மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

26

சந்திர லேகா.. இப்போது ஹம்சா மில் செல்லத் தொடங்கியிருந்தாள். சுந்தரம்தான் லேகாவை அங்கே பயிற்றுவிக்கத் தொடங்கியிருக்கிறார். 

பணம் சம்பாதிப்பது கலையென்றால்.. அதை தக்க வைப்பதுதானே மனிதனுக்கு கௌரவப் போராட்டம். ஆக ஷிவா, அந்த பணத்தினை தக்கவைக்கவே இத்தனை பெரிய ரிஸ்க் எடுத்தவன்.. இப்போது மனைவியின் பெயரில் இருக்கும் சொத்தினை வளர்க்காமல் இருப்பானா என்ன!.. அதனால் மனையாளை உற்சாகப்படுத்தினான்.

ஷிவா “பேபி.. நீ ஹம்சா மில் போய் பாரேன்” என்றான். 

லேகா தயங்கினாள். ஏதும் பதில் சொல்லவில்லை.. தனக்கு நிர்வாகம் செய்ய வராது என எண்ணிக் கொண்டு.. அதையும் சொல்ல பயந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கணவன் “லேகா.. அதுவும் நம்ம மில். நீயும் தீக்ஷியும்தான் அதற்கு பொறுப்பு. சோ, நீதான் அங்கே முதலில் பார்க்கணும். அவசரமில்ல.. ஆனால், கண்டிப்பாக நீ அங்கே போகனும். சித்தப்பா கூட இருப்பார்.. எல்லாம் சொல்லிக் கொடுப்பார். கற்றுகொள்ளலாமே.. என்ன இப்போது. நானும் ஹெல்ப்க்கு கூட இருப்பேன்.. ” என்றான்.. நம்பிக்கையாக.

லேகா பதில் ஏதும் பேசவில்லை. கணவன் அவளின் உச்சி வருடிவிட்டு கிளம்பினான். 

லேகாவிற்கு, கணவனின் பேச்சினை தட்ட முடியவில்லை.. தானும் வீட்டில் இருக்க முடியாமல் கிளம்பினாள்.. ஹம்சாமில்லுக்கு.

ஷிவா, எப்போதும் போல பிசி. அதிலும் இப்போதெல்லாம் சந்துருவின் தொழில் கணக்குகள் இப்போது ஷிவாதான் பார்க்கிறான். கிரிஷ் கூட அடிக்கடி சந்துருவின் வேலைக்கு என சென்றிடுவான்.. அதனால், கணக்கு வழக்கு முழுவதும் ஷிவாவின் பொறுப்பு. ஷிவா, புது சிட் பிளான் ஒன்றினை அறிமுகம் செய்தான். நல்ல வரவேற்பு. 

சந்துரு, தன் வேலையில் கவனமானான். தன்னை நம்பி ஷிவா, பெரிய பொறுப்பினை கொடுத்திருப்பதாக உணர்ந்தான். ம்.. முதலீடு என்பது முழுக்க முழுக்க.. ஷிவா செய்வதால்.. சந்துரு கவனமாக இருந்தான். முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார் ஷோரூம்.. சர்வீஸ் ஸ்டேஷன்.. சார்ஜிங் யூனிட்.. எல்லாம் இவனின் பொறுப்பானது. அலைச்சல்.. ஆட்களை தேர்வு செய்வது.. முதலீடு என எல்லாம் சந்துருதான் பார்த்தான்.

சந்துருவின் மேல் நம்பிக்கை வேர்விட்டிருந்தது.. அதற்கு ஏதுவாக.. அவனின் பொறுப்பில்.. வேலைகளும் கட்சிதமாக திட்டமிட்டு நடந்துகொண்டிருந்தது. சந்துருவின் திட்டமிடுதலிலும்.. அதை சார்ந்த கண்ணோட்டத்திலும் அத்தனை திருப்தி.. ஷிவாவிற்கு. உறவு மெல்ல மெல்ல பலம் பெற்றுக் கொண்டிருந்தது இருவருக்கும் நடுவில். 

!@!@!@!@!@!@!@!@!@!

 

சந்துரு, இந்த நாட்களில் வீடு வருவதே அரிதாகத்தான் இருந்தது. பெரும்பாலும்.. அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டான். ஷிவா முன்பே தொடங்கிய சார்ஜ்ங் யூனிட்.. பொறுப்பும் சந்துருடையது. அதனால், மாதம் இருமுறை.. அதன் பொறுப்புகளையும் நேரில் சென்று பார்க்க வேண்டியிருந்தது.

க்ரிஷ் பெரும்பாலும் அந்த பொறுப்பினை செய்திடுவான். ஆனால், சந்துரு, நடைமுறை சிக்கல்களை கண்டறிய.. தானும் செல்லுவான். சந்துருவாக இப்படி பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுகிறான். என்ன செய்ய முடியும் அப்போது அதை சரி வர செய்ய உழைத்துதானே ஆக வேண்டும்.

தீக்ஷிதாதான் இப்போதெல்லாம் கணவனை அதிக  தேடுகிறாள். வார இறுதியில் வீடு வருகிறான். மற்றபடி.. போனில் பேசுவது குறைந்துவிட்டது. நேரில் பார்ப்பது.. காபி குடிப்பது என எல்லாம் இந்த ஆறுமாதங்களாக இல்லை எனலாம். காரணம் தெரியும்.. அவனின் இலக்கும் புரிகிறது. எனவே, தன் படிப்பினை கவனித்தாள். தோழிகளோடு நேரம் செலவிட்டாள்.

எல்லோருக்கும் பழகிற்று.. வாழ்க்கை இப்படிதான் செல்லும் என. அதற்கு தக்க.. எல்லோரும் தங்களை தாங்களே தகவமைத்துக் கொண்டிருந்தனர். 

லேகா, தினமும் ஹம்சா மில் செல்லுகிறாள். முன்பு இருந்த அளவில் இப்போது துணிகள் தயாராகவில்லைதான் அங்கே. ஆனால், சின்ன யூனிட் அளவில் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. ஹம்சா மில் என்பது ரெடிமேட் உடைகள் தைய்க்கும் மில். முன்பு பெரியளவில் மும்பை டெல்லி போன்ற இடங்களுக்கும் அனுப்பும் அளவிற்கு வேலைகள் நடந்தது. இப்போது தமிழ்நாடு அளவில் மட்டுமே.. ஆர்டர்கள் எடுத்து வேலைகள் நடக்கிறது.

லேகா, பொறுமையாக பல்க துணிகள் எப்படி இயந்திரங்கள் மூலமாக வெட்டுகிறார்கள் எனதான் கற்கத் தொடங்கினாள். அவளுக்கு அதில் ஆர்வம் இருந்தது. அதை கற்பதன் மூலம்.. தொழிலில் அவளுக்கு பிடிப்பு வரும் என நம்பி.. அவள் விருப்படி அனுமதித்தார்.

லேகாவிற்கு இந்த ஆர்வமாகவே இருந்தது. தினமும் வந்தாள்.. தானும் தைத்தாள். துணிகளை கையாள கற்றுக் கொண்டாள்.

லேகாவின் மில் கணக்கு வழக்குகளையும் சுந்தரம் பார்த்தாலும்.. அதற்கு தேவையான சின்ன சின்ன முதலீடுகளை ஷிவாதான் செய்கிறான். எனவே, ஷிவா எல்லோரையும் இழுத்து பிடித்திருக்கிறான் தொழில் எனும் மாயக்கயிற்றில். பொதுவாக அவரவர் பொருப்பினை அவரவர் பார்க்கிறார்கள் என இருந்தாலும்.. பிடியும் பிடிப்பும் ஷிவாவிடம்தான் இருந்தது. ஷிவா அதை எடுத்தும் கொண்டான்.. உறவுகள் அவனை நம்பி கொடுத்தும் வைத்தனர் எனலாம். தொழிலும் சொந்தமும்.. கொடுக்கல் வாங்களில்தானே நிறை காண்கிறது. 

லேகா, வீட்டு நிர்வாகத்தையும் விடாமல் கவனித்தாள். நேரம் அவளின் கட்டுபாட்டிலிருந்து சிலநேரம் தப்புகிறது. ஷிவா வெளியூர் சென்ற நாட்களில் அழைக்கும் போது.. பெண்ணவள் உறங்கிவிடுகிறாள். சற்று உடல்நலமில்லாமல் கூட போகிறது பெண்ணுக்கு. 

அப்போதெல்லாம் ஷிவா “பேபி.. நீ நாளை வீட்டில் ரெஸ்ட் எடேன்..” என்பான். “இந்த வாரம்.. தரமணி வீடு வேண்டாம்” என சொல்லி அவளுக்கு ஒய்வு கொடுக்கவும் செய்கிறான்.

ஷிவாவிற்கு புரிகிறது.. அவளுக்கு ஹம்சாமில் பொருந்தவே நேரம் நிறைய வேண்டும் என., அத்தோடு, இந்த குடும்ப அமைப்பில் எல்லோரையும் லேகாதான் இழுத்து பிடிக்கிறாள்.. எனவும் புரிகிறது. அதில் வேலையோடு வேலையாக.. இந்த ஹம்சா மில்லும் தான் கொடுத்திருப்பது சுமையோ என யோசிக்கிறான் கணவன்.

ஷிவா, முன்போல மனையாள் தன்னோடு நேரம் செலவிடுவதில்லை என்பதில்.. இந்த யோசனை அவனுக்கு. தனக்காக எந்த நேரமானாலும் காத்திருப்பாள்.. கண்கள் தான் தரும் சின்னபரிசுக்காக காதலாக விரியும்.. என்பதையும் நினைவுப் படுத்திக் கொண்டே வீடு வந்தான்.. நான்குநாள்.. ஹைதராபாத் பயணத்திற்கு பிறகு.

லேகாதான் எழுந்து வந்து கதவு திறந்தாள்.. தூக்க கலக்கத்தோடு. ஆனாலும் கணவனை கண்டதும் கண்கள் காதலால் மலர்ந்தது.

ஷிவா.. அவளை நெருங்க.. பெண்ணவள் தானாக கணவனை கட்டிக் கொண்டாள். ஷிவா “லவ் யூ.. லகு” என தன்னோடு தூக்கி சுற்றினான் பெண்ணவளை. நீண்ட நாட்கள் ஆங்காங்கே அடைபட்டிருந்த காதல் காற்று.. இப்போது புயலென இருவருக்குள்ளும் வீசியது. அப்போதே முடிவெடுத்தான்.. தன்னவளோடு ஹனிமூன் செல்ல.

ஷிவா லேகா இருவரும் ஹனிமூன்  ட்ரிப் கிளம்பினர். ஷிவா, தான் டிரைக்டர் ஆகியதும் மனைவியோடு செல்லலாம் என முன்பே திட்டம் போட்டிருந்தான். ஆனால், எல்லாம் வேறுமாதிரி சென்றுவிட்டது. காலம் கை கூட காத்திருந்தனர் இருவரும். காலம் கை கூடியது.. இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே.. மனையாளோடு கிளம்பினான் சுவிஸ்சர்லந்த்.

!@!@!@!@!@!@!@!@!@!

ஆறு மாதங்கள் சென்று..

இன்று, கார் ஷோரூம் திறப்புவிழா.

அதிகாலை நேரத்தில் சந்துரு தீஷி என இருவரும் ஹோமத்தில் அமர்ந்திருந்தனர். பூஜைகள் தொடங்கியது. குடும்ப உறப்பினர்கள்.. அலுவலக ஆட்கள் என முக்கியமானவர்கள் மட்டுமே இந்த நேரத்தில் இருந்தனர். 

சந்துருவின் முகம் மலர்ந்திருந்தது.. என்றாலும்  கடுக்கத்தனை பதட்டம்.. நம் கண்களுக்கு தெரிகிறது. எல்லாம் அவன் கொணர்ந்தது என்பதாலும்.. அவன் பொறுப்பு என்பதாலும்.. சின்ன பதட்டம். ‘நன்றாக அமைய வேண்டும் எதிர்காலம்’ என எண்ணிக் கொண்டே பூஜையை கவனித்துக் கொண்டிருந்தான்.   

ஷிவா, எந்த தலையீடும் செய்யவில்லை.. ‘முழுதாக என் மைத்துனனை நம்புகிறான் நான்’ என.. ஷிவா சொல்லாமல் சொல்லுவது போல.. சந்துருவினை நம்பி முதலீடு செய்திருக்கிறான். இப்போது அதே நிமிர்வோடு அமர்ந்திருந்தான் ஷிவா.

லேகா, தீஷியின் அருகே அமர்ந்திருந்தாள் சேரில்.  லேகா இரண்டுமாதம் கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் முன்போல தம்பிக்கு என அலையவிடவில்லை ஷிவா. மனையாளின் பங்களிப்பினை சேர்த்து சந்துருவிற்கு செய்கிறான்.. கவனிக்கிறான், ஷிவா.

ரமேஷ் வந்துவிட்டார் இரண்டுநாள் முன்பே.. மகனுக்கு உதவியாக. இப்போது, கார்கள் எல்லாம் பின்புறம்.. ஷெட்டில் நிருத்தியிருந்தது.. அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.. அதன் அணிவகுப்பினை.

ரமேஷ் பொறுத்தவரை.. இந்த வளர்ச்சி பெரியது. மகன் அன்னார்ந்து பார்க்கும் நிலையில் இருக்கிறான் என பெருமிதம்.. தன் மனைவியால் கைகூடியது இதுவென ஆனந்தம். பூரிப்போடு இருந்தார்.

சுந்தரமும் அங்கேதான் ரமேஷ்ஷோடு நின்றுக் கொண்டு.. அங்கிருந்த பணியாளர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.. இருந்து வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். 

வடிவேல் வசந்தி  லதா, இப்போது வந்து சேர்ந்தனர்.

சந்துரு “வாங்க மாமா.. அத்தை.. வாங்க அத்தை” என தன் மாமியாரையும் வரவேற்றான் சத்தமாக. சந்துரு நேரில் சென்று அழைத்தான் பெரியவர்களை.. அதிலும் லதாவிடம் சொல்லிவந்தான்.. “நீங்க கண்டிப்பா வரணும்.. வாழ்த்தனும்” என வேண்டுகோள் போல சொல்லித்தான் வந்தான்.

அதனாலோ என்னமோ லதா வந்திருக்கிறாள் என கணவர் சுந்தரம் எண்ணிக் கொண்டார். 

தீஷி “வாங்க பெரியப்பா பெரியம்மா” என்றாள். லதாவிடம் பேசவில்லை.. முன்பு பெண்ணுக்கு அந்த ஆசை இருந்தது.. அம்மாவோடு பேச வேண்டும்  உறவுமுறை வேண்டும் என. 

ஆனால், திருமணம் ஆன பிறகு பெண்ணவளுக்கு.. லதாவின் ஒதுக்கத்தை ஏற்றுக் கொள்ள முடிந்தது. காரணத்தை யூகிக்க முடிந்தது சின்ன பெண்ணுக்கு. அது சரியோ தவறோ.. லதாவை மாற்ற எண்ணவில்லை. தானும் ஒதுங்கிக் கொண்டாள், தீக்ஷி.

வசந்தி “நல்லா இருக்கியா சந்துரு” என்றார். தீக்ஷியின் பார்வையை தவிர்த்து.

சந்துரு “ம்.. அத்தை.. உட்காருங்க..” என சொல்லி அழைத்தான்.