தியாகு கண் திறந்தான்.. எதிரே தந்தையின் புகைப்படம். வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பிரபாவதி “அவருக்கு எல்லாம் தெரிந்துதான் உன்னிடம் பொறுப்பை கொடுத்துட்டு போய்விட்டார் டா..” என ஆரம்பித்தார்.
தியாகு அமைதியானான்.
“என்ன செய்வது.. உங்க ரெண்டுபேருக்கும் வாய்த்தது சரியில்லை. அதுக்குதான் இந்த காதல் வேண்டாம் வேண்டாம் என தலைபாடாக அடித்துக் கொண்டது. என்னமோ போ..” என்றார்.
அவனோ அமைதியாகவே இருந்தான்.
“வாழ வேண்டிய வயதில்.. இப்போதுதான் சந்தேகம். வாழ்க்கையையே அழிச்சிடுச்சி பார்த்தியா.. இந்த பிள்ளைகளுக்கு யார் பதில் சொல்லுவது.” என்றார்.
தியாகு எழுந்தான் “அக்கா, நீங்க பார்த்து கட்டி வைத்ததுதானே உன் பெண்ணுக்கு. பேசாமல் உன் பெண்ணை உன் வீட்டுக்கு கூட்டி போய் பார்த்துக்கோ.. எல்லாம் சரியாகிடும்” என்றான்.
“அவள் இங்கிருந்தால் என்ன டா உனக்கு.. பிள்ளைகள் எல்லாம் இங்கே இருக்கு.. எல்லோரும் ரகுவை பார்த்துப்பீங்க செய்வீங்க.. அவள் பயமில்லாமல் வேலையை பார்ப்பாள்.” என்றார்.
தியாகு “ஏன் அக்கா இப்போது இங்கே வந்திருக்கிறாள் அவள்.. அங்கே வேலை நல்லாதானே இருந்தது” என்றான்,
அக்கா “ஏன் டா உனக்கு தெரியாதா.. மித்ரா கல்யாணத்தில் ஒரு பேச்சு வந்தபிறகு.. மாப்பிள்ளை சரியாகவே பேசுவதில்லை.. வீட்டில் இருப்பதில்லை.. இவளை மதிப்பதில்லை.. உனக்கு தெரியாதா. போன வருஷம் எப்படி வந்து நின்றால்.. எலுமபும் தோலுமாக.. அப்பா எவ்வளவு கவலைபட்டார். அதான் போய் சேர்ந்துட்டார். ராஜியை தேற்றி அனுப்பவே பாடாத பாடுபட்டோமே. உனக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைச்சிடுச்சி.. அதான் பேசுற.. புருஷன் சரியல்லாதப்ப என்னப்பா செய்ய முடியும் பிறந்த வீடுதானே பார்த்துக்கனும்” என லேசாக கரகரத்த குரலில் அழுதார்.
தியாகுவிற்கு.. நேற்று இரவு மனைவி அனுப்பி செய்தி நினைவு வந்தது.. இப்போது இவர்கள் பேசுவதும் சேர்ந்து.. உறுத்தியது அவனின் மனதை.
தம்பி “போதும் நிறுத்துக்கா..” என்றவன் மேலே சென்றான் தன் அறைக்கு.
ஜனனி, கீழே புத்தங்களை பரப்பி இருக்க.. நடுவில் அமர்ந்துக் கொண்டு போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தாள்.
தியாகு “என்ன அம்மு படிப்பது போல இல்லையே” என்றான்.
“அப்பா.. எங்கப்பா போனீங்க” என்றாள்.
“சாரி டா.. நைட் ஒரு வேலை.. ஆபீசில் இருந்துட்டேன்” என பிள்ளையிடம் தணிந்தான்.
பெண் “எனக்கு தூக்கமே வரலை பா..” என்றாள்.
தந்தை பெண்ணின் தலையை வருடினான்.. ஜனனி “வீட்டுக்கு போலாமா.. அம்மா திட்ட போறா என்னை” என்றாள்.
“அப்பா.. நீங்க சொல்லியிருக்கணும்” என சொல்லிக் கொண்டே தன்னுடைய புக்ஸ் எடுத்து வைத்தாள். பேக் ஜிப் செய்து திரும்பி தந்தையை பார்த்து நின்றாள்.
தியாகு ஒன்றும் சொல்ல முடியாமல் எழுந்தான் “கீழ பாட்டியிடம் சொல்லிக் கொண்டு வா” என சொல்லி அவளை முதலில் அனுப்பினான்.
சுப்ரியா, சபரியின் இரண்டாவது மகள்.. இப்போதுதான் காலை உணவு உண்ண அறையிலிருந்து வெளியே வந்திருந்தாள்.. அவளோடு பேசிக் கொண்டே ஜனனி அமர்ந்துவிட்டாள்.
பின் தந்தை வந்து விரட்டவும் எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினர் தந்தையும் மகளும்.
இருவரும் முதலில்.. ஸ்டேஷ்னிரிஸ் வாங்க கடைக்கு சென்றனர். பெண்ணவள் இதுவரை பார்த்தில்லாத பேனாவகைகள்.. மார்க்ர்ஸ்.. ஸ்டிக்கி நோட்ஸ்.. புது புது எரேசர்ஸ்.. எக்ஸாம் பேடு.. என எடுத்துக் கொண்டாள்.
தந்தை “என்ன டி இது.. கடையா வைக்க போற” என்றான்.
ஜனனி முறைத்தாள்.. “இதெல்லாம் வேண்டும்ப்பா..” என.
வாங்கிக் கொடுத்தான்.
பெண்ணவள் பேசிக் கொண்டே வந்தாள். தியாகு ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஷோபில் நிறுத்தினான். AC வாங்கினான்.
பெண்ணவள் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.. எதற்கு என கேட்கவில்லை. எதோ பிரட் ரோஸ்ட்டர் வேண்டும் என்றாள். தந்தை மறுத்துவிட்டான். கடையில் ஆபர் என அதனை பரிசாக வழங்கினர் ஜனனிக்கு.
தியாகு, இப்போதே டெலிவரி செய்ய சொல்லிவிட்டான்.. லலிதாவின் வீட்டு முகவரிக்கு.
“ப்பா எங்களுக்கா” என்றாள் இயல்பாக ஜனனி.
தியாகுவிற்கு ‘எங்களுக்கா’ என வார்த்தை ஒருமாதிரி மனதை தைத்தது.. இதுவரை.. ‘நமக்கா பா’ எனதான் பிள்ளைகள் கேட்டிருக்கிறார்கள்.. இப்போதெல்லாம் எங்களுக்கா என்ற வார்த்தைதான் அதிகம் வருகிறது அவர்களிடமிருந்து என தந்தைக்கு புரிய.. மனதில் அழுத்தத்தோடு “ம்..” என்றான்.
பெண் “ப்ரணவ்கிட்ட சொல்லன்னு முதலில்.. எனக்குதான் AC. அவன் ஊரிலிருந்து வந்தால்.. என் ரூமினை எடுத்துக்குவான்.. ரெண்டு AC வாங்கியிருக்கணும்பா” என பேசிக் கொண்டே வந்தாள்.
இருவரும் மதியம் உண்டுதான் வீடு கிளம்பினர்.
லலிதா அப்போதுதான் வேலையே ஓடாமல் யோசனையிலிருந்தாள். இப்போது போனில் அழைப்பு வந்தது.. ஜனனிதான் அழைத்தாள்.
நேற்றிலிருந்து தேக்கி வைத்திருந்த கோவத்தோடுதான் அந்த அழைப்பினை ஏற்றால் லலிதா.. ஆனால், இவள் பேசும் முன் பெண் பேசினாள்.. “ம்மா கீழே பாரேன்.. AC வந்திருக்கான்னு” என்றாள். எந்த முகாந்திரமும் இல்லாமல்.
லலிதாவிற்கு அதிர்வில் ஒன்றும் புரியாமல் “என்ன உளற..” என்றாள்.
“ம்மா.. அப்பா.. AC வாங்கி அனுப்பியிருக்காங்க.. கீழே ஆட்கள் இருக்கிறார்களா பாரும்மா.. நானும் அப்பாவும் வந்திட்டு இருக்கோம். நீ அவர்களை மேலே வரசொல்லு.. அப்புறம் ஹவுஸ் ஓனரிடம் பேசிடும்மா.. அப்பா சொன்னாங்க..” என்றாள்.. தந்தை அங்கே சொல்லுவதை காதில் வாங்காமல்.. அப்படியே ஒப்புவிப்பது தெரிந்தது அன்னைக்கு.
லலிதா “எதுக்கு இப்போ இது.. ஜூலை மாதத்தில் ACக்கு என்ன அவசரம்.. உன் அப்பாகிட்ட நீ கேட்டியா” என கேட்டாள்.
“ம்மா.. நீ கீழ பாரும்மா முதலில்.” என்றவள் அழைப்பினை துண்டித்துவிட்டாள்.
லலிதா அதன்பின் வேலையை தொடங்கினாள்.
தியாகு கீழே நின்றான். ஜனனி மேலே வந்தாள்.. AC பிக்ஸ் செய்துக் கொண்டிருந்தனர்.
லலிதா முன்புறம் எட்டி பார்த்தால், கணவன் காரில் சாய்ந்து நின்றது தெரிந்தது. முகம் தெரியவில்லை.. அவன் வரிவடிவம் தெரிந்தது. நீண்டநாட்கள் ஆகிறது பார்த்து என காதல்மனது சொன்னாலும்.. அடிபட்ட மனது.. வேண்டாம் என எடுத்துரைக்க.. ஒருநொடி நின்று பார்த்துவிட்டு, உள்ளே சென்றுவிட்டாள் பெண்.
லலிதா மகனுக்கு அழைத்தார்.. “அப்பா வந்திருக்காங்க கீழே இருக்காங்க.. நீ பேசு.. வீடு பார்க்கட்டுமா கேட்டுக்கோ” என்றாள்.
மகனோ “அம்மா, எனக்கு புட் ஒத்துக்கலை. என்னால் இப்படி இருந்தால் படிக்க முடியாது.. உனக்கு தெரியுமில்ல ம்மா. நீ சொல்லும்மா.. நான் பேசமாட்டேன் அவரிடம்” என்றான் அவனும் அழுத்தமாக.
ACக்காக துளையிட்டுக் கொண்டிருந்தனர். அதன் சத்தில், லலிதாவின் பேச்சு கொஞ்சம் வல்லினமாகவே இருந்தது “என்ன டா, உன் அப்பகிட்ட பேசி அவர் சம்மதித்தால் மட்டும்தான் போகனும் பார்த்துக்க.. இப்போவே எல்லாம் பெரியமனுஷனாகிட்டீங்களா.. உன் இஷ்ட்டத்துக்கு எதுவும் முடியாது பார்த்துக்கோ” என சத்தமாக பேசினாள்.. அந்த மெஷின் சத்தத்தை தாண்டி, கத்தினாள் எனலாம்.
சட்டென அந்த மெஷினி சத்தம் நிற்க.. லலிதாவின் பேச்சு கீழே வரை கேட்டது. பால்கனி வழியாக அது தியாகுவை சென்றடைய.. நிமிர்ந்து பார்த்தான். லலிதா ஒருகாதினை மூடிக் கொண்டு பேசுவது தெரிந்தது.
தியாகுவிற்கு அவள் என்ன பேசுகிறாள் என்ற பொருள் கேட்டகவில்லை.. ஆனால், அவளின் கோவமான முகமும் ஆவேசமான குரலும்.. கேட்டது. சிலநொடிகளில் மெஷின் சத்தம் சட்டென நிற்கவும் அவளின் குரல் பெரிதாக கேட்க.. அவளின் சூழல் புரிந்தது.
மகனிடம் பேசுகிறாள் என புரிந்தது. தனியாக சமாளிக்கிறாள்.. முன்பெல்லாம் மகன்.. பேட் வேண்டும்.. இன்று வெளியே போறேன்.. என ஏதாவது சொன்னால்.. அவளுக்கு இப்போது அவன் செய்வது தவறு என தெரிந்தால்.. என்னிடம் அனுப்பி வைப்பாள்.. நானும் எதோ பேசி.. சத்தம் போட்டு.. அவனை நிருத்தி வைப்பேன். இப்போது அவனும் தூரமாக இருக்கிறான்.. அவனை சமாளிக்க வேண்டும்.. என நிமிர்ந்திருந்தவன் யோசனையோடு.. தலைதாழ்ந்தான்.
இப்போது லலிதாவும் மகனிடம் “கீழேதான் இருக்கார் அப்பா.. ஒருதரம் கேளு டா.. அப்புறம் அட்வான்ஸ் கொடுத்திடலாம். நீ பேசிடு” என தணிவாகவே வேண்டினாள், சத்தம் குறைந்ததில்.. உணர்வுகளும் சற்று தழைந்தது.
மகனோ “ம்மா.. நான் அவரிடம் பேசமாட்டேன். நான் எங்கேயும் போகல.. ஹாஸ்ட்டலில் இருந்துக்கிறேன் போதுமா.. விடு..” என்றவன் அழைப்பினை துண்டித்துவிட்டான்.