தியாகுவின் மேலிருந்த ஒதுக்கும் போய்.. ‘என் மாமா எனக்கும் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் துளியும் குற்றயுணர்வில்லாமல் எழுந்தது. உடனே “மாமா வடை நீங்க சாப்பிடல.. வாங்க” என சொல்லி.. தான் உண்டுக் கொண்டிருந்த வடை எடுத்து நீட்டினாள் ராஜி.
தியாகு “எனக்கு பசி. நான் சாப்பிட்டுதான் எல்லோருக்கும் வாங்கிட்டு வந்தேன். நீ சாப்பிடு” என சொல்லி வண்டி சாவியோடு, தன்வேலையை கவனிக்க கிளம்பினான்.
ராஜி இந்த வாழ்க்கையை தினம் தினம் பார்த்து பார்த்து.. உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். தியாகு மாமா தியாகு மாமா என அலுவகத்தில் சிலநேரம் சத்தமாக அழைத்து.. வேலை செய்பவர்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தாள்.. அடுத்த நான்கு மாதங்களில்.
ராஜி மனதை மாற்றிக் கொண்டே இருந்தாள்.. அத்தோடு, அதன் போக்கில் சென்றுக் கொண்டேயிருந்தாள். தியாகுவை விரும்பினாள்.. அவனுக்கு மணம் ஆகிவிட.. கொஞ்சநாள் சோகம்.. அடுத்து இன்னொருவரை விரும்ப.. அதை வீட்டில் முடியாது என்க.. அதில் சோகம். அத்தோடு, பிடிவாதமாக நிற்காமல்.. வீட்டில் சொல்லிய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினாள்.. அதையும் தக்க வைத்துக் கொள்ளாமல்.. இப்போது மீண்டும், தியாகு மாமா என மனம் சொல்ல.. அதன் வழி அவளும் செல்ல.. தன்னை தன்னை சார்ந்தவர்களையும், அவளுக்கே தெரியாமல் வதைக்க தொடங்கினாள்.
லலிதாவிற்கு, ராஜியின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் கோவமாக வந்தது ‘எதுக்கு இன்னமும் இங்கே இருக்கா.. இவர் சொல்ல மாட்டாரா இங்கே வராதேயேன..’ என எண்ணிக் கொண்டே தங்களின் அலுவலகத்தை கடந்தாள்.
லலிதா செய்த மற்றுமொரு தவறு இது. அப்போதே.. சொல்லியிருக்க வேண்டும் ராஜியிடம்.. இங்கே வராதே.. இது எங்கள் இடமென. லலிதா கணவனுக்காக பொறுமையாக இருந்தாள். தன் துணி பற்றி எரியும் வரை பொறுமையாக இருப்பது என்பதும் ஆபத்துதானே.
கிருஷ்ணன் நான்கு மாதங்களாக பேசி பேசி.. மனோஜ் வீட்டாரிடம் எடுத்து சொல்லி.. நடையாக நடந்து, அலையாக அலைந்து.. ராஜியை போனில் அவர்களிடம் பேச வைத்து.. மன்னிப்பு கேட்க வைத்தனர். தியாகுவிற்கும் ராஜிகும்தான் திருமணம் என பெரியவர்கள் பேசியிருந்தோம்.. அதனால் ராஜிக்கு தியாகு லலிதாவை திருமணம் செய்துக் கொண்டது வருத்தம் என ஒருவழியாக உண்மையை சொல்லி.. மழுப்பி.. அதனால்தான் தியாகுவை நாங்கள் ஏற்கவில்லை.. ராஜிக்கு மாமா என ப்ரியம் மற்றபடி ஒன்றுமில்லை.. என உளறி கொட்டி கிளறி மூடி.. ராஜியின் வாழ்க்கையை நேர் செய்ய போராடினர். சொந்தங்களும் அப்படிதான் என சொல்லியதால்.. மனோஜ் வீட்டார் மனமிறங்கினார்.
கிருஷ்ணன், ராஜியிடம் போராடி சம்மதம் வாங்கினார். ராஜி தியாகுவின் அலுவலகத்திற்கு செல்லுவது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. சொல்லியும் கேட்பதாக இல்லை அவள். அத்தோடு எத்தனை நாள் அவளை இப்படி விட முடியும் என.. ராஜியை, கிருஷ்ணன் மிரட்டி.. நீ சேர்ந்து வாழ வேண்டும் இல்லை.. நான் போய் சேர்ந்திடுவேன் என மிரட்டித்தான் மனோஜ் வீட்டாரிடம் பேசி மன்னிப்பு கேட்க வைத்தார் கிருஷ்ணன்.
நல்லபடியாக கோவையில் ராஜி மனோஜ் இருவரையும் தனி குடுத்தனம் வைத்தனர் இருவீட்டாரும்.
!@!@!@!@!@!@!@!@!
இன்று..
தியாகு, AC பிக்ஸ் செய்து கொடுத்து.. பெண்ணிடம் விடைபெற்று கிளம்பினான். மனையாள், அடுத்த அறையில் இருந்தாள்.. வெளியே வரவேயில்லை. தியாகு, ஒருமுறை மேலே சென்று பார்த்து வந்தான் அவ்வளவுதான். மற்றபடி, வந்தவர்களுக்கு காசு கொடுத்து அனுப்பினான். மனையாள், நேற்று மன்னிப்பு வேண்டியிருந்தது.. ஒருமாதிரி உறுத்தியது. ‘அவ்வளவுதான் சந்தேகம் என ஒரு உணர்வாவது எங்களுக்குள் இருந்தது.. இப்போது, அதையும் முடித்துக் கொண்டாள். மன்னிப்பும் கேட்டுவிட்டாள்.. முடிந்தது போல.. முடித்துக் கொண்டாள்’ என எண்ணம். காரினை வேகமாக செலுத்திக் கொண்டு வந்தான்.
தாங்கள் குடும்பமாக முன்பு இருந்த வீட்டிற்கு வந்தான்.. பெரிதாக சாமான்கள் ஏதுமில்லை.. அத்யாவசிய சாமான்கள் இருந்தது. ‘எல்லாம் தாங்கள் இருவரும் பார்த்து பார்த்து வாங்கி சேர்த்தது.. அத்தோடு அவள் மட்டுமே புழங்கிய வீடு.. யாரும் வந்து நின்றதில்லை இந்த வீட்டில்..’ என எண்ணிக் கொண்டே சேரில் அமர்ந்தான். வீடு வெறிச்சோடியிருந்தது. ம்.. போகியத்திருக்கு எடுத்திருந்தனர் அதனால் இன்னமும் வீட்டினை காலி செய்யவில்லை தியாகு. மனதில்லை.. இதை விடுவதற்கு.
விடுமுறை தினம் என்பதால் எங்கும் செல்ல வேண்டியதில்லை.. எனவே, உடைமாற்றி வந்தான். துடைப்பம் எடுத்து வீட்டினை சுத்தம் செய்தான்.. அடிக்கடி வேலையாட்களை அனுப்பி சுத்தம் செய்துக் கொள்கிறான். ஆனால், அவன் இங்கே வருவதில்லை, சிலமாதங்களாக. ம்.. முன்பெல்லாம் வீம்பாக இங்கே வந்து தங்கிக் கொள்வான்.. என்னை மதிக்காதவளை நான் ஏன் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.. என் மனது சுத்தம்.. நான் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.. என கோவமாக திமிராக இங்கே வந்து.. அவள் என் நினைவில் இல்லை என தனக்கு தானே காட்டிக் கொள்வான்.
ஒரு கட்டத்திற்கு மேல்.. கோவம் வீம்பு திமிர் எல்லாம் அர்த்தமற்றதாக தோன்ற இங்கே வந்தால்.. அவள் மற்றும் பிள்ளைகளின் நினைவுமே அதிகமாக வருவதால்.. பிடித்த வீட்டினையும் விட்டு தள்ளி சென்றான்.
ஆதனால், தான் இங்கு வந்து நீண்டநாட்கள் ஆகிற்று என எண்ணிக் கொண்டே வேலையை பார்த்தான். மனது அவளோடு இருந்த நாட்களை ஒட்டிக் கொண்டது.. மனதுள். வீட்டில் இருந்தால்.. தொடர் விடுமுறை என வந்தால்.. இரவு நேரங்களில் நால்வருமாக வாக்கிங் செல்வதுதான் எங்கள் இருவரின் பெரிய ஆசை. அதை விடாமல் செய்யவும் செய்தோம். எப்போதும் நேரம் நால்வருக்கும் சேர்ந்தார் போல அமைவதில்லை. பிள்ளைகள் இருவரும் வளர்ந்து படிப்பு டியூஷன் என அவர்களாக தங்களின் வேலைகளை கவனிக்கத் தொடங்கியது முதல்.. அவர்களின் நேரம் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதால்.. அவர்களை எங்களால் பிடித்து வைக்க முடியவில்லை. அதிலும், ப்ரணவ்.. அவன் உலகம் தனி.. எப்போது படிக்கிறான்.. என தெரியாது. இரவு இரண்டு மணிக்கு படித்துக் கொண்டிருப்பான்.. காலை எட்டு மணிக்கு உறங்கிக் கொண்டிருப்பான்.
காலையில் லலிதா கிளம்பி அவனை பார்க்க அவனோ உறங்கிக் கொண்டிருப்பான் ‘டேய். ஸ்கூல் போகலை..’ என அவள் கேட்க்கும் போதுதான் அரை தூக்கத்தில் ‘இல்ல ம்மா’ என ஒரே வரியில் முடித்துக் கொண்டு உறங்கிடுவான். நான் இதெல்லாம் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை.. மனைவியின் கோவத்தை லேசாக அமைதிப்படுத்த “விடு, நைட் ஸ்டடி செய்திருப்பான்.. டெஸ்ட் ஏதாவது இருக்கா கேட்டுக்கோ.. இல்லைன்னா.. தூங்கட்டும், அவனே எழுந்து படிப்பான்.. நீ டென்ஷன் ஆகாத” என சொல்லியிருக்கிறேன்.
மனது அவர்களை தேடியது இப்போது. தியாகு, லேசான சோக புன்னகையோடு.. மகனின் அறையை சுத்தம் செய்தவன் அவனின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான் ‘நன்றாகத்தான் இருந்தோம்.. என்ன ஆகிற்று..’ என மனது நொந்துக் கொண்டது ஆழமாக. ‘வாழ்ந்து மட்டும் கெட்டிட கூடாது’ என அந்த ஆழ்மனம் ஏனோ முனுமுனுத்தது அவன் காதுகளில். ம்.. நன்றாக வாழ்வது என்பது மனத்தினை மட்டும் சார்ந்தது இல்லையே.. அன்பு பாசமாக.. குடும்பமாக வாழ்வதையும் சேர்த்துதான்.
ம்.. இந்த வீடு அவள் இருக்கும் போது எப்படி இருக்கும்.. மாலை நேரத்தில் விளகேற்றி.. வீடு முழுவதும் ஊதுபத்தி வாசத்தில் இருக்க.. எதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டே.. நான் வரும் வேளையில் காபி கலந்துக் கொடுப்பாள்.. ‘ஹப்பா வீடு வந்தாச்சு’ என உடனே மனது உற்சாகமாக.. அவள்தானே காரணம்.
காலை நான் எழுந்து வரும் போதே.. ஜனனி “ம்மா.. அப்பாக்கு கஞ்சி” என எனக்காக யோசிக்கும் அந்த குட்டி பெண்ணும் காணோம் இப்போது.
காலையில் ‘இந்த வாரம் கரண்ட் பில் கட்டனும்.. ஈவ்னிங், வினோத் பெண்ணுக்கு பர்த்டே.. போகனும்.. வேலையை வச்சிக்காதீங்க’ என எதோ பேச்சுகளோடு.. கடக்கும் நேரங்கள் எல்லாம் காணவே காணோம். தப்பு செய்துட்டேன்.. அப்போதே மண்டப்பத்திலேயே காலில் விழுந்திருக்கணும்.. என் பொண்டாட்டி சந்தேகப்பட்டுவிட்டால் என ஆவேசப்ட்டது தப்பு.. எல்லாம் போச்சு..’ என சிலநொடிகளில் பலயோசனை. எதையும் ஒழுங்குப்படுத்த முடியவில்லை.. இந்த தியாகியால்.
எல்லாமே செய்திருக்கலாம்தான். ராஜியும் யோசித்திருக்கலாம். லலிதாவும் மனது சங்கடமாகும் என எண்ணாமல்.. ஆரம்பத்திலேயே கிள்ளியிருக்கலாம்தான்.. தியாகுவும், எல்லோர் எதிரிலும் மனையாள் பேசிவிட்டாலே என கோவப்படாமல் பொறுத்து போயிருக்கலாம்தான். வாழ்க்கையில் தவறவிட்ட இடங்களை கண்டுக் கொள்ளும் போதெல்லாம் மனது இப்படிதானே அடித்துக் கொள்ளுகிறது. உறவுகளை சரியான விகிதத்தில் கையாள இன்னமும் எத்தனை பாடுபட வேண்டுமோ.
ஒருபெருமூச்சோடு தன் நினைவுகளிலிருந்து.. தலையை உலுக்கிக் கொண்டு எழுந்தான், தியாகு. அந்த அறையை கூட்டி எடுத்து.. வேலையை முடித்து குளிக்க சென்றான்.
குளித்து வர.. தியாகுவிற்கு, போனில் அழைப்பு.
தியாகு போனினை எடுத்து பார்க்க “ராஜி” என மின்னியது.