Advertisement

மதுரவாணி. பதினைந்து வயது ரெண்டும்கெட்டான் வயது. துருதுரு கண்கள் உப்பலான கன்னம் இரண்டும் அவளின் அழகின் ரகசியம். கால் எப்பொழுது தரையில் நிற்காது. தனக்கு பிடித்த அனைத்தும் செய்வாள். பெண் என்பதால் சாந்தி நிறைய விஷயத்தில் தடை போடுவார். முதல் வேலையாக அவர் போடும் தடைகளை உடைப்பதே இவளின் வேலை.

அவளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ஒரு நாளில் நூறு முறை அவள் அம்மாவின் வாயில் இருந்து வரும் வார்த்தை “செய்யாதே”.

சாந்திக்கு அவள் சாதாரண பெண்ணாக அடக்க ஒடுக்கமாக இருந்தால் போதும். ஆனால் எதிலும் அவளை அடக்கி வைக்க முடியவில்லை.

ஏதாவது அளவுக்கு மிஞ்சி போனால் அரசு அடக்குவார் தான். ஆனால் இதுவரை மதுவை அடக்கியதில்லை. அவருக்கு அவர் பெண்ணின் விருப்பங்கள் நியாயமாகவே தோன்றும். அதனால் சாந்தி கொண்டு வரும் புகார்கள் கண்டுகொள்ளப்படமாட்டாது.

இன்று ராகவியின்  சிரிப்பை பார்த்து அனைவருக்கும் மனம் நிறைந்தது. சாந்தியும் வந்ததிலிருந்து பேச்சு கொடுத்து பார்த்தார். ராகவி பேசினாள். ஆனால் முகம் சோகமாக தான் இருந்தது. இந்த துரு துரு பெண்ணின் அடாவடிகளை பார்த்து மனம்விட்டு சிரித்தாள்.

“இங்க வா” என்று  அருகில் அழைத்தாள்.

மதுவும் அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

“ஹேர் ஸ்டைல் செமையா இருக்கு. நீயும் பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்க” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

விஜய்க்கு கண்ணே நிறைந்துவிட்டது. அருகில் வந்து ரேகாவின் தலையை இடுப்போடு கட்டிக்கொண்டான்.

“நான் சரி ஆகிடுவேண்ணா. கவலைப்படாத.  திங்கள் கிழமையில் இருந்து காலேஜ் போறேன்” அண்ணன் முகம் பார்த்து கூறினாள்.

“ரொம்ப  ஹாப்பி டா உன்ன இப்படி பார்த்ததுல” அவனுக்கு இருந்த   ஒரு பெரிய அழுத்தம் குறைந்தது.

அடுத்த நாள் விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தனர். அரசுக்கு மட்டும் விடுமுறை இல்லை. வேலைக்கு சென்றிருந்தார்.

மதியம் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் மது தன் தம்பிகளை படிக்க அழைத்தாள். மதுவின் மிகப்பெரிய விருப்பம் டீச்சிங். மிக திறமையாக சொல்லிக்கொடுப்பாள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மதுவை சாந்திக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு மகன்களின் படிப்பை அவளே கவனித்துக்கொள்வாள். அவர்களும் நிறையவே மதிப்பெண்கள் எடுப்பர்.

அவள் ஒரு ரூமில் தம்பிகளுடன் இருக்க, சாந்தி சமையலறை  ஒழித்துவிட்டு சிறிது  கண் அயர்ந்தார்.

இரண்டரை மணி போல மிகவும் வயதானவர் ஒருவர் தூரத்தில் இருந்து   ஒரு மாதம் கழித்து துக்கம் கேட்க வந்திருந்தார். அவரை விஜயும் ராகவியும் அமரவைத்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரம் சென்று மது வெளியில் வந்தவள் பார்த்தது அந்த பெரியவரின் கண்களை தான். அதில் அப்படி ஒரு பசி தெரிந்தது. (ஆம் ஒருவர் பசியில் இருப்பது அவர் கண்களில் தெரியும். முடிந்தால் கண்டுபிடித்து உடனடியாக ஏதேனும் உண்ண  கொடுங்கள். கடந்து போய்விடாதீர்கள்).

இவள் உடனடியாக சமையல் அறை சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தாள். சாதம், சாம்பார், தயிர் இருந்தது. பொரியலும் ரசமும் இல்லை. உடனடியாக ஒரு பருப்பு துவையல் அரைத்து அப்பளம் பொரித்து டேபிளில் அடுக்கினாள்.

பெரியவரிடம் சென்று “தாத்தா சாப்பிட வாங்க” என்றாள்.

திடீர் என்று கேட்ட குரலில் ஆச்சர்யமாக அவளை நிமிர்ந்து பார்த்தார்.

“மணி மூன்று ஆக போகிறது. எவ்வளவு நேரம் சாப்பிடாம இருப்பிங்க” என்று கேட்டாள். அப்படி கேட்க்கும் போது விஜய் ராகவி இருவரையும் அழுத்தமாக பார்த்தாள்.

அவர் பசியில் இருக்கிறார் என்று கூறியவுடன் இருவரும் பதறி எழுந்தனர். அவர்களும் பெரியவரை அழைத்து உண்ணுமாறு கூறினார். தாமதம் ஆனதற்கு மன்னிப்பும் வேண்டினர்.

“நான் கிராமத்தான்மா. இரண்டு நாள் சாப்பிடலைன்னாலும் தாங்குவோம். நீ பதறாத. இப்போ இங்க சாப்பிடலன்னா இங்க இருந்து கிளம்பியதும் வெளில எங்கயாச்சும் சாப்பிட்டு இருப்பேன். வெளில போனா எல்லாருக்கும் சாப்பாடு முன்ன பின்ன தான்  ஆகும். அதுக்காக நீங்க உங்களை வருத்திக்க வேண்டாம்” என்று  கூறி சாப்பிட்டுவிட்டே சென்றார்.

அவர் சென்றதும், ராகவியை கேள்வி கேட்டாள். “ஏன்க்கா அவ்ளோ நேரம் அவரை சாப்பிட சொல்லாம இருந்திங்க?”

“அவர் பசில இருக்கிறது எனக்கு தெரியலடா. சாரி”

“ஒருத்தரோட  பசி கூட உங்களுக்கு தெரியலன்னா நீங்க எப்படி நோயாளியோட வலி புரிஞ்சு வைத்தியம் பார்ப்பீங்க. அப்பா சொல்லுவாங்க. நாம படிக்கிறது, பெரிய ஆள் ஆகுறது, நிறைய சம்பாரிக்கிறது எல்லாம் அப்புறம் தான். நாம முதல்ல மனுஷங்களா இருக்கணும்னு அடிக்கடி சொல்லுவாங்க”

“இனிமேல் கவனமா இருக்கேன்டா” ராகவி உண்மையாக உணர்ந்து கூறினாள்.

விஜய், இந்த விளையாட்டு பெண் என்ன இவ்வளவு பெரிய வார்த்தை பேசுகிறாள் என்று ஆச்சர்யமாக பார்த்தான். அது, அரசு என்ற மனிதனின் போதனையும் இயற்கையாகவே அவளுள் இருக்கும் இரக்க குணமும்  ஆகும்.

அன்று சாயங்கால வேளையில் ராகவியின் கல்லூரி நண்பர்கள் வந்திருந்தனர். அவள் ஒரு  வாரம் ஆகியும் வராததால், நேரில் பார்த்துவிட்டு செல்ல வந்திருந்தனர். எல்லோரும் பேசிக்கொண்டிருக்க பெரிய ஆளாக இருந்த ஒரு பையன் மட்டும் எதுவும் கூறாமல் ராகவியையே பார்த்திருந்தான். அவன் விக்டர். அவளின் சீனியர். இப்பொழுது எம்.டி படிக்கிறான்.

அவன் பார்ப்பதை ராகவி கவனிக்கவில்லை. ஆனால் மது பார்த்துவிட்டாள். பார்க்க  மிகவும் கண்ணிய தோற்றத்துடன் இருந்தான். சாந்தி அனைவருக்கும் உண்ணவும் குடிக்கவும் கொடுத்தார்.

திங்கள் கல்லூரி  வருவதாக ராகவி கூறினாள். அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி சென்றனர். விக்டர் மட்டும் கிளம்பும்போது “டேக் கேர் ராகவி” என்று கூறிவிட்டு சென்றான்.

எல்லோரும் கிளம்ப மது வெளியில் இருந்த நீண்ட பெஞ்சில் அமர்ந்து இருந்தாள். அதே பெஞ்சில் விக்டரும் அமர்ந்து ஷூ அணிந்துகொண்டிருந்தான்.

“கவலைப்படாதீங்க அண்ணா, நான் ராகவி அக்காவை நல்லா பாத்துக்குறேன்” என்று கூறி விஷமமாக அவனை  பார்த்து சிரித்தாள். நான் உன்னை கண்டுகொண்டேன் என்ற பார்வை அது.

விக்டருக்கு ஆச்சர்யம் அதனுடன் முகமும் சிவந்தது. தான் மூன்று வருடமாக ராகவிக்கு புரியவைக்க நினைப்பதை இந்த பெண் உடனே கண்டுகொண்டாளே என்று.

“ஹே. நோ. வயசுக்கு மீறி பேசக்கூடாது. சரியா?”

“ஓ. சரிங்கண்ணா”

“ஹே என்ன அண்ணா சொல்ற?”

“ராகவி அக்கா எனக்கு அத்தை பொண்ணு. இப்போ சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன முறை ஆகணும்?”

“அப்போ சரி” என்றான் . உடனே அவள் சிரிக்க

“ஓ நோ. நானும் உன் வயசுக்கு மீறி  உன்கிட்ட பேசக்கூடாது. ராகவி உனக்கு என்னவா இருந்தாலும் நான் உனக்கு அண்ணன் தான் ஓகேவா?”

“ஓகே”

அவளைப் பற்றி விசாரித்தான். அவளும் அவனைப் பற்றி கேட்டுக்கொண்டாள். விக்டருக்கு அவளின்  சுட்டித்தனமும் குறும்பும்  பிடித்தது. அவனுக்கு தங்கை என்றால் மிகவும் விருப்பம். ஆனால் வீட்டுக்கு ஒரே பையன். இவனின் பெற்றோரும் மருத்துவர்கள்.

 நண்பர்கள் படை வெளியில் காத்திருக்க இவனும் அவளிடம் விடை பெற்றுக்  கிளம்பினான்.

“அப்போ நான் ராகவி அக்காவை  பார்த்துக்க  வேணாமா?”

அவள் தலையில் கொட்டு வைத்தான். “இனிமேல் நீ என்கிட்டே ராகவி பத்தி பேசக்கூடாது. சரியா?”

“சரி” என்றாள்.

அவனுக்கு சிறு பெண்ணை இந்த விஷயத்தில் இழுக்க விருப்பம் இல்லை. அதனால் கொட்டு வைத்து அழுத்தி சொல்லிவிட்டு சென்றான்.

சில வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவுகள்  இப்படி சாதாரணனமாகத் தான் அறிமுகம் ஆகும்.

Advertisement