Advertisement

மயக்கும் மான்விழியாள் 25

சிவரூபனுக்கு வாயிலில் நின்ற காவல்துறை அதிகாரிகளை கண்டு புருவம் சுருக்கியவரே,

“என்ன சார்…”என்று கேட்டான்.வீட்டில் உள்ள அனைவரும் காவல்துறை அதிகாரிகளை கண்டு அதிர்ச்சியில நின்றுவிட்டனர்.ஒவ்வொருவர் மனதிலும் எண்ணங்கள் பூதகரமாக எழ பேச்சற்று நின்றுவிட்டனர்.செந்தில்நாதனுக்கோ மனது ஒருநிலை இல்லாமல் தவித்தது மது ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டாளோ என்று நினைத்தவருக்கு கை,கால்கள் நடுங்க பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.தேவகிக்கோ இந்த பெண் தான் நினைத்தது போல ஏதோ ஏடாகூடமாக செய்துவிட்டாள் என்று புரிய இதனால் தன் மகனுக்கு என்ன பிரச்சனை வருமோ என்று கலங்கியவரே நின்றார்.

“இங்க சிவரூபன்றது யாரு…”என்று அதிகாரமாக கேட்டார் அந்த அதிகாரி.அவர் மிகவும் நேர்மையானவர்.பெண்கள் விஷயம் என்றால் எவ்வளவு பெரிய இடம் என்றாலும் விட்டு வைக்கமாட்டார்.அவரைப் பற்றி நன்கு அறிந்த அருணாச்சலம் தங்கள் மகளின் மனதை கெடுத்து அவளை இழுத்து சென்றுவிட்டதாக புகார் கொடுத்திருந்தார்.பெண்பிள்ளை விஷயம் என்பதால் அந்த உயர் அதிகாரியே நேரில் வந்துவிட்டார்.ரூபனோ எந்தவித பயமும் இல்லாமல்,

“நான் தான் சார்…”என்றான்.அவனை கூர்மையாக பார்த்தவர்,வீட்டில் உள்ள மற்றவர்களின் அதிர்ந்த முகத்தையும் கவனிக்க தவரவில்லை.ரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு இவர்கள் வந்திருக்கின்றனர் என்று அதனால்,

“நான் தான் சார் ரூபன்…என்ன விஷயம்…”என்று கேட்க,அவனை பார்வையால் அளந்தபடியே,

“உங்களுக்கு மதிமிதாவ தெரியுமா…”என்றார்.ரூபனுக்கு மது என்ற பெயரைக் கேட்டவுடன் மனதில் பயம் பிடித்துக்கொள்ள அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்தவன் அந்த அதிகாரியிடம்,

“தெரியும் சார்…அவ என்னோட அத்தை பொண்ணு….அவளுக்கு என்னாச்சு…”என்று பதட்டமாக கேட்டான்.தேவகிக்கு மகனின் முகத்தில் தெரிந்த பதட்டமே அவன் மதுவை எந்தளவிற்கு விரும்புகிறான் என்பதை தெரிவித்தது.

“அவங்களுக்கு என்ன ஆச்சுனு நீங்க தான் சொல்லனும்…”என்றார் அந்த அதிகாரி,ரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை,

“என்ன சொல்ரீங்க சார்…எனக்கு புரியல…”என்று ரூபன் கேட்க,

“உங்களுக்கு புரியாது தான்…சரி எங்க மது…”என்றவர் வீட்டில் உள்ளவர்களை பார்த்து,

“சொல்லுங்க….இல்ல எல்லாரையும் ஸ்டேஷன் அழைச்சிட்டு போய் விசாரிக்க வேண்டிவரும்…”என்றார் மிரட்டலாகவே.ரூபனுக்கு தன் குடும்பத்தை இழுக்கவும் கோபம் தலைக்கேர,

“சார் மரியாதையா பேசுங்க…என்ன நடந்துச்சுனே சொல்லாம நீங்க பாட்டுக்கு பேசுறீங்க…”என்று தன் குரலை உயர்த்த,அந்த அதிகாரியின் முகத்தில் மேலும் இறுக்கம் கூட,

“ஏய் என்ன ரொம்ப பேசுற…படிக்கிற புள்ளை மனச கெடுத்து அத இழுத்துட்டு வந்த நீ எல்லாம் என்னை பேசிறியா…உன்னல்லாம் இப்படி கேட்டா பதில் சொல்லமாட்ட…காண்ஸ்டெபில்ஸ் இவனை இழுத்துட்டுவாங்க ஸ்டேஷன்ல வச்சு நம்ம விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மை வெளிவரும்….” என்று உத்தரவிட,

“அய்யோ…”என்று நெஞ்சில் கை வைத்தபடி மோகனா அமர,தேவகியோ,

“சார்…அந்த பொண்ணு இப்ப இங்க இல்ல…”என்று பதட்டமாக கூற ரூபன் அதிர்ந்து தன் தாயை நோக்க,அதற்குள் தேவகி அந்த அதிகாரியிடம் காலையில் மது வந்ததில் இருந்து அவளை தாங்கள் திருப்பி அனுப்பியது வரைக் கூறினார்.அனைத்தையும் கேட்ட அந்த அதிகாரி,

“நீங்க அனுப்பிட்டிங்கனு சொல்ரீங்க…ஆனா பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரல…ஒழுங்கா சொல்லிடுங்க பொண்ணு எங்க…”என்று அதே மிரட்டும் தோரணையில் கேட்டார்.அதற்கு தேவகி,

“எங்களுக்கு தெரியாது சார்…நாங்க அந்த பொண்ணை வீட்டுக்கு போக சொல்லி அனுப்பிட்டோம்….இப்ப அவ எங்க இருக்கானு எங்களுக்கு தெரியாது…”என்று கூறினார்.

ரூபனோ தன் தாய் கூறிய அனைத்தை கேட்ட பிறகு மதுவின் முட்டாள் தனம் புரிய அவளின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.எவ்வளவு கூறினேன் அவளிடம் இதுபோல் எதும் முட்டாள் தனம் செய்யாதே என்று எது நடக்கக் கூடாது என்று பயந்தேனோ அது நடந்துவிட்டது அதுவும் மதுவினால் என்று எண்ணும் போது மனது ஆறவேயில்லை ரூபனுக்கு.அதன்பிறகு யார் கூறியும் கேளாமல் ரூபனை கைது செய்தனர் காவல்துறை அதிகாரிகள்.மொத்த குடும்பமும் செய்வதரியாது திகைத்து நிற்க தேவகிக்கோ மகனை அந்த நிலையில் காண முடியாமல் நிற்க,நாதனோ அனைத்தும் கைமீறி சென்ற நிலையை எண்ணி நொந்தபடி தன் நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார்.

மதுமிதா வந்ததில் இருந்து விட்டத்தையே வெறித்தபடி அமர்ந்திருக்க அவளது தோழி பவித்திராவிற்கு ஒன்றும் புரியவில்லை.மாலை போல் பவித்திராவின் வீடு வந்த மது தன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி பின் ரூபன் வீட்டிற்கு சென்று வந்ததயும் கூறியவள் பவியிடம்,

“இன்னைக்கி ஒருநாள் மட்டும் உங்க வீட்ல நான் தங்கிக்கிறேன் டி…”என்று கேட்க,பவிக்கு என்ன சொல்வது என்ற தெரியவில்லை தன் தோழி இப்போது செய்து வைத்திருப்பது தவறு என்று புரிந்த போதும் இப்படி உதவி என்று கேட்டு நிற்பவளிடம் முடியாது என்று கூறவும் மனம் வராமல் சரி என்று கூறினாள்.தன் வீட்டில் உள்ளவர்களிடம் தாங்கள் இருவரும் சேர்ந்து பரிட்சைக்கு படிப்பதாக கூறி சமாளித்தாள்.பவித்திராவிற்கு தான் இங்கு தங்க வைக்க மறுத்தால் மது வேறு ஏதும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்ற பயமும் இருந்தது.அதற்கு காரணம் மதுவின் முகத்தில் தெரிந்த வெறுமை ஒரே நாளில் அனைத்தும் இழந்தது போன்றதொரு தோற்றம்.

“மது…:என்று அவளது தோளில் கை வைத்த பவி,

“ஏதாவது சாப்பிடுறியா டி…”என்று கேட்க

“வேண்டாம்…”என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவள் மீண்டும் விட்டத்தை வெறிக்க,

“உன் அத்தான் கிட்டயாவது பேசுடி…இந்நேரம் உங்க வீட்ல உன்னைக் காணும்னு என்னென்ன பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்களோ…”என்று கூற மது மனதிலும் அதே எண்ணம் தான் வீட்டில் என்ன பிரளயம் வெடித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறியது.வீட்டை விட்டு வர தைரியம் இருந்த மதுவிற்கு மீண்டும் வீட்டிற்கு செல்வதில் சொல்லமுடியாதொரு பயம்.அதனால் தான் இங்கு வந்தது ஆனால் வந்ததிலிருந்து மனது ஒருநிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது.ஒருகட்டத்திற்கு மேல் அவளது கசங்கிய முகத்தை பார்க்க முடியாமல் பவி,

“மது…என் மொபைலிருந்து உன் அத்தானுக்கு போன் போடு…”என்று கூற,

“வேண்டாம் டி…இந்நேரம் அத்தை எல்லாம் சொல்லிருப்பாங்க…என் மேல ரொம்ப கோபத்தில இருப்பாரு…எதை அவரு செய்யவேக் கூடாதுனு சொல்லிருந்தாரோ அதை நான் இன்னக்கி செஞ்சிட்டேன்…எனக்கு வேற வழி தெரியலடி பவி…எங்க அப்பா கல்யாணம் வரை பேச ஆரம்பிச்சிட்டாங்க….”என்று தேம்பி அழுதவள் பின்,

“கண்டிப்பா அத்தானோட எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்க அப்பா ஒத்துக்கமாட்டா் டி….யார் சொல்லியும் புரிஞ்சிக்கிற நிலையில அவரு இல்ல…இப்ப அவருக்கு அவர் வரட்டு கௌரவம் தான் முக்கியம்…அத்தான் கண்டிப்பா அவங்க வீட்டை எதிர்த்து வர மாட்டார்…நான் என்ன தான் செய்யட்டும் சொல்லு…”என்று பவியின் மடியில் கவிழ்ந்து அழ அவளை தன்னிடம் இருந்த பிரித்த பவி,

“நீயா எதுவும் முடிவு பண்ணாத முதல்ல உன் அத்தானுக்கு போன் பண்ணு…”என்று அதட்டி மதுவிடம் போனை திணித்துவிட்டு சென்றாள்.பவித்திரா சென்றதும் அவளது மொபைலில் இருந்து ரூபனுக்கு அழைத்தாள்.

ரூபனின் வீட்டில் தேவகி செய்வதரியாது தவித்துக் கொண்டு செந்தில்நாதனிடம்,

“மாமா…வாங்க…சுந்தரி வீட்டுக்கு போவோம்…அவங்கிட்ட பேசுவோம்….”என்று கூற நாதனோ,

“என்னமா சொல்ற…அவங்க வேணும்னு தான் இப்படி நம்ம மேல புகார் கொடுத்திருக்காங்க…இதுல மது வேற எங்க போனானு தெரியல…”என்று கூற தேவகி,

“எனக்கு அப்பவே சந்தேகம் அந்த பொண்ணு பார்வையே சரியில்லை…அவ ஏதோ எக்குத்தப்பா செய்ய போறானு…அதே மாதிரி நடந்துடுச்சு…ச்ச என்ன பொண்ணு இவ யார் கஷ்டத்தையும் புரிஞ்சிக்காம சுயநலமா யோசிச்சிருக்கா…இவளால அங்க சுந்தரிக்கும் என்ன பிரச்சனை ஆகியிருக்குமோ….”என்று தன் ஆதங்கத்தை கூற அப்போது தான் நாதனுக்கும் மோகனாவிற்கும் மகளின் நிலை நினைத்து நெஞ்சம் நடுங்கியது.அப்போது ரூபனின் கைபேசி ஒலிக்கவும் முதலில் கவனிக்காமல் இருந்த தேவகிக்கு சட்டென்று ஒருவேளை மதுவாக இருந்தால் என்று நினைத்தவரே அவனது கைபேசியை தேடி எடுத்தவர் ஆன் செய்து,

“ஹலோ…”என்று கூற மறுபக்கம் அமைதி அதிலேயே புரிந்தது அழைத்திருப்பது மது தான் என்று,

“மது…எங்க இருக்க நீ…ஹலோ…”என்று கத்த மது போனை வைத்துவிடுவாளோ என்ற அச்சத்தில் தேவகி,

“மது…ரூபனை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க…”என்று கூறியவுடன்,

“என்ன அரஸ்ட் பண்ணிட்டாங்களா…ஏன்…ஹலோ அத்தை இருக்கீங்களா…என்ன ஆச்சு…”என்று கத்த தேவகி இங்கு நடந்த அனைத்தையும் கூறியவர் அவளை உடனே தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.மதுவும் ரூபனை கைதி செய்துள்ளனர் அதுவும் தன்னால் என்றதிலேயே மனதின் சக்தி அனைத்தும் வடிந்தவளாய் வேகமாக தன் அத்தைக் கூறியபடி ரூபனின் வீட்டிற்கு சென்றாள்.ரூபனின் வீட்டை அடைந்தவுடன் தேவகி அவளை இழுத்துக் கொண்டு நேரே சென்ற இடம் காவல்நிலையம்.

காவல்நிலையத்தில் ரூபனை விசாரித்துக் கொண்டிருந்தார் காவல் அதிகாரி,

“நிஜமா எனக்கு மது எங்க இருக்கானு தெரியலை சார்…நான் இப்ப தான் டெல்லியிலிருந்து வரேன்…”என்று கூற அவன் கூறிய அனைத்தையும் கேட்ட அந்த அதிகாரி அவனது பயண விபரங்கள் அனைத்தையும் சரிப்பார்த்து ரூபன் கூறுவது உண்மை என்பதை உறுதிபடுத்தினார்.அப்போது அவரின் கீழ் வேலை செய்யும் காவல் அதிகாரி,

“என்ன சார் நீங்க இவன்கிட்ட இவ்வளவு பொறுமையா விசாரிக்கிரீங்க…எப்போதும் உங்களோட விசாரிப்பு வேற மாதிரி இருக்கும்…”என்று கேட்க அதற்கு லேசாக புன்னகைத்த அந்த அதிகாரி,

“இந்த பையன் மேல தப்பு இருக்கிற மாதிரி தெரியல…”என்று கூற

“எப்படி சார் சொல்லுரீங்க….”என்றார்,

“யோவ் நான் எவ்வளவு அக்கியூஸ்ட் பாத்திருக்கேன்….இவன முதல்ல பார்த்துமே எனக்கு புரிஞ்சிடுச்சு…ஆனா இவங்க வீட்ல எல்லார் முகமும் சரியில்லை அதனால தான் அரஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு…அந்த பொண்ணனோட பிரண்ட்ஸ் லிஸ்ட் கேட்டேனே என்ன ஆச்சு…”என்று அவர் கூறிக் கொண்டிருக்கையில் மதுவுடன் உள்ளே நுழைந்தார் தேவகி.

“சார் இதோ இது தான் நீங்க தேடிக்கிட்டு இருந்த மதுமிதா…”என்று கூறி மதுவை காண்பித்தார்.

“அப்ப நீங்க தான் பொண்ணைக் கடத்தினதா…”என்று அந்த அதிகாரி நக்கலாக கேட்க,

“சார் நான் யாரையும் கடத்துல…நீங்க அந்த பொண்ணுக்கிட்டயே கேட்டுக்கோங்க…”என்று நிமிர்வுடன் கூற ஒரு நிமிடம் அந்த அதிகாரிக்கே ஆச்சரியம்.தேவகியின் தோரணையே கூறியது நான் எதற்கும் அஞ்சவில்லை என்று.அதுவரை அமைதியாக நின்ற மது,

“சார்..என் பேரு தான் மதுமிதா…என்னை யாரும் கடத்துல…”என்றுவிட்டு தன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

“எங்க வீட்ல கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க…அதனால தான் நான் அத்தான் வீட்டுக்கு போய் பேசினேன் அங்க எல்லாரும் நீ செஞ்சது தப்பு வீட்டுக்கு போனு சொல்லி அனுப்பிட்டாங்க…எனக்கு வீட்டுக்கு போக பயம் எங்க வேறு ஒருத்தனோட எனக்கு கல்யாணம் பண்ணிடுவாங்களோனு அதான் நான் என் பிரண்டு பவித்திரா வீட்டுக்கு போயிட்டேன்…”என்று கூறி முடிக்கவும் மதுவின் குடும்பம் காவல் நிலையத்தின் உள் நுழையவும் சரியாக இருந்தது.

Advertisement