Advertisement

மன்னிப்பாயா….12 (1)

கன்யாவின் மனது இந்த ஒருவாரமாக ஒரு நிலையில் இல்லை ஏதோ அலைப்பாய்ந்து கொண்டே இருந்தது.அது ஆரியின் அதிகபடியான அக்கறையினால் என்று கூறினால் மிகையாகாது.ஆம் இப்போது எல்லாம் அவன் கன்யாவிடம் மிக அக்கறையாக தான் இருப்பான்.அன்று அவள் உண்ணாமல் வந்ததை கண்டவுடன் அவளுக்கு பெரும்பாலும் அவன் தான் உணவு எடுத்துவந்து கொடுப்பான்.

“அச்சோ….சீனியர்….ஏதோ ஒரு நாள் நான் சாப்பிடாம வந்தா தினமும் வருவேனா….நமக்கு சாப்பாடு தான் முக்கியம்….”என்று அவள் கிண்டல் பேச,ஆரி அதையெல்லாம் காதில் வாங்கினால் தானே.

“நீ இப்ப சாப்பிடலனா நானும் சாப்பிட மாட்டேன்….ஓகேனா போ….”என்று ஒற்றை வரியில் அவளை அடக்கிவிடுவான்.அதன் பிறகு எங்கே போக அவனுடன் பேசாமல் அமர்ந்துவிடுவாள்.இப்போது எல்லாம் அவனின் இந்த அக்கறை அவளை அவன் பால் இழுத்துக் கொண்டிருந்தது.அது நட்பு என்பதை தாண்டி கொண்டிருந்ததை கன்யா உணர தொடங்கினாள்.தான் உணரும் உணர்வை போல் ஆரி உணர்கிறானா என்று பலமுறை அவனது முகத்தை பார்ப்பாள் ஆனால் அதில் தெரிந்தது எல்லாம் நட்பு மட்டுமே.

கன்யாவிற்கு மனது நட்புக்கும்,காதலுக்கும் இடையில் அல்லாட தொடங்கியது.இதில் ஶ்ரீநிதி மீண்டும் கன்யாவின் திருமணத்தை பற்றிய பேச்சை வீட்டில் எடுக்க,

“இந்த பேச்சு இப்ப வேணாம் நிதிமா….அவ படிச்சி முடிக்கட்டும் அதுக்கப்புறம் பார்த்துகலாம்….”என்று இளங்கோ கூறிவிட நிதிக்கு மனதில் கன்யாவின் மீது வன்மம் அதிகரிக்க தொடங்கியிருந்து.அதனால் அவள் வீட்டில் இருக்கும் நிமிடங்களில் கன்யாவை படுத்தி எடுக்க தொடங்கினாள்.கன்யா எது செய்தாலும் குத்தம் குறை கண்டுபிடித்து ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிட்டு தான் தன் வீட்டிற்கு செல்வாள்.இதனால் கன்யாவிற்கு வீட்டில் இருக்கும் பொழுதுகள் நரகமாக தொடங்கின.

அன்றும் வீட்டில் நிதியால் கன்யாவிற்கும்,அன்புவிற்கும் பிரச்சனையாகி இருக்க காலை உணவு உட்கொள்ளாமல் வந்துவிட்டாள்.எப்போதும் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆரியும் அன்று வரவில்லை.கன்யா அவனின் கைபேசிக்கு அழைக்க ஆரி துண்டித்துவிட்டான்.ஏதோ முக்கிய வேலையாக உள்ளான் என்று கன்யாவிற்கு புரிந்து போனது.அன்றைய நாள் முழுவதும் ஆரி கல்லூரிக்கு வரவில்லை கன்யாவிற்கு அந்த நாளை கடக்கவே மிக சிரமமாக இருந்தது.

வழக்கமாக அமரும் மரத்தடியில் வந்து அமர்ந்தவள் மனது முழுவதும் ஆரியை தான் தேடியது.மூளை அவள் செய்வது தவறு என்று உரைக்க மனதோ மீண்டும் மீண்டும் ஆரியிடமே சரண்டைந்தது.என்னதிது நான் பண்றது தப்பு இது நல்லதிற்க்கு இல்ல என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.அப்ப இதுக்கு என்னதான் வழி என்று மற்றொரு மனது கேள்வி எழுப்ப விடை தான் அவளுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு கன்யா தன்னை குழப்பிக் கொண்டே ஒருவாரத்தை தள்ளினாள்.ஆரி தனது இறுதியாண்டு புராஜக்ட் விஷயமாக வெளியூர் சென்றிருந்தான்.அதனால் அவன் ஒருவாரமாக கல்லூரி வரவில்லை.ஆனால் கன்யாவிடம் தினமும் கைபேசியில் பேசிவிடுவான்.ஆரி இல்லாதது வேறு கன்யாவின் மனது மேலும் அவனை தேட செய்தது.மேலும் ஒருவாரம் கழித்து தான் ஆரி கல்லூரிக்கு வந்தான்.

கன்யாவிற்கு அன்று ஆரி கல்லூரிக்கு வருகிறான் என்று தெரியும் ஆனால் அவனை பார்க்க தான் மனதில்லை.ஆம் அவளால் ஆரியிடம் பொய்யாக நடிக்க முடியவில்லை.தன்னிடம் புனிதமான நட்பை மட்டுமே எதிர்பார்பவனிடம் காதல் என்று கூறினால் அவன் தன்னை என்ன நினைப்பான் என்று நினைத்தவள் இனி ஆரியிடம் இருந்து நாம் விலகி இருப்பதே நல்லது என்று முடிவை எடுத்துவிட்டாள்.

ஆரிக்கு புராஜக்ட் வேலைகள் இருப்பதால் அவன் அறிக்கைகள் சமர்பிக்க மட்டுமே கல்லூரி வருவான்.இன்று அவனது அறிக்கை சமர்பிக்கும் நாள் அதனால் தான் வந்திருந்தான்.அதோடு கன்யாவை பார்க்கவேண்டும் என்று ஒரு மனதில் உந்துதல் இருந்து கொண்டே இருக்க அவளை பார்த்துவிடலாம் என்று வந்தவனுக்கு கன்யா கல்லூரி வராதது ஏமாற்றமாக இருந்தது.யோசனையுடன் அவன் கன்யாவிற்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை சரி ஏதோ வேலையாக உள்ளாள் என்று ஆரி தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.

இவ்வாறு கன்யா ஆரியிடம் பேசியே மூன்று வாரங்கள் கடந்துவிட்டது.ஆரி அழைக்கும் போது எல்லாம் வேலைகள் அதிகமாக இருப்பதை போல் காட்டிக் கொண்டு வைத்துவிடுவாள்.உண்மையில் கன்யாவை விட ஆரி தான் அவளை பிரிந்து மிகவும் நொந்துவிட்டான்.அவளது வீட்டில் மீண்டும் ஏதாவது பிரச்சனை செய்திருப்பார்களோ அதனால் தான் பேசவில்லையோ என்றெல்லாம் தனக்குள் புலம்பி விட்டான் ஆரி.

அதே போல் கன்யாவும் தனது மனதில் உள்ளதை புலிம்பிக் கொண்டு தான் இருந்தாள்.அவள் நாடும் ஒரே நபர் ராம் தான்.அவனிடம் மட்டுமே தன் மனதில் உள்ளதை கூறியிருக்க அவனிடம் மட்டும் புலம்பி தள்ளுவாள்.

“க்கா….நீ பேசாம ஹீரோ சார் கிட்ட உன் லவ்வ சொல்லிடேன்…..”என்று கூறினான். ராமிடம் கன்யா எப்போதும் ஆரியை ஏதோ ஒரு ஹீரோவை போல் தான் சித்திரத்து கூற ராமிற்கு ஹீரோவானான் ஆரி.

தன் தம்பியை முறைத்த கனி,

“ப்ச்….நீயும் புரியாம பேசாதடா….இவ்வளவு நாள் பிரண்டா பழகிட்டு இப்ப திடீர்னு நான் போய் லவ்வ சொன்னா….அவர் என்னை பத்தி என்ன நினைப்பார்….”என்று கன்யா கூற,ராமிற்கும் தன் அக்கா கூறுவது புரிந்தது.இருந்தும் தமக்கை இப்படி எதற்கும் கலங்கியது இல்லை இன்று கலங்கி நிற்பது மனதிற்கு ஒப்பவில்லை அதனால் தான் அவன் அவ்வாறு கூறியது.

“ப்ச் சரி விடுக்கா….ஏதாவது வழி கிடைக்கும்….”என்று தமக்கையை தேற்றினான்.நாட்கள் இவ்வாறு இருவருக்குமே போராட்டமாக செல்ல இதை முடிவுக்கு கொண்டு வந்தான் ஆரி.

கன்யா தனது கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்து கொரித்துக் கொண்டு இருக்க,அவளின் பக்கத்தில் யாரோ அமரவும் திரும்பி பார்க்க ஆரி தான் அவளை முறைத்தபடி அமர்ந்தான்.

“ம்ம்….அப்புறம் மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்க போல….”என்று சற்று நக்கல் குரலில் அவன் கேட்க,கன்யா எச்சில் விழுங்கினாள்.அவனது கண்களில் அவ்வளவு கோபம் தாண்டவமாடியது.

“ம்ம்…சொல்லுங்க….எங்களை விட நீங்க தான் இப்ப ரொம்ப பிஸியா இருக்கீங்க….பேச கூட நேரமில்லை…..”என்று அவன் பேசிக் கொண்டே செல்ல,

“சீனியர் ப்ளீஸ்….நான்….நான்….அது….”என்று கன்யா தன் மனதில் உள்ளதை கூற முடியாமல் தடுமாற,

“என்ன காரணம் சொல்லாம்னு யோசிக்கிறியா…..ராஸ்கல்….பிச்சிடுவேன் பிச்சு….என்கிட்டேயே திரும்பியும் பொய் சொல்லுர….”என்று ஆரியின் குரல் உயர்ந்து வர கேண்டீன் மொத்தமும் இவர்களை தான் பார்த்து.

“சீ….சீனியர்….”

“என்ன சீனியர்…என்னடீ….சீனியர்….”என்று ஆரி கோபத்தில் சீற,கன்யாவிற்கு ஆரியின் இந்த புதிய பரிமாணம் கண்டு பயந்து போனாள்.அவள் பயந்து நடுங்குவதை பார்த்தவன் தனது கேசத்தை அழுந்த கோதிக் கொண்டு நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டான்.

“ப்ச்….ஶ்ரீ….என்னாச்சு….வீட்ல திரும்பியும் பிரச்சனையா….உனக்காக தான் என் வேலை எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சிட்டு வந்தேன்….கிளம்பு….”என்று கூற,கன்யா மறுத்துக் கூற வாய் திறக்கும் முன்,

“என்னை கை ஓங்குற அளவுக்கு வச்சிடாத….அவ்வளவு கோபம் உன் மேல….ஒழுங்கா கிளம்பு…”என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,கன்யா அமைதியாக அவனுடன் கிளம்பினாள்.இருவரும் பீச்சிற்கு சென்றனர்.

“சொல்லு…என்ன பிரச்சனை…”என்று மீண்டும் ஆரி ஆரம்பிக்க,கன்யாவோ அவனை பார்பதை தவிர்த்தாள்.ஏற்கனவே கன்யா பேசவில்லை என்பதில் கோபத்தில் இருந்தவனுக்கு இப்போது கன்யாவின் செயல் மேலும் கோபமூட்ட,அவளது கைகளை பிடித்து இழுத்து தன்னை பார்க்க செய்தவன்.

“ஏய் நான் கேட்டா பதில் சொல்லுனும்….”என்று கோபமாக சீற,

“நான் உங்களை காதலிக்குறேன்….”என்று கன்யா அவனின் கண்களை நேராக பார்த்துக் கொண்டே கூறிவிட,ஆரிக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

“சொல்லு சொல்லுனு சொன்னீங்கல சொல்லிட்டேன்….இதோ….இதோ….இந்த பார்வை இந்த பார்வைக்காக தான் நான் ஒதுங்கி போனேன்…..என்னால முடியல சீனியர் உங்க கிட்ட நல்ல தோழியா இருந்துட்டு திடீர்னு நான் உங்களை காதலிக்குறேன்னு சொல்ல என்னால முடியல….ஆனா அதே சமயம் உங்க கிட்ட பொய் சொல்லிக்கிட்டு பழகவும் முடியல….என்னால முடியல சீனியர்….”என்று கன்யா முகத்தை மூடி அழ தொடங்கிட ஆரி பேச்சற்று போனான்.

கன்யாவின் அழுகை மட்டுமே அந்த இடத்தை நிறப்பியது ஆரிக்கு அந்த நிமிஷத்தை எப்படி கையால என்று புரியவில்லை.ஆனால் அவள் அழுவது அவனுக்கு பிடிக்கவில்லை.

“ஶ்ரீ….ஶ்ரீ….எந்திரி….எந்திரி….ப்ளீஸ்….அழாத….அழாத….”என்று ஆரி கூறுவது அவளுக்கு கேட்கவில்லை.அவளுக்கு எங்கே ஆரி தன்னை தவறாக புரிந்து கொள்வானோ என்று பயம் தான் மோலோங்கி இருந்தது.கன்யாவின் கையை பிடித்து மேலே எழுப்பியவன்,

“ஶ்ரீ….இங்க பாரு….என்னை பாரு….என்னை பாருன்னு சொன்னேன்….”என்று ஆரி சற்று கோபமாகவே கூற,கன்யா உடனே அமைதியாகி அவனை பார்த்தாள்.குண்டுவிழிகள் கலங்கி முகம் முழுவதும் சிவந்து போயிருந்தது.ஆரிக்கு இப்போது அவளிடம் என்ன பதில் கூற என்று தெரியவில்லை.ஆனால் அவளின் மீது கோபம் வரவில்லை மற்ற பெண்களை போல் இல்லையே அவனது ஶ்ரீ.அவனுக்கு எப்போதும் அவள் ஸ்பெஷல் தான்.

“ஶ்ரீ…இங்க பாரு எனக்கு இது….இதுக்கு…எனக்கு ஒரு நாள் டையம் கொடு….நான்….நான்…”என்று அவன் தடுமாற கன்யாவோ,

“சீ….சீனியர்….நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க….நான் இனி உங்க கிட்ட பேசவேமாட்டேன்….”என்று கூறிவிட்டு திரும்பி நடக்க தொடங்க,அவளின் கையை பிடித்து நிறுத்திய ஆரி,

“ஏய் நான் தான் யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னேன்ல….”என்று கூற,

“அட போங்க சீனியர் எப்படியும் உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது…விடுங்க….என் மனசை இந்த விஷயம் தான் ரொம்ப அரிச்சிக்கிட்டே இருந்தது…..அதான் நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்….இப்ப எனக்கு மனசு இப்ப ப்ரீ ஆகிடுச்சு…”என்று கூறிக் கொண்டே போக,அவளின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து அழுந்த பற்றி தன்னுள் வைத்துக் கொண்டே,

“அடியே….மக்கு….நான் யோசிச்சு சொல்லுறேன்னு தான் சொன்னேன்….நீ சொன்னது எனக்கு பிடிக்கலனா இப்படி நின்னு பேசிக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்…..எனக்கு கொஞ்சம் யோசிக்கனும்….அது…..எனக்கு….ஏய்…சொல்ல தெரியலைடீ….நான் நாளைக்கு சொல்லுறேன்….இப்ப வா….காலேஜ்க்கு போகலாம்….”என்றுவிட்டு அவளுடன் கல்லூரியில் விட்டுவிட்டு கிளம்ப கன்யாவோ ஆரி யோசித்து சொல்லுகிறேன் என்று கூறியதில் அவனை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே கல்லூரிக்குள் செல்ல,அவளின் பார்வை புரிந்து,

“என்ன பார்வை பலமா இருக்கு???”என்றான் ஆரி,

“ம்ம்….சீனியர்….நீங்க கோபடலையே….என் மேல உங்களுக்கு கோபம் அதெல்லாம் இல்லையே….நான் தப்பு தான் சாரி….”என்று கூற,

“ப்ச்….ஶ்ரீ….எனக்கு எந்த விஷயத்தையும் எடுத்தோம் கவுத்தோம்னு பதில் சொல்ல பிடிக்காது….அதோட நீ என்கிட்ட உன் மனசுல இருந்தத சொன்ன இதுல என்ன இருக்கு….எனக்கு யோசிக்க டையம் கொடு நாளைக்கு பார்க்கலாம்….பை….இதை பத்தி யோசிக்காம படிப்பை கவனி…..”என்று ஆரி கூற,

“அட போங்க சீனியர்….நீங்க என்னை தப்பா நினைச்சிப்பீங்கனு தான் எனக்கு பயமே தவிர….மத்ததெல்லாம் நான் யோசிக்கல….எப்படியும் நாளைக்கு நீங்க என்ன சொல்லுவீங்கனு எனக்கு தெரியுமே….”என்று கத்திக் கொண்டே செல்ல,

“என்ன சொல்லுவேன்னு நினைக்கிற….சொல்லிட்டு போ….”என்று ஆரி கத்த,

“மாட்டேன் போங்க…..நாளைக்கே நீங்களும் தெரிஞ்சிக்குங்க….போங்க….பை…”என்று அவளும் பதிலுக்கு கத்திவிட்டு சென்றுவிட்டாள்.

Advertisement