப…”என்று கேட்டவாரே ஓங்கி அறைந்தார்.மதுவோ தன் தந்தை அறைந்ததை பொருட்படுத்தாமல் அவரை முறைக்க அதற்கும் கை ஓங்கினார் பூமிநாதன்.அவரை அடக்கி உட்கார வைப்பதே அருணாச்சலத்திற்கு பெரும் பாடாகி போனது.

“இவன் வேற காரியத்தையே கெடுத்துடுவான் போல…எப்படியாவது அந்த பயல ஒரு வருஷம் உள்ள வைக்கலாம்னு பார்த்தா…இவனே நாங்க பொய் கேஸ் கொடுத்தோம்னு உண்மையை சொல்லிடுவான் போல….இது மட்டும் அந்த ஆளுக்கு தெரிஞ்சுச்சு நம்மல உள்ள போட்டுவான்…”என்று தன் தம்பியை முடிந்த மட்டும் மனதிற்குள் திட்டியவர் அங்கே நின்ற தேவகியையும் முறைக்கவும் தவறவில்லை.தேவகியோ இவர்களை எல்லாம் கவனிக்கும் நிலையிலேயே இல்லை அவரக்கு எவ்வாறு மகனை வெளியில் கொண்டுவருவது என்பதே நினைவு இருந்தது.வந்ததில் இருந்து அருணாச்சலம் மற்றும் பூமிநாதனையே கவனித்துக் கொண்டடிருந்த அந்த அதிகாரிக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

காரணம் அருணாச்சலத்தின் முகத்தில் வந்துபோன உணர்வுகளை கண்டு கொண்டார் அவர்.அருணாசலமும் அந்த அதிகாரி தன்னை முறைப்பதைக் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவரிடம்,

“சார் ரொம்ப நன்றி சார் எங்க பொண்ணை கண்டுபிடிச்சு கொடுத்ததக்கு…எல்லாம் அந்த பையனும்,அவன் குடும்பமும் தான் சார் செஞ்சிருப்பாங்க…”என்று கூற அவரது பேச்சை இடைமறித்த மது,

“இல்ல சார் யாரும் என்னைக் கடத்துல…நானா தான் போனேன்…இவங்க பொய் சொல்லுறாங்க…”என்று கூற,

“ஏய் என்ன பெரியப்பாவையே எதிர்த்து பேசிறியா…”என்று மீண்டும் அடிக்க கை ஓங்க,அதுவரை அனைத்தையும் நாடகம் போல் பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி,

“சார் இது ஒண்ணும் உங்க வீடு கிடையாது…இந்த மாதிரி பேச வேலையெல்லாம் நீங்க உங்க வீட்ல வச்சுக்குங்க…இல்ல உங்கள புடிச்சு உள்ள போட வேண்டி வரும்…”என்று எச்சரிப்பது போல கூற,

“தம்பி அமைதியா இரு…நம்ம புள்ளைய ஏதோ இவங்க எல்லாம் மிரட்டியிருக்காங்க அதான் புள்ளை பயந்து போய் பேசுது…”என்று அருணாச்சலம் நயமாக பேச,அந்த அதிகாரியோ,

“உங்க பொண்ணை பார்த்தா பயந்து பேசுற மாதிரி இல்லையே…”என்று அவர் சந்தேகமாக கேட்க அருணாச்சலமோ,

“இல்ல சார்…மனசுக்குள்ள பயந்து தான் போயிருக்கு வெளில காட்டிக்கல…எங்களுக்கு தெரியாதா எங்க புள்ளையை பத்தி…”என்று அப்போதும் பணிவாகவே பேசினார்.அதற்கு அந்த அதிகாரி பதிலளிக்கும் முன் மது,

“நான் யாருக்கும் பயப்படல…நான் உண்மையை தான் பேசுறேன்…”என்றவள் அந்த அதிகாரியிடம் திரும்பி,

“சார் இவங்க என்னை காணும்னு தானா கம்பளைண்ட் பண்ணிருந்தாங்க…அதான் நான் கிடைச்சிட்டேனே…என் அத்தான் எந்த தப்பும் பண்ணல அவர விட்டுட்டுங்க…”என்றாள் கலங்கிய குரலில்.

மதுமிதாவின் பேச்சை கேட்ட பூமிநாதனுக்கும்,அருணாச்சலத்திற்கும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது இருந்தும் தாங்கள் இருக்கும் இடம் கருதி தங்களை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தனர்.அப்போது உள்ளே வந்த ஒரு காவல் அதிகாரி தன் உயர் அதிகாரியின் காதில் ஏதோ கூறிவிட்டு சென்றார்.அவர் சென்றவுடன் மதுவின் பெரியப்பாவிடம் திரும்பி அதிகாரி,

“உங்க பொண்ணு தானா தான் வீட்டை விட்டு வெளியில வந்திருக்கு…இந்த பொண்ணு போய் தங்கியிருந்த பிரண்டு வீட்லேயேயும் அத தான் சொல்லுறாங்க…”என்றவர் தேவகியிடம் திரும்பி,

“என்னை மன்னிச்சிடுங்க மா…எங்களால உங்களுக்கு ரொம்பு சிரம்மம் ஆகிடுச்சு…”என்றவர் ரூபனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். தேவகிக்கு தன் உயிரே திரும்பியது போல் இருந்தது.மதுவிற்கோ ரூபனை எந்த முகத்தைக் கொண்டு காண்பது என்று மனதில் பதட்டம்,பயம்.தன்னால் தானே தன் அத்தானுக்கு இந்த நிலைமை என்று நினைத்தவள் உடலும் உள்ளமும் ஒருநிலை இல்லாமல் தவித்தது.

ஒரு காவல் அதிகாரி ரூபனை அழைத்துவர கலைந்த தலையும்,சிவந்த கண்களுமாக வந்தவனை காண்கையில் தேவகிக்கு மனதின் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை.தன் கணவன் இறப்பைக் கூட தைரியமாக எதிர்கொண்ட அந்த பெண்மணிக்கு தன் மகனை அந்த நிலையில் காண முடியாமல் அழுகை உடைப்பெடுக்க என்ன முயன்றும் அவரது கேவல் அந்த அறையில் இருந்த அனைவருக்கும் கேட்டது.அதுவரை தன் அத்தானையே பார்த்துக் கொண்டிருந்த மது,

“அத்தை…”என்றவாறு அவரை கைதாங்களாக பிடித்துக் கொள்ள அதற்குள் தன் தாயின் அருகில் வந்த ரூபன்,மதுவிடம் இருந்த தேவகியை தன் தோள்களோடு சேர்த்தணைத்தான்.

“ம்மா…எனக்கு ஒண்ணுமில்ல பயப்படாதீங்க…”என்று தேவகியை தேற்றினான்.

“ஐ ம் சாரி சார்…நீங்க கிளம்பலாம்…”என்று கூற ரூபன் யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் அன்னையை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.மதுவிற்கு ரூபனின் செயல் முகத்தில் அறைந்தது போல இருக்க போகும் அவனை தடுக்கும் தைரியமற்று பார்த்துக் கொண்டு நின்றாள்.அவர்கள் சென்றவுடன் பூமிநாதன்,அருணாச்சலத்திடம் திரும்பிய காவல் அதிகாரி,

“இந்த பேப்பர்ல ஒரு சைன் பண்ணிட்டு உங்க பொண்ணைக் கூட்டிட்டு போங்க…இனி என்ன ஏதுனு உங்க பொண்ணை விசாரிக்காம கம்பெளைண்ட் கொடுத்தீங்க பிரச்சனை உங்களுக்கு தான்…கிளம்புங்க…”என்று எச்சரிக்கை விடுத்தே அனுப்பினார்.

ஆட்டோ பிடித்து தங்கள் வீடு வந்தனர் ரூபனும்,தேவகியும். வாசலில் சத்தம் கேட்டதும் ஓடி வந்தனர் செந்தில்நாதனும்,மோகனாவும்.ரூபன் தன் அன்னையை தோள்களில் அணைத்தபடியே வீட்டின் உள்ளே நுழைய மற்ற இருவரும் மருமகளின் கலங்கிய தோற்றத்தைக் கண்டே திகைத்துவிட்டனர்.அந்த வீட்டிலேயே சற்று திடமாக இருப்பது தேவகியும்,ரூபனும் தான் இப்போது இருவரும் கலங்கி இருக்கவே பயம் பிடித்துக்கொண்டது அந்த மூத்த தம்பதியர்களுக்கு.வீட்டின் உள்ளே வந்த ரூபன் தன் அன்னையை நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான்.அவரும் மறுக்காமல் வாங்கி அருந்தினார்.

வீடே மயான அமைதி என்பார்களே அதுபோல இருந்தது.தேவகிக்கு மகனை சிக்கலில் இருந்து விடுவித்தில் நிம்மதிதான் என்றாலும் இது இன்னும் முழுதாக முடியவில்லை என்றே தோன்றியது.இதனால் தங்களை போன்ற நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களுக்கு பல பிரச்சனைகள் எழும்.இதோ இப்போதே தங்கள் வீட்டில் காவல் அதிகாரிகள் வந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள் தானே அவர்கள் தங்களை என்ன நினைக்கக் கூடும் என்று பலதரப்பட்ட சிந்தனைகளில் அவர் தவிக்க.

செந்தில்நாதனும் தேவகி நினைத்தை போலவே இனி தங்களை பற்றி நிச்சயம் நல்ல முறையில் நினைக்கமாட்டாகள் அக்கபக்கத்தினர் என்ற சிந்தனையில் இருந்தார்.மோகனாவோ தன் பேரன் வீடு திரும்பியதே போதும் என்பது போல ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டார்.அவருக்கு மனதிற்குள் அங்கே மகளின வீட்டில் என்ன என்ன பிரளயங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறதோ என்று ஒரு தாயாக பயந்தாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் வாயிவிட்டு கேட்க முடியாது என்று உணர்ந்து அமைதிகாத்தார்.

சிவரூபனோ எதையோ தீவிரமாக யோசனை செய்தபடி அமர்ந்திருந்தான்.மதுவின் மீது அளவுகடந்த கோபம் சிறு குழந்தைக்கு கூறுவது போல எவ்வளவு எடுத்துக் கூறினேன் இப்போது அவசரப்பட்டு எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு போய்விட்டுவிட்டது.மது நிதானமாக யோச்சித்திருந்தால் இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது என்று நினைத்தவனுக்கு,இன்று தன் தாயின் தவிப்பும்,கதறலும் கண்முன்னே வர அவனது கோபம் கொதிநிலைக்கு சென்றது.அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தேவகிக்கு அவனின் கோபம் புரிந்தது.கோபத்தில் மகன் ஏதாவது மதுவை போல ஏடாகூடமாக செய்துவிடுவானோ என்று பயந்தவர் ஒரு முடிவுடன்,

“மாமா…நாளைக்கு சுந்தரி வீட்டுக்கு போகனும்….”என்று கூற மொத்தக் குடும்பமும் அதிர்ந்தது.ரூபனோ தன் அன்னை ஏதோ முடிவுடன் தான் அவர்களைக் காண வேண்டும் என்று கூறுகிறார் என்று உணர்ந்தவன் அமைதியாக இருந்தான்.அவனுக்குமே அந்த குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தான் கண்டிப்பாக மதுவிற்காக இல்லை.தன் குடும்பத்தை இதுவரை அவர்கள் சீண்டும் பொழுதெல்லாம் அமைதியாக ஒதுங்கி போனவன்  இன்று தன் தாயின் கண்ணீரைக் கண்ட பின் அவர்களை விடுவதாக இல்லை.இவ்வாறு தாயும்,மகனும் தங்கள் மனதிற்குள் முடிவெடுத்து கொண்டிருக்க,

“என்னமா சொல்லுற…அங்க எதுக்கு…”என்று நாதன் பதட்டமாக கேட்க

“அவங்க கிட்ட பேசனும் மாமா…எல்லா நேரமும் அமைதியா இருக்கக் கூடாது மாமா…இன்னக்கி அவங்க வீட்டு பொண்ணால என் புள்ளையை நான் பார்க்கக் கூடாத கோலத்துல பார்த்துட்டு வரேன்…இனியும் நான் சும்மா இருக்க போறதில்லை….நாம நாளைக்கு போறோம்…”என்றார் திடமாக.மருமகளின் தோரணையே கூறியது அவள் இந்த விஷயத்தை விடப்போதுதில்லை என்று.

செந்தில்நாதனக்கு என்ன தான் மருமகள் கூறுவது சரி என்றாலும் ஒரு தந்தையாய் சுந்தரியை நினைத்து கவலை வரதான் செய்த்து.மோகனாவோ,

“என்னங்க எனக்கு சுந்தரியை நினைச்சு தான் கவலையா இருக்கு…இந்நேரமே அங்க என்ன பிரளயம் வெடிச்சுக்கிட்டு இருக்கோ…”என்று அதுவரை தன் மனதில் இருந்த அழுத்தை தன் கணவரிடம் பகிர்ந்தார்.மோகனா கூறியது போல தான் சுந்தரியின் வீடு இருந்தது மதுவை காவல் நிலையத்தில் இருந்த அழைத்து வந்த பூமிநாதன் அவளை பெல்டால் விளாசி தள்ளிவிட்டார்.அருணாச்சலத்திற்கும் காவல்நிலையத்தில் தன்னை அவமதித்தற்கு இது தேவைதான் என்று வன்மத்துடன் நினைத்தார்.

பூமிநாதனின் அரக்கத் தனத்தைக் கண்டு பயந்த சுந்தரி தன் மகளைக் காக்க வர,

“எல்லாம் உன்னாலையும்,உன் குடும்பத்தாலையும் தான் டி…”என்று அவரையும் அடிக்க போக,அதுவரை தன் தந்தை அடித்ததை மரம் போல தாங்கிக் கொண்டிருந்த மது தன் அன்னையை அடிக்க போகவும் சுந்தரியை காப்பது போல குறுக்கே நின்றவள் தன் தந்தையிடம்,

“அவங்க எந்த தப்பும் பண்ணலனு உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்…மீறி அடிச்சீங்க நான் உங்க எல்லார் மேலேயும் போலீஸ் கம்பளையிண்ட் கொடுத்துடுவேன்…”என்று அனைவரையும் எச்சரிக்கை செய்யும் விதமாக கூற மொத்த குடும்பமும் பயந்தது தான் போனது.

அருணாச்சலத்திற்கு மது அவ்வாறு செய்துவிட்டால் பெரும் பிரச்சனையாகிவிடும் என்று பயந்தவர் தன் தம்பியிடம்,

“பூமி விடு…இனி எங்கேயேயும் போகாத மாதிரி பார்த்துக்க…”என்று மதுவை சமாளிக்கும் பொருட்டு பேச கசந்த முறுவல் மதுவிடம்.இவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று நம்பினேனே எனது முட்டாள் தனத்துக்கு தகுந்த பரிசை பெற்றுவிட்டேன் என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

“அண்ணா…விடுங்க என்னை இன்னக்கி அம்மா,பொண்ணு இரண்டு பேரையும் கொன்னு போட்டுறேன்…”என்று பூமிநாதன் ஆவேசமாக கத்தியவரே சுந்தரியையும்,மதுவையும் நெருங்க பூமியை தடுத்த அருணாச்சலம்,

“பூமி விடுனு சொல்லுறேன்ல…உன் பொண்ணு தான் என் பேச்சை மதிக்கல இப்ப நீயும் மதிக்கமாட்டேங்கிற…”என்று எதைக் கூறினால் தன் தம்பியை அடக்கியவர் அவரை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.புயலடித்து ஓய்ந்தது போன்று இருந்தது வீடு வசந்தா ஏதோ பேச வாயெடுக்க நித்யா அவரை ஏதோ கூறி இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.மதுவோ தன் அன்னையிடம் திரும்பி,

“ம்மா…எனக்கு பசிக்குது…சாப்பாடு எடுத்துட்டுவாங்க…”என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொள்ள,மகள் கூறியது போல் அவளுக்கு சாப்பாடு எடுத்து வந்த சுந்தரி அவளிடம் தராமல் அருகே இருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு,

“நீ இன்னக்கி செஞ்ச காரியம் ரொம்ப தப்பு மது…உன்னால என் அண்ணன் பையன் வாழ்க்கை கேள்விக் குறியாகிடுமோனு பயமா இருக்கு…எனக்கு ஏதாவது நீ உதவி செய்யனும் நினைச்சா…அந்த குடும்பத்தை எந்த தொந்திரவும் செய்யாத…இது தான் எனக்கு நீ செய்யிற பெரிய உதவி….”என்று ஒருவித இறுக்குத்துடன் தன் மகளிடம் கூறியவர் மகளை நிமிர்ந்தும் பாராமல் சென்றுவிட்டார்.

தன் அன்னை கொண்டுவந்த உணவை வெறித்த மதுவிற்கு அன்னையின் வார்த்தைகளே மனதில் வலம் வந்தன,தன் அவசரபுத்தியால் இன்று தன் அத்தானை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் போயிவிட்டதே என்று மனதிற்குள் மருகினாள்.தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டலாம் இப்படி தெரிந்தே செய்த தவறுக்கு எவ்வாறு மன்னிப்பை வேண்டுவது மது தன்னை தானே கேட்டுக்கொண்டு அன்றைய இரவையும் தூங்கா இரவாக ஓட்டினாள்.

காலை எப்போதும் எழுந்த மதுவிற்கு மனது ஒருநிலையில் இல்லை ஏதோ நடக்கப்போவது போல உறுத்திக் கொண்டே இருக்க அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவித்தவாறே தன் பணிகளை செய்தாள்.தன் வேளைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மது குளிக்க சென்ற நேரம் திடீர் என்று குளியல் அறைக் கதவு பலமாக தட்டப்படவும் சலித்துக் கொண்டே,

“ம்மா…நான் குளிச்சிக்கிட்டு தான் இருக்கேன்…எங்கேயும் போகல…”என்றாள்.ஏனென்றால் காலையில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் அவளைக் கண்காணிகாத்த வண்ணம் உள்ளனர் அதுவே மதுவை மிகவும் பாதித்திற்க இதில் குளிக்கும் போதும் தொந்திரவு செய்தால் அதான் யார் மேல் கோபத்தை காட்டுவது என்று தெரியாமல் தன் அன்னையிடம் காட்டினாள்.

மகளின் நிலை உணர்ந்த சுந்தரி,

“மதுமா…சீக்கிரம் வெளியில வா டா…ரூபன் குடும்பத்தோட வந்திருக்காங்க…”என்று கூற உடனே குளியல் அறையில் பாதி திறந்த கதவு வழியே,

“என்னம்மா சொல்லுற…”என்று நடுக்கமாக கேட்க,சுந்தரி

“நீ சீக்கிரம் வா…என்னனு தெரியல…”என்றுவிட்டு வேகமாக சென்றார்.சுந்தரி கூறியது போல வேகமாக குளித்து வெளியில் வந்த மது கண்டது ஹாலில் ரூபனின் மொத்தக் குடும்பமும் அமர்ந்திருந்ததை தான்.எதிரே அருணாச்சலமும்,பூமிநாதனும் அவர்களை முறைத்தவாறு அமர்ந்திருக்க சுந்தரியோ தன் வீட்டினரை ஏதாவது பேசிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தார்.

ரூபனோ இறுகிய முகத்துடன் அமர்ந்திருதான்.அவனது முகமே கூறியது தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்கிறான் என்று.தேவகி நிர்முலமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.செந்தில்நாதன்,மோகனா தம்பதியரின் முகத்தில் பதட்டம் குடிக்கொண்டிருந்தது.இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டே அந்த இடத்திற்கு வந்தாள் மது.

தன் பேத்தியைக் கண்ட செந்தில்நாதனும்,மோகனாவும் அதிர்ந்தனர்.அவளது கைகளில் அங்காங்கே பெல்ட்டின் தடங்கல் தெரிந்தன,கண்கள் சிவந்து பார்க்கவே பாவமாக தெரிந்தாள்.பூமிநாதனை முறைத்த செந்தில்நாதன்,

“நீங்க மனுஷன் தான இப்படியா புள்ளைய அடிப்பீங்க….”என்று கத்த அதுவரை மது வந்தது அறிந்தும் அவளை நிமிர்ந்து பாராமல் இருந்த ரூபன் தன் தாத்தா கூறியதைக் கேட்டு மதுவை நிமிர்ந்து நோக்கியவன் கொதிநிலைக்கே சென்றுவிட்டான்.வேகமாக எழுந்து அவளிடம் வந்தவன் அவள் கைகளை பிடித்து பார்க்க அதில் ஆங்காங்கே பெல்ட்டின் தடங்களை பார்த்தவனுக்கு கண்கள் தன்போல கலங்கியது.அவனது செயலில் அனைவருமே அதிர்ந்தனர் பூமிநாதனோ,

“ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே என் பொண்ணு கை பிடிப்ப…ஒண்ணுமில்லாத பயலுக்கு என் பொண்ணு கேட்குதா….”ஆவேசமாக அவர்களிடம் நெருங்க,

“யோவ்…இனி ஒருவார்த்தை பேசின…”என்று கர்ஜனையாக வந்தது ரூபனின் குரல்.எங்கே ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று பயந்த மது,

“அத்தான் எனக்கு ஒண்ணுமில்ல….”என்று கூறி முடிக்கும் முன்,

“என்னடி ஒண்ணுமில்ல…இந்தளவுக்கு அடிச்சிருக்கார் இவரெல்லாம் என்ன மனுஷன்…இதை யாருமே இந்த வீட்ல கேட்டகலையோ…”என்று சுந்தரியையும் பார்த்துக் கொண்டே கோபமாக கேட்க,ரூபனின் பார்வை உணர்ந்த மது,

“அம்மாவ எதுவும் சொல்லாதீங்க அத்தான்….எனக்காக பேசினதுக்கே அடிச்சார்,இதுல என்னை காப்பாத்த வந்தா என்ன செஞ்சிருப்பாரோ…அதான் எல்லா அடியையும் நானே வாங்கிக்கிட்டேன்…”என்று கூற ரூபனுக்கு அவளது பதிலில் அவள் மேல் பரிதாபம் உண்டாவதை விட கோபம் தான் வந்தது.எல்லாம் இவளின் அவசர புத்தியால் வந்த விளைவு என்று கோபத்தில் மதுவிடமும் கத்த தொடங்க,மதுவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

பூமிநாதனோ “நீ யாருடா என் பொண்ணை பேச…”என்று எகிறிக்கொண்டு வர,நிலைமை கை மீறி போவதை உணர்ந்த தேவகி,

“ரூபா…போதும் நாம இவங்க கூட சண்டை போட வரலை….”என்று கூற,அவரை நக்கலாக பார்த்த அருணாச்சலம்,

“பின்ன எதுக்கு வந்தீங்க சம்பந்தம் பேசவா….ஒண்ணுமில்லாத பயலுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்…கிளம்புங்க….”என்று கூறினார்.அவருக்கு ரூபன் குடும்பமாக வந்திருப்பது பெண் கேட்டு தான் என்று நம்பினார்.ஆனால் அவருக்கு தேவகியை பற்றி தெரியவில்லை அனைத்து கஷ்டங்களையும் தனியாக தாங்கி நிமிர்ந்து நிற்கும் பெண்மணி.அவர் தன்னை தாழ்த்தி கொண்டு பெண்கேட்க மாட்டார் என்று.பெரிதாக தேவகியை அவமானப்படுத்தியதாக நினைத்து அருணாச்சலம் கர்வமாக அமர்ந்திருக்க அவரை அற்பமாக பார்த்த தேவகி,

“ரூபா இங்க வா….”என்று மதுவின் அருகில் நின்ற மகனை அழைத்து தன் அருகில் நிறித்திக் கொண்டார்.பின் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“நாங்க உங்க பொண்ணைக் கேட்டு எல்லாம் வரல….நீங்க என்ன என் பையனை வேண்டாம் சொல்லரது…எங்களுக்கு உங்க பொண்ணு வேண்டாம்…”என்று கூற அனைவரும் அதிர்ந்தனர்.ரூபனோ,

“அம்மா…”என்று அதிர்ந்து ஏதோ கேட்க வர அவனை கை நீட்டி தடுத்த தேவகி,

“இங்க பாரு ரூபா…நீ உன் காதலையும்,காதலியையும் இழக்க விரும்பலனு சொல்லவர அதான…எல்லா விஷயத்திலேயேயும் இப்படி விளையாட்டு தனமா இருக்கிற பொண்ணு உனக்கு வேணாம்னு நான் சொல்லுறேன்…இவளால் என் பிள்ளைய நான் பார்க்க கூடாத கோலத்தில பார்த்துட்டேன்….என்னால இன்னமும் அதிலிருந்து வெளி வர முடியல….”என்று தன் முடிவைக் கூற ரூபன் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.மதுவோ தேவகியின் முடிவில் மனது உடைந்து போய் ரூபனைப் பார்க்க அவனோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அவ்வளவு தானா தன் காதலுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று நினைத்தவளுக்கு தன்னுள் ஏதோ உடைந்து நொருங்குவதை போல் இருந்தது.அதன் பின் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை கேட்கும் நிலையிலேயே அவள் இல்லை ரூபன் குடும்பம் கிளம்பிய பிறகும் அவள் அதே நிலையில் இருக்க சுந்தரிக்கு தான் நெஞ்சம் கனத்து போனது.

அதன் பின் வந்த நாட்கள் மதுமிதாவிற்கு நரகம் என்று தான் சொல்ல வேண்டும்.அனைத்தையும் உணர்ச்சிகள் அற்ற முகத்துடன் கடந்தவளுக்கு தன் அன்னை மூலம் தன் பெரியப்பா தொழிலில் செய்யும் மோசடிகள் தெரியவர தன் தந்தைக்கு தெரியாமல் தங்கள் தொழில் கணக்குகளை ஆராய்ந்தவளுக்கு அருணாச்சலத்தின் இன்னொரு முகம் தெரிய இதை எவ்வாறு தன் தந்தையிடம் கூறுவது தடுமாறிய நிற்கையில் பூமிநாதனே அறிந்து கொள்ளும் நாளும் வந்தது.

நித்யா கல்யாணம் முடிந்ததில் இருந்து தன் அண்ணனின் செயல்களில் ஏதோ வேறுபாடு இருப்பதாக நினைத்த பூமிநாதனுக்கு அப்போது தெரியவில்லை தன் அண்ணன் தன் உழைப்பு அனைத்தையும் சுரண்டியிருப்பார் என்று.அருணாச்சலத்தின் நண்பர் ஒருவர் பூமிநாதனிடம் உன் அண்ணன் வெளியில் ஒரு கடை வைக்க இடம் பேசியுள்ளதாக தெரியவர அதிர்ந்து தான் போனார் பூமிநாதன்.எவ்வளவு பெரிய விஷயம் தன்னிடம் தன் அண்ணன் பகிரவில்லையே என்று நினைத்துக் கொண்டு அவரைக் காண அவர் தொழில் செய்யும் இடத்திற்கு செல்ல அங்கே அருணாச்சலம் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்,ஏதோ முக்கிய வேலை என்று நினைத்த பூமிநாதன் திரும்பி நடக்க அப்போது அவரின் பெயர் அடிப்படவும் அங்கேயே ஒதுங்கி நின்று அவர்களை கவனிக்க,

“என்னப்பா நீ என்ன தான் இருந்தாலும் உன் சொந்த தம்பி…”என்று அவர் ஏதோ கூற அருணாச்சலமோ,

“யோவ் தொழில்னு வரும் போது அண்ணனாவது தம்பியாவது…அவன் சரியான ஏமாந்தகுளி அவனுக்கு இன்னும் தெரியல அவன் கணக்குலேந்து நான் பணம் எடுக்குற விஷயமே…அந்தளவுக்கு என் மேல நம்பிக்கை அவனுக்கு….இதோ இப்பக் கூட கடை வாங்குறத பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது…அப்படியே தெரிஞ்சாலும் நான் என்ன சொன்னாலும் நம்பிடுவான்…”என்று கூற இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பூமிநாதனுக்கு தன் உலகமே இருள்வது போல இருக்க அமைதியாக வீடு வந்தார்.

பூமிநாதனுக்கு மனதே ஆறவில்லை தன் அண்ணன் தன்னை மோசம் செய்வார் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.ஆனால் நடந்துவிட்டதே இப்போது எப்படி மீள்வது என்று அவர் யோசனையிலேயே இருக்க,இனி அவர் மீளவே முடியாத நரகத்திற்கு தள்ளப்பட்டார் ஒரு விபத்தில்.ஆம் அவரும் அருணாச்சலமும் ஒன்றாக சென்ற வாகனம் ஒரு விபத்தில் சிக்க அந்த விபத்தில் அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே உயிர் நீத்துவிட,பூமிநாதனுக்கு தலையில் அடிப்பட்டதால் கை,கால்கள் செயல் இழுந்தது.

முன் செய்த பாவம் பின்னாளில் பாதிக்கும் என்பார்களே அதுபோல அருணாச்சலம் செய்த பாவத்திற்கு ஈடாக அவர் கடைக்காக பேசிய இடத்தை விற்று நித்யாவின் கணவன் நிர்மல் சுருட்டிக் கொண்டான்.அருணாச்சலம் தொழில் விஷயங்களை வீட்டில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டார் அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு இது தெரியாமலே போனது.

வறுமை என்பதை காணதவர்களுக்கு வறுமையின் நிலையை கடவுள் நன்கு உணர்த்தினார்.பூமிநாதனுக்கு சிக்கிச்சை செய்யவே பணம் கஷட்மாக இருக்க மது படிப்பை நிறித்திவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினாள்.எந்த பணத்தை வைத்து மனிதர்களை எடைப் போட்டார்களோ அதே மனிதர்கள் பூமிநாதனுக்கு நல்ல பாடத்தை கற்பித்து சென்றனர்.வாழ்க்கையின் பாடத்தை காலம் கடந்து கற்றார் பூமிநாதன்.மதுவின் வாழ்வில் எந்தவித மாறுதலும் இல்லை சுந்தரி என்ன முயன்றும் அவளை இயல்பாக்க முடியவில்லை.எப்போதும் இறுக்கத்துடன் உழைக்கும் இயந்திரம் போல தன்னை மாற்றிக் கொண்டாள்.

முதலில் மற்றவர்களின் விஷ வார்த்தைகளைக் கண்டு குறுகியவள் பின் அவர்கள் போன்றவர்களை அமைதியாக கடக்க தொடங்கினாள்.எப்போதும் சிரிப்பில் ஒளிரும் அவளது கண்களில் இப்போது இருப்பது வெறுமையா,இழப்பின் வலியா என்று யாருக்கும் தெரியாது.இனி இதுதான் தன் வாழ்க்கை என்று இருந்த மதுவின் வாழ்வில் மீண்டும் புயலென நுழைந்தான் ரூபன்.தன் வாழ்வில் எல்லாம் முடிந்தது என்று மது நினைத்திற்க இன்னும் முடியவில்லை என்பது போல இருந்தது விதியின் செயல்கள்.  

Advertisement