“உன்கிட்ட இருக்க நர்ஸ்ல இவள் கொஞ்சம் அறிவாளியா என் கண்ணுக்குத் தெரியுறா. என்னை எதிர்த்துப் பேசி பிரச்னை பண்ணல. சோ, பொறுமையும் அவளுக்கு இருக்கு. ஆனாலும் கொஞ்சம் முட்டாள் தான், பட் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்,” என்றான் குருசேத்ரன்.
“இல்ல, அவள் வர மாட்டாள். நான் போகச் சொல்லிட்டேன்,” என சுப்ரியா கூற, “சுப்ரியா!” என குரு கொஞ்சம் குரலை உயர்த்தினான்.
“நீ டாக்டரைப் பார்க்க ஒத்துக்க, நான் அவளை உன் மம்மிய கேர் பண்ணிக்க சொல்றேன். இல்லன்னா நோ,” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தவன், “சரி, போறேன். போய்த் தொலைக்கிறேன்,” என கடுப்புடன் பேசினான். அப்பொழுதும் கூட கோபம் தகித்தது. அதைக் கட்டுப்படுத்துவதற்காகவே காகிதங்களைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பையில் போடுவான், நீர் அருந்துவான். இதுதான் குருசேத்ரன்.
சுப்ரியா வெளியே செல்ல, “ஹே! அந்த நர்ஸ்?” எனக் குரு கேட்க, “உங்க வீட்லதான் இருக்கா! கவலை வேணாம்,” என்றுவிட்டு கிளம்பினாள் சுப்ரியா. செம்பருத்தி மிகவும் பக்குவமான பெண், அதனால் கண்டிப்பாக இந்த ஆறு மாதங்களும் பிரச்னை இல்லாமல் செல்லும் என நினைத்தாள். ஆனால், போர்க்களத்தில் ஒரு பூவின் நிலைதான் செம்பருத்திக்கும் எனத் தெரியவில்லை அவளுக்கு.
இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தான் குருசேத்ரன். மணியம்மையின் சிரிப்புச் சத்தம் கேட்டது, செம்பருத்தியும் சிரித்தாள்.
“செம்பா, அந்த ஜோக் திரும்பவும் சொல்லேன்,” எனக் மணியம்மை கேட்க, “அய்யோ மேடம்,” என சாந்தா சிக்னல் கொடுப்பதைப் பார்த்தாள் செம்பருத்தி.
“ஹே செம்பா, சொல்லு,” என மணியம்மை சொல்ல, பூட்ஸ் சத்தம் கேட்டது.
“மேடம், இப்போ நீங்க தூங்க வேண்டிய நேரம், வாங்க போலாம்,” என செம்பருத்தி அழைத்துச் செல்ல, “கடன்காரன் வந்தட்டானா?” என நினைத்தவர், “ஆமா, எனக்குத் தூக்கம் கண்ணைக் கட்டுது,” எனச் சொல்லிக்கொண்டே தலை குனிந்தபடி அவளின் பின்னால் கிளம்பிவிட்டார்.
“தூங்குங்க,” என செம்பருத்தி திரும்ப, மணியம்மை அவளின் கையைப் பிடித்தார்.
“என்னாச்சு மேடம்?” என செம்பருத்தி கேட்க, “உன்னைப் போல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தால், இந்நேரம் இவன் கூட நான் இருந்திருக்கவே மாட்டேன். என்னை டார்ச்சர் பண்றான்,” எனக் கண்ணாடியைக் கழட்டியபடி கூறினார்.
“அவருக்கு உங்க மேலே பாசம் மேடம்.”
“அது விஷம் மா! என்னை ஓவர் புரோடெக்டிவ் பண்றான். எங்கேயும் அனுப்ப மாட்டான். யார்கிட்டயும் பேச விட மாட்டான். குரங்கு மாதிரி முகத்தை வெச்சுட்டு இருக்கான். இவன்கிட்ட நான் என்ன பேச முடியும்? அவன் மட்டும் ஜாலியா வெளியே போயிட்டு வருவான். என்னை கோவிலுக்குக் கூட அனுப்ப மாட்டான். இப்படியே என்னோட மனபாரத்தில் அளவுக்கு அதிகமா சாப்பிட்டேன். எனக்கே தெரியல, விரக்தி. அதுதான் இத்தனை நோயைக் கொடுத்திடுச்சு. மனசுக்குக் கஷ்டமா இருந்தால் சாப்பிடுங்க அப்டின்னு சொல்லுவாங்களே, அப்படிதான் மன கஷ்டத்தில், அழுத்தத்தில் இந்த நோய். நான் என் ஃப்ரண்ட்ஸ் கூட ஃபோன் பேசி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவேன். அதையும் புடுங்கி வெச்சுட்டான்,” என்றார் மணியம்மை.
அவரின் கையைப் பிடித்துக்கொண்டவள், “கவலைப்படாதீங்க. நாளைக்கு உங்க ஃப்ரண்ட்ஸ் கூட பேசலாம்.”
“ஹே! என்ன சொல்ற?” என அவரின் கண்கள் பளிச்சிட, “நான் இருக்கேன்,” என்றாள் கண் சிமிட்டிக்கொண்டு.
“அய்யோ என் இனிப்பு தேவதையே! நீ கண்டிப்பா ஃபேரி டேல் தான்,” என்றார்.
செம்பருத்தி அவரை இன்முகத்துடன் உறங்க வைத்துவிட்டு வெளியே வர, அங்கே ராட்சசன் நின்றிருந்தான். ஒரு நொடி பயந்துதான் போனாள். ஆனால், தன்னைச் சரி செய்துகொண்டு நடக்க, “வெயிட் பண்ணு,” என்றுவிட்டு தன் அன்னையின் அறைக்குள் சென்றான்.
அவன் வரும்வரை காத்திருந்தாள் செம்பருத்தி.
ஆளுமையாக அறைக்குள் இருந்து வந்தவன், “சொல்லு,” என மார்புக்குக் குறுக்காகக் கைகட்டியபடி நின்றான்.
“என்ன சொல்லணும்?”
“எக்ஸ்பிளைன் நேச்சுரல் ஸ்வீட்னர் அண்ட் சிந்தடிக் ஸ்வீட்னர்?” என்றான்.
‘இவன் யார்? எப்படிப்பட்டவன்? என்னைப் பார்த்தால் 12th படிக்கிற ஸ்கூல் கேர்ள் மாதிரி இவனுக்குத் தெரியுதா?’ என செம்பருத்தியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“ஹே, உன்னைத்தான்! ஆர் யூ ஹியர்? காது கேட்கும்தானே உனக்கு?”
செம்பருத்தி ஒரு பெருமூச்சை விட்டவள் வேறு வழியில்லாமல் கூறினாள். “அது லோ கேலரி. நம்ம டேஸ்ட் பட்ஸ்ல அந்த ஸ்வீட்னரை ஃபீல் பண்ண வைக்கும். அதனால அவங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. நம்மளைப் போலத்தானே அவங்களும், இன்ஃபேக்ட் அவங்க ஒரு குழந்தை போல. அப்படிதான் நம்மளும் ட்ரீட் பண்ணனும்,” என்றாள்.
“தட்ஸ் ஓகே,” என்றான்.
“அப்போ நான் போகவா?” என செம்பருத்தி அவன் முகத்தைப் பார்க்காமல் கூறினாள்.
“உன்னோட ஃபோன் நம்பர் கொடு.”
“எதுக்கு?” என அவள் அதிர்ச்சியில் பார்த்தாள்.
“யூ ஆர் மை மதர்ஸ் கேர் டேக்கர். என் மம்மியைப் பத்தி விசாரிக்கத்தான் கேட்டேன். யூ இடியட்,” என ஆரம்பித்தவன், “காம் டவுன், காம் டவுன்,” எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
“நான் அந்த ஆங்கிள்ல இருந்து யோசிக்கல,” என்று கூறியவள் எண்களைக் கூறினாள்.
“உன்னோட நேம் காப்பர் ரைட்? ஓகே, நீ போலாம்.”
“ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ,” என்று அதிர்ச்சியுடன் அழைத்தாள்.
“வாட்?” எனத் தலையை மட்டும் திருப்பினான் குரு.
“என்னோட பேர் காப்பர் இல்ல.”
“ஹே, உன்னை என் மாம் அப்டித்தானே கூப்பிட்டாங்க?”
செம்பருத்தி வேறு புறம் திரும்பி கொண்டு, “என் பேர் செம்பருத்தி,” என்றாள்.
“ஓ, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்.”
“எஸ்,” என்றவள் அதிர்ந்து, “நோ நோ செம்பருத்தி!” என்றாள்.
“தட்ஸ் ஓகே,” என்றுவிட்டு அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
இதோ, இரண்டு நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றது. மணியம்மை முன்பைவிட உற்சாகமாக இருந்தார். செம்பருத்தி நேரத்திலேயே எழுந்துகொள்வாள். மணியம்மையைத் தினமும் எழுப்பிவிட்டு அவருடன் ஜாகிங் செல்வாள். அவ்வப்பொழுது சுப்ரியா ஃபோன் செய்து விசாரித்தாள். ‘நல்ல வேளை, எந்தப் பிரச்னையும் இல்ல, ரொம்ப சந்தோஷம்,’ என அவரவர் வேலையைப் பார்த்தார்கள்.
“என் ஃப்ரெண்ட்ட பேசவைக்கிறேன்னு சொன்னியே செம்பா? என்னை ரெண்டு நாள் ஏமாத்திட்ட? நீ?” என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டார் மணியம்மை.
“அய்யோ மேடம், நான் இந்த வீட்டை செக் பண்ணதுல, உங்க பையன் டெய்லி நைட் ரெக்கார்டிங் ரூம் போறாரு. அங்கே ஃபுட்டேஜ் செக் பண்றார். அதான் யோசிச்சிட்டு இருக்கேன். எப்படி கொடுக்க அப்டின்னு,” என்றாள் செம்பருத்தி.
“அப்டியா? இதை வேற பண்றானா?” எனச் செம்பருத்தி நொடித்துக்கொண்டார்.
“மைக் செட் பண்ணியிருக்கக்கூட வாய்ப்பிருக்கு. அதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நாளைக்கு என்னால உங்களைத் திட்டிட்டா என்ன பண்றது?” எனக் கூறினாள் செம்பருத்தி.
“அப்டியா? அப்போ பொறுமையா பண்ணு மா,” என்றவர் சிறிது நேரம் கழித்து, “வேணாம் மா, என்னால உனக்குப் பிரச்னை வந்திடப்போகுது,” என விரக்தியாகச் சொல்லிவிட்டு நடந்தார்.
செம்பருத்தி பெருமூச்சுடன் நடந்தாள். மணியம்மை சொன்னது மனதில் அழுத்தமாகப் பதிந்துபோக, வீட்டின் பின்பக்கம் நீச்சல் குளத்தின் பக்கம் இருக்கும் கல் மேடையில் அமர்ந்திருந்தாள்.
அவ்விடத்துக்கு வந்த சாந்தா அவளிடம் “டீ குடி மா,” என கொடுத்துவிட்டுச் செல்ல, “மேடம் நீச்சல் அடிப்பாங்களா?” என செம்பருத்தி கேட்க, சாந்தா சிரித்துக்கொண்டே, “இது குரு தம்பி நீச்சல் அடிக்க. அவரு நீச்சல் வீரர். எல்லா விளையாட்டுகளிலும் முதல் இடம்,” என்றார்.
“ஓ அப்படியா?” என செம்பருத்தி கூறிவிட்டு டீயில் கவனம் செலுத்த, “எனக்கும் இதுல விளையாட ஆசை! உனக்கு நீச்சல் தெரியுமா செம்பா?” எனக் கேட்டார் சாந்தா.
“அய்யோ நீங்க வேற? எனக்கு இதெல்லாம் தெரியாது,” எனச் சொல்லிக்கொண்டே செம்பருத்தி டீயைக் குடித்தவள் அவருடன் பொதுவாகப் பேசிவிட்டு உள்ளே சென்றாள்.
“இன்னிக்கி என்ன சமையல்?” என மணியம்மை கேட்க, சாந்தா சொன்ன உணவுப் பட்டியல் கேட்டதும் வாந்தி வராத குறைதான்.
“தம்பி இதைத்தான் செய்யச் சொல்லிட்டுப் போயிருக்கார்,” என சாந்தா கூற, “செம்பா,” என அழைத்த மணியம்மை அவளின் கையைப் பிடித்து, “எனக்கு அசைவம் சாப்பிடணும்போல இருக்கு. மீன் பொறிச்சது, ஈரல், கறிக்குழம்பு வேணும், பிரியாணி வேணும், சிக்கன் ஆசையா இருக்கு. எதுவும் செய் ப்ளீஸ் டா! ப்ளீஸ்,” என கெஞ்சினார் மணியம்மை.
“அப்டியா? வெயிட் பண்ணுங்க,” எனத் தீவிரமாக யோசித்தவள், “அப்போ நீங்க உள்ளேயே வெயிட் பண்ணுங்க. செஞ்சு முடிச்சதும் தான் வெளியே வரணும்,” எனச் செம்பருத்தி கூற, “கண்ணு,” என சாந்தா எச்சரிக்க, மணியம்மை பாவமாகப் பார்த்தார்.
“நீங்க உள்ளே போங்க மா!” எனச் செம்பருத்தி கூற, மணியம்மை ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் அருகில் வந்த செம்பருத்தி மெதுவான குரலில் அனைத்தையும் கூறி வீடியோவைக் காட்ட, “கண்ணு,” என சாந்தா அதிர்ச்சியுடன் பார்த்தவர், “இதோ செய்றேன் கண்ணு,” என வேகமாக உற்சாகத்துடன் சமைத்தார்.
“அக்கா நானும் வரவா?” என செம்பருத்தி கேட்க, “வேணாம் டா,” என சாந்தா மறுக்க, “இல்ல நான் வருவேன்,” என மொத்தமாக அனைத்தையும் சமைத்து முடிக்க மதியம் 12 ஆனது.
“மேடம் வரலாம்,” எனக் கதவைத் தட்டினாள் செம்பருத்தி.
வாசத்தை முகர்ந்த மணியம்மையின் கண்கள் விரிய, “இது சாந்தா சமைச்சபோல இல்லையே! தேவதையும் சேர்ந்து சமைச்சீங்களா?” என செம்பருத்தியைப் பார்த்தார் மணியம்மை.
“எஸ்,” எனத் தலையைத் தாழ்ந்து வரவேற்றாள்.
“எப்ப எப்பா!” என வேகமாக வந்தவர் இலையைப் பார்த்ததும் மலைத்துவிட்டார். “ஹே, சிக்கன் பிரியாணி, முட்டை ஆம்லெட், கல் மீன், ஈரல் வறுவல், மீன் குழம்பு, ரத்தப் பொரியல், சிக்கன் பிரியாணி சூப்பர்,” என கண்களில் நீர் கோர்க்க அவர் ஒரு வாய் வைக்க, “நோ!” என கத்திக்கொண்டே உள்ளே வந்தான் குருசேத்ரன்.
மணியம்மை பதட்டத்துடன் எழுந்தார். குரு கோபத்துடன் மேஜையில் இருக்கும் இலையை ஆவேசமாகத் தட்டிவிட்டான்.
“அம்மா!” என செம்பருத்தி பயத்துடன் நிற்க, “சார் சொல்றதக் கேளுங்க,” என சாந்தா ஆரம்பிக்க, செம்பருத்தியைப் பார்த்தவன், “யாருகிட்ட எவ்ளோ பணம் வாங்கிட்டு வந்த? எங்கம்மாவைக் கொல்ல பிளான் பண்ணித்தானே வந்திருக்க? யாருடி நீ? உன்னை,” என அடிக்கக் கை ஓங்கினான் குரு.
“டேய் நிறுத்துடா! நான் தான் அசைவம் கேட்டேன். அந்தப் பொண்ணு மேலே எந்தத் தப்பும் இல்ல,” என மணியம்மை கத்த, “மா, உள்ளே போங்க!” எனக் கத்தியவன், செம்பருத்தியின் பக்கம் திரும்பி, “வெளியில போடி! உன்னை,” என ஆரம்பிக்க, “என்ன நடக்குது?” எனக் கேட்டுக்கொண்டே சுப்ரியா வந்தாள்.
செம்பருத்தி அழுதுகொண்டே, “மேடம், இவர்,” என ஆரம்பிக்க, “நான் சொல்றேன்,” என சாந்தா அவர்களின் முன் வந்து நின்றார்.