Advertisement

மன்னிப்பாயா…7

அந்த இரவு வேளையில் மழையின் சத்தம் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.கன்யாவோ சோபாவில் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.ஆரியோ கட்டிலில் அமர்ந்தபடி அவளையே கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான்.அவன் முறைப்பது தெரிந்தும் அவன் முகம் பார்க்கமால் விட்டத்தை பார்ப்பதும் பின் ஜன்னல் பக்கமாக மழையை பார்ப்பதுமாக இருந்தாள்.

“ச்சை இந்த மழை இன்னைக்கு தான் பேஞ்சி என் உயிரை வாங்கனுமா….கொஞ்ச நேரம் நின்னா கூட நான் ஓடிபோயிருவேன்….இப்படி மாட்டிவிட்டுட்டியே…..”என்று மழையை திட்டிய படி அமரந்திருக்க,

“என்னை திட்ட வேண்டியது எல்லாம் மழையை திட்டிக்கிட்டு இருக்கியா……”என்று ஆரியின் குரல் அழுத்தமாக ஒலிக்க,திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவளை வெட்டவா குத்தவா என்ற நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் மனசுல நினைச்சது எப்படி இவருக்கு தெரிஞ்சுது….ஒருவேளை மந்திரம் தந்திரம் படிச்சிருப்பாரோ….”என்று அதையும் மனதில் நினைக்கிறேன் போர்வழி என்று வாய்விட்டு புலம்ப,ஒரு தலையணை வந்து அவளின் மீது விழுந்தது.

“ஆஆஆஆ அம்மா….என் தலை…ஏன் சீனியர் அடிக்கிறீங்க….”என்று வலிக்காத தலையை வலித்தது போல் முகத்தை சுலிக்க,

“அடியே நீ புலம்பனது கூட ஏத்துக்கலாம் ஆனா இப்ப நீ நடிக்கிறது இருக்கு பாரு அது தான் முடியல….இந்த தலையணை பட்டு உனக்கு தலைவலிக்குது…ஆங்….”என்று நக்கலாக கேட்க,கன்யா அசடு வழிய தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இப்ப என்ன தான் பிரச்சனை கன்யா உனக்கு….”என்று ஆரியின் குரல் கோபமாக வர,திரும்பி அவன் முகத்தை பார்த்தவள்,

“ஒ….ஒ….ஒண்ணும் இல்லையே….ஏன் கேட்குறீங்க….”என்று தடுமாற்றமாக கேட்க,ஆரி அவளை முறைத்த முறைப்பில் மீண்டும் தன் தலையை குனிந்து கொண்டாள்.

“இப்படி எதுக்கு எடுத்தாலும் முகத்தை தொங்க போடதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்….”என்று அதற்கும் கடிய,கன்யாவிற்கு அய்யோ என்று ஆகி போனது.பின்னே அரைமணிநேரமாக இருவருக்குள்ளும் வாய்க்கா தகாரு தான் நடந்து கொண்டிருக்கிறது.

கன்யா தன் ஹோட்டலுக்கு போக வேண்டும் என்று பாடின பாட்டையே பாட ஆரிக்கு கோபம் அதிகரித்து கத்திவிட்டு வெளியில் போய்விட்டான்.இவள் அப்பாடா என்று உட்கார்ந்து இருக்க படார் என்று கதவை திறந்து கொண்டு வந்தவனை கண்டவளுக்கு திக் என்று இருந்தது.வந்தவன் அவள் முகத்தை முறைத்துக் கொண்டே தன் பையில் இருந்து தன் மாற்று உடை ஒன்றை எடுத்து அவளின் மீது போட்டான்.

“போ…போய் மாத்திக்கிட்டு வா….”என்று கூற கன்யா அவனின் உடையை பார்த்தவள் எதுவும் பேசாமல் மாத்திவிட்டு வந்தாள்.பேசினால் ஏதாவது எடுத்து அடித்தாலும் அடித்துவிடுவான் அவன் முகமே அவனின் கோபத்தின் அளவை கூறியது.இதில் இருவருமே ஒன்றை கவனிக்க தவறினர்.ஆரி ஏன் தன்னை அனுப்ப மறுக்கிறான் என்று கன்யா பழைய கன்யாவாக யோசித்து இருந்தாள் மண்டையில் பல்பு எரிந்திருக்கும் ஆனால் அவளுக்கு தான் அவனை பிரிந்து வந்ததில் இருந்து அனைத்தும் பீஸ் அகிவிட்டது பாவம்.

ஆரிக்கு மனது ஒருநிலையில் இல்லை ஏனோ கன்யா போகிறேன் என்று கூறும் போது அவனால் முன் போல் இருக்க முடியவில்லை ஏதோ ஒன்று அவனை தடுக்கிறது.ஒருவர் நம்மை சுற்றி இருக்கும் போது அவரின் அருமை நமக்கு தெரியாது அவர் விலகும் போது தான் அவர் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்று உணர்வோம் அந்த நிலையின் தொடக்கத்தில் தான் இருந்தான் ஆரி.அவனால் தன் மன எண்ணங்களை படிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.இவ்வாறு இருவரும் இருவேறு எண்ணங்களில் உழன்ற படியே உறங்கியிருந்தனர்.

விடியற்காலை எழுந்த கன்யா அருகில் உள்ள கட்டிலில் தூங்கும் ஆரியை தான் இமைக்காமல் பார்த்தாள்.ஆழந்த உறக்கத்தில் இருந்தான்.நான் என்னடான இவரால தூக்கத்தை துலைச்சிட்டு நிக்குறேன் இவரை பாரு நிம்மதியா தூங்குறார் என்று மனதிற்குள் நினைத்தாள்.ஆனால் அவள் அறியாத ஒருவிடயம் ஆரியுமே இன்று தான் ஆழ்ந்து உறங்கினான் என்பது அவள் பிரிந்து வந்ததில் இருந்து அவனும் பலவேறு சிந்தனைகளில் உழன்று மனதை குழப்பிக் கொண்டு இருக்கிறான் என்று கன்யா அறியவாய்ப்பில்லை.சில விஷயங்களை இருவருமே மனதை விட்டு பேசாமல் தீர்வு காண முயன்றால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

தன் காலைகடன்களை வேகமாக முடித்துவிட்டு புடவை மாத்தி வந்த கன்யா ஜன்னல் அருகே பார்க்க மழை விட்டுருந்தது.

“ப்பபா….மழை விட்டுருச்சு….கிளம்ப வேண்டியது தான்….”என்று கூறிக் கொண்டே திரும்ப,ஆரி அப்போது தான் தூக்கம் கலைந்து எழுந்தான்.

“ஏய்….ஹாய் குட் மார்னிங்….”என்று கண்களை கசக்கிக் கொண்டு எழ அவளோ நேற்றய புடவையை உடுத்தி கிளம்ப தயாராக இருந்தாள்.இரவு இருந்த சிறிய இலகு தன்மை இப்போது மொத்தமாக வடிந்தது போல் இருந்தது ஆரிக்கு.

ஆரி இரவு வெகு நேரம் யோசனை செய்தபடி தான் இருந்தான் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பத்தி என்ன செய்வது என்று.ஒருமுறை தவறிவிட்டோம் இம்முறை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.அதை அவளிடம் காலை கூறலாம் என்று மனதில் கூறிக் கொண்டு அவன் தூங்க அவன் மனைவியோ அனைத்தையும் மாற்றிவிட்டாள்.

“சீனியர்….நான் கிளம்புறேன்….”என்று அவன் எழுந்தவுடன் ஏதோ விருந்தாளி செல்வது போல கூற ஆரிக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது.ஏற்கனவே சற்று உரசினாலே பொங்கும் ரகம் அவன் தெரிந்தே உரசிவிட்டாள்.

“ஏஏஏஏஏய்…..என்ன நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்….சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க….அறைஞ்சனா பாரு….”என்று கோபத்துடன் அவளின் முன்னே கையை தூக்கிக் கொண்டு ஐய்யனாரை போல நிற்க,கன்யாவிற்கு சகலமும் நடுங்கியது இதுவரை இவ்வளவு கோபத்தை ஆரியிடம் கண்டது இல்லை.அவள் பயந்து தனது சோபாவிலேயே ஒடுங்க,ஆரிக்கு மேலும் மேலும் கோபம் ஏறியது,

“என்ன என்னடி….உன்னை என்ன செஞ்சிடுவேன்னு…இப்ப நீ ஓட பார்க்குற….ஆங்…ஆங்…..”என்று அவளின் கைகளை பிடித்து தூக்கி உலுக்க,கன்யா ஆரியின் இந்த புதிய பரிமாணத்தில் பயந்துவிட்டாள்.கண்கள் எல்லாம் கண்ணீர் குளம் கட்டி அரண்டு அவனை பார்க்க,அந்த வண்டு விழிகளில் மீண்டும் தடுமாறி தான் போனான்.

“ப்ச்…..”என்று அவளின் கைகளை விட,கன்யா படிமானம் இல்லாத கொடி போல சோபாவில் விழுந்தாள்.

“அச்சோ….ஶ்ரீ….”என்று உடனே பதறி அவளை பிடிக்க வர மெல்ல கைகளை உயர்த்தி தடுத்தாள் பெண்.கை,கால்கள் எல்லாம் ஒருவித நடுக்கம் பரவியது அதை கண்ட ஆரிக்கு மனது மேலும் வலித்தது.அவளின் முன்னே மடங்கி அமர்ந்தவன்,

“சா….சாரி….சாரிடாமா…ப்ளீஸ்…..நா….நான்….”என்று கூறமுடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சிக்கிக் கொண்டன.அய்யோ என்ன செய்துவிட்டேன் நான் என்று மனது முழுவதும் வலி பரவ அவளை ஏறிட,பயத்தில் கால்களை குறுக்கே கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்,

“ஏய் கனி…கனி….இங்க பாரு….”என்று அவளின் தோள்களை தொட்டு எழுப்ப முயல,

“விடுங்க….”என்று மெல்லிதாக கூறி மறுத்தாள்.ஆரியும் அவளின் அருகே அப்படியே அமர்ந்துவிட்டான்.சற்று நேரம் இருவரும் பேசவில்லை ஆரி தான் அவளை பார்த்தபடி இருந்தான்.தன் இருகால்களை குறுக்கி தலையை அதில் வைத்திருந்தவள் சிறிது நேரம் கழித்து நிமிர்ந்தாள்.முகம் எல்லாம் சிவந்து போய் இருந்தது.தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறாள் என்று தெரிந்தது.ஆரியின் கண்களில் தன்போல் நீர் படலம் அவளின் கைகளை மென்மையாக பற்றி எழுப்பியவன் சோபாவில் நன்கு அமர வைத்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.அவளும் மறுக்காமல் குடித்தாள்.

“கனி….”என்று ஆரி அழைக்க,அவனை நிமிர்ந்து பார்த்தவள்,ஆரி பேசும் முன்,

“நான் முதல்ல பேசிடுறேன்….சீனியர்….”என்றுவிட்டு தன்னை சீர் செய்து கொண்டு,

“நான் யார் உங்களுக்கு….”என்று கேட்க,

“ஏய்….என்ன….”

“நான் யார் உங்களுக்கு…..சொல்லுங்க….”

“ஏய் என்ன….உனக்கு ஏதாவது….”என்று கேட்க முடியாமல் அவள் முகத்தை பார்க்க,

“பைத்தியம் பிடிச்சிருக்கானு கேட்கிறீங்களா….நான் தெளிவா தான் இருக்கேன்….நீங்க சொல்லுங்க….நான் யார் உங்களுக்கு….”என்று அவள் மீண்டும் அதையே கேட்க,

“என் பொண்டாட்டி….”என்று அழுத்தமாக ஆரி கூற,

“அது வெளில உலகத்துக்கு….இங்க என்று அவனின் இதயத்தை தொட்டு கேட்க”

“புரியல….”

“உங்க இதயத்துல நான் யாரு…..”என்று கேட்க

“என்ன கேள்வி இது கனி…”என்று ஆரி புரியாமலே கேட்டு வைக்க,அவனை முறைத்த கன்யா,

“புரியலை இல்லை…அப்ப கேட்டது தான் இப்பவும் கேட்குறேன்….நான் உங்களை காதலிக்குறேன்…..நீங்க????”என்று அவள் கேட்க,

“ஏய் என்ன பேசிக்கிட்டு இருக்கனு உனக்கு புரியுதா கனி….அது இல்லாம தான் உன்னை கல்யாணம் பண்ணேனா…..உனக்கு என்ன தான் பிரச்சனை அன்னைக்கும் இதே போல தான் பேசின….இன்னைக்கும் ச்சை….”என்று அவன் தலையில் கை வைத்து அமர,தன் இறுக்கையில் இருந்து எழுந்த கன்யா,

“ஆனா போன தடவை இருந்த கன்யா இப்ப இல்லை சீனியர்….உங்க….உங்களை விட்டு வந்து இதோ ஒரு வருஷம் ஆக போகுது…என்னைக்காவது என்னை நினைச்சு இருக்கீங்களா….என்கிட்ட பேச முயற்சி செஞ்சிருக்கீங்களா….நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஒத்துக்குறேன்….ஆனா அந்த தப்பு பண்ண நீங்களும் ஒரு காரணம்….”என்றுவிட்டு அவனை பார்க்க,அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அப்படி பார்க்குறீங்க….நீங்க தான் திறமைசாலியாச்சே கண்டுபிடிங்க….நீங்க என்ன தப்பு பண்ணீங்கனு….ஆனா நான் இனி உங்க பின்னாடி வரமாட்டேன்…நான் என் தப்புக்கு மன்னிப்பு கேட்டுடேன்….என்னால இதுக்கு மேல கெஞ்ச முடியாது….”என்றவள் தன் கை பையை எடுத்துக் கொண்டு கிளம்ப,

“ஶ்ரீ…”என்று ஆரியின் குரல் சற்று கரகரப்பாக வந்ததோ அவனை திரும்பி பார்த்தவளுக்கு நெஞ்சம் அடைத்தது.வேகமாக அவனின் அருகில் வந்து அமர்ந்து,

“சீனியர்….நீங்க எனக்கு எப்போதும் ஹீரோ தான்….என் மனசுல உங்களை தவிர வேறு யாருக்கும் எப்போதும் இடம் இல்லை…நான் எப்படியோ அப்படியே ஏத்துக்கிட்ட என் ஆரியை எனக்கு ரொம்ப ரொம்ப…”என்று தன் இரு கைகளையும் விரித்து காட்டி,

“அவ்வளவு பிடிக்கும்….இந்த ஒரு வருஷமா நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா….அட்லீஸ் எனக்கு ஒரு போனாவது பண்ணுவீங்கனு நான் எதிர்பார்த்தேன்…ப்ச் விடுங்க….எல்லாம் என் தப்பு தான்….நான் அன்னைக்கு உங்களை அவசர படுத்தியிருக்க கூடாது….நான் உங்களை தொந்தரவு பண்ணமாட்டேன்….உங்க வாழ்க்கையிலும்…”என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

ஆரி அந்த அறையில் அவள் இருந்த போது எப்படி இருந்தானோ அப்படியே அமர்ந்திருந்தான். கன்யா எப்போதும் படபட பட்டாஸு தான் ஆனால் இப்படி எல்லாம் என்றும் பேசியது கிடையாது.அவளிடம் எப்போதும் விளையாட்டு தனத்தை மட்டுமே கண்டவன் இன்று அவளின் மறுபக்கத்தையும் கண்டான் என்று தான் கூற வேண்டும்.

எங்கு எதில் தவறினான் என்ற யோசனை மட்டுமே அவளை தான் மிகவும் காயப்படுத்திவிட்டோம் என்று மனது முழுவதும் வலி பரவிக் கிடந்தது.அவள் கூறுவது போல் தான் அவளை தேடவில்லையே உண்மையில் அவள் நியாபகம் இல்லாமல் எல்லாம் இல்லை.வேலை முடிந்து வீட்டிற்குள் வரும் போது எல்லாம் அவளின் சலசல பேச்சுக்கள் இல்லாமல் வீடு ஏதோ வெறுமையாக உணர்ந்திருக்கிறான்.கன்யாவிடம் பேச வேண்டும் என்று நினைப்பான் தான் ஆனால் அதற்கு முன் தன் குடும்பத்தை சரி செய்து அவளை தன் குடும்பத்தில் ஒருத்தியாக மாற்ற வேண்டும் என்று நினைத்து இருக்க இங்கு அனைத்தும் மாறி போயிருந்தது.

ஆரி தன் மனதில் உள்ளதை கன்யாவிடம் மனதிறந்து கூறியிருந்தால் இங்கு இப்படி அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது ஆனால் அவன் ஒன்று நினைத்து செய்திருக்க இங்கு கன்யா வேறு விதமாக நினைத்துவிட்டாள்.இதில் யார் மீது நாம் தவறு என்று கூற முடியாது.எவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது தொடர்ந்து அவனின் அறைக் கதவு தட்டப்படவும் சுயத்திற்கு வந்தவன் சுற்றி பார்க்க கன்யா அங்கு இல்லை வேகமாக கதவை திறந்தவன் வெளியில் நின்ற ஹோட்டல் பணியாளரை கண்டுகொள்ளாது ஓடினான்.

ஹோட்டலின் வெளியில் வந்து அங்கும் இங்கும் பார்த்தான் அவன் புத்திக்கு உரைத்தது அவள் சென்றுவிட்டாள் ஆனால் மனதிற்கு எட்டவில்லை.முதல் முறை அவள் சென்ற போது ஏற்படாத ஒருவித வலி இன்று மனது முழுமையும் பரவி அவனை முற்றிலுமாக நிலைகுலைய செய்தது.

ஆரி தன் பெற்றவர்களை பற்றி யோசித்தானே தவிர தன் நம்பி வந்தவளை பற்றி யோசிக்க மறந்துவிட்டான்.அவர்களிடம் கன்யாவிற்காக பேசியவன் அவளிடமும் பேசி தனது மனதை புரிய வைத்திருக்கலாம்.சில நேரங்களில் நமது மௌனம் கூட சிலரை தண்டித்துவிடும் அது தான் நடந்தது இங்கும்.ஆரியின் மௌனம் கன்யாவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றிருந்தது.இவ்வாறு அவன் தன் மன எண்ணங்களில் உழல கன்யா அவனைவிட்டு வெகு தூரம் சென்றிருந்தாள்.

அதே நேரம் தனக்கான விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தாள் கன்யா மனது முழுவதும் பழைய நினைவுகள் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.தனது இருக்கையில் அமர்ந்தவள் ஜன்னலின் வழியே வானத்தை வெறிக்க தொடங்கினாள்.விமானம் முன்னோக்கி செல்ல அவளது நினைவுகளோ பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

Advertisement