Advertisement

மயக்கும் மான்விழியாள் 16

நிவேதாவின் காது இரண்டும் ஓய்ந்து பொய்யிருந்தது மதுவினால்.ஆம் மார்கெட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து வீடு வரும் வரை மது ஜபம் போல அவளுக்கு எடுத்துரைத்தது “ரூபனைக் கண்டதை வீட்டில் யாரிடமும் கூறாதே”என்பதே.ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிவி,

“அக்கா ப்ளீஸ்…போதும் விட்டுடுங்க…நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்….உங்க மேல சத்தியம்…”என்று கூறியவுடன் தான் மது சற்று அமைதியானாள்.இருந்தும் மனதில் ரூபன் எதற்கு இங்கு வந்துள்ளான் என்று அறிய வேண்டும் என்று கூறிக்கொண்டாள்.அதன் பின் மது நிவேதாவை தொந்திரவு செய்யவில்லை.இருவரும் வீடு வந்தவுடன்.அவரவர் அறைகளுக்குள் செல்ல,மது வருவதற்காகவே காத்திருந்தது போல சுந்தரி மதுவின் அறைக்கு வந்தார்.

“ஏன்டி மதியமே வந்துடுறேனு சொல்லிட்டு போன…இப்பதான் வர…சாப்பாடும் எடுத்துட்டு போகல…இப்ப பாரு உன் முகமே என்னமோ போல இருக்கு….போ போய் முகத்தை அலம்பிட்டு வா…சாப்பாடு தரேன்…”என்றார்.மற்ற நேரமாக இருந்தால் உங்க வேலைய பாருங்க என்று பதில் வந்திருக்கும் மதுவிடமிருந்து.இன்று ரூபன் செய்த அலப்பறைகளால் அவளுக்கு மனமும்,உடலும் சோர்ந்திருக்கவே அமைதியாக சென்றாள்.

எப்போதும் தன்னிடம் வாதம் செய்யும் மகள் இன்று அமைதியாக செல்வதைக் கண்ட சுந்தரிக்கு”என்னாச்சு இவளுக்கு ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கா…”என்று வாய்விட்டு புலம்ப அப்போது அங்கு வந்த நிவி “எல்லாம் ரூபனத்தான் செய்த மாயம்…”என்ற கூற சுந்தரிக்கு அவள் கூறியது சரியாக காதில் விழவில்லை,

“என்னடி சொன்ன…”என்று கேட்க அதற்குள் மது வந்துவிட்டாள் அத்துடன் அவர்கள் பேச்சு நின்றது.நிவியும் நல்லவேளை சித்தி தோண்டிதுருவல என்ற நிம்மதியுடன் மதுவிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு சென்றுவிட்டாள்.சுந்தரி கொடுத்த உணவை உண்ட மது தன் மாத்திரைகளை விழுங்கிவிட்டு படுக்கையில் விழ அவளது மனம் முழுவதும் ரூபனே ஆக்கரமித்தான்.அவனை முதன் முதலில் கண்டது முதல் தன் காதலை கூறிய தருணங்கள் என்று மதுவின் கண்களில் காட்சிகள் விரிய அதே சமயம் ரூபனும் மதுப் பற்றிய சிந்தனையில் தான் இருந்தான்.

சில வருடங்களுக்கு முன்பு,

 மதுமிதாவின் பெரியப்பா அருணாச்சலத்திற்கும்,பெரியம்மா வசந்தாவிற்கும் அறுபதாம் திருமணம் நடக்கவிருந்தது.அதை கோவிலில் ஏற்பாடு செய்திருந்தார் பூமிநாதன்.அந்த வைபவத்திற்கான ஏற்பாடுகள் வீட்டில் அமோகமாக நடக்க சுந்தரியோ தன் கைகளை பிசைந்தபடி பூமிநாதனிடம் நின்றுகொண்டிருந்தார்.அன்றைய நாளின் கணக்குகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவர் மனைவி ஏதோ கூறவருவதைக் கண்டு,

“என்ன சுந்தரி…என்கிட்ட ஏதாவது சொல்லனுமா….”என்றார்.எல்லாம் தெரிந்தும் தன்னிடம் இப்படி கேட்கிறாரே என்று கோபமாக இருந்தாலும் எப்படியேனும் தாய்,தந்தையைக் காண வேண்டுமே என்ற ஆசையில் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்,

“எங்க வீட்டுக்கு சொல்லனும்ங்க…”என்றார்.

“ம்ம்…சொல்லாம் சுந்தரி…நாளைக்கு அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடு…”என்றுவிட்டு மீண்டும் கணக்குகளை கவனிக்க ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டு விட்டு சென்றார் சுந்தரி.முறைப்படி அவர்களை நேரில் சென்று தான் அழைக்க வேண்டும் ஆனால் தன் வீட்டின் நிலைமைக் கருதியே இவர்கள் இவ்வாறு செய்கின்றனர் என்று தெரிந்தும் வேறு வழியில்லையே பொற்றோரைக் கண்டு வருடங்கள் ஆகின்றன இந்த விஷேத்தை வைத்தேனும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு சென்றார்.

பூமிநாதன் கூறியது போல மறுநாள் காலை தன் வீட்டிற்கு அழைத்து கூறிய சுந்தரி தன் தாயிடம்,

“ம்மா…எப்படியாவது வாங்க மா…உங்கள எல்லாம் பார்க்கனும் போல இருக்கு…”என்று கடைசியாக கெஞ்சிவிட்டே வைத்தார்.

நாளை விஷேஷம் என்பதால் வீடே அமர்களப்பட்டுக்கொடண்டிருந்து.மதுவும்,நிவியும் தாங்கள் என்ன உடுத்துவது என்ற விவாதத்தில் இருந்தனர்,

“நிவி நான் புடவை கட்டிக்க போறேன்டி…நீ”என்று கேட்டாள் மதுமிதா.

“அக்கா நான் பாவாடை தாவணி…”என்று அவள் தனக்கு எடுத்து வந்த உடையைக் காட்ட,

“சூப்பரா இருக்குடி…இதையே போட்டுக்கோ…”என்று கூற அந்த நேரம் அங்கு வந்த சுந்தரி,

“என்ன இன்னும் தூங்காம என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க போங்க போய் தூங்குங்க….”என்று அதட்ட அதன் பின்னரே சென்றனர்.மது தன் அன்னையிடம்,

“ம்மா…நான் எந்த கலர் புடவை கட்டிக்கிட்டும்…”என்று தன் கபோர்டை திறந்தபடி கேட்க,சுந்தரி அவளது மாநிறத்திற்கு ஏற்றவாரு இளம்பச்சையில் சிவப்பு பாடர் போட்ட புடவை எடுத்துகொடுத்தார்.தன் அன்னை எடுத்துக் கொடுத்த புடவையை எடுத்து தன் மீது வைத்து அழகு பார்த்து அதில் திருப்பதியுற்ற  பின்னே தான் படுக்க சென்றாள்.

அடுத்தநாள் காலை ரம்மியமாக புலர்ந்தது அனைவருக்கும் மதுவிற்கு இன்று விழாவில் சொந்தங்களுடன் விளையாட்டு கொண்டாட்டம் என்று பொழுதை கழிக்க வேண்டும் என்றபடி எண்ணிக் கொண்டிருக்க,சுந்தரியோ கோவிலுக்கு வந்தலிருந்து நூறு முறையேனும்  கோவில் வாசலை பார்த்திருப்பார் அவரையே கவனித்துக் கொண்டிருந்த பூமிநாதன்,

“எல்லாம் வருவாங்க வருவாங்க…போ போய் வேலையப் பாரு…”என்று அதட்ட மனமும் முகமும் சுணங்கியவாறே தன் வேலைகளை காணச் சென்றார்.மதுமிதாவும்,நிவேதாவும் கோவிலுக்கு வெளியில் உள்ள கடையில் ஏதோ பூஜை சாமான் வாங்கிக் கொண்டிருக்க,

“கொஞ்சம் தள்ளுங்க…”என்று மதுவின் அருகில் கம்பீரமான ஆணின் குரல் ஒலிக்கவும் திரும்ப அசாத்திய உயரமும் நல்ல நிறமும் என்று பார்த்ததும் கவரக்கூடிய அழகுடன் ஒருவன் நிற்க மது அவனையே பார்த்துக் கொண்டு நின்றாளே தவிர வழி விடவில்லை.என்ன இந்த பொண்ணு நகர சொன்ன அப்படியே நிக்குது ஒரு வேளை காது கேக்காதோ என்று நினைத்து,

“கொஞ்சம் தள்ளுரீங்களா…”என்று சற்று சத்தமாகவே கத்த அவனின் கத்தலில் சுயத்துக்கு வந்தவள் தனது காதுகளில் கையைவிட்டபடி,

“ப்பா…ஏன் இப்படி கத்துரீங்க…எனக்கு காது கேட்கும்…”என்று கூறிவிட்டு நகர அவளின் பக்கத்தில் நிவியோ ரூபனின் அசாத்திய உயரத்தைக் கண்டு,

“க்கா…இவங்க நல்ல உயரம்  இல்ல…”என்று அவனையே பார்த்தபடி கூற மதுவிற்கு சற்று கோபம் ஏதோ அவனை அவள் மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் அதனால் நிவேதா அவனை சாதாரணமாக பார்த்தது கூட பிடிக்கவில்லை மதுமிதாவிற்கு,

“ஏய்…உன்னை உள்ள தேடப்போறாங்க நீ போ…”என்று மது விரட்ட அவளது பார்வை உணர்ந்த நிவேதா,

“க்கா நீ நடத்து…நான் சும்மா தான் பார்த்தேன்…”என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.மது நிவேதா சென்றவுடன் ரூபனை தேட அதற்குள் அவன் தனக்கு தேவையானதை வாங்கிவிட்டு சென்றிருந்தான்.

ச்ச…எங்க போனான்னு தெரியலையே…என்று நினைத்தபடி சுற்று முற்றும் பார்க்க அவனைக் காணவில்லை.நமக்கு கொடுத்துவச்சது அவ்வளவு தான் போல என்று தன்னை நொந்து கொண்டு கோவிலின் உள்ளே வர அங்கே தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டு,

ஐ…இவன் நமக்கு சொந்தமா…என்ன சொந்தமனு தெரியலையே…கடவுளே அண்ணன்,தம்பி முறையா மட்டும் இருக்க கூடாது என்று தன் இஷ்ட்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டே தன் அன்னையை காண சென்றாள்.

சுந்தரிக்கு தன் தாய்,தந்தையைக் கண்டதில் ஏக மகிழ்ச்சி என்றால் தன் அண்ணனின் மறுஉருவமாக நின்ற தன் மருமகனைக் கண்டு வார்த்தைகளே வரவில்லை.சிவரூபனைக் பார்த்துக்கொண்டே நின்ற மகளைக் கண்ட மோகனா,

“என்ன சுந்தரி அப்படி பார்க்குற…உன் மருமகன் தான்….பேரு சிவரூபன்…”என்று அறிமுகப்படுத்த அவனது கன்னங்களை வழித்த சுந்தரிக்கு மனதில் குற்றவுணர்வு அவன் பிறந்தலிருந்து அவர் அவனை பார்த்தது இல்லை.காரணம் அவரின் குடும்பத்தார் அவர்களை எதிர்க்க முடியாமல் மனதால் தவிக்க மட்டுமே முடிந்தது.இத்தனை வருடங்கள் கழித்து தன் சொந்தங்கள் அனைத்தையும் காணும் போது மனதில் சொல்லான வலி பிறக்க தான் செய்த்து.அவரின் நிலை உணர்ந்த ரூபன் தானாகவே முன் வந்து,

“எப்படி இருக்கீங்க அத்தை…”என்று கேட்க அவரிடம் தலையாட்டல் மட்டுமே கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க ரூபனை ஆசையாக பார்க்க அங்கே ஒரு பாச போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது.அவர்களின் அந்த பாச போராட்டதை தகர்பது போல வந்தார் பூமிநாதன்.

“சுந்தரி இங்க என்ன செய்ற அங்க எவ்வளவு வேலை இருக்கு போ போய் வேலைய பாரு…”என்று விரட்ட தங்கள் முன்னே தங்கள் மகளை விரட்டுகிறாரே என்று எண்ணியபடியே நின்றனர் மோகனாவும்,செந்தில்நாதனும்.சிவரூபனுக்கு பூமிநாதனின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை இருந்தும் அமைதிக்காக்க,

“வாங்க மாமா,வாங்க அத்தை…”என்ற பூமிநாதன் ரூபனை தவிர்த்து மற்ற இருவரையும் வரவேற்க அந்த நேரம் அவர்களை நோக்கி ஓடி வந்த மது,

“ம்மா…இவங்க தாத்தா,பாட்டி தான…எவ்வளவு வருஷம் ஆச்சு…இவங்கள பார்த்து…”என்றபடி வந்த  தன் பாட்டியிடம் சென்று,

“எப்படி இருக்கீங்க பாட்டி…எப்படி இருக்கீங்க தாத்தா…”என்று கேட்டவள் அவர்கள் அருகில் இருந்த ரூபனைக் கண்டு,

“யாரு பாட்டி இவங்க…”என்று கேட்க,

“சொல்லிக்கிற அளவுக்கு முக்கியமான ஆள்ளில்லை…நீ வா…”என்று தன் மகளை கிட்டத்தட்ட இழுத்து சென்றார் பூமிநாதன்.கணவரின் செயலில் அதிர்ந்த சுந்தரி ரூபனைக் காண அவனோ இதற்கும் தனக்கு சம்மந்தம் இல்லை என்பது போல செந்தில்நாதனிடம் ஏதோ கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்த சுந்தரிக்கு மனது கணத்து போனது அவர் கலங்கிய விழிகளுடன் நிற்க,

“விடு சுந்தரி…இது தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும்…அதுமட்டுமில்லாம அவன் எங்கள இங்க பத்திரமா கூட்டிக்கிட்டு வந்துட்டு அப்புறம் அழைச்சிட்டு போகதான் வந்தான்.உங்ககூட உறவுக் கொண்டாட வரல….எங்களையாவது உன் புருஷனுக்கு கூப்பிடனும்னு தோனுச்சே…அதுவே பெரிசு வா உள்ள போவோம்….”என்று மகளிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு சென்றார் செந்தில்நாதன்.

பணத்தை பெரிதென்று மதிப்பவர்களுக்கு உறவுகளின் உன்னதம் புரிவது கடினம் தான்.பணத்தால் வாங்க முடியாத சில விஷயங்கள் உண்டு என்று பூமிநாதன் உணரும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று அவருக்கு கடவுள் உணர்த்தினார்.அதுவும் வாழ்வின் மிக இக்கட்டான சூழ்நிலையில்.

Advertisement