Advertisement

மன்னிப்பாயா…..19

பெங்களூர் கன்யாவின் வீட்டில்,

ஆரி அமைதியாக உட்கார்ந்து இருக்க கன்யா அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.அவர்கள் வீடு திரும்பி ஒருமணிநேரம் கடந்திருந்தது.வந்ததிலிருந்து கன்யா ஆரியை பலமுறை கேட்டுவிட்டாள் என்ன விஷயம் எதற்காக வந்தீங்க என்று ஆனால் அவனோ பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கன்யாவிற்கு பொறுமை பறந்துவிட்டது.

“ப்ச்….சீனியர் இப்ப சொல்லபோறீங்களா இல்லையா….”என்று கேட்க,அவளின் கரத்தை பிடித்து இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன் அவளின் தோள்பட்டையில் முகத்தை வைத்து,

“ம்ம்….நான் எதுக்கு வந்தேன்….மறந்துட்டேனே ஶ்ரீ….”என்று கூற,கன்யா ஆரியின் அணைப்பில் ஒன்றவும் முடியாமல்,விலகவும் முடியாமல் தள்ளாட,அது ஆரிக்கு இன்னும் வசதியாகி போனது அவளின் சிறு இடையை அழுத்தி பிடிக்க அதில் துள்ளி எழுந்தவள்,

“என்ன பண்றீங்க நீங்க…”என்று பதட்டத்துடன் கேட்க,ஆரிக்கு சிரிப்பு பீறிட்டது அவளின் பாவனையில்,

“ஆஆஆ சீனியர் சிரிக்காதீங்க….கடுப்பாகுது…”என்றவளை மீண்டும் இழுத்து தன் கை வளைவிற்குள் கொண்டுவந்தவன்,

“ஶ்ரீ….நீ என்னை என்ன வேணா சொல்லிக்கோ….ஆனா இப்படி இருந்து தான் நீ பேச நான் அனுமதிப்பேன்….”என்று கூற,கன்யாவிற்கு இவனை என்ன செய்யலாம் என்று தான் தோன்றியது பின்னே விமானநிலையத்தில் ஆரம்பித்தது இது ஆம்,

விமானம் தரையிறங்க அனைவரும் தங்களின் பயண பொதிகைகளை எடுத்துக் கொண்டு இறங்க தொடங்கினர்.

“சீனியர்….கையை விடுங்க…டிராலியை எடுக்கனும்…”என்று கன்யா ஆரியை கேட்க,

“ஏன் அந்த கை சும்மா தான இருக்கு எடுக்க வேண்டியது தான….”என்றவன் தன்னோடதை எடுத்து அவளதும் எடுத்துக் கொடுத்தான்.

“இப்ப கையை விட்டா தான் என்ன சீனியர்….”

“விட்டா நீ திரும்பியும் காணாம போயிடுவ….அப்புறம் தேட முடியாதே….அதான் முன்னெச்சரிக்கை….வா….”என்றவன் அவளின் கையை வீடு வரும் வரை விடவேயில்லை.இருவரும் அமைதியாகவே அணைப்பில் இருந்தனர்.ஆரிக்கு எப்படியோ ஆனால் கன்யாவால் அத்தனை எளிதாக அவனின் அணைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மனதெங்கும் ஒருவித வலி எடுக்க அவளின் கண்கள் கண்ணீரை சிந்தின.

தன் கைகளில் சூடான நீர் படவும் கண்களை திறந்த ஆரி,கன்யாவின் முகத்தை தன் புறம் திருப்பி,

“ச்சு…ஶ்ரீ….என்னடா…ப்ளீஸ் அழாத….எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு….நான்….உன்னை விட்டுறுக்கக் கூடாது…என் தப்பு தான்….மன்னிச்சிடுடா….”என்றவன் குரலும் கரகரத்து வர,கன்யா பதில் ஏதும் கூறவில்லை ஆரியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.இருவரும் பேசிக்கொள்ளவில்லை அமைதியாக இருந்தனர் ஆனால் மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

கன்யா மெல்ல ஆரியின் அணைப்பில் இருந்து விலகியவள்,

“என்னை கொஞ்சம் தனியா விடுங்க சீனியர்…”என்று திக்கி திணறி கூற,

“அது மட்டும் முடியாது ஶ்ரீ….இனி உன்னை விடுறதா இல்லை….”என்று தீர்க்கமாக கூற,அவனை முறைத்து பார்த்தவள்,

“என்ன திடீர்னு பாசம்….ஆங்….சொல்லுங்க….ஏன் என்னை இத்தனை நாள் தேடல….”என்று கன்யா தன் உள்ள குமுறலை கேட்க,ஆரியின் புறம் அமைதி மட்டுமே கிட்டியது என்ன சொல்லுவான் உண்மையில் அவன் தன் படிப்பு,வேலை,தன் குடும்பம் இது அனைத்தையும் பார்த்தவன் மனைவியை விட்டுவிட்டான்.ஆம் அன்றை நிலையில் கன்யா சென்றது அவனிற்கு பெரிதாக தெரியவில்லை அவ்வபோது அவளின் நியாபகங்கள் வந்தபோது தனது வேலையில் கவனத்தை திருப்பிவிடுவான்.ஆரியின் அமைதியில் கன்யாவின் மனது வெகுவாக அடிவாங்கியது.

“இந்த கேள்விக்கு பதில் செல்லிட்டு என் கையை பிடிங்க சீனியர்….நான் பண்ணது தப்பு தான் இல்லைனு சொல்லல….அதுக்கு அப்புறம் எத்தனை தடவை உங்க கிட்ட பேச முயற்சி பண்ணியிருக்கேன் ஆனா நீங்க தான் பேசாம போனீங்க….என்னை விலக ஆரம்பிச்சீங்க…அப்புறம் எப்படி நான் அங்க இருக்கிறது அதான் வந்துட்டேன்….ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் எத்தனை நாள் நீங்க என்னை தேடி வருவீங்கனு இருந்துருக்கேன் தெரியுமா….என் நம்பர் உங்க கிட்ட இல்லனு சொல்லாதீங்க இங்க வந்தவுடனே உங்களுக்கு தான் என் நம்பரை அனுப்பினேன் நீங்க அதை கவனிக்கல……எனக்கு போன் பண்ணலை ஏன் மெஸேஜ் கூட பண்ணலை….எத்தனை நாள் உங்கிட்டேந்து ஏதாவது மெஸேஜ் வருதானு பார்ப்பேன்….ஒருகட்டத்தில நீங்க என்னை மறந்து போயிட்டீங்கனு தான் நினைச்சேன்….ப்ச்…..என்னை விடுங்க எனக்கு கொஞ்ச நேரம் தூங்கனும் என்னவோ போல இருக்கு….”என்று வேகமாக கூறிவிட்டு ஆரியின் கைகளில் இருந்து விடுப்பட்டு அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

ஆரி கன்யா பேசியதன் தாக்கம் குறையாமல் அப்படியே நின்றுவிட்டான்.அவள் கூறுவது உண்மை தானே நான் நான் என்று என்னை பற்றி மட்டுமே நினைத்து அவளை ஒதுக்கிவிட்டேனே என்று மனது குமைய செய்வதறியாது அப்படியே நின்றிருந்தான் எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருப்பான் என்று அவனுக்கே தெரியாது அவனது கைகளை ஒரு கரம் பற்றவும் உணர்வுக்கு வந்தவன் நிமிர்ந்து பார்க்க கன்யா தான் நின்றிருந்தாள்.

ஆரியிடம் கோபமாக பேசிவிட்டு உள்ளே போய்விட்டாள் தான் ஆனால் அவன் நின்ற தோற்றம் மனதை வாட்ட ஒருகட்டத்தில் கதவை திறந்து பார்த்தாள் ஆரி அப்படியே நிற்க கன்யாவால் அவனை அவ்வாறு பார்க்க முடியவில்லை அவனிடம் வந்தவள் கைகளை வலுவாக பற்றி,

“ப்ச்….இப்படி இருக்காதீங்க சீனியர் எனக்கு கஷ்டமா இருக்கு….”என்றுவிட்டு அவனின் கைகளை பிடித்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று,

“கொஞ்ச நேரம் படுத்து தூங்குங்க நாம அப்புறம் பேசலாம்….”என்றுவிட்டு வெளியில் செல்ல எத்தனிக்க,அதுவரை பொம்மை போல இருந்தவன்,

“என்கூடவே இருடீ….”என்றவன் கூறுவதோடு நில்லாமல் அவளை இழுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டு படுத்துவிட்டான்.கன்யா ஆரி இவ்வாறு செய்வான் என்று தெரியாமல் அவனின் மேலே விழ அவளை அலேக்காக தூக்கி தன் பக்கத்தில் போட்டுக் கொண்டு கண்களை மூட,

“சீனியர் விடுங்க….”

“நீ முதல்ல இந்த சீனியரை விடு….இப்ப கண்ணை மூடி தூங்கு…”என்று கண்களை திறக்காமல் கூற கன்யா அவனின் அணைப்பில் நெளிய,

“நீ தூங்குனா நானும் தூங்குவேன் இல்லைனா….”என்றுவிட்டு அவளை விஷமமாக பார்க்க கன்யா அதன் பிறகு வாயை திறக்கவில்லை அமைதியாகிவிட்டாள்.ஆரி படுத்த பத்து நிமிடத்தில் உறங்கிவிட,கன்யா வெகு நேரம் விழித்து தூங்கும் அவனை தான் பார்த்திருந்தாள்.முகத்தில் அதீத சோர்வு தெரிந்தது முன்பு போல் அல்லாமல் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது தான் அவனிடம் ஆனாலும் சற்று என்று எதையும் அவளாள் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை வெகுநேரம் அவனது முகத்தையே பார்த்திருந்தவள் அப்படுயே உறங்கியும்விட்டாள்.

அடுத்த நாள் காலை ஆரி கண்விழிக்கும் போது பக்கத்தில் கன்யா இல்லை வேகமாக எழுந்தவன் வீடு முழுவதும் தேட அவள் இருப்பதற்கான அறிகுறி இல்லை ஆரிக்கு நெஞ்சம் தடதடத்தது ஏதோ மீண்டும் மனதை அழுத்த அதே நேரம் வாயிற் கதவை திறந்து கொண்டு வந்தவளைக் கண்டவுடன் தான் நின்ற மூச்சே வந்தது.வேகமாக அவளின் முன் நின்று,

“எங்கடீ போன….”என்று கேட்க,கன்யா தன் கைகள் இரண்டையும் தூக்கி காட்ட வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வந்திருந்தாள்.

“ப்ச்….என்னையும் எழுப்பி இருக்கலாம்ல….நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருந்தேன்….”என்று படபடப்பாக கூற,

“என்னாச்சு ஆரி….ஏன் இப்படி பதட்டப்படுறீங்க….”என்றவளுக்கு இந்த ஆரி புதிதாக தெரிந்தான்.

“ப்ச் ஒண்ணுமில்ல….”என்றவன் திடீர் என்று,

“ஏய்….இப்ப என்ன சொல்லி கூப்பிட்ட….ஆங்….”என்று கேட்க,

“ம்ம்ம்….ஆரினு கூப்பிட்டேன்….ஏன் உங்க பேர் அதானே….”என்று புன்னகை முகமாக கூற அவளின் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.

“நீங்க தான சொன்னீங்க சீனியர்னு கூப்பிடாதனு…..”என்று கன்யா கூற,

“ம்ம் ஆமாம்….இப்படியே கூப்பிடு….”

“ம்ம்…சரி போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க…நான் காபி கலக்குறேன்….”என்றுவிட்டு அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட ஆரியும் கன்யா கூறியதை போல பல் துலக்கி குளித்துவிட்டு வர,

“எங்க காணும்னு பார்த்தேன்….குளிச்சீங்களா….”என்று கன்யா சாப்பாட்டை மேஜையில் வைத்தவரே கேட்க,

“ம்ம்….ஆமா….ஶ்ரீ காப்பி இப்ப வேணாம் எனக்கு பசிக்குது சாப்பிட்டு அப்புறம் குடிக்கிறேன்….”என்று விட்டு சாப்பாட்டு மேஜையில் அமர,கன்யா வேகமாக அவனிற்கு உணவினை பறிமாரினாள்,

“மாவு இல்லை அதான் கொதுமை மாவுல தோசை சுட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க….”என்றவாரு தோசையை வைக்க,

“நோ பிராபளம் ஶ்ரீ….வா நீயும் உட்கார் சேர்ந்து சாப்பிடலாம்….”என்று விட்டு தோசையை பிய்த்து வாயில் வைக்க நெடு நாட்கள்களுக்கு பிறகு வீட்டு உணவு நாவில் தித்தித்தது.கன்யா வந்த பிறகு அவன் வீட்டில் உணவு எடுத்துக் கொண்டது இல்லை ஏனோ தனியே அமர்ந்து உண்பதில் திருப்தி இல்லை அதோடு வீட்டில் இருந்தால் கன்யாவின் நியாபகம் வெகுவாக தாக்க வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துவிடுவான்.

“கெஞ்சம் பொறுமையா சாப்பிடுங்க….ஏன் இவ்வளவு வேகம்….”என்று கன்யா கேட்ட பிறகே ஆரிக்கு உரைக்க,

“ச்சு….ரொம்ப நாள் கழிச்சு வீட்டு சாப்பாடா அதான்….நீயும் உட்காரு…”என்று கூற,

“நான் உட்கார்ந்தா யார் தோசை ஊத்தறது….”என்றுவிட்டு அவனது தட்டில் சட்னி வைத்தவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.அவள் மனதெங்கும் ஆரி கூறியதிலேயே இருந்தது வெகு நாட்கள் கழித்து வீட்டு உணவு என்றால் இவ்வளவு நாள் ஹோட்டல் உணவு தான் உண்டாரா ஏன் என்று நினைத்துக் கொண்டிருக்க,

“ஶ்ரீ எனக்கு போதும்….நீ உட்காரு நான் ஊத்துறேன்….”என்றபடி வந்தான் ஆரி.

“என்ன போதுமா…..நாலு தான் சாப்பிட்டுக்கிறீங்க….உட்காருங்க இன்னும் இரண்டு சாப்பிடுங்க….”என்று கன்யா கூற,

“இல்ல எனக்கு போதும்….நீ உட்கார்….”என்றுவிட்டு அவளை அடுப்படியில் இருந்து இழுத்துவிட்டு அவன் கரண்டியை வாங்கி கொள்ள,கன்யா தனது தட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறையிலேயே அமர்ந்து கொண்டாள்.

“ஏய் என்ன இங்க உட்கார்ந்துட்ட…”

“ம்ம்…இது தான் ஈஸியா இருக்கும்…அதான்…நானும் ராதியும் இப்படி தான் சாப்பிடுவோம்….”என்றுவிட்டு அமர்ந்துகொள்ள,

“அப்புறம் என்னலெல்லாம் செய்வீங்க….”என்று ஆரி கேட்க,

“ராதியை உங்களுக்கு தெரியுமா…..”என்று கன்யா கேட்க,ஆரி நடந்த அனைத்தையும் கூறிவிட்டான்.அதன்பின் கன்யா அமைதியாகி சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரியும் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் கேட்கவில்லை.சாப்பிட்டு முடித்து கன்யா அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மதியத்திற்கு என்று சமைக்க எடுக்க,

“ஶ்ரீ…அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்….”என்றுவிட்டு அவளின் கைகளை பிடித்து இழுத்து சோபாவில் அமர செய்தவன் அவளுடன் தானும் அமர்ந்து கொண்டான்.

“ஶ்ரீ….”

“….”

“ஶ்ரீ பேசுடீ….என்னை திட்டு,அடி….ஆனா இப்படி அமைதியா இருந்து என்னை கொல்லாதடீ….எனக்கு கஷ்டமா இருக்கு….”என்றுவன் அவளை மெல்ல தனது மடிக்கு மாற்ற,

“ச்சு…சீனியர்….”

“ஓய் அப்படி கூப்பிடமாட்டேன்னு சொன்ன….”

“அச்சோ மறந்துட்டேன்….”என்றவளின் கன்னத்தை வலிக்க கடித்துவிட,

“ஆஆஆஆ…..வலிக்குது விடுங்க….”என்று கன்யா கத்த,அவளை விட்டவன் கடித்த கன்னத்தை தன் அதரங்கள் கொண்டு மருந்திட,

“அச்சோ விடுங்க….”என்று பதறி விலகினாள் கன்யா.அவளின் மனதும்,உடலும் ஒருசேர நடுங்கியது.

“ஓய் எதுக்கு இப்படி நடுங்குற….”என்று அவளை இழுத்து மீண்டும் தன் மடியின் மீது அமர வைத்தவன்,

“இங்கபாரு ஶ்ரீ….நான் செஞ்சது தப்பு தான் அதுக்காக இப்படி எல்லாம் என்னை நீ ஒதுக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு….”என்று ஆரி தனது மனதை மறையாமல் கூற,

“இதுமாதிரி தான் எனக்கும் இருந்துச்சு ஆரி….அன்னைக்கு நீங்களும் இப்படி தான் என்னை ஒதுக்கி வச்சீங்க….நான் தனியா பீல் பண்ணேன்….எனக்கு எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா….”என்றவளின் கண்கள் உடைப்பெடுக்க,ஆரிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.தான் அன்று புரியாமல் இழைத்த செயல் கன்யாவை இவ்வளவு பாதித்திருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.

“நான் என் வீட்டுல கூட தனிமையை உணர்ந்தது இல்லை….ஏனா அவங்க அப்படி தான் எனக்கு தெரிஞ்சுபோச்சு….ஆனா நீங்க…..”என்றவள் தேம்ப ஆரிக்குமே கண்கள் கலங்கிவிட்டது.

“எனக்குனு நீங்க நின்னீங்க பாருங்க….அப்படி இருந்துச்சு….அவங்க முன்னாடி பாருங்க எனக்குனு ஒருத்தர் இருக்காருனு காட்டுன தருணம் அது….அந்த நேரத்துல எனக்கு உங்களை கஷ்டப்படுத்துறேன்னு தெரியவேயில்லை….”என்றவளின் அதரத்தை விரல் கொண்டு மூடியவன்,

“கஷ்டப்படுத்துறேன் அது இதுனு சொன்ன….எனக்கு கோபம் வரும் ஶ்ரீ…..நான் உன்னை ஒரு நாளும் பாரமா நினைச்சது இல்லை….நான் எல்லாத்தையும் சரி செய்யனும் தான் நினைச்சு செஞ்சேன் ஆனா அதுல உன்னை கவனிக்காம விட்டுடேன்….அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு…..ஒத்துக்குறேன்….அதுக்காக நீ ரொம்ப பேசுறது நல்லயில்லை….”என்று கோபமாகவே கூறினான்.

“சரி நீங்க எல்லாத்தையும் சரி செய்ய நினைச்சேன்னு சொல்லுறீங்க ஆனா ஏன் என்கிட்ட சொல்லல….எனக்கு எப்படி தெரியும் நீங்க என்ன நினைக்குறீங்கனு நாம அந்த அளவுக்கு நெருக்கமும் இல்லை எனக்கு என்னை நீங்க ஒதுக்குறீங்கனு தான் தோணுச்சு…அதுவும் அன்னைக்கு அந்த காபி ஷாப்புல……”

“ஏய் அவ சும்மா உன்னை கிண்டல் பண்ணாடீ….நீ தான் டென்ஷன் ஆகிட்ட….”என்று ஆரி கூற,அவனை முறைத்தவள்,

“என் போனை நீங்க எடுக்கலை….”

“ஶ்ரீ….நான் எத்தனை நாள் இப்படி எடுக்காம இருந்திருக்கேன்….”

“அதான்…அதே தான் அப்பெல்லாம் நான் இப்படி சண்டை போட்டிருக்கேனா…..ஆங்….சொல்லுங்க ஆரி….”என்று கன்யா அவனின் மடியில் இருந்து எழ முயன்று கொண்டு  ஆவேசமாக கத்த,

“என்னை என்னவேன சொல்லு ஆனா இப்படி இருந்தே சொல்லு….”என்றவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கவேயில்லை,அதே சமயம் அவனின் மனதும் கன்யா கூறியதையே தான் சிந்தித்தது தான் எங்கோ தவறு இழைத்திருக்கோம் என்பது மட்டும் புரிந்தது.

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….விடுங்க என்னை….அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா….”என்றுவிட்டு அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியவள்,

“எனக்கு வீட்டுக்கு போகவே வழி தெரியலை அதான் உங்களுக்கு போன் பண்ணினேன்…..ஆனா நீங்க எடுக்கவேயில்லை…சரி திருப்பி திருப்பி கூப்பிடுறாளே ஏன்னு கூடவா யோசிக்கமாட்டீங்க….விடுங்க என்னை….”என்று அவனை பிடித்து தள்ள அவனோ எதற்கும் அசைந்தான் இல்லை.

“நான் உங்களுக்கு அவ்வளவு தான் இல்லை…அதான் கோபம் அந்த கோபத்தோட தான் அப்படி பேசிட்டேன்….நான் பேசினது தப்பு தான் அதுக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன்….ஆனா நீங்க என்ன சொன்னீங்க….ஆங்….”என்றவள் குனிந்திருந்த ஆரியின் தலையை நிமிர்த்தி,

“என்னை தனியா விடுனு சொன்னீங்க….நான் என்ன செய்யட்டும்….என்கிட்ட பேசவும் மாட்டீங்க….அந்த வீட்டுல நான் ஏதோ வேண்டாத பொருள் மாதிரி பீல் அதான் கிளம்பி வந்துட்டேன்….அப்போ கூட நீங்க உடனே என்னை தேடி வந்துடுவீங்கனு நம்பினேன் ஆனா நீங்க வரவேயில்லை….ஆனா என்னால உங்களை மாதிரி இருக்க முடியலை….நான் பூனே வந்ததே உங்களை பார்க்க தான்….”

“என்ன என்னை பார்க்கவா….ஶ்ரீ நிஜமா நீ என்னை பார்க்க தான் வந்தியா…..”என்றவனின் முகம் மலர்ந்து விசிககிக்க.

“ஆமா….உங்களை பார்க்க தான் வந்தேன்….ஆனா நான் வந்து பார்த்தும் என்ன நடந்துச்சு….திரும்பியும் சண்டை தான்….எனக்கு கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிடுச்சு….அதான் ஓடினேன் உங்க நினைவுகள் என்னை துரத்தாம இருக்க ஊர் ஊரா சுத்தினேன்….கொஞ்சம் உங்க நினைவிலேந்து வெளிவந்தேனு நினைச்சுக்கிட்டு வந்தா இப்ப தான் புரிஞ்சுது உங்க நினைவை என்கிட்டேந்து பிரிக்கவே முடியாதுனு….”என்றவள் இன்னுமே அழ,

“பூனே-ல சண்டைக்கு நீ தான் காரணம்….உனக்கு என்கூட தங்குறதுல என்ன பிரச்சனை….”என்று ஆரி கேட்க,

“எப்படி தங்குவேன்….என்னை அறியாம உங்க அருகாமையை நான்…..”என்றவள் வார்த்தைகளை,

“தேடுனியா ஶ்ரீ…என்னை ரொம்ப தேடியிருக்க….நான் உன்னை அந்தளவுக்கு தேடல இல்லை….”என்று ஆரி முடிக்க,கன்யா அமைதியாக இருந்தாள்.அவளை தனது மடியில் இருந்து இறக்கி அமர வைத்தவன்,

“ஶ்ரீ….நான் தப்பு தான்….எனக்கு இதெல்லாம் தெரியலை…நான் ஒண்ணு நினைச்சு நீ ஒண்ணு நினைச்சிருக்க….எல்லாமே தப்பா போயிடுச்சு…..எனக்கு இப்ப என்ன பண்ணுறதுனே தெரியலை…ஆனா இனி எதாயிருந்தாலும் நாம சேர்ந்து தான் இருக்கபோறோம்….அது உறுதி….”என்று அவளின் கைகளை பற்றி கூற,

“எனக்கு டையம் வேணும் ஆரி….நான்…ச்சு சொல்ல தெரியலை…ஆனா நாம ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சிக்கலை அதான் இவ்வளவு சண்டைக்கும் காரணம்……ஒரு வேலை திரும்பியும் இப்படி நடந்தா….”என்றவளை இடைமறித்தான்,

“நடக்கும்….கண்டிப்பா நடக்கும்….இதெல்லாம் இல்லாம நாம குடும்ப வாழ்க்கை இருக்காது ஆனா எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம்…..உன்னை தனியா விடமாட்டேன்…..என்னை நம்புடா….”என்று ஆரி கூற கன்யா அவனின் தோள்களில் சாய்ந்தவள்,

“ஆரி….எனக்கு நம்ம வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்….எல்லார் முன்னாடியும் நாம வாழந்து காட்டனும்….என்னால இந்த மாதிரி இன்னொரு பிரிவை தாங்கிக்க முடியாது….”

“இனி பிரிவே கிடையாது நான் தான் சொல்லிட்டேனே….எந்த பிரச்சனை வந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து சமாளிப்போம்….இனி உன் வாயிலேந்து பிரிவு ன்ற வார்த்தை வரக்கூடாது…ஶ்ரீ….”

“அப்புறம் என்ன சொன்ன எல்லார் முன்னாடிம் நாம வாழ்ந்து தான் காட்ட போறோம்….அதுவும் இப்படி….”என்று அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.கன்யாவும் அவனின் அணைப்பில் பாந்தமாக பொருந்தினாள்.

Advertisement