அத்தியாயம்-12

“கையில வளையல் எங்கே?” எனக் கேட்க…

“ரூம்ல இருக்கு மேடம்! நீங்க டேப்லெட் போட்டீங்களா?” என அனைத்தையும் கேட்டவள், அவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு நொண்டி நொண்டி நடந்து அறைக்குள் சென்று விட்டாள்.

“என்னாச்சு? ஒரு மாதிரி நடக்கிறா?” என்று மணியம்மை சாந்தாவிடம் கேட்க, “நான் காலையிலேயே கேட்டேன் மேடம். அது செம்பருத்தி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாளாம். அதனால கால் சுளுக்கிடுச்சு.”

“அப்படியா? அப்போ அவ ‘ரெஸ்ட்’ எடுக்கட்டும். நான் போய் சொல்லிட்டு வர்றேன்,” என்று மணியம்மை அவளின் அறைக்குச் சென்றார்.

செம்பருத்தி மெல்ல வலியை அடக்கிக்கொண்டு படுக்க, அந்த நேரம் மணியம்மை வந்தார். “என்னாச்சு மேடம்? எதுவும் வேணுமா? நான் எதுவும் மறந்துட்டேனா?” என செம்பருத்தி பதட்டத்துடன் எழுந்து கேட்க…

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் இல்ல. உனக்கு கால்ல அடிபட்டு இருக்குன்னு சாந்தா சொன்னா.”

“அவங்களுக்கு எப்படித் தெரியும்? அய்யோ!!” என நினைத்தவள், பதட்டத்துடன், “மேடம், அவங்க என்ன சொன்னாங்க?”

“நீ பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்துட்டியாமே? பார்த்துப் போக வேணாமா மா!”

“அது ஹான், ஆமா மேடம். தூக்கக் கலக்கத்துல அப்படியே ஆகிடுச்சு,” என்றாள் செம்பருத்தி.

அவளது முகத்தில் ஏதோ ஒன்று குறைவதைப் பார்த்த மணியம்மை, “உனக்கு ஏதாவது பிரச்சனையா? இன்னைக்கு காலையிலிருந்து நீ கொஞ்சம் ஒரு மாதிரி நடந்துக்கிற? எதுவும் பிரச்சனையா? என்கிட்ட எதுவும் சொல்லணுமா?”

“அது பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல மேடம்… நான் வந்து சுப்ரியா மேடம் கிட்ட பேசலாம்னு இருந்தேன்.”

“என்ன விஷயம்? என்னைப் பத்தியா?” என்று மணியம்மை கேட்க…

செம்பருத்தி மென்னகை புரிந்தவள், “எனக்குக் கொஞ்சம் ‘லீவு’ வேணும். எங்க அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு. அதுதான் உங்களோட ரிப்போர்ட் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நான் வீட்டுக்கு ஒரு வாரம் போய் தங்கிட்டு வரலாம்னு இருக்கேன். அதுக்குத் தான் மேடம்.”

மணியம்மை சிரித்துக்கொண்டே, “சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. என்கிட்ட நீ ஒரு வார்த்தை கூட சொல்லல,” என கேட்க…

“சாரி மேடம். அது எனக்கே நைட்டு தான் தெரியும். நேத்து நீங்க உங்க ஃபிரெண்ட்ஸ் கூடப் பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தீங்கள்ள! அதனால காலையில சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.”

“சரிமா, ஒண்ணும் பிரச்சனை இல்லை… எனக்கு ரொம்பச் சந்தோஷம்! ஆமா, அக்காவுக்கு என்ன குழந்தை?” என்று மணியம்மை கேட்க…

“பையன்.”

“சரிமா, நீ வீட்டுக்குப் போயிட்டு வா.”

“இல்ல மேடம். சுப்ரியா மேடம் கிட்ட கேட்டுட்டு தான் போகணும்,” என சுப்ரியாவுக்கு போன் செய்து விவரங்களை கூறினாள்.

“சரி, நான் வந்து பார்க்கிறேன்,” என்று அங்கே சுப்ரியா வந்து மணியம்மையை முழுவதுமாகச் ‘செக்’ செய்தவள், புன்னகையுடன் பார்த்தாள்.

“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என்று பதட்டத்துடன் கேட்டார் மணியம்மை.

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லை. முன்பை விட இப்போ நீங்க நல்லா இருக்கீங்க,” என்றாள் சுப்ரியா.

“ரொம்பச் சந்தோஷம். அப்போ செம்பருத்தி போயிட்டு வரட்டும்,” என்று மணியம்மை அனுப்பி வைக்க…

விட்டால் போதும் என்று புறப்பட்டு விட்டாள் செம்பருத்தி. கிட்டத்தட்ட ஒரு வாரம் அவளின் வீட்டில் நேரம் செலவழித்தாள். எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அதைவிட இந்த குருசேத்ரன் இப்படி ஒரு வேலையைச் செய்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அங்கே இருந்தால் அவனை எப்படிச் சமாளிப்பது என தெரியாமல் தான் வீட்டுக்கு வந்திருந்தாள். கணக்குப்படி பார்த்தால் மொத்தம் ஆறு மாதங்களில் நான்கு மாதங்கள் வேகமாக ஓடியிருந்தது. ஆனால் இன்னும் இன்னும் இரண்டு மாதங்கள்? இரண்டு வருடங்களை போல இருக்கிறதே! அய்யோ, கடவுளே! சீக்கிரமாகக் கண்ண மூடி ஓட்ற மாதிரி ஓடிப் போயிடணும். கடவுளே! நீங்க தான் எனக்கு உதவி பண்ணணும்,” என்று வேண்டிக்கொண்டாள் செம்பருத்தி.

அவ்வப்பொழுது மணியம்மையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. “வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? நீ சரியா சாப்பிடுறியா? நீ இல்லாம எனக்கு ரொம்ப ‘போர்’ அடிக்குது. எப்ப நீ வருவ?” என்று கேட்டார்.

செம்பருத்தி, திட்டிக்கிட்டு, “மேடம், வந்துருவ மேடம்,” என்று சமாளிக்க…

மணியம்மையால் அவளின் பிரிவை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் தன் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பவள் அவளது வீட்டில் இருப்பது கொஞ்சம் புதுமையாக இருந்தது.

இப்படித்தான் இன்னொருவனுக்கும் இருக்கிறது. பார்ப்போம், என்ன செய்யப் போகிறான் என்று.

“இல்லம்மா, எனக்குப் புரியுது. நான் சும்மா கேட்டுட்டேன். நான் வேற யார் கூட பேசப் போறேன்? எனக்கு உன்னையும் சாந்தாவையும் தவிர வேற என்ன தெரியும்? நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாமே! சரி, நீ இருந்துட்டு வா. இனிமே போன் பண்ணி ‘டிஸ்டர்ப்’ பண்ண மாட்டேன்,” என்று கூறிவிட்டு வைத்தார்.

இன்னொரு பக்கம் குருசேத்ரன் கூட எதையும் கண்டுகொள்ளாமல் தான் சுற்றிக்கொண்டிருந்தான். தெரியும், இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். அவள் கண்டிப்பாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள். ஏனென்றால் குருசேத்ரனை விட மிகவும் அழுத்தம் உள்ள பெண் தான் செம்பருத்தி.

அவள் விடுப்பு எடுத்து ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், செம்பருத்தி நேராக சென்றது என்னவோ சுப்ரியாவை பார்க்கத்தான்.

அப்பொழுதுதான் ஒரு ‘டெலிவரி கேஸை’ ‘அட்டென்ட்’ செய்துவிட்டு அவளது ‘கேபினுக்கு’ வந்து அமர்ந்தாள் சுப்ரியா.

“மே ஐ கமின் மேடம்?” என்ற வந்து நின்றாள் செம்பருத்தி.

“என்னாச்சு? இங்க வந்திருக்க? மேடம் எப்படி இருக்கீங்க?” என்று சிரிப்புடன் சுப்ரியா கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன் மேடம். இப்போ மணியம்மை மேடம் எப்படி இருக்காங்க? அதாவது அவங்களோட ‘ஹெல்த் கண்டிஷன்’ ஓகேவா? அதை பத்தி விசாரிக்க தான் உங்ககிட்ட பேச வந்தேன்.”

“ம்ம், டியர், அவங்க நல்லா இருக்காங்க. என்னாச்சு? நீயே வந்து அவங்களை பத்தி கேட்கிற? ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல மேடம், அது வந்து…” என தயங்கிக்கொண்டே பார்த்தவள், “நாலு மாசம் முடிஞ்சிடுச்சு. மேடம் பூரணமா குணமடைஞ்சுட்டா அங்க நான் போக தேவையில்லல்ல. அது நான் இங்கே ஹாஸ்பிடலுக்கே வந்துட்டு போயிடுவேன்ல. வீட்டு ஞாபகம் ரொம்ப அதிகமா இருக்கு. அதுக்காக தான் உங்ககிட்ட அத பத்தி கேட்க வந்தேன்,” என்றாள் செம்பருத்தி.

சுப்ரியா அவளை உற்றுப் பார்க்க…

“என்னாச்சு மேடம்? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா…” என செம்பருத்தி கைகளை பிசைந்தபடி கேட்டாள்.

“இல்ல, சும்மா பார்த்தேன். அங்கே உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல தான? யாராவது ஏதும் சொல்லிட்டாங்களா? கண்டிப்பா ஆன்ட்டி எதுவும் சொல்லிருக்க மாட்டாங்க!!” என்றவள், “குரு ஏதாவது பேசிட்டானா? ஏன்னா அவன் ‘டூ மச்சா’ பேசுவான்! மற்றபடிக்கு நல்ல கேரக்டர்தான்…” என்றாள் சுப்ரியா.

“ரொம்ப நல்ல கேரக்டர்! நீங்க தான் மெச்சிக்கணும். அந்த மலைக்குரங்கு என்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டான்,” என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க…

“சரி சரி, நானும் முக்கியமான ‘கான்ஃபரன்ஸ்’ வேலையா ‘அப்ராட்’ போறேன். போறதுக்கு முன்னாடி ஆன்ட்டியை ‘செக்’ பண்ணிக்கலாம். அவங்க ஃபுல்லா அவங்களோட ரிப்போர்ட்ஸையும் நானும் பார்த்துகிறேன். அண்ட் எல்லாமே ஓகேவா இருக்கிற பட்சத்துல நீ அங்க இனி போக வேண்டாம். நீ இங்கேயே ‘கண்டினியூ’ பண்ணிக்கோ,” என்று புன்னகையுடன் கூறினாள்.

“ரொம்பச் சந்தோஷம்! இனிமே அவன் மூஞ்சில முழிக்க வேண்டாம்,” என நினைத்த செம்பருத்தி, “அப்போ நான் அங்க கிளம்பறேன் மேடம்,” என்று அவள் புறப்பட்டாள்.

“எதுக்கு இப்படி அறக்கப் பறக்கப் போய் வெளியவே எட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று சாந்தா கேட்க…

“செம்பருத்தி வரப்போறா! அதுக்கு தான்… அவளைப் பார்த்து ஒரு வாரமாச்சு…” என்று மணியம்மை கூற…

“இன்னும் ரெண்டு மாசம் தானே? அப்புறம் நீங்க இப்போவே சரியாகிட்டீங்க! செம்பருத்தி இனி ஹாஸ்பிடல் தானே போவா?”

“நான் சரியாகிட்டேன். அப்போ செம்பருத்தி இனி இங்க வரமாட்டா,” என்று மணியம்மை தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்க…

“மேடம், எந்த உலகத்தில் இருக்கீங்க?” என்று கத்தினாள் செம்பருத்தி.

“அம்மாடி, வந்துட்டியா?” “செம்பருத்தி வந்தாச்சு,” என்றவர் அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். “வவ் வவ்,” என்று ‘திங்க்’ குறைக்க…

“அடி வாங்க போறடா!! என்ன பண்ணிட்டு இருக்க? நீ தள்ளிப்போ!! செம்பருத்தி, நீ உள்ள வாம்மா,” என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.

“ஒரு வழியா நீ வந்துட்டியா? இவ்வளவு நேரம் உன்னைப் பத்தி தான் மேடம் பேசிக்கிட்டே இருந்தாங்க. உன்னை மேடம் ‘லவ்’ பண்றாங்க போல,” என்று அவளுக்குக் காபி எடுத்துக்கொடுத்தார்.

செம்பருத்தி சிரித்துக்கொண்டே, “அப்படியா மேடம்?” என்ற மணியம்மையைப் பார்க்க…

“அப்படி இல்ல. என் கைக்குள்ளேயே நீ இருந்தியா! ஹான், இல்லல்ல, உன்னோட கைக்குள்ள தான் நான் இருந்தேன். நீ தான என்ன பத்திரமா பார்த்துக்கிட்ட! உன் கூடவே டெய்லியும் பேசுவேனா? எனக்கு நேரம் போறதே தெரியல! திடீர்னு இத்தனை நாள் நான் உன்னை பிரிஞ்சு இருந்ததே இல்ல. அதனால எப்பபோடா உன்னைப் பார்ப்போம்னு இருந்தது,” என்றார் மணியம்மை.

அவரின் அன்பில் ஒரு நொடி நெகிழ்ந்து தான் போனாள் செம்பருத்தி. அவள் மனதில், ‘இங்க இனி நான் இருக்கக் கூடாது. இருந்தா தேவையில்லாத பிரச்சனை என்னோட குடும்பத்துக்கும், அண்ட் மேடத்தோட மனசு என்னால சங்கடப்படும். நம்ம இங்கிருந்து போறது தான் நல்லது,’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

சுப்ரியா அடுத்த இரண்டு நாள் கழித்து குருசேத்திரன் வீட்டுக்கு வந்திருந்தாள்.

“ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க?” என்று சுப்ரியா ஒரு குழுவுடன் வந்திருந்தாள்.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்க? மேடம், எப்ப கல்யாணம் பண்றதாக இருக்கீங்க?” என்று மணியம்மை கேட்க…

“‘அப்ராட்’ முடிச்சிட்டு வந்து பொறுமையா பேசிக்கலாம்,” என்று சிரித்துக்கொண்டே கூறியவள், “சரி, குரு இருக்கானா? கால் பண்ணு, ‘கனெக்ட்’ ஆகல,” எனக் கேட்டாள்.

“சொல்லு, என்ன விஷயம்? திடீர்னு வந்திருக்க?” என்று மேலிருந்து கீழே இறங்கி வந்தான் குருசேத்ரன்.

கிட்டத்தட்ட இந்த இரண்டு வாரம் கழித்து இப்பொழுதுதான் செம்பருத்தி அவனைப் பார்க்கிறாள்.

ஆனால் அவன்? அவள் பக்கம் பார்வையை கூட திருப்பவில்லை.

“எல்லாம் சந்தோஷமான விஷயம் தான்,” என்று சுப்ரியா கூற…

“ஊரை விட்டுப் போகப் போறியா என்ன?”

“கண்டிப்பா ஊரை விட்டு தான் போறேன். அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம்,” என்று சொல்லிக்கொண்டே மணியம்மையைப் பார்த்தாள் சுப்ரியா.

“என்ன விஷயம்?” என்று மணியம்மை கேட்க…

“இந்த மூணு மாசத்தோட ரிப்போர்ட் நல்லபடியா வந்திருக்கு. நீங்க இப்போ ‘ஹெல்தியா’ இருக்கீங்க. எந்தப் பிரச்சனையும் இல்ல. ‘சுகர் லெவல்’ நார்மலா இருக்கு… இப்ப நீங்க ‘ஃபாலோ’ பண்ற ‘டயட்டை’ அப்படியே ‘கண்டினியூ’ பண்ணுங்க. இனிமேல் உங்களுக்கு ஒரு ‘டேக் கேர் நர்ஸ்’ தேவையில்ல. அந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்றதுக்கு தான் நான் வந்தேன். செம்பருத்தி, நீங்க இனிமேல் நாளைல இருந்து ஹாஸ்பிடல்ல ‘ஜாயின்’ பண்ணிக்கோங்க,” என்றாள் சுப்ரியா.

“ஓகே மேடம்,” என்று செம்பருத்தி முகத்தில் வெளிச்சம், தேஜஸ் தெரிய மணியம்மையின் முகம் வாடிப்போனது.

“என்னாச்சு ஆன்ட்டி? நான் எவ்ளோ பெரிய சந்தோஷமான விஷயத்தைச் சொல்லி இருக்கேன்? நீங்க உங்களோட முகம் சரியில்லையே? என்னாச்சு ஆன்ட்டி?” என்று கேட்டாள் சுப்ரியா.

மணியம்மை…?

தொடரும்…