Advertisement

மன்னிப்பாயா….1

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…..

என்ற பாடல் வரிகளில் லயத்திருந்தாள் ஶ்ரீகன்யா.மனதில் பலபல எண்ணங்கள் அவளை இழுத்துக் கொண்டு சென்றிருக்க அவள் இப்போது நிகழ் காலத்தில் இல்லை.

“வெறும் சாரினு…..நீ சொல்லுற ஒருவார்த்தை என் மனசுல ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாகாது ஶ்ரீ….என்னை கொஞ்சம் தனியா விடு….”என்று அன்று அவன் கூறிய வார்த்தைகள் செவிப்பறையை அறைய தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல் விழித்துக் கொண்டாள்.படுக்கையில் இருந்து வேகமாக எழ,

“ஏய் என்னடி திரும்பியும் கனவா….”என்று கேட்டாள் அவளுடன் வேலை பார்ப்பவளும்,அறை தோழியுமான ராதிகா.

“ம்ம்….ஆமா….சாரி உன்னையும் டிஸ்ரப் பண்ணிட்டேன் நீ தூங்கு….”என்று கூறிவிட்டு வேகமாக அவர்களின் அறை பால்கனியில் வந்து நின்று கொண்டு இருள் அடைந்த வானத்தை வெறிக்க தொடங்கிவிட்டாள்.அவளது வாழ்வும் அந்த இருள் சூழ்ந்த வானத்தை போலவே இருள் அடைந்து தான் போயிருந்தது.மனது ஊமையாக அழுததது.

ஏன் என் மனதில் ஒரு கருமை படர்ந்தது அந்த சமயம் ஏன் ஏன்…..என்று இதோடு எத்தனை முறை தனக்கு தானே கேட்டு பார்த்துவிட்டாள் ஆனால் விடை தான் கிடைக்கவில்லை.எல்லாம் இவளது பிழையே தன்னிலை இழந்து வார்த்தைகளை விட்டுவிட்டாள் இன்று அள்ள முடியாமல் தவிக்கிறாள்.தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவள் மீண்டும் இருண்ட வானத்தை பார்த்து

“சாரி சீனி…..வெரி சாரி….”என்று எப்போதும் போல் கூறிவிட்டு மீண்டும் தன் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டாள்.காலைவேளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாள் ஶ்ரீகன்யா.குளித்துவிட்டு கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது தான் குளித்துவிட்ட வந்த ராதிகா கன்யாவை பார்த்தாள்.நேற்றைய அழுத சுவடுகள் எதுவும் இல்லை முகத்தில் பளிச்சென்று இருக்கும் புன்னகை.இது தான் அவளிடம் மிகவும் பிடித்தவொன்று தன் மனதின் பாரத்தை அழுகையில் கரைத்துவிட்டு மீண்டும் தன்னுடைய இயல்பிற்கே வந்துவிடுவாள்.கன்யாவை ஆறு மாதமாக தான் தெரியும் அவளுக்கு.எப்போதும் வாய் ஓயாமல் பேசுபவள்,துருதுரு என்று எதாவது செய்து கொண்டிருப்பாள்.சில சமயங்களில் அவள் செய்யும் விஷயங்களில் நல்லது நடக்கும் என்றால் பல நேரங்களில் ஏதாவது சிக்கலில் தான் கொண்டுவிடுவாள்.ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டாள்,

“இப்படி அடிப்பட்டு அடிப்பட்டு எழுந்தா தான் வெற்றி கிடைக்கும்….”என்று ஏதாவது ஒரு தத்துவத்தை கூறி ஓடிவிடுவாள்.மொத்ததில் பல நேரங்களில் குழந்தை போல் இருப்பவள்,சில நிமிடங்கள் மட்டுமே தன்னை பெரிய பெண்ணாக உணர்த்துவாள்.இது யாவும் இந்த ஆறு மாதங்களில் கன்யாவை பற்றி ராதிகா அறிந்து கொண்டது.ஆனால் அவளை பற்றிய பல விடயங்கள் ஏதோ மர்மம் போல் தான் இருக்கும்.

ஆம் என்னதான் ராதிகா அவளிடம் தோழி போல பழகினாலும் சில விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டாள்.முக்கியமாக அவளுடைய குடும்பத்தை பற்றி அவளுக்கோ,அவர்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கோ எதுவும் தெரியாது.ராதிகா அவர்களை பற்றி கேட்டால் பதில் கூறமாட்டாள் அமைதியாக கடந்துவிடுவாள்.அவள் திருமணமானவள் என்பதற்கு அறிகுறியாக அவளது நெற்றியில் வீற்று இருக்கும் குங்கும திலகமும்,காலில் அசைந்தாடும் மெட்டி மட்டுமே சாட்சி.அவளின் கணவன் யார் எங்கு உள்ளான் என்பது எல்லாம் விடை தெரியாத கேள்விகள் தான்.

“ஓய்….ஓய்….”என்று கன்யா ராதிகாவை தோள்களை பற்றி உலுக்க,அதில் சுயம் பெற்றவள்,

“ஆங்….சொல்லு கனி….”என்று கேட்க,

“ம்ம்ம்…சொல்லுறாங்க சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு….”என்று எப்போதும் போல் நக்கலாக பேச,அவளை முறைத்த ராதிகா,

“ஏய் உதை தான்….”என்று கைகளை உயர்த்தி அடிப்பது போல் காட்ட,

“அய்யோ….பயந்துட்டேன்டி….இந்தா சாப்பாடு….இதை தான் பத்து நிமிஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா உன் கவின் கூட டூயட் பாடிக்கிட்டு இருக்க….”என்று மேலும் கிண்டல் பண்ண,ராதிகா முகத்தில் செம்மை படர்ந்தது.

“ஏய்….அதெல்லாம் ஒண்ணுமில்லை….”என்று வெட்கபட்டுக் கொண்டே கூறினாள்.கவின் ராதிகாவின் காதலனாக இருந்து இன்னும் சில மாதங்களில் கணவனாக மாறப்போகிறவன்.ஒருமாதம் முன்பு தான் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பெற்றோர் அவர்களுக்கு நிச்சியமும் செய்தனர்.அதனால் இப்போது ராதிகா பல நேரங்களில் கல்யாண கனவில் மூழ்கிவிடுவாள்.அதைகொண்டு தான் கன்யா இப்போது கலாய்த்தது.

“அய்யோடா….ராதிகாவுக்கு வெட்கம் எல்லாம் வருதே….வாவ் சூப்பர்….”என்று கண்யா மேலும் அவளை வம்பு பண்ணிக் கொண்டே ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர்.தங்களின் கை பையை எடுத்துக் கொண்டு கீழே வர அவர்களின் கேப்பும் வந்திருந்தது.இருவரும் சேர்ந்து ஒரு ஆபார்மெண்டில் சிறிய வீடு ஒன்று எடுத்து தங்கி இருக்கின்றனர்.கேப்பில் ஏறிய உடன் கன்யா ஓர இருக்கையில் அமர்ந்து தன் கெட் போனை மாட்ட,

“ம்ம்….அந்த செவிட்டு மிஷன மாட்டிட்டல்ல….இனி எல்லாம் அவுட்டாப் போக்கஸ் தான் உனக்கு….”என்று ராதிகா கிண்டல் செய்தாள்.

“நீயும் இப்ப உன் ஹஸ்க்கு போன் போட்டு உருட்ட தான போற….அப்புறம் எதுக்குடி என்னை சொல்லுற….ஆபிஸ் வந்தா எழுப்பு….”என்று கிண்டல் பண்ண ராதிகா தான் வாயை மூட வேண்டியதாகிற்று.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…..

என்ற பாடல் வரிகள் மீண்டும் செவிகளை தீண்ட ராதிகா கூறியது போல கன்யா நிகழ் காலத்தை விட்டுவிட்டு கடந்த காலத்திற்கு சென்றாள்.

“தெரிஞ்சே ஒரு தப்பை செஞ்சிட்டு….என்கிட்ட சும்மா மன்னிச்சிடுனு மன்னிச்சிடுனு கேட்காத ஶ்ரீ….என்னை பத்தி நல்லா தெரிஞ்சும் எப்படி அப்படி பேசின….நீ திரும்ப திரும்ப மன்னிப்பை கேட்டுக்கும் போது இன்னும் கோபம் தான் வருது….சோ ப்ளீஸ்….இந்த மன்னிப்பை தூக்கி கிட்டு என்கிட்ட வராத….எனக்கு இப்ப தேவை தனிமை புரிஞ்சிக்க…ப்ளீஸ்….”என்று அந்த குரல் வேண்டுதாலாக,கோபமாக ஒலிக்க,கன்யாவின் கண்கள் தன்போல் கசிந்தது அன்றும்,இன்றும்.இவள் மனம் மீண்டும் போராட்ட களத்தில் இறங்க தொடங்க யாரோ அவள் தோள்களை உலுக்க அதில் களைந்தவள் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“ஏய் எழுந்திரிடி….ஆபிஸ் வந்துடுச்சு….”என்று ராதிகா அழைக்க,

“ஆங்….வரேன்….”என்றுவிட்டு தன் விழிநீரை துடைத்துவிட்டு இறங்கினாள்.இருவரும் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்கின்றனர்.தங்கள் வேலை பகுதிக்குள் நுழைந்தவுடன் தன் இயல்புக்கு வந்த கன்யா அன்றைய நாளையும் வேலை,இடையிடையே லூட்டி என்று எப்போதும் போல் கடத்தினாள்.இருவரும் வேலை முடிந்து கிளம்பும் நேரம் ராதிகா அவளிடம்,

“கனி….நான் கவின் கூட வெளில போறேன்டி….நைட் டின்னர் முடிச்சிட்டு தான் வருவேன்…உனக்கும் ஏதாவது வாங்கிட்டு வரவா….”என்று கேட்க,

“ப்ச்….வேணாம் ராதி….நான் பார்த்துக்குறேன்….நீ என்ஜாய் பண்ணிட்டு வா….ஆனா நைட் பத்து மணிக்கெல்லாம் வீட்டுல இருக்கனும்….இல்லை….”என்று மிரட்டுவது போல் அவள் கூற ராதிகா சிரித்துவிட்டாள் அவளின் பாவனையில்.

“அடியே….அவன் நல்லா நாள்லேயே என்கிட்ட ஏதோ கொரோனோ பேஷன்ட் போல தள்ளி நின்னு தான் பேசுவான்….அதுவும் இப்ப என்கேஜ்மென்ட் ஆனதுக்கு அப்புறம் சுத்தம் ஒரடி தூரத்துல போய் நிக்குறான்….கேட்டா இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நாம பிரியா இருக்கலாம் ரதி அப்படிங்குறான்….நீ வேற ஏன்டி கடுப்ப கிளப்புகிட்டு….”என்று புலம்ப,

“அச்சோ…அப்ப நான் கவினை தான் காப்பாத்தனுமா….இரு நான் இப்பவே அவனுக்கு போன் போடுறேன்….”என்று கன்யா தன் பெரிய கண்களை உருட்டி கூறிய அழகில் ராதிகா தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“டீ….கனி….சும்மா சொல்லக்கூடாது உன் கண்ணு இருக்கே…அது ஒரு நிமஷத்துக்கு ஒராயிரம் ரியாக்‌ஷன் காட்டுது….அது தான்டி உன்னோட அழகே….”என்று சில்லாகித்து கூற,கன்யாவின் முகம் ஒருமுறை இருண்டு மீண்டும் பிராகசமானது.

“சரி சரி…என்னை கலாய்ச்சது போதும்….நல்லபடியா போயிட்டுவா….”என்று கூற,

“அதான உடனே என்னை கிளப்புவியே….உன்னை….”என்று அவளை அடிப்பது போல் வந்தவள் அவளை அணைத்துவிடுத்து,

“ஏதோ உன் மனசை போட்டு அழுத்துது…அதை என்கிட்ட ஷேர் பண்ணினா என்னடீ….ஏன் இப்படி உன்னை நீயே வதைச்சுக்குற….”என்று வருத்தம் மேலிட ராதிகா கேட்க,வெறுமையான புன்னகை மட்டுமே கன்யாவிடம்.

“ம்ம்…இப்படி சிரிச்சே என்னை கவுத்துடு….”என்றவள் அவளின் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு,

“சரி பார்த்து வீட்டுக்கு போ….நான் ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவேன்….”

“எனக்காக எல்லாம் நீ ஒன்பது மணிக்கு எல்லாம் வரவேண்டாம்…உன் ஹஸ்ஸை இழுத்து வச்சு ரொமன்ஸ் பண்ணிட்டே வா….”என்று கிண்டல் பண்ண,

“மக்கும்…நீ வேற அவன் தானடி ஒன்பது மணி வரைக்கும் தான் உன்கூட இருப்பேன்…நீ சீக்கிரம் வீட்டுக்கு போ….நம்ம வீட்டுல இதெல்லாம் தெரிஞ்சா வருத்தபடுவாங்க….அது இதுனு எனக்கு காது கிழியர வரை அட்வைஸ் பண்ணிறான்…இவனை வச்சுகிட்டு…”என்று ராதிகா புலம்ப,

“ஓய்…..அவன் இவ்வளவு கன்னியமா இருக்கான்னு தான அவனை லவ் பண்ண அப்புறம் இப்ப என்ன….அவன் மாறல எப்போதும் போல தான் இருக்கான் நீயும் மாறாத….”என்று கூற ராதிகா ஒருநிமிடம் நின்று கண்யாவை பார்த்தாள்.முகத்தில் விளையாட்டு தனம் இல்லை ஒரு தீவிர பாவனை மட்டுமே.

“சரிடீ….நானும் மாறல….ஓகே….நீ வீட்டுக்கு போ….பை….”என்று கூறியவள் எதிர்புறம் நின்றிருந்த கவினுக்கு கையாட்டிக் கொண்டே சென்றாள்.

வீட்டுற்கு வந்த கன்யாவிற்கு இன்று ஏனோ அதிகமாக அவனின் நியாபகமே வலம் வர.இது சரிவாரது என்று பக்கத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு போய் சில தேவையான சாமான்கள் வாங்கிவிட்டு வரும் வழியில் தனக்கு உணவையும் வாங்கி கொண்டு வந்தாள்.வந்தவுடன் இருந்த நினைவுகள் இப்போது சற்று மட்டு பட்டு இருந்தது.வாங்கி வந்த அனைத்தையும் அதன் இடத்தில் வைத்துவிட்டு உடல் கழுவி சோபாவில் அமர்ந்து நிதானமாக தன் கைபேசியை பார்க்கலானாள்.

ஶ்ரீகன்யாவிற்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது பள்ளி,கல்லூரி என்று அனைத்திலும் தன்னிடம் அன்புடன் பழகும் அனைவரிடமும் அவளும் அதே அளவு அன்பு காட்டுவாள்.அதனால் நெருங்கிய நண்பர்கள் என்று தன்னை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைக்கவில்லை.ஆனால் இப்போது யாரிடமும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.அனைவரிடமிருந்து ஒதுங்கி இருந்தாள்.

அவளது வீடு என்று நினைகையில் அவளுக்கு ஒருவிரக்தியான சிரிப்பு மட்டுமே வந்தது.யார் இருக்கிறார்கள் அங்கு தன்னை தேட ஒருவனை தவிர என்று தன் தம்பி ராமை நினைத்தாள்.அவன் ஒருவன் மட்டுமே அவளுடன் துணைக்கு இருப்பான்.தமையன் என்பதை விட நல்ல தோழன் என்று தான் கூறவேண்டும்.இப்போது அவனிடமும் பேசுவது இல்லை பேசியே ஒன்றை வருடங்களுக்கு மேல் இருக்கும்.இன்று ஏனோ மனம் தம்பியை அதிகம் தேடியது.யோசிக்காமல் அவனின் எண்ணிற்கு அழைத்துவிட்டாள்.ரிங் போயிக் கொண்டிருந்தது சரி ஏதோ வேலையா இருக்கான் போல என்று நினைத்துக் கொண்டு பேசியை வைக்கும் நேரம் பேசி எடுக்கப்பட்டது,

“ஹலோ….ஹலோ….”என்று அழைப்பை ஏற்றான் ராம்.ஶ்ரீகன்யாவிற்கு தான் பேச நா எழவில்லை.ஏதோ தைரியத்தில் அழைத்துவிட்டாள் ஆனால் கடந்த ஒன்றை வருடங்களாக அழைக்காமல் இப்போது திடீர் என்று அழைத்து என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்தாள்.அதோடு தம்பியின் குரல் மனதை நெகிழ செய்ய இரண்டு நிமிடம் அந்த குரலை கேட்டவள் பேசியை அணைத்து வைத்துவிட்டாள்.மனதில் அதுவரை இருந்த தைரியம் எல்லாம் வடிந்து தனது படுக்கையில் விழுந்து அழுதாள்.தன்னை மீறி அவளது நினைவு தன் வீட்டை சுற்றி வந்தது.

இளங்கோ,அன்பரசி தம்பதியரின் இரண்டாவது மகள் தான் ஶ்ரீகன்யா.மூத்தவள் பெயர் ஶ்ரீநிதி.தம்பி ஶ்ரீராம்.இளங்கோ ஒரு தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிகிறார்.அன்பரசி இல்லத்தரசி.வீட்டில் எப்போதும் துருதுரு என்று ஏதாவது செய்து தாயிடமும்,தந்தையிடமும் திட்டு வாங்குவதே கன்யாவின் வேலை.சில சமயங்களில் ராமும் அவளுடன் சேரந்து லூட்டிகள் அடித்து மாட்டிக்கொள்வான்.

பெற்றோரை பொறுத்தவரை அவள் எப்போதும் சேட்டைகாரி,பொறுப்பு என்பதே கிடையாது இது தான் அவர்களின் நினைப்பு.அதுபோல் தான் நம் கன்யாவும் நடந்துகொள்வாள்.அதனால் கன்யாவிற்கு வீட்டில் எப்போதும் வசைமழை விழுந்தபடி தான் இருக்கும்.தன்னை பெற்றவரகளுக்கு நான் எப்போதும் ஆகாத பிள்ளையா என்று கூட சில நேரங்களில் அவள் நினைத்து உண்டு.அவளது நினைவை நிஜமாக மாற்றியது அவளின் திருமணம்.பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாள் அன்று முறிந்தது அவர்களின் உறவு.

கணவனிடம் இருந்து பிரிந்து வந்து இரண்டு மாதத்தில் ஒருமுறை தந்தையை பெங்களூரில் கண்டாள்.அவரிடம் பேச முயன்று தோற்றுவிட ஏதோ உந்துதலுடன் அவர்களின் வீட்டிற்கு சென்று நின்றுவிட்டாள்.அவர்கள் தன்னை திட்டுவார்களே தவிர தன்னை ஏற்று கொள்வார்கள் என்று அவள் நினைத்திருக்க.தந்தையோ அவளை வீட்டின் உள்ளே  கூட அனுமதிக்கவில்லை.அது தான் அவள் வீட்டிற்கு சென்ற கடைசி நாள் அதன் பிறகு யாரிடமும் பேசவில்லை அனைவரிடம் இருந்தும் ஒதுங்கிவிட்டாள்.

ஒருவருடமாக அவளது வாழ்க்கை தனிமையில் தான் கழிகிறது.பெரிதாக யாரிடமும் பேசவும் விருப்பமில்லாமல் போனது.ராதிகா ஒருவள் தான் இவளை இழுத்து வைத்து பேசுவாள்.அதனால் தான் ராதிகாவிடம் மட்டும் சற்று ஒற்றுதலோடு இருப்பது போல் தெரியும்.ஆனால் அவளிடமும் கன்யா ஒதுங்கி தான் இருந்தாள்.ஏனோ யாரிடமும் ஒன்றி இருக்க மனமில்லை அனைத்திலும் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது அவன் இல்லாது.தன்னவனின் நியாபகம் எழ தன் அவள் கைகள் அவளின் கைபேசியை எடுத்து பாடலை ஒலிக்கவிட்டது.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…..

மன்னிக்க வேண்டியவன் அவளை மன்னிப்பானா????

Advertisement