Advertisement

மயக்கும் மான்விழியாள் 17

செந்தில்நாதன்,மோகனா இருவரையும் கோவிலின் உள்ளே விட்டுட்டு வெளியில் வந்த ரூபன் தாங்கள் வந்த காரின் உள்ளே அமர்ந்து சீட்டில் தலை சாய்ந்தான்.மூடியவிழிகளில் தாயின் பிம்பமும் அவர் கூறிய வார்த்தைகளுமே மனதில் ஓடியது.சுந்தரியிடம் இருந்து அழைப்பு வந்தலிருந்து மோகனா திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று செந்தில்நாதனிடம் கேட்டுக்கொண்டிருக்க நாதனோ,

“இங்க பாரு மோகனா…எனக்கு உடம்புக்கு முடியல…உன்னால தனியா போக முடியாது…அப்புறம் எப்படிமா போறது…”என்று கூற மோகனாவின் முகம் கூம்பி போனது.இவர்களின் உரையாடலைக் கேட்டப்படி வந்த தேவகி,

“மாமா…அத்தை…நீங்க இரண்டு பேரும் கல்யாணத்துக்கு போங்க….ரூபன் உங்கள கொண்டு வந்து விடுவான்….”என்று கூற தேவகியை ஆச்சரியமாக பார்த்தனர் இருவரும்.சிவராமனின் இறப்பிற்கு பிறகு தேவகி சற்று ஒடுங்கி தான் போனார்.அவரை நாதனும்,மோகனா மற்றும் ரூபனும் தான் தேற்றிக் கொண்டுவந்திருந்தனர்.சிவராமனின் மறைவிற்கு கூட சுந்தரிக் குடும்பத்தினர் பெயருக்கு வந்துவிட்டு சென்றிருந்தனர்.சுந்தரி மட்டும் பிடிவாதமாக இரண்டு நாட்கள் இருக்கக் கேட்க பூமிநாதன் ஏதோ ஏதோ காரணம் கூறி அழைத்து சென்றிருந்தார்.அவர்களது செயலில் மோகனாவிற்கே சற்று வருத்தம் தான் இருந்தும் மகள் அங்கு வாழ்கிறாளே என்று அமைதிக்காத்தார்.ஆனால் செந்தில்நாதன் தன் மகனின் இறப்பிலும் அவர்கள் ஒதுங்க பேச்சையே நிறுத்தி இருந்தார்.

இருநாட்கள் முன்பு மகள் அழைத்து திருமணத்திற்கு அழைக்க தாங்கள் வரவில்லை என்று மகளிடமே நேரிடையாக மறுத்துக் கூறிவிட்டார் செந்தில்நாதன்.சுந்தரி மிகவும் கெஞ்சவும் ஒருகட்டதில் மோகனாவிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.சுந்தரி மோகனாவிடம் கண்டிப்பாக வர வேண்டும் என்று மன்றாடிவிட்டே அழைப்பைத் துண்டித்திருக்க மோகனாவிற்கு எப்படியேனும் மகளைக் காண வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

தேவகி நீங்க இருவரும் போக நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியவுடன் மோகனாவின் முகம் ஒளிர செந்தில்நாதனோ,

“ரூபனா வேண்டாம்மா…அவங்க யாரையும் மதிக்கக் கூட மாட்டாங்க…நாம போக வேண்டாம்…”என்று மறுக்க,மோகனாவோ,

“என் புள்ளை தான் போய் சேர்ந்துட்டான்…பொண்ணையாவது பார்க்கலாம்னா அதுக்கும் வழியில்ல…”என்று பும்பியபடி இருக்க,

“மாமா….என்ன தான் நீங்க சொன்னாலும் உங்களுக்கும் சுந்தரியைப் பார்க்கனும்னு மனசுல இருக்கும்…போயிட்டுவாங்க…நான் ரூபன் கிட்ட சொல்லுறேன்…”என்றார் தேவகி.இவ்வளவு நடந்த பிறகும் தங்களுக்காக யோசிக்கும் மருமகளைக் கண்டு மனதிற்குள் பெருமிதம் கொண்டார் செந்தில்நாதன்.

தேவகி ரூபனிடம் “நீ தாத்தா,பாட்டியைக் கூட்டிட்டு போய்விட்டு…விஷேஷம் முடிஞ்சவுடன் கூட்டிட்டு வா ரூபா…ஆனா நீ அந்த கல்யாணத்திற்கு போக வேண்டாம்…”என்று கூறி தான் அனுப்பியிருந்தார்.தன் அன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று சற்று முன் பூமிநாதன் நடந்துக்கொண்டதில் புரிந்துக் கொண்டான்.அவனுக்கு ஏற்கனவே தன் அத்தை குடும்பத்தை பற்றி தெரியும் தான் ஆனால் அவர்கள் இவ்வளவு கீழ் இறங்குவார்கள் என்று அவன் நினைக்கவில்லை.

கலங்கிய விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அத்தையின் முகம் அவனை இம்சிக்க ச்ச என்று கூறிக் கொண்டு தன் தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு தலை வலிப்பது போல இருந்தது.காரை விட்டு இறங்கி ஏதாவது டீ கடை தென்படுகிறாதா என்று பார்க்க அவன் முன் சூடாக காபியை நீட்டியது ஒருகரம் அவன் யார் என்று திரும்பி பார்க்க பச்சைப்பட்டுத்தி தேவதையென நின்றிருந்தாள் மதுமிதா.

“ம்ம்…இந்தாங்க அத்தான் காபி…வாங்கிக்குங்க…”என்று சிரித்த முகமாக கூறினாள்.அவளது அத்தான் என்ற அழைப்பு ரூபனின் உடலில் ஒருவித கிளர்ச்சியை உருவாக்கியது ஒரு நிமிடம் தான் அடுத்த நொடி பூமிநாதனின் வார்த்தைகள் மனக்கண் முன் வர முகம் இறுக,

“எனக்கு வேணாம்….அப்புறம் என் பேரு சிவரூபன்….அப்படியே கூப்புடு…உனக்கும் எனக்கும் எந்த உறவுமுறையும் இல்ல புரியுதா…”என்று பொறுமையாக தான் கூறினான் ஆனால் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.அவன் கூறியது எதுவும் தன் காதுகளில் விழவில்லை என்பது போல அவனை தன்னால் முடிந்த மட்டும் கண்களால் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் மது.அவன் பேசிவிட்டு அவள் முகத்தை பார்க்க அவளோ இவனை விழுங்கும் பார்வை பார்த்தபடி இருக்க,

“ப்பா..என்ன இப்படி பார்க்குறா…விட்டா பார்வையாளே சாப்பிட்டுறுவா போல…ம்கும் இது சரி வராது…”என்று மனதில் நினைத்தவன் அவள் முன் சொடுக்கிட்டு கூப்பிட அதில் சுயத்திற்கு வந்த மது,

“ஆங்…என்ன அத்தான்…”என்று கேட்க ரூபனுக்கு தான் எதில் முட்டுவது என்று தெரியவில்லை.இவளிடம் பேசினால் வீண் என்று உணர்ந்த ரூபன் அவள் நீட்டிய காபியை வாங்கி அவளைக் கிளப்பும் விதமாக,

“தேங்க்ஸ்…நீங்க போகலாம்…”என்று கூற அவளோ தலையை இடவலமாக ஆட்டி அவனிடம் நெருங்கி அந்த காரின் மேல் அமர்ந்து,

“அப்புறம் அத்தான்…அத்தை எப்படி இருக்காங்க…”என்று வெகு சாதாரணமாக விசாரிக்க ரூபனுக்கு தான் தலைவேதனையாக போனது இவளை எப்படி கிளப்புவது என்று எண்ணமிடும் போதே,

“நிங்க என்ன இங்கிருந்து கிளப்ப முயற்சி பண்றதுவிட்டுட்டு பதில் சொல்லுங்க…”என்று அவன் மனதை படிக்க அதில் மேலும் கடுப்பானவன்,

“ஏய் நீ கிளம்பு…ஏதோ போனா போகுதுனு பார்த்தா…ரொம்ப ஓவரா பேசுற…”என்று ரூபன் எகிற மதுவோ அவன் பேசும் போது முகத்தில் அசையும் கேசத்தையும்,அவனது வலிய கரங்களையுமே பார்த்துக்கொண்டிருக்க.அந்த வலிய கரங்களின் உள் தன் கரங்கள்   அடங்கினால் எவ்வாறு இருக்கும் என்ற ஆராய்ச்சியில் அவனது கரத்தையும் தன் கரத்தையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தாள்.அவளைக் கண்ட ரூபனுக்கு கோபம் எல்லைக் கடந்தது.

“என்ன பொண்ணோ ச்ச…கொஞ்சம் கூட இங்கிதமே தெரியல…”என்று வேண்டும் என்றே அவளை காயப்படுத்தும் நோக்கில் பேச,மதுவிற்கு அதுவரை இருந்த இனிமையான மனநிலை மாறியது.சிவந்த விழிகளுடன் ரூபனை நோக்கியவள்,

“அத்தான் என்னை எங்க வீட்டுல சரியா தான் வளர்த்திருக்காங்க…நான் ஒண்ணும் வேத்து ஆள்ளுக்கிட்ட பேசல என் மாமா பையன் கிட்ட தான் பேசுறேன்…”என்றவள் பேச்சை பாதியில் நிறுத்திய ரூபன்,

“என்ன மாமா பையனா…யாருமா அது…உனக்கு  இப்படி ஒரு உறவு இருக்குனு கூட சொல்லியிருக்க மாட்டாங்க…இப்பக் கூட நீ பாட்டி மூலமா விஷயம் கறந்து வந்து தான் என்கிட்டயே பேசுற…அதுவும் பாட்டியை  இந்த கல்யாணத்துல பார்த்துனால…இல்ல இந்த உறவு எங்க உனக்கு தெரிய போகுது…அதான்  உங்க அப்பா சொன்னார்ல நாங்க முக்கியமான வங்க இல்லைனு…அப்புறம் எதுக்கு என்கிட்ட வந்து பல்லைக் காட்டிட்டு இருக்க போ….”என்று   அவன்  மனதின் ஆதங்கத்தை கூற மதுவிற்கு மனது வலிக்க தான் செய்த்து.

மதுவிற்கு அவன் கூறுவது உண்மை தானே தனக்கு இந்த உறவுகளின் முக்கியத்துவம் தெரியாமல் இருந்திருக்கிறதே தன் தாய் பல நாட்கள்  படுக்கையில் கண்ணீருடன் இருப்பதைக் கண்டிருக்கிறாள் தான் அப்போதெல்லாம் அவளுக்கு  தன் தாய் வழி தாத்தா,பாட்டியிடம் கோபம் வரும் ஏன் அவர்கள் பேசவில்லை என்று.அவளுக்கு தன் தாயிடம் ஏதோ கோபம் அதனால் அவர்கள் பேசவில்லை என்று தான் கூறப்பட்டிருந்து.அதனாலே அவள் அவர்கள் பேசவில்லை என்றால் தானும் பேசமாட்டேன் என்று தான்  நினைத்திருந்தாள் ஆனால் இன்று தன் பாட்டியின் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்டவளுக்கு தன் வீட்டினரின் உண்மையான சுயரூபம் தெரிய  மனது கணத்துதான் போனது.

அதுவும் தன் மனதிற்கு பிடித்தவனை தன் தந்தை நடத்திய விதம் மேலும் வலிக்க செய்திருக்க அவனை எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்று ஏதோ ஏதோ பொய் கூறி அவனைத் தேடி வந்திருந்தாள். அவனோ எதார்த்தை கூறினாலும் அவன் கூறியவிதம் மதுவிற்கு வலிக்க கலங்கிய விழிகளுடன்,

“நீங்க சொல்லரது உண்மை தான் எனக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது தான்… என்கிட்ட அம்மா கூட ஏதோ சண்டை அதனால தான் நீங்க எல்லாம் பேசமாட்டீங்கனு சொல்லிருந்தாங்க என் அம்மாகிட்ட பேசாதவங்க கூட நானும் பேச மாட்டேன் என்று தான் நானும் பேசல… இப்ப பாட்டி சொல்லி தான் எனக்கு எல்லாமே தெரியும் அதனால தான் உங்கள பார்க்க வந்தேன்…நீங்க வேணும்னே என்னை காயப்படுத்துர மாதிரி பேசுரீங்க…”என்று குரல் கரகரத்துக் கூற ரூபனுக்கு என்னவோ போல் ஆனது அவன் ஏதோ கூற வர அவனை கை நீட்டி தடுத்தவள் இருங்க நான் சொல்லி முடிச்சுறேன்  என்று அவனை பேசவிடாமல் மேலும்,

“ஏன் நான் உங்கள அத்தானு கூப்பிடக்கூடாது.. அப்படி தான் கூப்பிடுவேன்… எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு… அதை உங்களால கூட பரிக்க முடியாது…”என்றுவிட்டு தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு,

“சரி அத்தான் நான் கிளம்புறேன் இல்லனா உங்க மாமனார் என்னை தேடிக்கிட்டு இங்க வந்துடுவார்… “என்றவள்

“திரும்பி நாம பார்க்குற வரைக்கும் என்னை நீங்க மறக்கவே கூடாது அதுக்கு தான் இந்த பரிசு…”என்று கூறி  சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்று உணர்ந்தவள் அவன் அசந்த நேரம் அவனின் பலிங்கு கன்னங்களில் தன் சிப்பி உதடுகளால் அழுத்தமான முத்திரை ஒன்றை பதித்து விட்டு சிட்டு போல சென்றுவிட்டாள்.அவளின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் அதிர்ந்து நிற்க அவளோ கோவிலின் உள் சென்று மறைந்திருந்தாள்.

Advertisement