Advertisement

மன்னிப்பாயா….8

சில வருடங்களுக்கு முன்,

சென்னை மாநகரில் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேல் தட்டு மக்கள் வசிக்கும் இடம் அது.அங்கு ஒரு வீட்டில் காலை வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.பல இல்லதரசிகளின் சிம்மாசனமாக இருக்கும் சமையலறையில் தேங்காயை திருவிக் கொண்டு இருந்தார் அன்பரசி.பேருக்கு ஏற்றார் போல் தான் இவரின் குணமும் யாரிடமும் எதிர்த்து பேச மாட்டார் கணவன் கூறுவதே வேத வாக்கு என்பது போல் இருக்கும் இல்லதரசி.

“அன்பு என்னோட வாட்ச் எங்க….”என்று இளங்கோவின் குரல் தங்கள் அறையில் இருந்து கேட்கவும் செய்த வேலைகளை விட்டுவிட்டு அவரிடம் விரைந்தார்.பின்னே அதற்கு யார் அவரிடம் திட்டு வாங்க முடியும்.இளங்கோ ஒரு அரசு வங்கியில் காசாளராக பணிபுரிகிறார்.மனைவி என்பவள் தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் அவரின் அன்னையின் புத்திமதியால் வந்தவொன்று.அதற்காக மனைவியை அடித்து துன்புறுத்தும் ரகம் கிடையாது ஆனால் வீட்டை பொருத்தவரை அவர் தான் அனைத்து முடிவு எடுப்பார் அதற்கு மனைவி ஒத்து ஊத வேண்டும் என்பது எழுதபடாத விதி.

“இங்க தாங்க இருக்கு…..”என்று மேஜையின் மீது இருந்த கை கடிகாரத்தை எடுத்து கொடுத்தார் அன்பு.

“ம்ம்….கொடு….”என்று அதை வாங்கி கட்டியவர் தனக்கு தேவையானது அனைத்தும் எடுத்து வைத்தாயிற்றா என்று பார்த்துக் கொண்டிருக்க,அவரின் அருகில் செல்லவா வேண்டாமா என்று நின்று கொண்டிருந்தார் அன்பு.

“என்ன வேணும் அன்பு….”என்று அவர் மனைவியின் செய்கை அறிந்து கேட்க,

“அது…அது….”என்று அன்பு திணற,இளோங்கோவிற்கு புரிந்தது.

“என்ன வேணுமா உன் மகளுக்கு….ஆங்….”என்று குரலை சற்று உயர்த்த அன்புவிற்கு உடல் பதறியது.

“இல்லங்க…அது ஒரு ஐந்நூறு ரூபாய்….”என்று கேட்க அவரை முறைத்த இளங்கோ கண்கள் தன்போல் அறையின் வாசலை நோக்கியது.அங்கு பவ்வியமாக நின்று கொண்டிருந்தாள் ஶ்ரீகன்யா.இளங்கோ அன்புவின் இரண்டாவது மகள்.மாநிறம்,ஐந்தடி உயரம்,குண்டு விழிகள் என்று இளங்கோவின் மறுபெண் உருவம் தான் அவள்.ஒருநிமிடம் மகளை பாசமாக தழுவியது தகப்பனின் கண்கள்.

“எதுக்கு இப்போ பணம்….”என்று இளங்கோ கேட்க,

“அவ காலேஜ்ல ஏதோ பங்ஷன் அதுக்கு தான் கேட்குறா….”என்றார் அன்பு,இளங்கோவின் பேச்சு மனைவியிடம் இருந்தாலும் கண்கள் என்னவோ மகளிடம் தான்.தந்தை மகளின் பேச்சுகள் குறைந்துவிட்டது.செய்யாத தவறுக்காக சிறு வயதில் இளங்கோ அவளை அடித்துவிட அதில் இருந்து பேச்சை குறைத்துக் கொண்டாள்.இளங்கோவிற்கும் சின்ன குட்டி உனக்கே இவ்வளவுனா நானும் பேசமாட்டேன் போ என்று விட.மகள் அவரிடம் பேசியே வருடங்கள் ஓடிவிட்டது.

“ஏன் என்கிட்ட கேட்கமாட்டளாமா….கொழுப்பு இவளுக்கு….ஏதோ தப்பு நடந்து போச்சு அதுக்கு பேசாம இருப்பாளாமா….அப்படியே என்னபோல தான் இருக்கா….சின்ன குட்டி…”என்று மனதிற்குள் மகளை செல்லமாக கடிந்தார்.இளங்கோவிற்கு மூன்று பிள்ளைகளுமே பிடிக்கும் தான் ஆனால் அதில் நிதி கொஞ்சம் பிரியம் அதிகம்.அதுவே அவரை மற்ற  இரு பிள்ளைகளிடம் இருந்து விலக்கி நிறுத்திவிட்டது.

“அப்படியே என்னை போல தான் இருக்கா…அன்பு சொன்னது சரிதான்….”என்று முதன் முதலில் மகள் பிறந்த போது அனைவரும் மகள் நிறம் குறைவு என்று கூற அன்பு தான் அவ அப்படியே அவங்க அப்பா போல இருக்கா என்று அனைவரிடமும் கூறுவார்.கன்யாவின் உருவம் மட்டும் தந்தை போல் இல்லை அவளின் சில செயல்பாடுகள் கூட அவரை போல் தான் இருக்கும்.மற்ற இரு பிள்ளைகளும் இருவரின் கலவையாக இருக்க தன்னை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகளை யாருக்கு தான் பிடிக்காது.மகளை ரசித்துக் கொண்டே பாக்கேட்டில் கைவிட்டு பணத்தை எடுக்கும் நேரம்,

“ப்பா….”என்று ஆரவாரத்துடன் வந்தாள் ஶ்ரீநிதி.இளங்கோ அன்புவின் பெரிய மகள்.திருமணம் முடிந்து ஏழு மாதங்கள் ஆகிறது.திருமணம் முடிந்தது என்று தான் பெயர் இருப்பது முழுவதும் தகப்பன் வீடு தான்.காலையில் கணவன் வேலைக்கு சென்றவுடன் இங்கு வருபவள் இரவு கணவனுடன் தான் செல்வாள்.நிதியின் கணவன் பிரசாத் தனியார் புட் கம்பெனியில் வேலையில் இருக்கிறான்.அதனால் அவன் காலை சென்றால் வருவதற்கு இரவாகிவிடும்.

வீட்டிற்குள் வேகமாக நுழைந்த நிதி தந்தையின் அறை வாயிலில் நின்ற கன்யாவைக் கண்டு புருவம் சுழித்தாள்.

“என்ன இங்க நிக்குற….”என்று அதே புருவ சுழிப்புடன் கூறிக் கொண்டே அவள் உள்ளே செல்ல,

“ம்ம்….வேண்டுதல்டி எருமை….மூஞ்சிய பாரு….”என்று கன்யா மனதிற்குள் மட்டும் கூறிக் கொள்ள முடிந்தது.வெளியில் கூறினால் அவ்வளவு தான் என்று தெரியுமே.இனி தனக்கு பணம் கிடைப்பது கடினம் என்று புரிந்த கன்யா நகர,நிதியின் குரல் அறை வாயில் வரைக் கேட்டது.

“ப்ச்…அவளுக்கு எதுக்கு அவ்வளவு பணம்…ப்பா….நீங்க அதெல்லாம் குடுக்காதீங்க….நானும் தான் காலேஜ் படிச்சேன்….நான் எல்லாம் இப்படி தான் பணம் வாங்குனேனா…ப்பா அவளை கவனிங்க ப்பா….இப்பவே கண்டிச்சு வைங்க அப்ப தான் ஒழுங்கா இருப்பா……”என்று இலவச உபதேசம் கொடுக்க,அதற்கு தந்தை சரிப்பா சரிப்பா என்று வேறு தாலம் போட,

“ம்ம்மா….நான் கிளம்புறேன்….”என்று கத்திவிட்டு வெளியில் வந்துவிட்டாள் கன்யா.

“இரும்மா….இருடாம்மா….”என்று இதே போல் அக்கா என்றாவது செல்ல முயன்றால் ஓடி வரும் தாயும் வரவில்லை தந்தையும் வரவில்லை.

“இது எப்போதும் நடப்பது தானே கனி விடு விடு….”என்று தனக்கு தானே கூறிக் கொண்டு வெளியில் வந்தவள் தன் கல்லூரி பேருந்திற்காக காத்திருக்க தொடங்கினாள்.ஆனால் மனது முழுவதும் தன் வீட்டின் நினைவு தான் ஏன் தனக்கு மட்டும் மற்றவர்கள் மாதிரி அன்பும் அரவணைப்பு கிடைக்கவில்லை என்று எப்போதும் தோன்றும் ஏக்கத்தை தன் தலையை உலுக்கி உதறிதள்ளினாள்.அவ்வளவு ஏன் இன்று மகளின் பிறந்த நாள் என்பது கூட பெற்றவர்களுக்கு தெரியாது என்பது அவளின் பரிதாப நிலை.

ஶ்ரீநிதி பிறந்த போது இளங்கோவிற்கு அனைத்தும் ஏறுமுகமாக இருந்தது.அதனால் வீட்டின் லெட்சுமியாக தான் வளர்க்கப்பட்டாள்.ஶ்ரீநிதிக்கு பத்து வயது ஆகும் போது தான் கன்யா பிறந்தாள்.அதன் பின் இருவருடங்கள் கழித்து பிறந்தவன் தான் ஶ்ரீராம்.வீட்டில் எப்போதும் நிதி வைப்பது தான் சட்டம்.தந்தையும்,தாயும் அவளது ஆளுகையின் கீழ் தான் வைத்திருப்பாள்.அதில் பெரும்பாலும் தந்தை எப்போதும் நிதியின் பக்கம் தான் இருப்பார்.

ஶ்ரீநிதிக்கு கன்யாவைக் கண்டாலே ஆகாது.தங்கை பிறந்த போது ஆசையாக தான் இருந்தாள்.ஆனால் நாளாக நாளாக தன்னைவிட தன் தங்கையை தான் தாயும்,தந்தையும் கவனிக்கின்றனர் என்ற எண்ணம் தோன்ற,தங்கையின் மீது கோபம் வர தொடங்கியது.அதனால் எப்போதும் தாய்,தந்தையின் கவனம் தன்னிடம் அதிகமாக இருக்கும்படி வைத்துக் கொள்வாள்.இதற்கிடையில் தம்பி வேறு பிறக்க அவளுக்கு இன்னும் தன்னை முதன்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய நிலை.

இளம்கோவும் அன்பரசியும் ஒரு பிள்ளை மட்டும் பார்க்கும் ரகம் எல்லாம் கிடையாது.ஆனால் அவர்களை பேச்சினாலே தன் வசப்படுத்தி வைத்திருந்தாள் ஶ்ரீநிதி.உண்மையில் ஶ்ரீநிதி மிகவும் அமைதியான பெண்,பார்பவர்களை ஒருமுறையேனும் பாக்கதூண்டும் அவளது அழகும்,பால் வண்ணமேனியும்,அமைதியான முகமும் மற்றவர்களை கட்டி பொட்டுவிடும்.அவளது எதிர்ப்பைக் கூட பவ்யமாக கூறி சென்றுவிடுவாள்.மொத்ததில் எதிராளியை அவர்களின் பலவீனம் தெரிந்து தாக்குவதில் வல்லவள்.

தன்னை நல்லவளாக காட்ட மற்ற இருவரையும் அவள் சேட்டை பிடித்தவர்கள் என்று பெற்றவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டுவிட்டாள்.அதிலும் கன்யாவைக் கண்டால் தன் தந்தையை போல் என்று அனைவரும் கூற நிதிக்கு மேலும் மேலும் அவளின் மீது வன்மம் கூடியது.

கன்யா சிறுவயதில் தமக்கையின் கோபத்தை கண்டு பயந்தவள் அவளைக் கண்டாலே ஒதுங்கிவிடுவாள்.ஆனால் வயது ஏற ஏற தமக்கையின் எண்ணம் புரிந்து போனது.அவளை பற்றி சில முறை தாய்,தந்தையிடம் கூறிபார்த்தாள்.ஆனால் அதையும் தனக்கு சாதகமாக மாற்றி அழுது கன்யாவின் மேலே அனைத்து தவறும் என்று நிருப்பித்துவிட்டாள் ஶ்ரீநிதி.அதனால் வீட்டை பொருத்தவரை கன்யா என்பவள் சொல் பேச்சு கேட்காதவள்,சேட்டைகாரி.கன்யாவிற்கு வீடு என்பது ஒரு ஜெயில் போல தான் இருக்கும்.அந்த வீட்டில் அவளுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் அவளது தம்பி ராம் மட்டுமே.

“ஏய் கனி….இறங்கு….காலேஜ் வந்துடுச்சு….”என்று தன் தோழியின் குரலில் கலைந்தவள் தனது இருக்கையில் இருந்து எழுந்து மனதை ஒருநிலை படுத்திவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.அதன் பின் படிப்பு,நண்பர்கள் என்று அவளுக்கு அன்றைய நாள் நல்லவிதமாகவே சென்றது.கல்லூரி முடிந்து அனைவரும் செல்ல தொடங்கியிருந்தனர்.

மாலை நேரம் கல்லூரி கால் பந்து மைதானத்தில் தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான் ஆரியநாதன்.

“டேய் ஆரி….என்னடா அந்த வைஷூ உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா….அவளை ஏன்டா வேணாம்னு சொல்லுர….நல்ல பொண்ணுடா…..”என்று ஆரியின் நண்பன் ஹரிஷ் கூற,

“அவளுக்கு நீ ஏன்டா ப்ரீ மார்கெட்டிங் பண்ணிகிட்டு இருக்க….என்ன மெட்டர்….”என்று ஆரி கேட்க,

“அதுவா மச்சான்….அந்த வைஷூவோட பிரண்ட் ரித்திக்கா இருக்காள்ல அவள தான் சார் ரொம்ப நாளா பார்த்துக்கிட்டு இருக்கார்….அதான் மச்சான் உன்னை கொர்த்துவிட பார்க்குறான்….நீ சிக்கிடாதடா….”என்று மற்றொரு நண்பன் கூற,

“உன்னால தான்டா….அவன் வீணாபோறான்….”என்று ஹரிஷ் அடிக்க வர இருவரையும் பிரித்துவிட்ட ஆரி,

“டேய் ச்சீ….பொண்ணுங்களுக்காக அடிச்சுக்காதீங்க எருமைகளா…..”என்று திட்டியவன் தனது உடைமைகளை எடுக்க தொடங்க,

“ஏன்டா உனக்கு இந்த காதல் நோய் வரவே மாட்டேங்குது…..ஆனா பாரு உன்னை சுத்தி தான் பொண்ணுங்க சுத்துங்க….நம்மள எல்லாம் யாரு பார்க்குறா….”என்று ஹரிஷ் ஆற்றாமையாக கூற,அவனின் தலையில் பந்தால் அடித்த ஆரி,

“எருமை எருமை….நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன்….நீ வேற என் உயிரை ஏன் எடுக்குற….”என்று முகத்தில் எரிச்சல் மிகுதியில் திட்ட,

“டேய் ஏன்டா இந்த கொலைவெறி….”என்று மற்ற இருவரும் கேட்க,

“பின்ன என்னடா……இன்னைக்கு அந்த பக்கத்து டிப்பார்மென்ட் பொண்ணு தீபிகா…அது வந்து என்கிட்ட ஆரி எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு….உங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லுறா…..”என்றவன் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன,

“ஏன்டா….லவ் தான அந்த பொண்ணு சொன்னுச்சு….அதுக்கு எதுக்கு இப்படி முகத்தை வச்சுக்குற….”என்று அவர்கள் கேட்க,

“லவ்வா….எதுடா லவ்வு….என் வெளிபுற அழகை வச்சி என்னை காதலிக்குறேன்னு சொல்லுற பொண்ணுங்களை பார்த்தாலே எரிச்சலா இருக்கு….என்னை பார்த்தவுடனே லவ்வானு கேட்டா உடனே இதை தான் எல்லா பொண்ணுங்களும் சொல்லுறாங்க…..வெறும் அழகு தான் அவங்களுக்கு தெரியுது இல்ல….இப்பெல்லாம் இந்த லவ் அப்படிங்குற வார்த்தையை கேட்டாலே எரிச்சலா இருக்கு….”என்றவன்,

“நான் கிளம்புறேன்……”என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

“என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறான்….அவனவன் எனக்கு ஒரு புரப்போஸலாவது வராதானு தலைகீழ தண்ணி குடிச்சிக்கிட்டு இருக்கான் இவன் இப்படி பேசிட்டு போறான்….”என்று ஹரிஷ் கூற,

“விடு மச்சி….அவனோட பிரச்சனை அவனுக்கு…வா கிளம்புவோம்…..”என்றுவிட்டு இருவரும் கிளம்பினர்.

ஆரி தனது வண்டியின் அருகே சென்றவுடன் சாவியை தேட அது கிடைக்காமல் மீண்டும் மைதானத்திற்கு வந்து தேடிக் கொண்டிருந்தான்.அதே நேரம் கன்யா முகத்தை தொங்க போட்டுக் கொண்டு மைதானத்தில் இருந்த பெரிய மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள்.ஆரி மைதானம் முழிவதும் தேடிவிட்டு சாவி கிடைக்காமல் போக,

“ப்ச்….எங்க விழுந்துச்சு தெரியலையே…..இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை போல…”என்று தன்னை தானே திட்டிக் கொண்டு அந்த மர நிழலில் அமர்ந்தான்.அப்போது மரத்தின் பின் பக்கத்தில் விசும்பல் சத்தம் கேட்க ஆரி எட்டி பார்த்தான்,அங்கு ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.அவளின் முன்னே ஒரு பன்னும் அதன் நடுவில் மெழுகு வர்த்தியும் இருந்தது.ஆரிக்கு நடப்பதில் ஏதோ சுவாரசியம் தோன்ற அமைதியாக நின்று கொண்டான்.

Advertisement