Advertisement

மயக்கும் மான்விழியாள் 24

கடற்கரை மணலில் ஒருவர் தோள் சாய்ந்து ஒருவர் அமர்ந்திருந்தனர் சிவரூபனும்,மதுமிதாவும்.தங்கள் காதலை பகிர்ந்து கொண்ட அன்று சந்தித்து பிறகு இப்போது தான் இருவரும் சந்திக்கின்றனர்.மதுவோ நெடுநாள் பிறகு ரூபனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனது அருகாமையை ரசித்தவாறு அமர்ந்திருக்க,ரூபனும் மதுவின் மனநிலையை உணர்ந்து அவளது கைவிரல்களை தன் விரல்களுடன் பிணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.இருவரின் மனதிலும் ஒருவித அமைதி தங்கள் இருப்பிடம் வந்த உணர்வு.மது,

“என்ன அத்தான் அமைதியா இருக்கீங்க….”என்று கேட்க,

“ம்ம் ஒண்ணுமில்ல விழி…நாளைக்கு நான் டெல்லி போறேன்….கண்டிப்பா வேலைக் கிடைச்சிடும் எனக்கு நம்பிக்கை இருக்கு…”என்று கூறிக்கொண்டு வந்தவனை இடைமறித்த மது,

“அப்புறம் ஏன் அத்தான் ஒருமாதிரி இருக்கீங்க…உங்களுக்கு கண்டிப்பா வேலைக் கிடைச்சிடும்…நானும் சாமிக்கிட்ட வேண்டுதல் வச்சிருக்கேன்…”என்று கண்களில் காதல்,கனவு இரண்டும் மின்ன கூறியவளை அள்ளி அணைக்கும் ஆவல் எழுந்த போதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டியிருக்க,அவனது பார்வை மாற்றம் உணர்ந்த மது,

“அத்தான் போதும் பார்த்தது…நாளைக்கு எப்போ கிளம்புறீங்க….”என்று கேட்க அவளை விழுங்கு பார்வைப் பார்த்தவாறே,

“பேச்ச நல்லவே மாத்திரடி விழி….உன்ன அப்படியே அள்ளி அணைச்சுக்கனும் போல இருக்கு…”என்று அவளது காதில் ரகசியம் போல கூற அவனது தோள்களில் செல்லமாக அடித்த மது,

“அத்தான் வர வர நீங்க ரொம்ப மோசமாயிட்டீங்க…”என்று செம்மையுறும் தன் கன்னங்களை மறைத்தவாருக் கூற,ரூபனோ,

“நான் ஒழுங்கா தான்டி இருந்தேன்…நீ வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி மாறிட்டேன்….”என்று அவளைப் பார்த்துக் கண் அடித்துக் கூறினான்.பின் இருவரும் சிறிது நேரம் கதை அடித்துவிட்டு தங்கள் வீட்டிற்கு புறப்படும் நேரம் ரூபன் மதுவிடம்,

“விடியற்காலையில நான் கிளம்புனும்…இன்டிரியூவ் முடிஞ்சு அடுத்த நாள் தான் வருவேன் வந்தவுடன் உனக்கு நானே கால் பண்ணுறேன்…”என்று கூறி அவள் எதிர்பாரத நேரம் அணைத்துவிடுத்தவன்,அவளது கன்னத்தில் தன் அழுத்தமாக அதரங்களால் முத்திரை பதித்தான்.

மதுவிற்கு ரூபன் அணைத்திலேயே மனதும்,உடலும் நடுங்க நின்றவள்,அவன் முத்தம் கொடுக்கவும் தன் உலகமே தலைபுறன்டது போல நிற்க,அதிர்ந்திருந்த அவளது முகத்தை தட்டிய ரூபன்,

“ஓய்…இதுக்கே இப்படி ப்ரீஸ் ஆகிட்டா…மத்ததெல்லாம்…”என்று கூறும்முன் அவனது வாயை பொத்திய மது,

“நீங்க சரியில்ல கிளம்புங்க முதல்ல…”என்று கூறிவிட்டு தன் ஸ்கூட்டியில் ஏற மனநிறைந்த புன்னகையுடன் நின்றிருந்தான் ரூபன்.தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவாரே அவனை நோக்கி,

“ஆல் தி பெஸ்ட் அத்தான்…உங்க போன் காலுக்காக வெயிட் பண்ணுவேன்…”என்று கூறிவிட்டு தன் வீடு நோக்கி பயனமானாள்.அவள் சென்றவுடன் ரூபனும் தன் பயணத்திற்கு உண்டான வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு வீடு சென்றான்.இவர்கள் இருவரையும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பூமிநாதனின் தூரத்துஉறவுக்கார் ஒருவர் இவரக்ளின் காதல் லீலைகளை மதுவின் வீட்டிற்கு தெரிவித்திருந்தார்.

தன் வீடு சென்ற மதுவிற்கு தங்கள் வீட்டின் ஹாலில் அனைவரும் அமர்ந்திருப்பதைக் கண்டு புருவம் சுருக்கியவாரே தன் அன்னை ஏறிட அவரோ தன் கன்னங்களை மறைத்துக் கொண்டு கண்கள் கலங்க,உடல் நடுங்க நின்றார்.ஹாலில் நடுநாயகமாக அருணாச்சலம் கோபமாக அமர்ந்திருக்க,பூமிநாதனோ தன் கோபம்,ஆத்திரம் இரண்டையும் சுமந்த விழிகளுடன் மதுவை முறைத்துக் கொண்டு நின்றார்.ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த மது தன் அன்னையை நெருங்கி,

“அம்மா…”என்று அழைக்க அதுவரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற சுந்தரியின் அழுகை உடைப்பெடுக்க,

“மதூ…”என்ற கேவலுடன் அவளைக் கட்டிக் கொண்டு அழ,மதுவிற்கு தன் அன்னையின் அழுகை மனதை பதறச் செய்ய,

“ம்மா…என்ன ம்மா…என்ன ஆச்சு…”என்று கேட்க அதற்கு சுந்தரி பதில் கூறும் முன்,

“அவ எப்படி பேசுவா…அம்மாவும்,பொண்ணும் ஒண்ணும் தெரியாத மாதிரியே நடிக்கிறது…உங்கம்மா இன்னும் என்னனென்ன சொல்லிக் கொடுத்துவச்சிறுக்காளோ…”என்று வசந்தா விஷ வார்த்தைகளைக் கக்க,

“பெரிம்மா…என்ன பேசிரீங்க…”என்று கத்தியிருந்தாள் மது,அதற்கெல்லாம் அசருபவரா வசந்தா தன் கழுத்தை வெட்டி திரும்பிக் கொள்ள,மது

“என்ன நடக்குது இங்க…அம்மா நீங்க ஏன் அழறீங்க…”என்றுவிட்டு அவரின் கன்னத்தைக் காண அதில் விரல் தடம் தெரியவும் தன் அப்பாவைக் காண அவரோ அவளை முறைத்தபடி நிற்க,

“அப்பா…என்ன இது…”என்று அன்னையின் கன்னத்தைக் காட்டி கேட்க,அவரோ மற்றதைவிட்டுவிட்டு,

“நீ எங்க போயிட்டு வர மது…”என்று கேட்டார்,மது அவரின் கேள்விக்கு பதில் கூறாமல்,

“அப்பா எதுக்கு அம்மா அடிச்சீங்க…”என்று கேட்க,பூமிநாதனின் கோபம் எல்லைக் கடந்தது,

“ஏய் நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு…”என்று ஆவேசமாக கத்த,

“கிளாஸ்க்கு தான் போயிட்டு வரேன்…வேற எங்க போகப்போறேன்…”என்று கூற அடுத்த நிமிடம் “பளார்”என்ற சப்தம்.சிறிது நேரம் கழித்து தான் மதுவிற்கு புரிந்தது தந்தை தன்னை அறைந்ததே,

“ப்பா…”என்று அதிர்ந்து அழைக்க,

“என்னடி அப்பா..பொய் சொல்ரியா…எத்தனை நாள் பழக்கம் அவன் கூட…இதெல்லாம் உங்க அம்மா தான சொல்லிக் கொடுத்தாளா…எனக்கு தெரியும் அவ தான் சொல்லி இருப்பா…உன்னை வச்சு குடும்பத்தை ஒண்ணாக்க பாக்குறாளா…”என்று கேட்டுக் கொண்டே சுந்தரியை அடிக்க வர தன் அன்னை காக்க வந்த மதுவிற்கு அப்போது தான் தன் தந்தைக்கு தன் காதலை பற்றி தெரிந்துவிட்டது என்று.ஆனால் தவறே செய்யாத தன் அன்னை அடிவாங்குவது பிடிக்காமல் குறுக்கே நின்றாள்.

”அப்பா…அவங்கள எதுவும் சொல்லாதீங்க…அவங்களுக்கு எதுவும் தெரியாது…”என்று மது கூற

“ஓஹோ…என்னை எதிர்த்து பேச வேற உனக்கு சொல்லிக் கொடுத்துட்டாளா…”என்று அறைய கை ஓங்க அதுவரை நடப்பதை நாடகம் போல் பார்த்துக் கொண்டு இருந்த அருணாசலம்,

“பூமி…அமைதியா இரு…முதல்ல உன் பொண்ண உள்ள போகச் சொல்லு…”என்று கூற சுந்தரி வேகமாக மதுவை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்றார்.அவருக்கு தெரியும் அங்கே நின்றால் கணவர் மதுவை அடித்தே கொன்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.மதுவை அவளின் அறையில் விட்ட சுந்தரி,

“இந்த இடத்தை விட்டு நகராத…”என்றுவிட்டு நகரப் பார்க்க அவரது கைப்பிடித்து தடுத்த மது,

“ம்மா…”என்று தவிப்பாக அழைக்க,அவளது தலையை ஆதரவாக தடவியவர்,

“நீ தப்பு செய்யல…ஆனா நீ நினைக்கிறது நடக்காது…”என்று கூற மதுவின் கண்கள் மேலும் கலங்க மகள் அழுவதைக் காண சகிக்காமல்,

“என்னை வதைக்காதடி…என்னால முடியல…”என்று உடைந்து அழுதார் சுந்தரி.அதற்குள் ஹாலில் இருந்து பூமிநாதன் சுந்தரியை அழைக்கும் சத்தம் கேட்கவும் தன்னை நிலைபடுத்திய சுந்தரி மதுவிடம்,

“ஏடாகூடமா ஏதுவும் யோசிக்காத மது…”என்றுவிட்டு சென்றுவிட்டார்.ஆனால் இனி மகள் செய்யபோவது அனைத்தும் ஏடாகூட வேலைகளே என்பது அப்போது அந்த தாய்க்கு தெரியவில்லை.மகளின் செயல்களால் ஒருவனது எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் என்று அவருக்கு புரியவில்லை.

ஹாலில் பூமிநாதன் தன் அண்ணனின் பக்கத்தில் கோபமாக நின்றுக் கொண்டு இருக்க அருகே அதே இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்.மதுவின் அறையில் இருந்து சுந்தரி தன் கண்களை துடைத்துக் கொண்டு வரவும்,

“என்னடி அதுக்குள்ள என்ன அடுத்த பிளான் போட்டிருப்பீங்களே அம்மாவும்,பொண்ணும்…”என்று வார்த்தைகளைவிட சுந்தரி வெறுமையாக பார்த்தாரே தவிர எதுவும் பேசவில்லை.தனக்கே எந்த மரியாதையும் இல்லாத இடத்தில் தன் வார்தைக்கு எங்கே மரியாதை இருக்க போகிறது என்று அமைதியாகிவிட்டார்.அதற்கும் காய்ந்த பூமிநாதன்,

“இங்க பாரு உன் பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு…நித்யாவுக்கு முடிஞ்சு அடுத்த மாசத்திலேயே இவளுக்கும் முடிக்க போறோம்…இனி அந்த கழுத எங்கேயும் போக கூடாது…படிப்பு வேணாம் ஒரு மண்ணும் வேணாம்…வீட்டு வேலை கத்துக் கொடு…நான் சொல்றத மீறி ஏதாவது எக்குத்தப்பா நடந்துச்சு உன் அண்ணன் குடும்பம் இருக்காது….”என்று எச்சரித்துவிட்டு சென்றார்.சுந்தரிக்கு பூமிநாதன் கடைசியாக கூறிய உன் அண்ணன் குடும்பம் இருக்காது என்ற வார்த்தையிலேயே அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்துவிடுவார்களோ என்று மனது துடிக்க நின்றுவிட்டார்.

மதுமிதாவோ தன் தந்தை கூறி அடுத்த மாதம் தனக்கு கல்யாணம் என்ற வார்த்தையிலேயே அவளது மனது சுழல,தந்தை அடுத்து பேசிய வார்த்தைகள் காதில் விழுந்த போதும் கருத்தில் பதியவில்லை.ஒருவேளை தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கேட்டிருந்தால் பின்னாள் வரப்போகும் நிகழ்வுகளை தடுத்திருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது என்பார்களே அதுபோல தான் மதுவையும் இழுத்து சென்றது.

அன்றைய இரவு உறங்கா இரவாகி போனது மதுவிற்கு,மனது முழுவதும் ரூபனின் நினைவுகளே வலம் வந்தன கடைசியாக இருவரும் சந்தித்த தருணங்கள் என்று மனது ஒருநிலை இல்லாமல் அலைபாய்ந்தது.சுந்தரியும் மதுவுடன் இருந்தால் தன் கணவன் மேலும் திட்டக்கூடும் என்று அஞ்சியே விலகி இருந்தார்.இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கழித்த மதுவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது இனி வீட்டை விட்டு வெளியில் செல்வது முடியாத காரியம் என்று.அவளது கைபேசியையும் பிடிங்கியிருந்தார் பூமிநாதன்,அதனால் ரூபனை தொடர்பும் கொள்ளமுடியாமல் தவித்தவள் இறுதியில் எப்படியாவது ரூபனை அடைந்துவிட்டாள் மற்றதை அவன் பார்த்துக்கொள்வான் என்று எண்ணியவள்,அதற்கு முதலில் வீட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று மனதில் திட்டங்களை வகுத்து அதற்கான நேரத்திற்காக காத்திருந்தாள்.

வீட்டில் அனைவரும் இருந்தனர் நிவேதாவை தவிர அவள் தன் பள்ளி சுற்றுலா சென்றிருந்தாள்.ஆண்கள் இருவரும் காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிட,வசந்தாவும்,நித்யாவும் நித்யா திருமணத்திற்காக சில சாமான்கள் வாங்க கிளம்பிவிட்டனர்.இப்போது வீட்டில் தன் அன்னையும் அவளும் மட்டுமே தன் அன்னையிடம் கூறலாம் தான் ஆனால் ஒருவேளை அவர் தந்தைக்கு பயந்து சம்மதிக்கவில்லை என்றால் அனைத்தும் வீண் என்று நினைத்தவள் தன் அன்னை அசந்த நேரம் வீட்டிலிருந்து வெளியெறிருந்தாள்.

ரூபனின் வீட்டில் காலை வேளைகள் அனைத்தும் முடிந்து இப்போது மளிகை கடைக்கு சில சாமான்களை பாக்கெட் போட்ட படி அமர்ந்திருந்தனர் தேவகியும்,மோகனாவும்.செந்தில்நாதன் தாங்கள் அறைத்த மாசால பொடிகளை மளிகை கடையில் கொடுத்துவிட்டு அப்போது தான் வந்திருந்தார்.சோர்ந்து வந்திருந்த செந்தில்நாதனைக் கண்டு,

“மாமா நீங்க உட்காருங்க நான் காபி எடுத்துட்டுவறேன்….”என்றுவிட்டு அடுக்களை உள்ளே சென்றார்.தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த செந்தில்நாதனிடம் தேவகி காபியை நீட்ட,

“ரூபன் போன் செஞ்சானா…”என்று கேட்க

“ம்ம் செஞ்சான் மாமா…இன்னும் வேலை முடியலையாம் சாய்ந்திரம் தான் கிளம்புறேன்னு சொன்னான்…”என்று கூறினார்.

“சரிமா..நீ வேலைய பாரு…”என்றுவிட்டு காபியை அருந்தும் நேரம் வீட்டின் காலிங் பெல் ஒலிக்க செந்தில்நாதன் எழும் முன் தேவகி,

“நீங்க இருங்க மாமா…நான் பார்க்குறேன்…”என்றுவிட்டு சென்றார்.

தன் வீட்டில் இருந்து கிளம்பிய மது நேராக ரூபனின் வீட்டிற்கு தான் சென்றாள்.அவளுக்கு தேவகி என்ன கூறுவார் என்ற நினைப்பெல்லாம் இல்லை அவளது மனதில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது தன் அத்தானை பார்த்துவிட வேண்டும் என்பதே.அதே நினைவுடன் இதோ அவனின் வீட்டின் முன்பு பெல் அடுத்துக் கொண்டு நின்றாள்.கதவை திறந்த தேவகிக்கு மதுவை அடையாலம் தெரியாமல்,

“யாருமா நீ…என்ன வேணும்…”என்று கேட்க மதுவிற்கு தேவகியை தெரியும் ரூபன் அவர்களின் குடும்ப படங்களை காட்டியுள்ளான்.ரூபனை எதிர்ப்பார்த்த மதுவிற்கு அப்போது தான் தேவகியின் நினைப்பே வந்தது தான் யார் என்று தெரிந்தால் இவர்கள் என்ன கூறுவார்கள் என்று நினைத்தாள் பின் இவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும் இன்றைக்கு இல்லைனாலும் என்றாவது ஒரு நாள் தெரிய தானே போகிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டு இருக்க அதற்குள் செந்தில்நாதன்,

“யாருமா…ரூபனா…”என்று கேட்டப்படி வந்தார்.அதுவரை தன்னை எவ்வாறு அறிமுகம் செய்வது என்ற யோசனையில் இருந்த மதுவிற்பகு தன் தாத்தாவைக் கண்டவுடன் தைரியம் வந்தது போல்,

“தாத்தா…”என்று அழைக்க அப்போது தான் வாயிலை கண்ட செந்தில் நாதன் அதிர்ந்தார்.

“மதூ…நீ எங்க இங்க…”என்று கேட்டவாறு வர மது என்ற பெயரைக் கேட்டவுடன் தன் மகள் வந்திருக்கிறாள் என்று நினைத்தபடி வந்த மோகனா,

“வாடா மது…அம்மா எங்க பின்னாடி வாராளா…”என்ற வாரு வாயிலை பார்க்க,அப்போது தான் தேவகிக்கு வந்திருப்பது சுந்தரியின் மகள் என்று புரிந்தது.தன் பாட்டி அழைத்தும் உள்ளே வாராத மது தன் அத்தையைக் காண தேவகி,

“உள்ள வா…”என்ற தோடு உள்ளே சென்றுவிட்டார்.உள்ளே வந்த பேத்தியை மோகனா பிடித்துக் கொண்டு கேள்விகள் கேட்க மதுவோ சுற்றுமுற்றும் பார்த்தாலே தவிர பதில் அளிக்கவில்லை.வந்தலிருந்து பேத்தியே பார்த்துக் கொண்டிருந்த நாதனுக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

“நீ கொஞ்சம் சும்மா இரு மோகனா…”என்று மனைவியை அடக்கிய நாதன் பேத்தியிடம் திரும்பி,

“என்னமா..”என்று கேட்க தன் தாத்தா ஏதோ கண்டு கொண்டார் என்று எண்ணிய மது,

“ரூபன் அத்தான் எங்க தாத்தா…இன்னும் வரலையா…”என்று கேட்க நாதனுக்கு அவளின் இந்த உரிமையான அழைப்பு இன்று வந்தது அல்ல என்று புரிந்தது.

“அவன் இல்லடா வேலை விஷயமா டெல்லி போயிருக்கான்…”என்று மோகனா கூற நாதன் மனைவியை முறைத்தார் என்றால் மதுவோ அவரது நினைப்பது சரி என்பது போல அடுத்த கேள்வியை கேட்டால்,

“என்ன இன்னும் வரலையா…என்கிட்ட காலையில வந்துடுவேனு சொன்னார்…எப்ப வருவாரு…”என்று தன் விசாரனையை தொடங்க நாதனுக்கு மனது பந்தய குதிரை போல் வேகம் எடுக்க,மோகனாவிற்கோ எதுவும் புரியாத நிலை.இவர்கள் உரையாடலை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவகி தன் மகனின் பெயர் அடிபடவும் என்ன என்று கேட்டு வர அதற்கு முன்,

“உனக்கும் ரூபனக்கும் எப்படி பழக்கம்…”என்று பேத்தியை கேட்டிருந்தார் நாதன்.தன் தாத்தாவின் கேள்விக்கு மது நடுங்கவெல்லாம் இல்லை தாங்கள் இருவரும் காதலிப்பதை கூறியவள் இப்போது தன் வீட்டினருக்கு விஷயம் தெரிந்து வீட்டில் அனைத்தையும் கூறினாள்.

மது கூறியவற்றைக் கேட்ட அனைவருக்கும் இப்போது பயம் பிடித்துக் கொண்டது.இதில் தேவகிக்கு மது இவ்வாறு தன் வீட்டிற்கு தெரியாமல் வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை.இப்போது தன் தன் மகனின் பெயர் அல்லவா அடிபடும் என்று ஊகித்தார்.

“நீ முல்ல வீட்டுக்கு கிளம்பு….”என்று அதுவரை உள்ளிருந்த தேவகி வெளியில் வந்து கூற அனைவருக்கும் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதே தெரியவில்லை.

“என்னமா நீ நம்ம வீடு தேடி வந்த பொண்ண இப்படி விரட்டுற…அவ என்ன தப்பு செஞ்சிட்டா…அவ அத்தானை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறது ஒரு குத்தமா…அதுக்கு என் பிள்ளைகளை ஆள் ஆளுக்கு விரட்டுறீங்க…”என்று மோகனா காரமாக கேட்க அவரை முறைத்த தேவகி,

“நான் சரியா தான் அத்த பேசுறேன்…இப்ப இந்த பொண்ணு பண்ணிட்டு வந்திருக்கிறது ரொம்ப பெரிய தப்பு…இதனால பிரச்சனை என் பிள்ளைக்கு தான் வரும் அதனால தான் சொல்லுறேன்…”என்று மோகனாவிடம் கூறியவர் மதுவிடம் திரும்பி,

“நீ வீட்டுக்கு கிளம்பு…”என்று உறுதியாக கூற

“அத்தை உங்களுக்கு என்னை பிடிக்காதுனு எனக்கு தெரியும்….நான் இப்ப போயிட்டா எனக்கு வேற கல்யாணம் செஞ்சிடுவாங்க….என்னால அத்தான தவிர வேற யாரையும் மனசாலக் கூட நினைக்க முடியாது…ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்குங்க….”என்று மன்றாடும் குரலில் கூற தேவகியோ சிறிதும் இலகாமல் இருந்தார்.தன் அத்தையிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த மது தன் தாத்தா,பாட்டியிடம் பேசி புரிய வைக்கும் நோக்கோடு இருவரிடமும் நெருங்கி,

“நீங்களாவது என் சுழ்நிலையை புரிஞ்சிக்குங்க தாத்தா…”என்று கூற எப்போதும் போல் மோகனா பேத்திக்காக பேசினார்,

“நீ எதுக்கும் பயப்படாதடா…”என்று தைரியம் கொடுத்தார்.தன் தாத்தா முகம் இன்னும் யோசனையில் இருப்பதை உணர்ந்த மது,

“தாத்தா…”என்று அழைக்க அவளது அழைப்பில் உணர்வுக்கு வந்த நாதன்,

“என்னமா…”என்றார்,

“தாத்தா நான் இங்கயே இருக்கேன்…”என்று கூற தேவகிக்கு மனது பதறத் துவங்கியது எங்கே நாதன் பேத்தி பாசத்தில் இங்கே இருக்க சொல்லிவிடுவாறோ என்று.அவருக்கு மது இப்போது செய்து வைத்திருப்பது முட்டாள் தனமாகவே தெரிந்தது.காதலிக்க தெரிந்த பெண்ணிற்கு அந்த காதலுக்காக வீட்டில் உள்ளவர்களை பேசி புரிய வைக்க தெரியாதா என்று நினைத்தார்.

நாதனும் மருமகளின் முகத்தை பார்த்தவர் மதுவிடம்,

“நீ இப்ப செஞ்சிருக்கிறது ரொம்ப தப்பு மது…முதல்ல வீட்டுக்கு கிளம்பு…”என்று கூற மது அதிர்ந்தாள் என்றால் தேவகிக்கு இப்போது தான் மூச்சே சீரானது.

“என்னங்க நீங்க…”என்று கோபத்துடன் கேட்ட மேகனாவை தன் கண்களால் அடக்கிய நாதன் மதுவிடம்,

“நீ இப்ப செஞ்சுவச்சிருக்கிற விஷயத்திற்கே உங்க அப்பன் எங்கள தான் பேசுவான்…அதனால நீ முல்ல கிளம்பு ரூபன் வரட்டும் நாங்க கண்டிப்பா உங்க வீட்ல பேச வரோம்….”என்று கறாராக கூற மதுவிற்கு அனைவரும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரம்,கோபம் என்று எல்லாம் ஒன்று சேர முயன்று தன்னை அடக்கிய போதும் அழுகை கேவல் வெளிபட அங்கே மீண்டும் ஒரு சங்கடமான சுழ்நிலை.

மோகனாவோ தன் கணவரின் கோபத்திற்கு பயந்து செய்வதரியாது நிற்க தேவகிக்கோ மதுவைக் கண்டு மனது வலித்த போதும் இதனால் தன் மகனுக்கு கெட்ட பெயர் என்று வரும் போது மற்றது பின்னுக்கு சென்றது.தன் பேத்தி கண் கலங்குவது பொருக்க முடியாமல் நாதன் மதுவின் தலையை ஆதரவாக கோதி,

“நான் சொல்லறது உனக்கு நல்லதுக்கு தான்டா…நீ பயப்படாம போ…நாங்க ,ரூபன் வந்த உடனே பேசி நாளைக்கு வீட்டுக்கு வரோம்…”என்று கூற மது எதையும் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை இவர்கள் அனைவரும் தன்னை பிரிக்க தான் நினைக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்திட தன் கண்களை துடைத்துக் கொண்டவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.தேவகிக்கு மதுவின் பார்வை இவள் இதை சாதாரணமாக விடப் போவதில்லை என்று உணர்த்தியது மனதில் ஒருவித பயத்துடனே தன் மகனின் வரவிற்காக காத்திருந்தார்.

டெல்லியில் தன் நேர்காணலை நல்லமுறையில் முடித்த ரூபனுக்கு அவன் நினைத்த படி அவனது புராஜெக்ட்டை எடுத்துக் கொண்டே கம்பெனியிலேயே வேலையும் கிடைத்திருந்தது.தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை முதலில் மதுவிற்கு சொல்லாம் என்று அழைத்தால் அவளது கைபேசி அணைக்கப்பட்டிருந்தது.இரண்டொருமுறை அழைத்த ரூபன் சரி ஏதாவது வேலையாக இருப்பாள் என்று கருதி தனக்கு இருந்த சில வேலைகளை முடித்துவிட்டு வீடு வர இரவு மணி ஒன்பதை எட்டியிருந்தது.சோர்ந்து போய் வரும் மகனை எப்போதும் புன்னகை முகமாக வரவேற்கும் தேவகி இன்று மகனின் முகம் கூட பார்க்காமல் திறந்துவிட்டு சென்றுவிட்டார்.

தன் அன்னையின் முகவாட்டத்தைக் கண்டவன் தேவகியின் பின்னே,

“அம்மா…”என்று அழைத்தபடி வர,

“முதல்ல குளிச்சிட்டு வா ரூபா…சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…”என்று சமையலறைக்குள் நுழைந்து கொள்ள வெளியில் அரவம் கேட்டு தங்கள் அறையிலிருந்த நாதனும்,மோகனாவும் வெளியில் வர,

“நீங்களும் இன்னும் தூங்கலையா தாத்தா…எனக்கு வேலை கிடைச்சிடுச்சு தாத்தா…”என்று அவரின் காலில் விழ அவனை மனதார ஆசிர்வதித்தார்.

“இருங்க தாத்தா குளிச்சிட்டு வரேன்…”என்றுவிட்டு செல்லும் பேரனையே கவலையாக பார்த்தனர் மோகனாவும்,செந்தில்நாதனும்.ரூபன் குளித்து வரவும் அவனுக்கு சாப்பாடு பரிமாறினார் தேவகி தன் அன்னையின் முகம் வாட்டமாக இருக்க,

“என்னம்மா…ஏன் ஒருமாதிரி இருக்க…”என்று கேட்டுக் கொண்டிருக்கும் வேலையில் வீட்டின் அழைப்பு மணி அடிக்க அனைவரின் முகமும் கலவரம் பூண்டது.

“இந்த நேரத்தில யாரு…நீங்க இருங்க தாத்தா…நான் பார்க்குறேன்…”என்று கூறியபடி கதவை திறந்த ரூபன் வெளியில் நின்றவர்களை கண்டு அதிர்ந்தான் என்றால் மற்ற அனைவரும் பயத்தில் நடுங்கியபடி நின்றனர்.

Advertisement