Advertisement

மன்னிப்பாயா….14

கன்யாவிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரியநாதன்.இன்று கன்யாவுடன் பேசியது சற்று அதிகம் தான் அவளிடம் விளையாட வேண்டும் என்று தான் பேச்சை தொடங்கினான் ஆனால் அது வேறுவிதமாக முடிந்துவிட்டது.அவளது கலங்கிய முகம் அவனை மிகவும் பாதித்துவிட்டது மீண்டும் அவளை சிரிக்க வைத்து பார்த்ததும் தான் அவளை வீடு வரை விட்டுவிட்டு வந்தான்.இப்போது மனதெங்கும் எவ்வளவு சீக்கிரம் தனது படிப்பை முடிக்க வேண்டுமோ முடித்துவிட்டு கன்யா பற்றி வீட்டில் கூற வேண்டும் என்ற திட்டமிடல் தான் மனதில் நடந்து கொண்டிருந்தது.

நாம் நினைத்தது அனைத்தும் நடந்துவிட்டாள் கடவுள் என்பவர் இல்லையே.ஆரி மற்றும் கன்யாவின் வாழ்வில் விதி தனது விளையாட்டை தொடங்கியிருந்தது.அதன் முதன் கட்டம் ஆரியநாதனின் தந்தையிடம் இருந்து ஆரம்பித்தது.ஆரி தனது இரவு உணவை முடித்துக் கொண்டு தனது அறைக்கு செல்லும் முன் அவனை அழைத்தார் மூர்த்தி.

“ஆரி….உன் கிட்ட பேசனும்….என் ரூமுக்கு வாப்பா….”என்று கூறிவிட்டு செல்ல,அவனும் அவரின் பின்னே சென்றான்.அலுவலக அறையில் உள்ளே ஆரி நுழைந்ததும்,

“ஆரி இன்னைக்கு உன்னை நான் கடற்கரையில பார்த்தேன்….”என்றுவிட்டு அவனின் முகத்தை பார்க்க,அவனோ முகத்தில் எந்த அதிர்வும் காட்டாமல்,

“ஓஓ….பார்த்துட்டீங்களா….நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன்….அவ பேரு ஶ்ரீகன்யா….என்னோட ஜூனியர்….நாங்க விரும்புறோம்….”என்று அவன் அசராமல் கூற,அவனை கூர்ந்த மூர்த்தி,

“டேய் உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா….நீ உன் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்க….ஆங்….”என்று அவனின் தோளில் குத்த,

“ப்பா….எனக்கு உங்களை தெரியாதா…”என்று மகன் கூற,

“ம்ம்….எனக்கும் என் மகன் மேல நம்பிக்கை இருக்கு…அதனால தான் நானும் அமைதியா இருக்கேன்…ஆனா ஆரி உன் படிப்பு இன்னும் முடியலை….அதனால….”என்றுவிட்டு அவனின் முகத்தை பார்க்க,

“ப்பா….இப்ப தான என் மேல நம்பிக்கை இருக்குனு சொன்னீங்க….என்னோட படிப்பு முடியவரை வேறு எதுவும் நான் யோசிக்க மாட்டேன்….என்ன மாதிரி தான் கன்யாவும்….அதனால நீங்க டென்ஷன் ஆகாதீங்க….”என்று ஆரி தகப்பனுக்கே பாடம் எடுக்க,அவனை செல்லமாக தட்டிய மூர்த்தி,

“ம்ம்….எனக்கும்,அம்மாக்கும் ஒரு வேலையை குறைச்சிட்ட….ஆனா ஆரி….அம்மா கிட்ட இப்ப எதுவும் நீ சொல்ல வேண்டாம் நான் பேசிக்கிறேன்….”என்று கூற,

“சரிப்பா….”என்று ஆரியும் கூறினான்.ஆனால் அவன் தந்தைக்கு கூறிய வாக்குறிதிகள் யாவும் அன்றைய இரவே காற்றில் பறக்கவிட்விடுவான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.தந்தையிடம் தன் மனதை உரைத்தவுடன் ஆரிக்கு மனது மிகவும் லேசாக இருந்தது.தனது பேசியில் இருந்த ஶ்ரீயின் புகைப்படத்தை பார்த்தவன்,

“உன்னை யாருக்கு தான் பிடிக்காது ஶ்ரீ….நீ ஸ்பெஷல் தான்….என்னவோ உன்கிட்ட இருக்குடீ….”என்று புகைப்படத்துடன் பேசிவிட்டு அப்படியே உறங்கியும் போனான்.இரவு நேரம் பத்தைக் கடந்து இருந்தது.அப்போது அவனின் கைபேசி விடாமல் இசைக்க நல்ல உறக்கத்தில் இருந்த ஆரிக்கு,

“ப்ச்….இது வேற….”என்று கடுப்புடன் அதை எடுக்க கன்யா தான் அழைத்திருந்தாள்.அதுவும் மூன்று முறை அழைப்பு வந்திருக்க,

“இந்த நேரத்துக்கு கூப்பிட மாட்டளே….”என்ற யோசனையுடன் தான் கன்யாவிற்கு அழைத்தான்.அவன் அழைத்த மறுநிமிடம் அழைப்பு ஏற்கப்பட்டுவிட,

“ஹலோ ஶ்ரீ….”என்றதற்கு மறுபக்கம் விசும்பல் சத்தம் மட்டுமே கேட்கவும் ஆரி பயந்துவிட்டான்.

“ஹலோ ஶ்ரீ….ஶ்ரீ….ஶ்ரீ….”என்று பதட்டமாக கேட்க,

“ஆங்…சீ….சீனியர்….”என்று விம்மி விம்மி அவள் அழைக்க,

“டேய் ஶ்ரீ என்னடா…என்ன ஆச்சு…”என்று மேலும் பரபரப்பானான்.கன்யா ஒரு பொது இடத்தை கூறி அங்கு வரும் படி அழைக்க எந்த கேள்வியும் எழுப்பாமல் அவளை பார்க்க சென்றான்.அங்கு கடற்கரை சாலையில் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள் கன்யா.அழுதழுது முகம் எல்லாம் வீங்கி போயிருந்தது.ஆரி வேகமாக தனது காரை விட்டு இறங்கி வர,அவனை விட வேகமாக அவனிடம் வந்தவள்,

“சீனியர்….சீனியர்….”என்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை அதிலேயே அவள் மிகவும் பயந்துள்ளால் என்று புரிந்து கொண்ட ஆரி,

“ப்ச்….ஶ்ரீ….அழாத…வா வந்து கார்ல ஏறு…எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்….”என்று அவளை காரில் அமர வைத்து காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்தான்.அவளுக்கும் இப்போது ஏதாவது குடித்தால் தேவலாம் போல இருக்க மறுக்காமல் வாங்கி அவசரமாக குடிக்க,தண்ணீர் அவளின் உடயெல்லாம் சிந்தியது.ஆரிக்கு அவளின் நிலைக் கண்டு கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது அவளை நெருங்கி அவளின் முதுகை நன்கு தேய்த்துவிட்டு,

“ஶ்ரீ….ஒண்ணுமில்லடா…ஒண்ணுமில்ல….அதான் நான் வந்துட்டேன்ல…”என்று ஆரி ஒருபக்கமாக அவளை அணைத்து ஆறுதல் கூற,கன்யாவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது.அவள் தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.அவள் அழுது முடிக்கும் வரை ஆரி அவளை விட்டு விலகவில்லை.அவள் மிகவும் தேம்பு நேரங்களில் அணைப்பை இறுக்கி தான் இருக்கிறேன் உனக்கு என்று உணர்த்திக் கொண்டிருந்தான்.சற்று நேரத்திற்கு எல்லாம் அவளின் அழுகை கட்டுக் கொள் வந்தது.

“ஶ்ரீ…இப்ப ஓகே வா….”என்று ஆரி கேட்க,

“ம்ம்ம்….”என்றவளுக்கு கண்கள் கலங்கிய படி தான் இருந்தது.

“ப்ச்…ஶ்ரீ என்ன ஆச்சு இப்பவாவது சொல்லு….”என்று பரிதவிப்பாக கேட்க,அவனின் முகத்தை பார்த்தவள் நடந்ததை கூற தொடங்கினாள்.

கன்யா எப்போதும் போல வீட்டிற்கு செல்ல அங்கே அவளுக்கு முன்னே அவளின் தந்தை அமர்ந்திருந்தார்.

“என்னடா இது….அப்பா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டார்….”என்று யோசனை செய்தபடியே அவள் தனது அறைக்குள் போக பார்க்க,

“கன்யா நில்லு….”என்று அதிகாரமாக வந்தது இளங்கோவின் குரல்,திரும்பிய கன்யாவிற்கு மனதில் இளங்கோவின் இந்த கோபம் சற்று பயத்தைக் கொடுத்தது தான் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல்,அவரின் முன்னே சென்று நின்று,

“சொல்லுங்க….”என்றாள்.

“ப்பா….பார்த்தீங்களா….நீங்க கூப்பிடுறீங்க…கொஞ்சம் கூட மரியாதை இல்லைம பேசறா….”என்றாள் ஶ்ரீநிதி.அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த கன்யா அமைதியாகவே நின்றாள். அவள் எப்போதும் போல் தான் தந்தையிடம் பேசினாள்.ஆனால் அன்று அனைத்தும் இளங்கோவின் கண்களுக்கு தப்பாகவே தெரிந்தது.

“நீ சும்மா இரு நிதி…நான் பேசுறேன்….”என்றார் இளங்கோ.

“கன்யா நீ எங்க போயிட்டு வர….”என்று இளங்கோ அவளை கூர்ந்து கேட்க,அவரின் பார்வையே அவர் என்னை ஆரியுடன் பார்த்துவிட்டார் என்று விளங்கிவிட்டது.இருந்தும் தந்தையிடம் இதை எப்படி உரைக்க என்று தயக்கமும் இருந்தது.அதனால் அவளின் தலை தன் போல் குனிய,

“ம்ம்ம்….அப்போ நான் நினைச்சது சரிதான்….அப்படிதான….யார் அந்த பையன்….”என்று இளங்கோ கேட்க,அதுவரை தந்தை ஏதோ கன்யாவின் மேல் கோபமாக உள்ளார் என்று மட்டுமே நினைத்திருந்த நிதிக்கு இப்போது அவள் காதலிப்பது புதிய தகவலாக வர கேட்கவா வேண்டும் தன் வாய்குக் வந்ததை பேசினாள்.

“ஓஹோ…மேடத்துக்கு காதல் கேட்குதா….ஏன்டீ படிக்க போன இடத்துல என்ன வேலை பார்த்து வச்சிருக்க….நானும் தான் படிச்சேன்….இப்படியா இருந்தேன்….ப்பா என்னப்பா நீங்க இவ கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க….இவ செஞ்ச காரியத்துக்கு ஓங்கி அறைய வேண்டாம்….”என்று ஆவேசமாக குதிக்க,

“நிதிமா….கொஞ்சம் பொறுமையா இரு….”என்று அன்பு மகளுக்கு பரிந்து கொண்ட வர,

“அவ சொல்லுறதுல என்ன தப்பு….படிக்க அனுப்புனா படிக்க தான் செய்யனும்…அதைவிட்டுட்டு….என்ன வேலை பார்த்துருக்கா இவ….”என்று இளங்கோவும் கத்த,கன்யாவோ குனிந்த தலையை நிமிரவேயில்லை.அது இன்னும் நிதிக்கு சாதகமாக இருக்க,

“இவ்வளவு பேசுறோம்….ஏதாவது பதில் சொல்லுறாளா….எல்லாம் திமிரு….”என்று நிதி கூற இளங்கோவிற்கும் இப்போது கோபம் தான்,

“கன்யாஆஆஆஆ….கேட்கறதுக்கு பதில் சொல்லு….அமைதியா இருந்தா என்ன அர்த்தம்….”என்று இளங்கோ கத்த,கன்யாவின் உடலில் ஒருநிமிடம் நடுக்கம் பிறந்தது.

“ப்பா…அவர் பேரு ஆரி…நான் அவரை விரும்புறேன்….”என்று கன்யா ஒருவழியாக தன் மனதில் இருந்ததை கூறிவிட,அவளை நக்கலாக பார்த்த நிதி,

“என்ன லவ்வா….உன்னை எல்லாம் யார் லவ் பண்ணுவா….”என்று நக்கலாக நிதி கேட்க,

“உனக்கு எதுக்கு அது…..உன்கிட்ட நான் பேச விரும்பலை….”என்று கன்யா நிதியின் பேச்சை கத்தரித்து பேச,நிதிக்கு கோபம் தலைக்கு ஏறியது,

“ஏய்….என்ன என்னையவே எதிர்த்து பேசுற….நான் உனக்கு அக்கா….அது நியாபகம் இருக்கட்டும்….”என்று நிதி தன் அதிகாரத்தை காட்ட,எப்போது அவளை கடந்து செல்லும் கன்யாவிற்கு இன்று கடந்து செல்லமுடியவில்லை.அவள் தன்னை எள்ளி நகையாடியதை விட தன் காதலை எள்ளி நகையாடியது மனதில் அத்தனை வலியை கொடுத்துவிட்டது.பலூனில் அளவுக்கு அதிகமாக காற்று நிரப்பட்டாள் அது வெடித்து சிதறும் அது போல தான் அவளின் மனதின் அழுத்தங்கள் எல்லாம் அன்று வெடித்து சிதறியது.

“அக்காவா….யாருக்கு யார் அக்கா….நீ எனக்கு அக்கா மாதிரி தான் இருந்தியா….சொல்லு…”என்று கன்யா ஆக்ரோஷமாக கேட்க,நிதிக்கு கன்யாவின் இந்த புதிய அவதாரம் கண்டு பயந்து தான் போனாள்.இளங்கோவிற்கு ஏற்கனவே கன்யா தன்னிடம் பேசாமல் இருப்பது பிடிக்கவில்லை இதில் அவள் நிதியை எதிர்த்து பேசியது மேலும் கோபத்தை உண்டாக்க,

“ஏய்…..என்ன பேச்சு பேசுற…”என்று இளங்கோ கன்யாவை அடிக்க பாய்ந்துவிட்டார்.கன்யா நிமிர்ந்து தந்தையை பார்த்தாளே தவிர இடத்தை நகரவில்லை.

“இது இந்த இந்த பார்வை தான் எனக்கு புரியலை….அவ்வளவு திமிரா உனக்கு….”என்று இளங்கோ கேட்க,

“நான் எந்த தப்பும் பண்ணலைனு அர்த்தம்….நான் தப்பு பண்ணா மட்டும் தான் தலை குனிவேன்….”என்று கன்யா கூற,இளங்கோவனுக்கு ஒரேநிமிடம் ஒருநிமிடம் தன்னையே பார்ப்பது போல் இருந்தது.அவரும் இப்படி தானே இருப்பார் சிறு வயதில்.தன்னை போலவே தன் மகள் என்று மனது நினைக்க தான் தூண்டியது.ஆனால் அவரின் நினைவுகளை பின்னுக்கு தள்ளியது நிதியின் அழு குரல்,

“நான் யாருனு கேட்குறா நீங்க….அவ கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க….எனக்கு கல்யாணம் ஆனா இந்த வீட்டல உரிமை இல்லையா….எனக்கு என் தங்கச்சி மேல அக்கறை இல்லையா….எப்படியெல்லாம் பேசுறா….பார்த்தீங்களா ப்பா….”என்று நிதி கத்தி கூப்பாடு போட்டு கவனத்தை தன் பக்கம் திருப்ப,இளங்கோவிற்கு பெரிய மகளின் கண்ணீர் கண்டவுடன் மனது பிசைய அவளிடம் சென்று,

“நிதிமா…என்னடா இது நீ இந்த வீட்டுக்கு எப்போதும் பெரிய பொண்ணு தான் டா….”என்று கூற,

“போங்கப்பா….எனக்கு தெரியும் உங்களுக்கு என்னை விட உங்க மத்த ரெண்டு பசங்க தான் முக்கியம்….”என்று கூற,

“ஆமா….உனக்கு எப்படி அப்பாவோ அதே போல தான் அவர் எங்களுக்கும்…ஏன் உனக்கு மட்டும் தான் இந்த வீட்டல உரிமை இருக்கா….எங்களுக்கு இல்லையா…..”என்று கன்யா இந்த முறை விடுவதாக இல்லை என்பது போல பேச,

“கனிமா….நீ கொஞ்சம் அமைதியா இரேன்டீ….”என்று அன்பு எப்போதும் சிறிய மகளையே அடக்க,

“ஏன் நான் அமைதியா போகனும்…ஒரு முறை அவளை அமைதியா போக சொல்லுங்க….முதல்ல ஒண்ணு கேட்குறேன்…இவளுக்கு கல்யாணம் ஆச்சு தான இவ எத்தனை நாளைக்கு இங்க இருந்து நம்மளை அதிகாரம் பண்ணுவா நாங்க பொறுத்து போகனுமா….இந்த வீட்டல இவ மட்டும் தான் பிறந்தாளா நாங்க இல்லையா…..எங்களுக்கு இங்க எந்த உரிமையும் இல்லையா….”என்று கன்யா கத்த,

“ப்பா…ப்பா…..எப்படி பேசுறா பார்த்தீங்களா….அவ செஞ்ச தப்பை மறைக்க என்னை எப்படியெல்லாம் பேசுறா பாருங்க….அவ காதல் பண்ணிட்டு வந்தது தப்பு இல்லை…நான் அவளுக்கு நல்லது சொன்னா தப்பா….நான் இனி இந்த வீட்டு பக்கமே வரமாட்டேன்…நான் போறேன்….இனி வரவேமாட்டேன் ப்பா….வரவேமாட்டேன்….”என்று நிதி சிறிய விஷயத்தை பெரிதாகிவிட,

“நீ எதுக்கு போகனும்….தப்பு செஞ்சது அவ தான் போகனும்….”என்று இளங்கோ வார்தைகளை விட,நிதிக்கு கொண்டாட்டம்,

“என்னங்க….என்ன பேசிறீங்க….அவ…அவ….”என்று அன்பு தவிக்க,

“நான் ஏன் போகனும்….காதலிக்கிறது தப்பா….நான் போகமாட்டேன்….”என்று கன்யாவும் வாதம் செய்ய,

“என்ன சொன்ன…என்ன சொன்ன…காதலிக்கிறது தப்பு இல்லையா….உன்னை….”என்று இளங்கோ அடிக்க பாய அன்பு அவரை தடுக்க என்று வீடே பெரிய அமலி ஆனது.இதில் நிதி வேறு மேலும் மேலும் தந்தைக்கு தூபம் போட விளைவு இளங்கோ கன்யாவை பிடிவாதமாக வீட்டை விட்டு விரட்டி விட்டார்.கன்யாவிற்கு தந்தை தன்னை புரிந்துகொள்வார் என்ற எண்ணமெல்லாம் இல்லை ஆனால் இவ்வாறு வீட்டை விட்டு துரத்துவார் என்று நினைக்கவில்லை.வெகு நேரம் வீட்டு வாயிலில் தான் நின்றவளை,

“இன்னும் இங்க நின்னு…எங்க மானத்தை வாங்காம போயிடு….”என்று நிதி கூறிவிட்டு சென்றுவிட,அதன் பின் கன்யா அங்கு நிற்கவில்லை.மனதில் உள்ள ரணம் போகும் வரை நடந்தாள் எங்கு செல்வது என்று தெரியவில்லை.ஆரியும் நாளை யூஸ் செல்வதால் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள் ஆனால் நேரம் ஆக ஆக மனதில் பயம் பிடித்துக் கொண்டது வேறு வழியில்லாமல் தான் ஆரிக்கு அவள் அழைத்தது.நடந்த அனைத்தையும் கன்யா கூறி முடிக்க ஆரிக்கு என்ன செய்வது என்றே முதலில் புரியவில்லை.சிறிது நிமிடம் யோசித்தவன் வண்டியை எடுத்து நேராக கன்யாவின் வீட்டுக்கு தான் சொன்றான்.

“சீனியர்….ஏன் இங்க….வேண்டாம்….வாங்க….என்னை எங்காவது ஹாஸ்ட்டல்ல என்னை விட்டுடுங்க….”என்று கன்யா கூற,அவளை முறைத்த ஆரி,

“என்ன பேசுற ஶ்ரீ….இது உன் வீடு….அவங்க ஏதோ கோபத்துல பேசுனா….நீயும்…”என்று கூறியவன் கன்யாவின் அடிப்பட்ட பார்வையில்,

“ப்ச்…ஶ்ரீ…ஶ்ரீ….எனக்கு புரியுது….நீ ரொம்ப நாளா இந்த சூட்சுவேஷனை கடந்து வந்திருக்க….”

“வாயை மூடி கடந்து வந்திருக்கேன் சொல்லுங்க சீனியர்….ஆனா இனி என்னால அப்படி இருக்க முடியாது….”என்று கன்யா அழுத்தமாக கூற,

“ஶ்ரீ….புரிஞ்சிக்கடா….வா என்கூட….”அப்போதும் அவள் நகராமல் அமர்ந்திருக்க,

“நான் உனக்கு நல்லது தான் செய்வேன் நம்புனா வா….”என்று ஆரி கூறிவிட அவனின் கைகளை இறுக பிடித்தபடி இறங்கினாள்.

“குட்…தட்ஸ் மை கேள்….”என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வர,நிதியும் அவளின் கணவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.வீட்ல ஒரு பெண்ணை வெளியில துரத்திட்டு எப்படி இவங்களால சாப்பிட முடியுது என்ற எண்ணத்துடன் தான் ஆரியநாதன் கன்யாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தான்.

Advertisement