Advertisement

“மாமா நீங்களும் அங்க எங்க வீட்டுக்கே குடி வந்துடுறிங்களா? ராகவி சரியாய் சாப்பிட மாட்டேங்குறா. பேச மாட்டேங்குறா. தனியா தூங்க மாட்டேங்குறா. ஹால்ல தான் தினமும் ரெண்டு பெரும்  தூங்குறோம். பாதி ராத்திரில எழுந்து உக்காந்துக்குறா. ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னும் காலேஜ் போக மாட்டேங்குறா. சாந்தி அக்கா அங்க இருந்த நாள்ல அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டா. எங்க அத்தை செய்து வைத்த வேலைல ரொம்பவே டவுன் ஆகிட்டா மாமா. நீங்க எல்லாரும் அங்க வந்திங்கன்னா ஒரு குடும்பம் மாதிரி பீல் பண்ணுவா. அவ சீக்கிரமா நார்மல்  ஆகி  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பணும் மாமா. ஆனா என்ன எப்படின்னு தான் எனக்கு தெரியல. ப்ளீஸ் மாமா. எதையும் மனசுல வச்சிக்கமா அவளுக்காக நீங்க அங்க குடி வாங்க மாமா” விஜய் அவன் தூரத்து சொந்தமான மாமாவிடம் கெஞ்சினான்.
அரசுவிற்கு அவனை பார்த்து பாவமாகியது. சாந்தி வாய் திறந்தார்.
“எங்க வீட்டு வாழுங்க எல்லாம் சரியான வனராம்ங்க தம்பி. உங்கள மாதிரி பதவிசா எல்லாம் இருக்க மாட்டாங்க. வீட்டையே ரெண்டு பண்ணுவாங்க.”
“அது தானே குடும்பம். சத்தம் இல்லாம இருக்கறதா குடும்பம். எங்க வீடு இப்போ சத்தமே இல்லாம தானே இருக்குது. ஒரே நாள்ல அம்மா அப்பா ரெண்டுபேரையும் பறிகொடுத்துட்டு  நிஜமாவே அடுத்து எப்படி இந்த வாழ்க்கையை கொண்டு போறதுன்னு தெரியாம நிக்கிறோம். ராகவி கொஞ்சம் தெளிஞ்சிட்டா கூட அடுத்து என்னன்னு யோசிப்பேன். அவ  இன்செக்குர் பீலிங்கை விட்டு வெளில வரணும் மாமா.”
“என்னங்க. ராகவிய எப்படியாச்சும் மாத்தணும்ங்க. அதுக்காக மட்டுமாவது நாம அங்க போலாம்ங்க. இது என்ன சொந்த வீடா. வாடகை வீடு தானே. அவ சரி ஆனதுக்கு அப்புறம் வேற வீடு மாறிக்கலாம். சரின்னு சொல்லுங்க.”
“சரி விஜய். நாங்க வரோம். ஆனால் ஒரு கண்டிஷன். உங்க அளவுக்கு நாங்க வசதி கிடையாது. எங்க வசதிக்கு நாங்க எப்படி வாழ முடியுமோ அப்படி தான் வாழுவோம். உங்க காசு எடுத்து எங்க வீட்டுல யாருக்கும் நீங்க செலவு பண்ண கூடாது. என் குடும்பத்தை நான் தான் காப்பாத்துவேன். இது பணம் விஷயம் என்பதால் முன்னாடியே சொல்லிக்கிறேன். சரியா?”
“சரி மாமா” ஒத்துக்கொண்டான்.
அந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒற்றை படுக்கை அறை வீட்டில் இருந்து அவனுடைய பெரிய வீட்டிற்கு குடி புகுந்தது.
கீழே ஐந்து ஒரிய பெட் ரூம், ஹால், டைனிங், சமையல் அறை என்று இருந்தது. மேலே நான்கு பெட் ரூம், பெரிய ஹால், பலகணி என்று இருந்தது. அவ்வளவு பெரிய மொட்டை மாடி எதுவும் செய்யப்படாமல் ஓபன் ஆகவே இருந்தது.
சாந்தி, அரசு, மது கீழ் வீட்டில் ராகவியுடன் இருந்து கொண்டனர். மேலே விஜய், ஆதவ் மற்றும் ராகுல் இருந்து கொண்டனர்.
அரசு சாந்தி தம்பதிக்கு மதுரவாணி என்ற பதினைந்து  வயது பெண்ணும், ஆதவ் என்ற பன்னிரண்டு வயது பையனும், ராகுல் என்ற பத்து வயது பையனும் இருக்கின்றனர்.
அரசு ஒரு பெரும் ஜவுளி கடையில் மேனேஜர் ஆக இருக்கிறார். சென்னையில் இத்தனை பிள்ளைகளுடன் ஒற்றை அறை வீட்டில் வசிக்கும் அளவுக்கு தான் அவரால் சம்பாரிக்க முடிந்தது. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான குடும்பம்.
விஜயின் பெற்றோர் ஒரு விபத்தில் ஒரே நாளில் இறந்து போயினர். கங்கு கரை இல்லாத சொத்து. இரண்டு பிள்ளைகள் மட்டும் இப்பொழுது மிச்சம் இருக்கின்றனர். விஜயின் அப்பா ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். சிறு வயதில் இருந்தே அப்பாவின் வருமானம், தொழில், முதலீடு அனைத்தும் விஜய்க்கு தெரியும். அதனால் இப்பொழுது அவனுடைய சொத்துக்களை பராமரிப்பது அவனுக்கு கஷ்டமாக இல்லை. ராகவியை தான் இந்த இழப்பில் இருந்து வெளியில் கொண்டுவர முடியாமல் திணறினான்.
துக்கத்துக்கு வந்த அரசு குடும்பம் ராகவியை நன்றாக பார்த்துகொண்டனர்.நெருங்கிய சொந்தங்கள் அனைத்தும் ஏதோ ஒரு கணக்கு போட்டு அதை அவசரமாக நடத்த நினைக்க விஜய் அனைவரையும் விரட்டி விட்டான்.
இடையில் சாந்தி மறுபடியும் ஒரு முறை சென்று ராகவியை பார்த்து வந்தார். ராகவி இவரிடம் மட்டும் நன்றாக பேசினாள். பிறகு மீண்டும் கூட்டுக்குள் சுருண்டுகொண்டாள்.
அதனால் தான் விஜய் அவர்களை வற்புருத்தி இங்கு கொண்டுவந்தது.
——
அரசு குடும்பம் அங்கு வந்து இரண்டு தினங்கள் ஆகிவிட்டது. விஜய் இன்ஜினியரிங் முடித்து தானும் ஒரு தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறான். ராகவி மருத்துவம் மூன்றாம் ஆண்டு பிடிக்கிறாள்.
சாந்தியின் பிள்ளைகள் மூவரும் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
அன்று விஜய் ஹேர் கேட் பண்ணிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பினான்.
மதுவும் அவசரமாக ஒரு சுடிதார் எடுத்து அணிந்துகொண்டு அவனுடனேயே ஓடினாள். அவன் நடந்து போகும் தொலைவில் உள்ள ஒரு கடைக்கு தான் சென்றான். இவளும் அவனை தொடர்ந்து சென்றாள். முடி திருத்தும் கடை வந்ததும் மாமா என்று அவன் முன்னால் சென்று நின்றாள்.
“ஹே என்ன நீ இங்க வந்துருக்க.?”
“எனக்கும் முடிய கொஞ்சம் ஸ்டைல் பண்ணனும் மாமா”
“அம்மா திட்டமாட்டாங்களா?”
“திட்டுவாங்க. அதான் தெரியாம கிளம்பி வந்துருக்கேன். உங்க பார்பர் கிட்ட சொல்லி நான் கேக்குற மாதிரி ஸ்டைல் பண்ணிவிட சொல்லுங்க மாமா. ப்ளீஸ்.”
“சரி வா”
அந்த கடை இரண்டு அறை போல இருந்தது. இவன் வெளியில் முடி வெட்ட அமர்ந்து கொள்ள அவள் உள்ளே வேறு ஒருவரிடம் முடி வெட்ட சென்றாள்.
வீட்டிற்கு வரும்போது ஷால் கொண்டு தலையை மூடி வந்து சேர்ந்தாள். பின்னாடியே பதைப்புடன் விஜயும் வந்தான். வீட்டில் ஹாலில் ராகவி சோபாவில் அமைதியா அமர்ந்து இருந்தாள்.
அரசுவும் பசங்களும் டிவி பார்த்து கொண்டிருந்தனர். சாந்தி அப்பொழுது தான் கிச்சனில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். மது பூனை போல பதுங்கி ரூமிற்குள் செல்ல முயன்றாள்.
“நில்லுடி” சாந்தி பார்த்து விட்டார்.
“என்னடி திருட்டுத்தனம் பண்ற. பதுங்கி பதுங்கி போற.”
“ஒன்னும் இல்லம்மா”
“முதல்ல அந்த ஷாலை எடு. ஏன் வீட்டுக்குள்ள அத போட்டு மூடிக்கிட்டு போற?”
அவள் அந்த வீட்டின் தூரமாக இருந்த மூளைக்கு சென்றாள். அனைவரும் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தனர். விஜய் வராண்டாவிலேயே நின்று கொண்டான். மது மெதுவாக ஷாலை விலக்கினாள்.
“ஐயோ ஐயோ ஐயோ… என்ன காரியம் டி பண்ணிட்டு வந்துருக்க. இப்படி ஆம்பள மாதிரி வெட்டிட்டு வந்துருக்க. நான் எவ்ளோ அருமை பெருமையா பாரத்து பார்த்து வளர்த்து வச்ச முடி. இடுப்புக்கு கீழ இருந்துச்சேடி. இப்படி பாய் கட் பண்ணிட்டு வந்து நிக்கிற.”
சாந்தி அவளை அடிக்க துரத்தினாள். மது  அவள் கையில் சிக்காமல் ஹால் முழுவதும் ஓடினாள்.
கடைக்காரன் கூட அவ்வளவு கெஞ்சினான்.
“அம்மாடி. இவ்வளவு முடி இருக்குடா. யாருக்கு இப்படி வளராதுடா. வெட்ட வேண்டாம்டா.”
“அண்ணா ப்ளீஸ். எனக்கு இந்த முடி வேணாம். பாய் கட் என்னோட ரொம்ப நாள் ஆசை. ப்ளீஸ் அண்ணா. வெட்டிவிடுங்க.”
“சரி உன் மாமாகிட்ட கேக்குறேன்”
“அண்ணா ப்ளீஸ் அண்ணா மாமாகிட்ட சொல்லாதீங்க. விடமாட்டாங்க. எதுவா இருந்தாலும் நான் பேசிக்கிறேன். நீங்க வெட்டி  மட்டும் விடுங்கண்ணா” என்று பாவமாக கெஞ்சி அவனும் அழுதுகொண்டே தான் அவளுக்கு பாய் கட் பண்ணிவிட்டான்.
விஜய் பார்த்துவிட்டு அதிர்ச்சி ஆனான். அவன் சாந்தி அக்காவை நினைத்து பயந்தான்.
“ஏங்க அவளை பிடிங்க.”
“அப்பா நோ”
“உன்னைய இன்னிக்கு என்ன பண்றேன் பாருடி. இரு சூடு வைக்கிறேன். அப்போ தான் நீ அடங்குவ.”
“அப்பா ப்ளீஸ் காப்பாத்துங்க. அம்மாவை பிடிங்க.”
இப்பொழுது அரசு மகளின் பேச்சை கேட்டார். சாந்தியை பின்னால் இருந்து பிடித்து கொண்டார். அவர் ஒரு கையை பிடித்துக்கொள்ள, அவர் பையன்கள் இருவரும் அம்மாவின் மற்றொரு கையை நகர முடியாமல் பிடித்துக்கொண்டனர். மூவரும் சேர்ந்து சாந்தியை அசையாமல் நிற்க வைத்தனர்.
மது டான்ஸ் ஆடிக்கொண்டே வந்து
“என் செல்ல அம்மா. பட்டு அம்மா. அம்முனு புஜ்ஜுனு கிஜ்ஜிலி மம்மி. உம்மம்மா” ரைமிங்காக பாடிக்கொண்டு அன்னைக்கு மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.
சாந்தி கொலை வெறியில் திமிறிக்கொண்டிருக்க மது விடாமல் முத்தம் வைத்து அவளை வெறுப்பேற்றினாள். அவளின் அடாவடியை விஜய் ஆச்சரியமாக பார்க்க கல கலவென ஒரு சிரிப்பு கேட்டது.
ராகவி கண்ணில் நீர்  வழிய சிரித்துக்  கொண்டிருந்தாள்.

Advertisement