மனம் மறுபடி சரிகிறதே!

5

இன்று..

தியாகு, மேலே வந்தான். ஜனனி “ப்பா” என அழைத்துக் கொண்டே அவனின் பின்னே வந்தாள்.

தியாகு சேரில் அமர்ந்தான்.

ஜனனி “அப்பா, சீக்கிரம் வந்துட்டீங்க” என்றாள்.

“உன்னை பார்க்கத்தான் டா” என்றவன் “இந்த வீடு எப்படி இருக்கு” என்றான். இப்போது மாற்றியிருந்த புதிய வீடு பற்றி கேட்டான்.

பெண்ணவள் பேசத் தொடங்கினாள் “ம்மாக்கு, ஐந்து நிமிஷத்தில் காலேஜ் போக முடியுது. சீக்கிரம் வீடு வந்திடுறாங்க பா.. எனக்கு டியூஷன் ஏதும் பக்கத்தில் இல்லை.. என் பிரெண்ட்ஸ் யாரும் பக்கத்தில் இல்லை.. போரிங் பா. வீடு எல்லாம் அரேஜ்சு செய்தாச்சு பா.. நீங்க இந்த வீட்டுக்கு வரமாட்டீங்களா” என்றாள்.

புன்னகைத்தான் பெண் ஜன்னல் அருகே நின்று பேசிக் கொண்டிருக்க.. தன் மகளை ஆவலாக பார்த்தவன் “இங்கே வா” என்றான். மனையாளை ஞாபகப்படுத்தினாள்.

அவளும் அருகில் வந்து நிற்க.. மகளின் கையை பற்றிக் கொண்டவன் “இங்க பாருங்க ஜானும்மா.. எதோ டெர்ம் சரியில்ல எனக்கும் அம்மாக்கும் அவ்வளவுதான். நான் கொஞ்சநாள் தள்ளியிருக்கனும்ன்னு நினைக்கிறேன். ஆனால், நாம எப்போதும் போலதான் இருப்போம். நீ இங்க வா.. நானும் ஸ்கூல்லுக்கு வரேன்.. நோ லிமிட்ஸ்.. என்னவேணும் என்றாலும் சொல்லு.. எப்போதும் போல உனக்கு கிடைக்கும்.. இதுவரை அப்படிதானே கிடைக்குது. ம்..” என்றான் மகளிடம்.

ஜனனி “ம்.. ப்பா, ஆனால், அம்மா பாவம் பா” என்றாள்.

தியாகு என்ன சொல்லுவது என தெரியாமல் பெண்ணின் கையில் தட்டிக் கொடுத்துவிட்டு எழுந்தான்.. “உன் அம்மாக்கு திமிர். என்னால் அவளின் கற்பனைக்கு எல்லாம் ஈடு கொடுக்க முடியாது அம்மு.” என்றவன் சுதாரித்து.. திரும்பினான் மகளின் புறம்.. மகளோ “அம்மாவை பிடிக்கலையா” என்றாள்.

தியாகு தலையசைத்தான் ‘இல்லை’ என்பதாக.. பின் மகளின் கண்களை நேரே பார்த்து “நீ அம்மாவை பார்த்துக்கோ.. ம்..” என்றான் ஒரு பெருமூச்சு விட்டு.

பெண்ணவள் “அம்மா, என்னை நைட் வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றாள்.

தியாகு “ஏன்” என்றான் ஆராய்ச்சியாக.

“ராஜி சித்தி” என்றாள்.

தியாகுவிற்கு கோவம் வந்தது “ஏன், அவள் என்ன செய்தாள்.. உன்னை” என்றான்.

மகள் சுதாரித்துக் கொண்டு “என் சயின்ஸ் நோட்ஸ் வைச்சிட்டு வந்துட்டேன்.. அதான்” என்றாள்.

தியாகு திரும்பிக் கொண்டான்  ‘அப்படி என்ன என்மேல் சந்தேகமோ..’ என மனையாளின் மேல், எப்போதும் எழும் கோவம் எழுந்தது. ‘அவள் அப்படிதானே எதற்கும் ஒரு குறுக்கு யோசனை..’ என தன்னை நிதானித்துக் கொண்டு.. மகளின் முகம் பார்த்து “சரி” என்றான்.

ஜனனி “அப்பா, ஒரு ப்பையில் வாங்கணும்.. மார்கர் வாங்கனும்.. வைட்ஷீட்  வாங்கணும்..” என அடுக்கினாள்.

தந்தை புன்னகையோடு.. “போலாம்.. கடைக்கு போயிட்டு, சாப்பிட்டு வீட்டில் விட்டிடவா” என்றான்.

மகள் “ம் ப்பா” என்றாள்.

தியாகு குளிக்க சென்றுவிட்டான்.

மகள் “ப்பா.. நான் கீழ இருக்கேன்” என்றவள் அறையை சாற்றிக் கொண்டு.. கீழே சென்றாள்.

ஜனனி பேக்கோடு கீழே வந்ததால்.. ராஜி “எங்க போற” என்றாள்.

ஜனனி விளக்கினால்.

ராஜி கேட்டுக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் மேலே வந்தாள்.. தியாகுவின் அறைக்கு. கதவினை தட்டவில்லை.. நேராக திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள்.. தியாகு துண்டோடு நின்றிருந்தான்.

ராஜி “மாமா, நான் ஜானுவிற்காகதான் இங்கே வந்ததே.. அவளுக்கு க்குயூயிஸ்ட்டீன் பேப்பர் ரிவைஸ் செய்ய வேண்டும் எனதான் நான் அவசராவசரமாக இங்கே வந்தததே.. இல்லையென்றால் நான் அடுத்த வருஷம் தான் ட்ரான்ஸ்ஃப்பர் செய்து வந்திருப்பேன். அவளுக்கு மஸ்த் சப்ஜெக்ட்டில் வரவர மார்க்ஸ் குறையுது.. அதை கவனிக்கத்தான் வந்தேன்.. இப்போது வீடு வந்தவள் எதற்கு அவசரமாக கிளம்புகிறாள். உங்க ரெண்டுபேருக்கும் தானே பிரச்சனை.. பிள்ளைகளை எதற்கு அளக்கழிக்கிறீகள்.. எனக்கு புரியலை..” என்றாள் கோவமாக.

தியாகு “விடு, அவள் பார்த்துப்பாள்.. நீ உன் வேலையை பாரேன்” என்றான்.

“அப்படி எல்லாம் விடமுடியாது மாமா.. பிள்ளைகளுக்கும் நல்லது கெட்டது தெரியனுமில்ல” என்றாள்.

தியாகு அவளின் அருகில் வந்தான் “ராஜி, நீ இந்தளவு செய்வதே போதுமானது ம்மா.. நீ ரகுவை பாரு..” என்றான்.. உடைகளை மாற்றிக் கொண்டே.

தியாகு உள்பனியன் போட்டுக் கொண்டே பார்க்க.. இப்போது ராஜியின் கண்களில் கண்ணீர் “கண்ணை துடை முதலில்.. விக்னேஷ் எப்போது வருகிறார்” என்றான், பேச்சினை மாற்றும் விதமாக.

ராஜி ஏதும் பேசவில்லை.

தியாகு டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு அவளின் எதிரில் வந்தான்.. ராஜி அவனின் மடிந்திருந்த காலரினை சரிசெய்ய எண்ணி, அவனை நெருங்கி கைநீட்டினாள்.

தியாகு சட்டென இரண்டடி பின்னால் நகர்ந்தான் “என்ன பண்ற நீ..” என சொல்லிக் கொண்டே.. அவளை கடந்து சென்றான். மனது படபடவென அடித்துக் கொண்டது குடும்பஸ்த்தனுக்கு. ‘ஜோதிடர்கள் சொன்னது பொய்யில்லையோ’ என ஒரு உணர்வு அறிவை அசைத்தது.

ராஜி அவனின் யோசனையை களைத்தாள் “ஏன் மாமா.. நீங்களும் என்னை அவாய்ட் பண்றீங்களா” என்றாள்.

“உளறாத.. நான் கீழே போறேன். ஜனனியோடு வெளியே போகனும்..” என்றவன் கிளம்பினான் அங்கிருந்து.

ராஜி, அவன் களைந்துவிட்டிருந்த பழைய உடைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள். கீழே துவைக்கும் இடத்தில் வைத்தாள். நேரே கிட்சென் சென்றாள். வேலை செய்பவரிடம் “மாணிக்கம் ஒரு காபி” என்றாள். ஹாலுக்கு வந்தாள்.

ஹாலில் தியாகு, அனு.. கொடுத்த டீயை பருகிக் கொண்டிருந்தான். அனு ஜனனியிடம் “ஏன் கிளம்புகிறாய்..” என வினவிக் கொண்டிருந்தாள்.

பெண்ணவள் பதில் சொல்ல.. அனுவிற்கு எதோ புரிந்தது “சரிதான்.. நீ கிளம்பு நான்வேற ஒரு பங்க்ஷனுக்கு வெளியில் போறேன் அம்மு.. இங்கிருந்தால், உன்னை சாக்காக வைத்து ஏதாவது நடக்கும். நீ கிளம்பு” என்றாள். ராஜி வருவதை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டு.

ராஜி “என்ன மாமா.. காபி குடிச்சிடீங்களா” என்றாள் அருகில் வந்து நின்று.

தியாகு “ம்.. அண்ணி கொடுத்தாங்க..” என கதைத்தான்.

ராஜி “நீங்க எப்போதும் காபிதானே குடிப்பீங்க” என்றாள்.

தியாகு “அதனால் என்ன, டீ குடிப்பேனே” என்றான்.

அனு கண்டுக் கொள்ளாமல் “ஜானு, அக்காவும் நானும் ஷாப்பிங் போனோம்.. உனக்கு ஒரு டாப் எடுத்தாள்.. வா, அதை பாரு” என சுப்ப்ரியாவின் அறைக்கு அழைத்து சென்றாள்.

ராஜி “மாணிக்கம் காபி வேண்டாம்” என்றாள்.. சத்தமாக ஹாலிலிருந்து.

தியாகு “ஏன் ராஜி, எதுக்கு கோவம்.. எதுக்கு கத்தற” என்றான்.

“ஒண்ணுமில்ல” என தன் அறைக்கு சென்றாள்.

இப்போது வள்ளி தன் அறையிலிருந்து வந்து எட்டி பார்த்தார்.. பேத்தியின் சத்தம் கேட்டு. மகன் கண்களுக்கு தெரியவும் தன் சக்கரநாற்காலியை தள்ளிக் கொண்டே வெளியே வந்தார் “எதுக்கு ராஜி கத்தினாள்.. ஏதவாது சொன்னியா” என்றார்.

தியாகு தலை கோதிக் கொண்டு அமைதியானான்..

வள்ளியம்மா “பாவம் டா அவ.. அவள், நமக்காகதான் இவ்வளவும் செய்கிறாள். தாத்தாக்காக கல்யாணம் செய்துக் கொண்டால்.. அதுவும் சரியாக அமையவில்லை. பாரு, அவள் புருஷன்.. இதுவரை கூப்பிடவில்லை.. அவளிடமிருந்து காசு மட்டும் கேட்க்கிறான். எதையும் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அழறாள் டா.. அவளை கோவிக்காத” என்றார்.

தியாகு “ஒன்னும் சொல்லலை ம்மா” என்றான் சமாதானக் குரலில். மனது என்னமோ செய்து.. எதையும் யோசிக்ககூடாது எனதான் எண்ணம்.. ஆனால், அலை அலையாக.. ஏதேதோ எண்ணம். எழுந்துவிட்டான் தியாகு. கையில் சாவி இருக்க.. வெளியே கிளம்பிவிட்டான்.

முன்ரோடு சென்றிருக்க, மகள் அழைத்தாள் தந்தைக்கு.

தியாகுவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது.. பெண்ணோடு வெளியில் செல்லதானே கிளம்பினேன் என. மகளின் அழைப்பினை ஏற்றான் “என்னடா” என்றான்.