Advertisement

மயக்கும் மான்விழியாள் 22

ஒருவாரம் கடந்திருந்தது மதுமிதா சிவரூபனை சந்தித்து.அன்று ரூபன் அவளிடம்  நடந்து கொண்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அன்று அவனை தள்ளுவிட்டு வீடு வந்தவள் யாரிடமும் பேச பிடிக்காமல் தன் அறைக்கு வந்து தன் கட்டிலில் விழுந்தாள்.மனதில் ரூபனின் வார்த்தைகளே வலம் வந்தன,என்னமாதிரி நினைத்துவிட்டான் தன்னை என்று நினைத்தவளுக்கு மனது ஆறவேயில்லை.தன்னை உதாசினபடுத்தினது மட்டுமில்லாமல் தன் காதலை அவன் கடைசி வரை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் மனதில் எழ,தன் போல் உடலும்,மனமும் சோர்ந்து போக கண்ணீர் ஆறாக பெருகியது.தன் மனதில் உள்ள அனைத்தையும் தன் அழுகையில் கரைத்தவள் அதே நிலையில் உறங்கியும் இருந்தாள்.

காலை எழும் போது மனதில் சிறு தெளிவு இனி ரூபனை பற்றி நினைக்கவே கூடாது என்று மனதில் கூறிக்கொண்டு தன் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள்.இதோ ஒருவாரம் ஓடிவிட்டது மது ரூபனைக் காண சென்று,அவனிடம் கைபேசி அழைப்புகளையும் நிறுத்தியிருந்தாள்.இனி அவனது வாழ்வில் தலையிடக்கூடாது என்று மனதில் ஒரு உறுதியுடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தன் அன்றாட வேலைகளை செய்தாள்.என்ன தான் அவள் தன் மனதிற்கு கடிவாளமிட்டாலும் அவளையும் மீறி அவள் மனது ரூபனையே சுற்றி வலம் வந்தது.சில நேரங்களில் அவளுக்கே அவளது மனதின் நிலை புரியாமல் தடுமாறி தான் போனாள்.என்ன முயன்றும் ரூபனை  அவள் மனதில் இருந்தும்,வாழ்வில் இருந்தும் விலக்க முடியாது என்று நன்கு புரிந்தது மதுமிதாவிற்கு.தன் வாழ்வில் அவனை தவிர வேறு ஒருவன் இனி வரபோவதில்லை என்பது திண்ணம்.ஆனால் ரூபனிடம் மீண்டும் சென்று பேசி தன் காதலை புரிய வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.இவ்வாறு பலவித யோசனைகளில் உழன்றவளை கலைத்தது பவித்ராவின் குரல்,

“ஏய்…மது…ஏய் மது…”என்று மதுவின் தோள்களை உலுக்க அதில் நிகழ்வுக்கு வந்த மது,

“என்ன பவி…”என்றாள் சலிப்பாக,

“ஏய் என்னடி கிளாஸ் முடிஞ்ச உடனே ஓடிடுவ இப்ப எல்லாம் உக்கார்ந்தே இருக்க…என்ன ஆச்சு…”என்று கேட்டாள்.மதுவும்,பவித்ராவும் தோழிகள் ஒரே கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு மேற்கொண்டு சிஏ படிப்பிற்காக தனியாக பயிற்சி எடுத்துவருகின்றனர்.காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பயிற்சி வகுப்பு எப்போதும் மாலை வகுப்பு முடிந்தவுடன் ரூபனைக் காண ஓடும் மது இந்த ஒரு வாரமாக வகுப்பு முடிந்த பின்பும் உக்கார்ந்து இருப்பதை பார்த்து தான் அவளது தோழி இவ்வாறு கேட்டது,தான் கேட்டதுக்கு பதில் அளிக்காமல் இருக்கும் மதுவை மீண்டும் உலுக்கிய பவி,

“ஏய் என்னடி இப்படி முழிச்சிக்கிட்டே கனவுலகுக்கு போயிடுற…”என்று கேட்க,

“ப்ச்…ஒண்ணுமில்லடி…சும்மா தான்…”என்று மது மீண்டும் சலிப்பாக கூற,

“என்னடி இப்பெல்லாம் சலிப்பா பேசுற…கிளாஸும் சரியா கவனிக்கிற மாதிரி தெரியல…என்ன பிரச்சனை உன் ஆளு கூட…”என்றாள்.பவித்திராவிற்கு மது ரூபனை விரும்புவது தெரியும் அதனால் தோழியின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்று புரிந்து கேட்டது,

“ம்ம்…பிரச்சனை பிரச்சனை தான் எல்லாமே பிரச்சனை தான்டி…..”என்று ஆவேசமாக அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சின் மேல் கைகளால் குத்தியவள் தன் முகத்தை மூடி அழ தொடங்க பவித்திராவிற்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று புரிந்து அது என்ன என்று கேட்டு தோழியை மேலும் சங்கடபடுத்தாமல்,

“ஏய் மது விடு…எல்லாம் சரியா போகும்…சரி வா நாம இரண்டு பேரும் வெளில போய் ரொம்ப நாள் ஆச்சு…போகலாம் வா…”என்று கூற,

“ப்ச்…நான் வரல டி…”என்றாள் மது அழுகையுடனே.அவளை வற்புற்த்தி இழுத்து வந்தாள் பவித்திரா.இருவரும் இது போல் வெளி வருவது உண்டு இன்றும் அதை போல்  மாலில் சுற்றியவர்கள் கடைசியாக கடற்கரை வந்தனர்.எப்போதும் வெளியில் சுற்றிவிட்டு இப்படி கடைசியாக கடற்கரை வந்து கடல் அலைகளில் விளையாடிவிட்டு செல்வர்.இன்றும் அதே போல் வந்தனர் ,கடல் அலைகளில் சிறிது நேரம் நின்றுவிட்டு வந்த பவித்ரா நேரம் ஆவதை உணர்ந்து,

“வாடி டையம் ஆச்சு கிளம்பலாம்…”என்றாள் மதுவிடம்.அவளோ,

“ம்ம்…நீ கிளம்பு பவி நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்…”என்று அலைகளை வெறித்தவாரு கூற,

“மது…டையம் ஆச்சு டி…வா…”என்று கூறினாள்.பவித்திராவிற்கு மதுவை இந்த நிலையில் விட்டு செல்ல மனம் வரவில்லை.அதனால் அழைக்க மதுவோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.பின் பவியும் தானும் உன்னுடன் இருக்கிறேன் என்றுவிட்டு அமர்ந்துவிட்டாள்.

“ப்ச் பவி நீ கிளம்பு…உங்க வீட்டுல தேட போறாங்க…நான் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பிடுவேன்….”என்று கூற பவியோ மது கூறுவதை காதில் வாங்காமல் அமர்ந்திருந்தாள்.இவ்வாறு இவர்கள் இருவரும் வாதிட்டு கொண்டு இருக்க அப்போது,

“மது…”என்று யாரோ அழைக்க திரும்பினாள் பவித்ரா.மதுவோ திரும்பாமலே கண்டு கொண்டாள் அது ரூபனின் குரல் என்று.அவனை காண மனது துடித்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க ரூபனைக் கண்டு கொண்ட பவித்ரா,

“ஹலோ…அண்ணா நீங்க மதுவோட அத்தான் தான…”என்று கேட்க,அதற்கு ரூபனிடம் இருந்து வெறும் தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது அவனது கவனம் முழுவதும் மதுவின் மீதே  அவள் தன்னை திரும்பி பார்க்காதது மனதை வலிக்க செய்ய அவளையே தவிப்பாக பார்த்திருந்தான்.ரூபனின் பார்வை உணர்ந்த பவி  ஒருவேளை இருவரும் மனம்விட்டு பேசினால் பிரச்சனை தீரும் என்று நினைத்தவளாக மதுவிடம்,

“சரிடி…நான் கிளம்புறேன்…நீ வீட்டுக்கு போயிட்டு எனக்கு மறக்காம போன் பண்ணு…”என்றுவிட்டு கிளம்பினாள்.பவித்ரா சென்ற பின்பும் மது ரூபனின் புறம் திரும்பாமல் இருக்க ரூபனோ அவளிடம் எவ்வாறு தன் செயலுக்கு மன்னிப்பை வேண்டுவது என்ற தயக்கத்துடன் நின்றான்.இவ்வாறு சில நிமிடங்கள் மௌனத்திலேயே கரைய கடலை வெறித்துக் கொண்டிருந்த மது நேரமாவதை உணர்ந்து கிளம்ப தயாராக அவளது கையை பிடித்து தடுத்த ரூபன்,

“மது…ப்ளீஸ்…என்னை கொஞ்சம் பாரேன்…”என்று மன்றாடும் குரலில் கேட்க மதுவோ நிமிராமல் ரூபனின் கரங்களுக்குள் இருக்கும் தன் கரத்தினையே வெறித்துக் கொண்டிருக்க ரூபன் அவளது பார்வை உணர்ந்து கைவிட்டவன்,

“சரி கையை பிடிக்கல…ப்ளீஸ் நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு போ…”என்று கூற மதுவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை அதேசமயம் நிற்கும் இடத்தைவிட்டு நகரவும் இல்லை.அவள் செல்லாமல் நிற்பதையே அவளது சம்மதாமாக ஏற்றவன்,

“முதல்ல நான் அன்னக்கி நான் உன்கிட்ட நடந்துக்கிட்டது ரொம்ப தப்பு…கோபம் கண்ணை மறச்சிடிச்சு என்ன செய்யுறோம் ஏது சொய்யுறோம் தெரியாம உன்கிட்ட அறிவுகெட்டதனமா நடந்துகிட்டேன்….என்னை மன்னிச்சிடு…”என்றவன் மேலும்,

“மது…நான் அன்னைக்கி சொல்றது தான் இன்னைக்கும் சொல்றேன் இந்த காதல் இதெல்லாம் நமக்குள்ள சரிவராது….என் குடும்பம் வேற உன் குடும்பம் வேற இது ஒன்னு சேராது…இந்த விஷயத்தை மறந்துட்டு உன்னோட வாழ்க்கைய பாரு…”என்று கூற அதுவரை ரூபனின் முகத்தை பார்க்காத மதுமிதா அவனது முகத்தை நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தாள்.ரூபனோ கடலை வெறித்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டு இருந்ததால் அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததை கவனிக்கவில்லை.

ரூபனின் முகத்தைக் கண்ட மதுவிற்கு நெஞ்சில் சொல்ல முடியாத ஒரு உணர்வு.காரணம் அவனது தோற்றம்  மழிக்க படாததால் சற்று முகத்தில் தாடி வளர்ந்து,கண்கள் இரண்டு சிவந்து,உடை கலைந்து என்று எதையோ இழந்தவன் போல் காணப்பட்டான்.அவனது தோற்றமே கூறியது தன் தவறை எண்ணி அவனும் தன்னை வதைத்துக்கொண்டு தான் இருந்திருக்கிறான் என்று.கலங்கிய விழிகளுடன்,

“சிவா…”என்று அழைத்தாள்.அதுவரை கடலை வெறித்து பேசிக்கொண்டிருந்தவன் அவளது அழைப்பில் அவளைக் காண,

“சிவா…”என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற ரூபனுக்கோ அவளது கலங்கிய முகம் மேலும் வலியைக் கொடுத்தது.தன் முகத்தைக் கண்டு அவனது முகம் கலங்குவதைக் கண்ட மது சற்று என்று பார்வையை வேறுபுறம் திருப்பி,

“நீங்க சொல்றது சரி சிவா…நான் இனி உங்கள எந்தவித்திலேயேயும் தொந்திரவு செய்யமாட்டேன்…நீங்க கலங்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு….நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க….”என்றுவிட்டு அவனை பார்க்காமல் செல்ல பார்க்க அவளது கைகளை பிடித்து தடுத்தவன் அவளது முகத்தை தன் புறம் திருப்பினான்.அவன் முகத்தை நிமிர்த்தவும் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.கண்கள் தன் போல் கலங்க,அழுகையில் உதடு துடித்தது.அவளது முகமே கூறியது தன்னை முயன்று கட்டுப்படுத்துகிறாள் என்று,தன் இருகைகளாலும் அவளது முகத்தை ஏந்தியவன் முதல் முறையாக மனதை திறந்தான்,

“நீ ஏன்டி எனக்கு அத்தை பொண்ணா பிறந்த…”என்று கரகரப்பான குரலில் ரூபன் கேட்க,அவ்வளவு தான் அதுவரை கட்டிவைத்திருந்த மதுவின் அழுகை உடைப்பெடுக்க அவனது நெஞ்சில் புதைந்துவிடுபவள் போல் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.அவளது கதறலை சகிக்கமுடியாமல் அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன்,

“விழி…வேண்டாம்டி…நீ இப்படி உடையறத என்னால பார்க்கமுடியல…ஏன்டி இப்படி படுத்துற…”என்று தவிப்பாக கேட்க,அவனது நெஞ்சில் இருந்து முகத்தை எடுத்தவள் கோபத்தில் தன் இரு கைகளாலும் அவனை அடித்து,

“எல்லாம் உன்னால தான்…உன்னால தான்…நீ ஏன் என் வாழ்க்கையில வந்த போ..போ..என்ன சொன்ன சொன்ன உன்னை மறக்குனுமா முடியாது…முடியாது…என் மனசு முழுசும் நீ தான் நிறைஞ்சு இருக்க எப்படி மறக்க முடியும் சொல்லு சொல்லுடா…”என்று அவனது சட்டை பிடித்து கேட்டவள் பின் என்ன நினைத்தாளோ அவனை விட்டு விலகி,

“உன் குடும்பம் என் குடும்பம் இதெல்லாம் எனக்கு தெரியல…நீ மட்டும் தான் எனக்கு தெரியுற….என் மனசு முழுசா உன் பின்னாடி தான் சுத்தது…உன்னை பொருத்தவரைக்கும் இது பைத்தியக்கார தனம் என்னை பொருத்தவரை இது காதல்….நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சிட்டேன் என் மனசை புரிய வைக்க உனக்கு புரிஞ்சாலும் நீ புரியாத மாதிரி தான் இருக்குற…என்னை எப்படி ஒதுக்கனும் மட்டும் தான் எண்ணம்…அதனால தான் அன்னைக்கி அப்படி பேசின…அப்பவாது நான் ஒதுங்கி போயிடுவேன்….நீ நினைச்ச மாதிரி தான எல்லாம் நடக்குது…அதான் நான் ஒதுங்கிட்டேனே…அப்புறம் ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்குற….”என்று இதுவரை மனதில் இருந்ததெல்லாம் அவள் கொட்டிவிட்டு ரூபனின் முகம் காண அவனோ அவள் பார்வையை உணர்ந்து முகத்தை திருப்ப,

“என்ன பாருங்க சிவா…”என்று கூறி அவனது முகத்தை தன் புறம் திருப்பிவள்,

“உங்க மனசுல  நான் இல்லனு ஒரு வார்த்தை  சொல்லுங்க….நான்  உங்கள எந்தவித்திலேயேயும் தொந்திரவு செய்யமாட்டேன்…”என்று கேட்க அவளது கண்களை காண முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்ப முயல அவனது முகத்தை அழுத்தமாக பிடித்தவள்,

“சொல்லுங்க..ஏன் முகத்தை திருப்புரீங்க….என் முகத்தை பார்த்து சொல்லுங்க…”என்று கேட்க அவனிடம் பதில் இல்லை.அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவள்,

“நீங்களும் என்னை விரும்புறீங்க…எனக்கு தெரியும்..ஆனா ஏத்துக்க தான் மனசு இல்ல…ஏன்னா உங்களுக்கு முதல்ல உங்க குடும்பம் அவங்க சந்தோஷம் தான் முக்கியம்…நீங்க என்னை கல்யாணம் செஞ்சா உங்க அம்மாக்கு பிடிக்காது…அதனால தான என்னை வெறுத்து ஒதுக்கறீங்க…நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஒதுக்க வேண்டாம் நானே ஒதுங்கிக்குறேன்…”என்றுவிட்டு அவனை விடுத்து கிளம்பிவிட்டாள். மதுமிதா சென்று வெகு நேரமாகியும் ரூபன் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

கடல் அலையின் சீற்றத்தை போலவே அவனது மனமும் ஒரு நிலையில்லாமல் அலைந்தது.மதுவின் வார்த்தைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.முதல் முறையாக அவனின் மனது மதிவிற்காக யோசிக்க தொடங்கியது.அவனது மனதில் சலனத்தை ஏற்படுத்தி,காதல் என்ற வித்தை விதைத்து சென்றிருந்தாள் மதுமிதா.

Advertisement