Advertisement

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விஜயின் நண்பர்கள் அவனை பார்க்க வந்தனர். தங்கை சரி ஆகாததால் விஜய் நண்பர்கள் வட்டத்தை பார்க்க செல்லவில்லை. இப்பொழுது அவர்களும் வீட்டிற்கு வந்துவிட்டனர். வந்து பார்த்ததும் வீட்டின் நிலைமை நார்மல் ஆகிறது என்று புரிந்துகொண்டார்கள்.

“ஈவினிங் ஒரு மேட்ச் இருக்கு.  ஆட வரியா?” என்று ஒரு நண்பன் கேட்டான்.

“இல்லடா. அடுத்த வாரம் பார்க்கலாம்” என்றுவிட்டான்.

“மாமா, கிரிக்கெட் ஆடுவீங்களா? என்னையும் கூட்டிட்டு போங்க மாமா. எனக்கும் விளையாட ரொம்ப பிடிக்கும்” என்று மது கேட்டாள்.

“யாருடா இந்த அரை டிக்கெட்” என்று ஒருவபன் கேட்டான்.

“ஹல்லோ. நான் ஒன்னும் அரை டிக்கெட் இல்ல” இவள் துள்ளினாள்.

“மச்சி. நல்லா பாருடா. இன்னும் டிக்கெட்டே வாங்க ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க. ரொம்ப சின்ன பையனா இருக்கான். குரல் கூட இன்னும்   உடையல” இது இன்னொருவன்.

“ஹல்லோ. நான் ஒன்னும் பையன் இல்ல. பொண்ணு.” இன்னும் கடுப்பானாள்.

“ஒரு போர்டு எழுதி கழுத்துல மாட்டிக்கோடி” இது  சாந்தி. ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அவரும் கடுப்பை காட்டினார்.

“அம்மாஆஆ”

“ஆம்பளை பையன் மாதிரி முடிய வெட்டிக்கிட்டா. இப்போ தடிப்பய மாதிரி ஆட போகணும். புள்ளையா பொறந்துருக்கு எனக்கு. சரியான தறுதலை”

காலை தரையில் உதைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

“அவ என் மாமா பொண்ணுடா. இவங்க சாந்தி அக்கா” என்று அறிமுகப்படுத்தினான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டனர்.

மது மறுபடியும் விஜய் முன்பு சென்று நின்றாள்.

“மாமா. எனக்கும் கிரிக்கெட் ஆடணும். ப்ளீஸ் என்ன கூட்டிட்டு போங்க”

“வீட்டை விட்டு கால வெளில எடுத்து வச்சா வெட்டிடுவேன்” இது சாந்தி.

“அம்மா. ஏன்மா என்ன விளையாட கூடாது சொல்ற”

“என்னடி வயசு பசங்க கூட போய் என்ன விளையாட்டு வேண்டி இருக்கு. ஒழுங்கா வீட்டுலயே உன் தம்பிங்க கூட ஏதாச்சும் விளையாடு. அத விட்டுட்டு கிரௌண்டுக்கு போவேன்னு நின்ன கால்ல சூடு வச்சிடுவேன்.”

“நீ போ. நான் அப்பாகிட்ட கேட்டுக்கிறேன்”

விஜய் சாந்தியின் சம்மதத்திற்க்காக பார்த்தான். அவனுக்கும் அவளை கூட்டி செல்வதில் எந்த   ஆட்சேபனையும் இல்லை.

அரசு வெளியில் சென்றவர் வீடு வந்ததும் அவரிடம் சென்று நின்றாள். அவரிடம் அனுமதி கேட்டாள். கண்ணில் ஆசையை தேக்கி மகள் கேட்க, அரசு தடுமாறினார். அவருக்கு மதுவின் கிரிக்கெட் ஆர்வம் தெரியும். வீட்டிலே தம்பிகளுடன் டாய் பேட்டு பால் வைத்து விளையாடுவாள். டிவியில் ஒரு மேட்ச் விடாமல் பார்ப்பாள்.

வெளியில் பையன்களுடன் விளையாட அனுப்புவதா என்றுதான் யோசித்தார்.

“மாமா. எல்லாரும் என் ஃபிரண்டஸ் தான். அவ சேப்டி பத்தி பயப்பட வேண்டாம். நாங்கள் எல்லோரும் பார்த்துக்கொள்வோம். உங்களுக்கு  வேற ஏதாச்சும் தயக்கம் இருக்கா சொல்லுங்க” என்று விஜய் கேட்டான்.

அவர் மனைவியை பார்க்க அவர் காளி அவதாரம் எடுத்து நின்றார். உடனே பார்வையை திருப்பிக்கொண்டார். சாந்தி ஒத்துக்கொள்ள மாட்டாள் தான் மட்டும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று புரிந்தது.

“போ. ஆனால் பசங்க யாரும் உன்ன தொட்டு பேசுறது, மேல விழுந்த்து பழகறது எல்லாம் கூடாது. விஜய் கண் பார்வையை விட்டு எங்கயும் போக கூடாது. உன்ன பத்தி எந்த பிரச்னையும் வரக்கூடாது.” ஏனோ இந்த முறை அவருக்கே ஒரு பயம் இருந்தது.

“நான் பாத்துக்குறேன் மாமா. பயப்படாதீங்க” என்று விஜய் கன்வின்ஸ் செய்தான்.

அன்று மாலை விஜய், அரசு சாந்தி தவிர்த்து அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு மால் சென்றான். கிரிக்கெட் விளையாட தேவையானது எல்லாம் மதுவுக்கு வாங்கினான். பிறகு அங்கும் நிறைய சுற்றிவிட்டு சாப்பிட்டுவிட்டு இரவு தான் வீடு வந்தனர்.

வீட்டிற்கு வந்தததும் விஜய் மதுவை அவளின் உடையை போட்டு வரக்கூறினான்.

அவளும் சென்று போட்டு வந்தாள். மிகவும் நன்றாகவே இருந்தது. அரசு சாந்தி இருவரும் உடைக்கு எந்த மாற்று கருத்தும் கூறவில்லை.

“எவ்ளோம்மா ஆச்சு” அரசு கேட்டார்.

“மூவாயிரத்து இருநூறு ஆச்சுப்பா” மது பதில் அளித்தாள்.

விஜய் கோபம் கொண்டு எழுந்தான். அரசு கேட்டதற்கும் கோபம் மது பதில் கூறியதற்கும் கோபம். அவளுக்கு வாங்கிய பொருட்களின் விலையை கணக்கு எடுத்து வைத்திருக்கிறாள் என்று கோபம் வந்தது. அவனுக்கு இது ஒரு தொகையே இல்லை. ஆனால் அரசு இவ்வளவு கணக்கு பார்ப்பது ஏதோ அவனை தள்ளி வைப்பதை போல இருந்தது.

அரசு உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து மதுவிடமே கொடுத்தார். விஜயின் கோபம் அவருக்கு புரிந்தது. அவனிடம் கொண்டு சென்று கொடுக்க அவருக்கே பயம் வந்தது.

 இந்த வீட்டிற்கு வரும்பொழுதே பணம் பற்றி கூறி தானே வந்தார். அவருக்கும் விஜய் வீட்டின் வசதி நன்றாக தெரியும். அவன் வசதிக்காக அங்கு வந்தது போல் யாரும் பேச இடம் கொடுக்க கூடாது என்று கவனமாக இருந்தார். அவருக்குத் தெரியும் பிரச்சனை எங்கு இருந்து வரும் என்று.

மது பணத்தை வாங்கி சென்று விஜயிடம் கொடுத்தாள். அவன் கையை தான் பார்த்து பணத்தை நீட்டிக்கொண்டு இருந்தாள். அவன் கண்ணை பார்க்க அவளுக்கும் பயம். விஜய் எதுவும் கூறாமல் பணத்தை வாங்கிக்கொண்டான்.

அடுத்த நாளில் இருந்து அவரவர் வேலை பள்ளி கல்லூரி என்று சென்றனர். வீட்டில் சாந்திக்கு அதிகம் வேலை இல்லை. சமைக்க ஒரு ஆள் வீடு சுத்தம் செய்ய ஒரு ஆள் என்று இருக்க அவருக்கு பிள்ளைகளை பள்ளி அனுப்பும் வரை தான் வேலை. அதன் பிறகு நேரத்தை நெட்டி தள்ளினார்.

இரண்டு நாட்களில் அவருக்கு போர் அடித்தது.

ராகவியிடம் கூறினாள்.

“எனக்கு வீட்டுல பொழுதே போகல ராகி”

“ஏதாச்சும் வேலைக்கு  போறிங்களா?” ராகவி கேட்டாள்.

“ஏய் ராகி. நான் ஒரு பியூட்டீஷியன். நான் உன்கிட்ட சொல்லவே இல்ல பாரு. மது பிறக்கும் முன்னாடி வேலை பார்த்தேன். அப்புறம் நடுவுல கூட ஒரு வருஷம் பார்த்தேன். அதுக்கு அப்புறம் எனக்கு நேரம் இல்ல. விட்டுட்டேன்”

“ஆஹா. சூப்பர்க்கா. வீட்டுக்குள்ளவே இப்படி ஒரு  ஆள். வாவ்”

“ஆமாம். இனிமேல் உனக்கு  நான் தினமும் ஒரு ஒரு ஹேர் ஸ்டைல் பண்ணிவிடறேன். சரியா?”

“சரிக்கா. இங்க கொஞ்ச தூரத்துல ஒரு  பார்லர் இருக்கு. அங்க கேட்டு பாக்கறீங்களா?”

“சரி. நாளைக்கு போய் கேக்குறேன்” சாந்திக்கும் போகலாம் என்று தோன்றியது.

அடுத்த நாள் போய் கேட்டு அவர்களும் ஒத்துக்கொண்டனர். ஓரளவு சம்பளமும்  கொடுக்க  ஒப்புக்கொண்டனர்.

அடுத்த வாரம் லீவில் மது விஜயுடன் கிரௌண்டுக்குச் சென்றாள்.

பவுலிங் அவளுக்கு நன்றாக வந்தது. விஜயும் அவளுக்கு நல்ல ட்ரைனிங் கொடுத்தான். ஆனால் இந்த வருடம் நிறைய விளையாட அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டான். இந்த வருடம் அவள் பத்தாம் வகுப்பு எழுதுகிறாள்.

அவள் முன்பே வீட்டில் சொல்லிவிட்டாள். அவள் டாக்டர் இன்ஜினியரிங் என்ற எதற்கும் முயற்சி செய்ய மாட்டேன் என்று. அவளுக்கு டீச்சிங் தான் பிடிக்கும். அதற்கு ஏற்றது போல தான் படிக்க போவதாக கூறிவிட்டாள்.

இதற்கு இடையில் அரசுவுக்கு மாத செலவுகளை சமாளிப்பது சிரமம் ஆகியது. அவர் பிள்ளைகளை பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டார். இங்கு விஜயின் வீட்டின் பக்கத்தில் அப்படி பள்ளிகள் தான் இருந்தன. வாடகை செலவு குறைந்தும் சாந்தி சம்பாதித்தும் அவருக்கு கையை கடித்தது. ஆனால் பிள்ளைகளும் இந்த பள்ளியில் நன்றாக படித்தனர். அவருக்கு இந்த பள்ளியிலேயே பிள்ளைகள் தொடர வேண்டும் என்று  விருப்பம் கொண்டார்.

அவருடைய சிரமம் மதுவுக்கும் புரிந்தது. என்ன செய்வாள்?

Advertisement