மனம் மறுபடி சரிகிறதே!

2

லலிதா தியாகு காதலிப்பர் என அவர்களின் நண்பர்களே நம்பவில்லை. அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை.. பெரிதாக அவர்களின் காதல் மேல் யாருக்கும் நம்பகமில்லை. இருவரும் பெரிதாக பேசிக் கொண்டனர்.. அங்கே இங்கே நின்று பார்த்துக் கொண்டனர் என ஏதும் அவர்கள் கண்களில் கூட தென்பட்டதில்லை.

வலுவில்லாத மெலிதான நேசம்தான் இருவருக்குள்ளும். தியாகு தன் வகுப்பு முடிந்து லலிதா கண்ணில் தெரியும்படி அமர்ந்துக் கொள்வான். லலிதா வகுப்பில் இருக்கும் வரை.. அவளை பார்வையால் பின்தொடர்வான்.. என்னமோ அவளின் எல்லா நடவடிக்கைகளுமே தியாகுவிற்கு சுவாரசியமாகவே இருக்கும். அவள் வரும் அந்த நான்குமணி நேரமும் தியாகு.. பெரிதாக வெளியில் செல்லமாட்டான். மாணவர்களோடு அமர்ந்துக் கொண்டு.. பார்வையை லலிதாமேல் வைத்துக் கொண்டு.. பேசிக் கொண்டிருப்பான்.

சிலமாதங்களில் தியாகுவின் நண்பன் சேனாபதி, கவனித்து.. என்னவென கேட்கத் தொடங்கினான்.. தியாகு ‘வசமாக மாட்டிக் கொண்டேன் நான்’ என்பதை முறைத்து பார்த்தே  உறுதி செய்தான்.

சேனா ‘என்கிட்டே முறைச்சி என்ன ஆகபோகுது.. அந்த பொண்ணுக்கு விஷயம் தெரியுமா’ என்றான்.

தியாகு புன்னகையோடு ‘இல்லை’ என தலையசைத்தான்.

சேனா, அதுதொட்டு தியாகுவை கிண்டல் கேலி.. செய்யத் தொடங்கினான். தியாகுவும் மறுக்கவில்லை.. அந்த பேச்சு இனிக்கவே செய்தது. அப்படியே அது அங்கே வேலை பார்க்கும் மற்ற மூவருக்கும் தெரியவந்தது. அவர்களும் இருவரையும் சேர்த்து வைத்து.. பேசத் தொடங்கினர். ‘நேற்று நீ லீவ், தியாகு சர்க்கு வேலையே ஓடவில்லை’ என சேனாவின் பேச்சு நேரடியாக சிலநேரம் லலிதாவிடம் செல்லத் தொடங்கியது. மாணவர்கள் காஸிப் பேசத் தொடங்கினர்.

அப்படி லலிதாவின் காதுகளில் விழ.. பெண்ணவள் அடுத்து ஷணம்.. தியாகுவின் பின்னால் நின்றிருந்தாள். அந்த சென்டரில் தனி அறை என இல்லை. பெரிய ஹால்.. முன்பக்கம் சின்னதாக ரிசெப்ஷன் டேபிள். அதனை அடுத்து கண்ணாடி தடுப்புகதவு.. அதில் சின்ன சின்ன தடுப்புகளால தடுத்திருந்தனர். கதவுகள் என ஏதுமில்லை.. இருபுறமும் கணினி வரிசைகள் பெரிதாக. நடுவில் டீச்சர்ஸ் அமர டேபிள் இரண்டு இருக்கும்.. முன்புறம் ஸ்டான்ட் அதனில் போர்ட் இருக்கும்.. இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே கோர்ஸ் படிப்பதாக இருந்தால்.. போர்டில் எடுப்பார்கள். இல்லையெனில் மாணவர்களின் அருகில் அமர்ந்து.. அப்படியே சொல்லிக் கொடுத்திடுவர்.

தியாகு.. அந்த அறையில் இருந்த கடைசி டேபிளில் அமர்ந்திருந்தான்.. பெண்ணவள் அவன் பின்னால் வந்து நின்று “தியாகு சர்” என்றாள்.

தியாகு என்னவென அந்த ரோலிங் சேரில் அமர்ந்தபடியே திரும்பினான்.

பெண்ணவள் “என்ன சர் என்னென்னமோ சொல்றாங்க.. நீங்க ஏதும் சொன்னீங்களா” என்றாள்.

தியாகுவிற்கு என்னவென புரியவில்லை.

ஆனால், இப்போது அவளின் பின்னால்.. எல்லோரும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க.. விஷயம் தெரிந்தவனுக்கு புரிந்தது என்னவென. புரிந்ததும் அவனால், நேராக பார்க்க முடியவில்லை லலிதாவை. பின்னால் இருப்பவர்கள் வேறு என எண்ணிக் கொண்டு.. என்ன செய்வதென தெரியாமல்.. “மேல வரியா கொஞ்சம் பேசணும்” என்றான்.

பெண்ணவள் குழப்பமாகவே ஏறிட்டாள்.. கைவளையல்கள் அசைய “என்ன பேசணும்..” என்றாள்.

தியாகு அதற்கு மேல் நில்லாமல்.. முன்னால் நடந்தான்.. மேலே மொட்டைமாடி.. கதவினை சாவி கொண்டு திறந்துக் கொண்டு நின்றிருந்தான் தியாகு.

தியாகு முதல்முறை.. தன் இயல்பிலிருந்து மாறியிருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள.. தான் இன் செய்திருந்த ஷர்ட் எடுத்து வெளியேவிட்டான்.. மணிக்கட்டில் இருந்த அவனின் ஷர்ட் சீலீவ்ஸ்சினை முழங்கை வரை ஏற்றி விட்டுக் கொண்டான்.. நெடுநெடுவென உயரமாக.. மெலிந்த தேகம்தான் தியாகு. சின்ன பையனின் அத்தனை அசைவுகளும் அவனில் இருக்க.. லலிதா இன்னமும் வராததால்.. இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

பெண்ணவள் எதற்கு தனியாக கூப்பிடுறாங்க என நின்றிருந்தாள். அவளையே எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. படிப்பது போல சிஸ்டம் முன் அமர்ந்திருந்தனர். யாரும் அவளிடம் ஏதும் பேசவில்லை.. எல்லோரும் கண்டும் காணாமல் இருந்துக் கொண்டனர்.

லலிதா யோசனையோடு மேலே வந்தாள்.

தியாகு அவளின் எதிரில் வந்து நின்றான் “சாரி லலிதா” என்றான்.

லலிதா பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருந்தாள். கொஞ்சம் அவனின் உடை.. பேச்சு.. உடல்மொழி.. எல்லாம் மாறியிருப்பதை கவனிக்கத் தொடங்கினாள். மனது படபடவென அடித்துக் கொண்டது.. ‘ஆக கீழே தான் கேட்டது உண்மையோ என எண்ணம்’ மனது இங்கே நிற்ககூடாது என சொல்லியது.

தியாகு “உண்மையாக உன்மேல் ஒரு கிரேஸ். நீ என்ன செய்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. இதெல்லாம் ஈசியில்லைன்னு புரியுது. நானும் உன்னிடமிருந்து தள்ளி வந்திடனும் என  எவ்வளவ்வோ ட்ரை செய்தேன் முடியலை. நான் எந்தளவு ஸ்ட்ரோங்காக இருக்கிறேன்னுனு தெரியாமல் உன்னிடம் என் மனதை சொல்ல முடியலை லலிதா..” என சொல்லி நிறுத்தினான்.

லலிதா மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு.. நடுங்கிக் கொண்டே நின்றிருந்தாள்.. அவனின் இந்த பார்வையில்.. நடுக்கம் இன்னமும் அதிகமாகியது.. காதோரம் வியர்வை வழியத் தொடங்கியது.

தியாகு “லாஸ்ட் வீக்தான் முடிவு செய்தேன்.. என் லைஃப்’பில் நீ வேண்டுமென.. நோ சேன்ஜஸ் கண்டிப்பாக நீ வேண்டும். யோசிச்சு சொல்லு.. உன்னை கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன். உன்னை இப்படியே என்கூட எடுத்துட்டு போகணும்ன்னு நினைக்கிறேன்.” என சொல்லி அவளை அழமாக பார்த்தான். 

லலிதா பிடிமானத்திற்கு ஏங்கினாள் எனலாம்.. அவளின் உச்சகட்ட படபடப்பில்.. அவளின் உலகமே சுற்றியது. மெல்ல நகர்ந்து மொட்டிமாடி சுவரில் சாய்ந்து நின்றாள். அப்படியே கீழே அமர்ந்துக் கொண்டாள்.

தியாகு “என்னாச்சு லலிதா.. பார்த்து” என்றான். அவளை தூக்கி அமரவைக்க கைகள் பரபரக்கிறது. ஆனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு தள்ளி நின்றான்.

லலிதா “என்ன சொல்றீங்க நீங்க.. என்னை பார்த்தால் எப்படி இருக்கு உங்களுக்கு.. வீட்டில் தெரிந்தால் என்னை படிக்க அனுப்புவாங்களா.. நீங்க டீச்சர்தானே இப்படி பண்ணலாமா.. ஐயோ அப்பாக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.. ராம் வேற என்னை திட்ட போறான்.” என புலம்பினாள் சத்தமாக. எதோ அவன் செய்யகூடாது செய்துவிட்டது போல.

தியாகுவிற்கு மனது வாடித்தான் போனது.. அவள் தன் காதலை பற்றி உணரவில்லையோ என.

லலிதா “நான் உங்ககிட்ட ஏதாவது தவறாக பேசினேனா சிரிச்சேனா.. ஏதாவது..” என்றாள். 

நொந்துக் கொண்டான் தியாகராஜன். நெற்றியை தடவிக் கொண்டே நின்றான். 

லலிதா “அம்மா அடிக்க போறா.. எனக்கு இன்னும் எத்தனை மாசம் இருக்கு கோர்ஸ் முடிய..” என்றாள் சம்மந்தமேயில்லாமல்.

எதற்கு கேட்க்கிறாள் என புரியாமல் தியாகு “இது டூ இயர் கோர்ஸ்.. இன்னும் எட்டு மாசம் இருக்கு” என்றான்.

பெண்ணவள் “இதெல்லாம் தெரிந்தால் அப்பா என்னை அனுப்பமாட்டார்.. யார்கிட்டவும் இப்படி சொல்லாதீங்க.” என எழுந்தாள்.. “இனி ஒருதரம் கல்யாணம் அது இதுன்னு பேசாதீங்க.. ப்ளீஸ்.” என்றவள்.. கீழே இறங்க எத்தனித்தாள்.

தியாகு “இரு லலிதா.. எந்த முடிவும் இப்போது எடுக்காத. யோச்சிச்சு எடு.. பொறுமையா யோசி. உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்றேன்.. புரியுதா.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

லலிதா இறங்கிவிட்டாள் தலையசைக்காமல். 

எல்லோரும் இவளையே பார்த்திருந்தனர்.. லலிதா யாரிமும் பேசாமல் இறங்கிவிட்டாள் கீழே.

தியாகுதான் அவள் பின்னாலேயே இறங்கி அவள்.. அண்ணனோடு செல்லும் வரை தூரமாக இருந்து பார்த்துவிட்டு மேலே வந்தான்.

லலிதாவிடம் சம்மதம் வாங்க தியாகு அவள் பின்னாலேயே சுற்றினான். ம்.. ஒரு பெண்ணை பிடித்துவிட்டது.. அவளுக்கு இன்னமும் தன் அருமை தெரியவில்லை.. அப்படியே விடமுடியுமா என்ன.. பின் தொடர்ந்தான். மெல்ல மெல்ல பேசினான்.. அவளுக்காக இனிப்புகள் வாங்கிவந்தான்.  அவன் அண்ணன் வராத நாட்களில் அவள் பஸ் ஏறி செல்லும் போது.. அவளோடு இவனும் பஸ் ஏறி சென்று வீடு விட்டு வருவான். இருவரும் ஒன்றாக அல்ல.. அவள் பஸ்சில் முன்பக்கம் இருந்தால்.. இவன் பின்பக்கம் இருப்பான். லலிதாவிற்கு தெரியும் ஆனாலும் அவனிடம் பேசமாட்டாள். இப்படியாக தியாகு லலிதாவிடம் பேசி பேசி.. ‘நீ எனக்காக எதுவும் மாற வேண்டாம்.. நான் பேசுகிறேன் உன் வீட்டில்..’ என கல்லான அவளை  கரைத்து, அவளிடம் சம்மதம் வாங்கினான்.

என்னை  கண்களாலேயே காவல்காத்தான் தன் வீட்டாரிடமிருந்து..  ஆனால், ஏதோ இடறிவிட்டது. என்னமோ சரியில்லாமல் ஆகிவிட்டது.. எது அது என இப்போதும் யோசிக்கிறாள் பெண். இன்னமும் விடை கிடைக்கவில்லை.

ராஜி, ஜனனியோடு பேசிக் கொண்டே உள்ளே வந்தாள். ஜனனி “நீங்க எப்போது வந்தீங்க சித்தி” என கேட்டுக் கொண்டிருந்தாள், இளையவள்.

உள்ளே வரவும் வள்ளியம்மா பாட்டி தன் முதல் பேத்தி ராஜியை வரவேற்றார் “ராஜி மதியம்தானே வந்த.. எதுக்கு இப்போ வெளிய போன” என்றார் தன் சக்கரநாற்காலியில் அமர்ந்துக் கொண்டு.

ராஜி “ஜானுவை கூப்பிட போனேன்.. மாமாக்கு வேலைதானே முக்கியும்.. லேட் ஆகிடுமோன்னு நான் போனேன் பாட்டி” என சொல்லிக் கொண்டே அமர்ந்தாள். 

ஜனனி “பாட்டி எப்படி இருக்கீங்க” என்றாள்.

வள்ளியம்மா தன் மூக்கு கண்ணாடி எடுத்து அணிந்துக் கொண்டு “ஜனனி வா வா.. நல்லா இருக்கேன்.. நீ நல்லா படிக்கிறியா.. எப்படி இருக்க..” என்றார்.

பேத்தியும் “ம்.. நல்லா இருக்கே.. எதோ படிக்கிறேன் பாட்டி” என்றாள்.

வள்ளி “உன் சித்தி இருக்கிற வேலையை விட்டுட்டு உன்னை கூப்பிட வந்திருக்கா பாரேன். மதியம்தான் வந்தாள். உன்மேல அவ்வளவு பாசம். இனி சித்திக்கு, சேலம் ஸ்கூல்லில்தான் வேலை.. மாற்றிக் கொண்டு வந்துட்டா.. இனி நீ இங்க தங்கிக்கலாம்.. அவள் உன்னை பார்த்துப்பா” என்றார்.

ஜனனி என்ன சொல்லுவதென தெரியாமல் தலையசைத்தாள்.

ராஜி “அவளுக்கு தெரியுமே பாட்டி.. நானும் ரெண்டு வருஷமா ட்ரான்ஸ்பெர் கேட்டிருந்தேன்.. போன மாதம்தானே கிடைச்சது. நாங்க செலேபரெட் செய்ய ஹோட்டல் போனோமே.. ஜானு மறந்துட்டியா என்ன” என்றாள்.

பதின்மவயது பெண் கள்ளமில்லாமல் சிரித்து “இல்ல சித்தி.. இங்கேயே வந்துட்டீங்களா சூப்பர்..” என்றாள்.

பாட்டி “உன் அண்ணன் எப்படி இருக்கான்” என்றார்.

ஜனனி பதில் சொன்னாள்.

இப்போது மேலிருந்து அனுஷியா இறங்கி வந்தார்.. தியாகுவின் அண்ணன் மனைவி “ஜனனி வா.. அம்மா எப்படி இருக்கா.. ப்ரணவ், இந்த வாரம் வருவானா” என்றார்.

ஜனனி “அம்மா நல்லா இருக்காங்க.. அண்ணன் தெரியலை.. வரானா என்னான்னு. அக்கா எங்கே பெரியம்மா” என்றாள்.

“தெரியலையே.. தூங்குவான்னு நினைக்கிறேன். நீ பிரெஷ்ஷாகி வா.. பால் தரவா.. ஜூஸ் தரவா..” என்றார்.

ஜனனி பேசும் முன் ராஜி “அவளுக்கும், ரகுவிற்கும் ஆர்டர் செய்திருக்கேன்.. சிக்கன் ப்ரைட்ரைஸ்.. ஜானு நீ குளிச்சிட்டு வா” என்றாள்.

அனுஷியா “இப்போது அதை சாப்பிட்டு நைட் என்ன சாப்பிடுவா, நேரம்கெட்ட நேரத்தில் ஆர்டர் செய்து.. பாதி ராத்திரி பசிக்கும்” என்றார் ராஜியை பாராமல்.

ஜனனி இவர்களின் பேச்சில் கலக்காமல் மேலே சென்றாள்.

ராஜி ஏதும் சொல்லாமல் தன்னறைக்கு வந்தாள்.

அனுஷியா கிட்சென் சென்றார்.

!@!@!@!@!@!@!@!

ஆறுமணிக்குள் வீடு வந்துவிட்டாள் லலிதா. 

ஜனனி, இப்போது அழைத்தாள் தன் போனிலிருந்து அன்னைக்கு. 

ஜனனி பள்ளிக்கு போன் எடுத்து செல்லுவாள், வெள்ளிகிழமை மட்டும். பள்ளியில் அதற்கு பெர்மிஷயன் பெற்றாகியிருக்கிறது. பள்ளி முடித்து அலுவலக அறையில் சென்று தன் போன் வாங்கிக் கொள்ளலாம். வெள்ளி முதல் ஞாயிறு வரை  பிள்ளைகள் தந்தையோடு இருக்கலாம் என ஒரு ஒப்பந்தம்.

லலிதா அழைப்பினை ஏற்க “அம்மா நான் அப்பா வீடு வந்துட்டேன்” என்றாள். 

லலிதா “ம்..” என்றாள்.

பெண் “என் சயின்ஸ் நோட்ஸ் அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.. எனக்கு இந்த பேஜ் மட்டும் போட்டோ எடுத்து” என பேசிக் கொண்டிருந்த பெண் “அம்மா.. அப்பா கூப்பிடுறாங்க.. நான் பேசிட்டு” என சொல்லி அழைப்பினை கட் செய்துவிட்டாள்.

லலிதா ‘இப்போதுதான் வந்திருப்பார்.. அதற்குள் தனியாக விட்டுட்டு வேலையை பார்க்க போய்விட்டாரா’ என கேள்வி எழுந்தது. யோசனையோடு இருந்தாள் லலிதா.

சற்று நேரத்தில் ஜனனி அழைத்தாள் “ம்மா.. ப்ளீஸ், எனக்கு அனுப்பு ம்மா” என்றாள்.

லலிதா “அம்மு, அப்பா எங்க அதற்குள் வெளியே போய்ட்டாங்களா” என்றாள் கொஞ்சம் அதட்டலாக.

ஜனனி “ம்மா.. நான் சித்தி கூட வந்தேன். ராஜிசித்திதான் என்னை பிக் பண்ணிட்டு வந்தாங்க.. வண்டியில்” என்றாள்.

லலிதா “சித்தின்னு சொல்லாத.. ராஜின்னு மட்டும் சொல்லுன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்.” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு. 

மகள் அமைதியானாள்.. லலிதா “அப்பா எங்க” என்றாள்.

மகள் “ம்மா.. அப்பா ஸ்கூல்க்கு போயிட்டாங்களாம். ராஜி அப்பாகிட்ட சொல்ல மறந்துட்டாங்க போல.. நான் வீட்டுக்கு வர சொல்லிட்டேன் ம்மா.. எனக்கு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பும்மா” என்றாள்.

லலிதா “அம்மு.. எடுத்து அனுப்புகிறேன் டா.. நீ அப்பாவோட ஹோட்டல் போய் சாப்பிட்டு.. நைட் வீடு வந்திடு டா.. நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல.. இந்த மன்த் ஒன்வீக் லீவ் வருதில்ல அதில்.. அங்கே ஸ்டே பண்ணிக்கலாம்” என்றாள்.

ஜனனியும் “ம்.. அப்பா வீட்டிலேயே இருக்கமாட்டாங்க.. ஆனால், நாளைக்கு சீக்கிரமாக ஸ்கூல் முடிந்திடுமில்ல.. நான் அப்பாகூட டைம் எடுத்துட்டுதான் வருவேன்..” என்றாள்.

இப்போது ஒரு பெண் குரல் “ஜானும்மா..” என அழைத்தது அருகில்.

லலிதா “அம்மு.. இதை அப்பாகிட்ட மட்டும் சொல்லு.. யாரிடமும் சொல்லாத.. நீ வீட்டுக்கு வந்திடு” என்றாள்.

ஜனனிக்கு தெரியும் தன் அம்மாவிற்கு ராஜி சித்தியை பிடிக்காது.. அவர்களோடு பேச.. அனுமதிக்கமாட்டார் என தெரியும். அதனால் உடனே “ம்.. பைய்..” என சொல்லி அழைப்பினை கட் செய்தாள் பெண்.

ராஜி “வா.. வா சாப்பிடு.. நீயும் அவனும்” என்றாள்.

ஜனனி ‘ம்’ என தலையசைத்தவள் “சித்தி, அப்பா கூப்பிட்டாங்க.. நீங்க அப்பாகிட்ட சொல்லலையா.. என்னை  கூட்டி வந்ததை” என கேள்வி எழுப்பினாள்.

ராஜி “ஓ.. மாமா ஸ்கூல் போயிட்டாங்களா.. அடடா நான் மறந்துட்டேன்.. நான் பேசிக்கிறேன்” என சொல்லி தன் போனினை எடுத்தாள்.

ஜனனி குளிக்க சென்றாள்.

ராஜேஸ்வரி போனில் தியாகுவிற்கு அழைத்துக் கொண்டே.. தன் ஆறு வயதே ஆன ரகுவந்த்’க்கு உணவுகளை பிரித்து தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

ராஜேஸ்வரியின் எந்த அழைப்பினையும் ஏற்கவில்லை. என்னமோ கோவமாக வந்தது.. என்னிடம் சொல்லாமல் எப்படி ஜானுவை அழைத்து செல்லலாம் என.

தியாகு வீடு வந்தான்.. ஜனனி அப்போதுதான் மேலே இருக்கும் தங்களின் அறையிலிருந்து கீழே வந்துக் கொண்டிருந்தாள்.. தன் தந்தையை பார்த்ததும் “அப்பா” என அழைத்துக் கொண்டே மகள் ஓடி வந்தாள்.

தியாகு மகளை வரவேற்க.. மாடிபடியின் அருகே சென்றான்..

ஜனனி தந்தையை கட்டிக் கொண்டாள்.

தியாகுவின் கோவமெல்லாம் கரைந்தது.. தனியாக இருப்பதாக உணர்வான் இந்த வீட்டில்.  ம்.. இவ்வளவு பெரிய வீட்டில்.. தன்னை தனியாகத்தான் உணர்ந்துக் கொண்டிருக்கிறான். இப்போது பெண்ணின் வருகையில் அகமகிழ்ந்தான்.

இப்போது உள்ளிருந்து ரகு “ப்பா..” என அழைத்துக் கொண்டே தியாகுவை வந்து கட்டிக் கொண்டான். 

தியாகு ஆறு வயது குழந்தையை தூக்கிக் கொண்டான்.

ஜனனி “டேய் , இது என் அப்பா டா.. உனக்கு பெரியப்பா” என்றாள்.

ரகு விழித்தான் என்ன சொல்லுவது என தெரியாமல்.

ராஜி “ஜானும்மா.. அவனுக்கு அப்பா இங்க இல்லையில்ல, சின்ன பையன் நீ கூப்பிடவும் கூப்பிடுறான்” என்றாள்.

தியாகுவும் புன்னகையாகவே பையனை தூக்கிக் கொண்டே.. ஹால் சோபாவில் அமர்ந்தான்.