Advertisement

அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தங்கங்களே…

மனதை நனைக்கும் சாரல் நீயே..

புத்தம் புதிய நாவல்.. இதுவரை எங்கும் பதிவிடாத நாவல்..  நிச்சயமாக உங்கள் மனதை இதமாக  நனைக்கும் சாரலாக இருக்கும் என்று நம்பி நாவலை இன்று தொடங்குகிறேன்…

சாரல் – 01

கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்…

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த

உத்திஷ்ட கருடத்வஜ

உத்திஷ்ட கமலா காந்தா

த்ரைலோக்யம் மங்களம் குரு…

சுப்ரபாதம் அந்த அழகிய பங்களாவில் எதிரொளித்துக் கொண்டிருந்தது.. வெளியில் இருந்து பார்க்க தேவபுரி போல காட்சியளிக்கும். பங்களாவின் முகப்புத் தோட்டமே அதற்கு சாட்சி. அத்தனை ஆடம்பரமான தோற்றம்.

வானதியின் கையில் இரும்பினால் செய்யப்பட்டு முலாம் பூசப்பட்ட தூபக்கால் பளபளவென்று இருக்க. அதிலிருந்து நறுமணமிக்க சாம்பிராணி புகை அழகான வெண்மேகம் போல தவழ்ந்து கொண்டிருந்தது.

மங்களகரமான மஞ்சள் பூசப்பட்ட வட்டமுகம். மாநிறம். நெற்றியில் வகிடெடுத்து வகிட்டில் சிறியதாக வைக்கப்பட்ட குங்குமக்ககீற்று. கழுத்தில் பெரியதாக கொடி போன்ற தாலிக்கொடி.. அவர்களின் பணபலத்தை காட்டிக்கொண்டு மின்னியது.. இரண்டு பின்னல் மட்டும் போட்டு கொஞ்சம் மல்லிகைசரம்.. பார்க்க தெய்வீகமாக தெரிந்தாள்.. அந்த வீட்டின் அனைத்துமானவள்.. அதிகாரம் கொண்டவள்.

“வானதி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆனா வீட்டையே புகை மண்டலமா மாத்தி வைக்கறயேமா. நம்ம வீடு தானா. இல்ல சொர்க்கலோகமானு சில சமயங்கள்ல எனக்கு சந்தேகமே வருது.

சாம்பிராணி போட்டா வீட்டுக்கு ரொம்ப நல்லதுங்க. எத்தனை முறை உங்களுக்கு சொல்றது என தன் கணவனின் குரல் வந்த திசையை நோக்கி புருவங்கள் வில்லாய் வளைய ஏறிட்டு பார்த்தாள்.

அதெல்லாம் சரிதான். எப்போ பாரு சுப்ரபாதம் போட்டு காலைல ஆனா கொடுமையா பண்ற. தூக்கம் கெட்டு போகுது ” என சொல்லிக்கொண்டே சங்கர் மாடிப்படியிலிருந்து கீழே வந்தார்..

இந்த சுப்ரபாதம் தோன்றியதுக்கு ஒரு கதையே இருக்குங்க.

இதுக்கும் கதையா?

ஆமாங்க. ஒரு முறை

விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராமலட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்து சென்றார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கங்கைக்கரையில் கலைப்பில் தங்களை மறந்து தூங்கிட்டாங்களாம்.

விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம் போவது கூட தெரியாம தூங்கிட்டு இருந்தாங்களாம்.

ம்ம்ம்ம்.. அப்புறம்.. .

அவர் காலையில நீராடி தபங்களை செய்து முடித்து வந்த பின்னும் தூங்கிட்டே இருந்தாங்களாம்.

ம்ம்ம்ம்..

இவர்களை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தார். முடியாததால “கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸம்தயா” என பாடத் தொடங்கினாராம். இதைக்கேட்ட ராமன் உடனே எழுந்து கொண்டாராம். அன்னைக்கு இருந்து கடவுளை எழுப்ப சுப்ரபாதம் பாடுவது பழக்கமா வந்ததுனு பாட்டி சொல்லுவாங்க.

வானதி போதும் விடு. காலைலயே ஆரம்பிச்சிடாத தாயே. எனக்கு நேரம் ஆகுது. டிபன் எடுத்து வச்சா சாப்பிட்டு கிளம்புவேன்..

“ஆமா. ஆமா. எவன் எப்படி போனா என்ன? அம்மா சாம்பிராணி போட்டு உங்களுக்கு பணிவிடை செய்யட்டும். நீங்க உங்க வேலைய பாத்துட்டு கிளம்பிடுங்க. என்ன பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்ல” என சொல்லிக்கொண்டே மாடிப்படியிலிருந்து இறங்கினான் யஷ்மிதன்..

ஆறடி உயரம்.. கம்பீரமான உடல்வாகு. மாநிறம். எம்.பி.ஏ முடித்துவிட்டு தாயின் அன்புகட்டளையால் தன் ஆசைகள் அனைத்தையும் விட்டு கொடுத்து கிராமத்தில் வாழும் கோபக்காரன் யாஷ்மிதன்.. நினைத்ததை முடிக்கும் பிடிவாதக்காரன். ஆனால் அவனது கோவம், பிடிவாதம் அத்தனையும் தாயின் அன்பில் கரைந்து காணாமல் போய்விடும்.

என்னப்பா. உன் மேல அக்கறை இல்லாம தான் தேவதை மாதிரி ஒரு பொண்ண பாத்திருக்கோமா? தன் மகனை பார்த்த வானதியின் கண்களில் பரிவும், ஏக்கமும் தெரிந்தது.

நீங்க செய்யிற வேலைக்கு பேரு அக்கறையா?.. ரொம்ப நல்லா இருக்கு. பொண்ணு பாக்க ஆரம்பிக்கும்போதே பொய் சொன்னா என்ன அர்த்தம். பொய் சொல்லி தான் எனக்கு கல்யாணம் பண்ணனும்னா அப்படி ஒரு கல்யாணமே எனக்கு தேவை இல்லை. எனக்கு அந்த பொண்ணும் தேவையில்ல.

“ஊர் உலகத்துல யாரும் சொல்லாத பொய்யா நான் சொல்லிட்டேன். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணலாம்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. நீ என்னமோ இதுக்கே சிலுத்துக்கற” என சங்கர் தன் பங்கிற்கு வார்த்தையை விட்டார்.

பெரியவங்க ஒண்ணு சொன்னா நீங்க அத உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறிங்க. ஆயிரம் பேர் கிட்ட போய் சொல்லி கல்யாணம் பண்ணனும்னு தான் சொல்லி இருக்காங்க. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை பண்ணுங்கனு சொல்லல. கொஞ்சம் உங்க எண்ணத்த மாத்திக்கோங்க.

அடேய்! மகனே. “ஒண்ணு உன்னுடைய எண்ணத்த நீ மாத்திக்கணும். இல்லேன்னா நாங்க சொல்றபடி நீ கேக்கணும். ரெண்டுல ஒண்ணு நடந்தா தான் உனக்கு கல்யாணம்” என சங்கர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே யாஷ்மிதனின் கண்கள் தனது கையில் இருந்த மொபைலை மேய்ந்து கொண்டிருந்தது. கைவிரல்கள் படபடவென மெசேஜை தட்டிக் கொண்டிருந்தது.

உங்கிட்ட பிடிக்காத முக்கியமான விஷயத்துல இதுவும் ஒண்ணு தாண்டா. எப்ப பாரு இந்த மொபைல வச்சிகிட்டு பைத்தியம் மாதிரி திரியறது. இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப மோசம். இத எவன் கண்டுபிடிச்சானோ அவன முதல்ல செருப்பால அடிக்கணும்.

மொபைல் இப்போ இருக்க காலகட்டத்தில ரொம்ப முக்கியம். சொன்னா உங்களுக்கு புரியாதுப்பா.

அது கூட பரவாலடா.  ஏதோ 4 ஜீங்கறான். 5 ஜீங்கறான். என்ன கருமத்தையோ கண்டுபிடிச்சி இந்த தலை முறையையே ஒழிச்சிட்டானுங்க. எப்ப பாரு போனும் கையுமா சுத்தறாங்க. இன்னும் மோசம் என்னன்னா பாத்ரூம் போனாக்கூட இந்த கருமத்த எடுத்துட்டு தான் போறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல.

நீங்க அப்படியே பேச்ச மாத்தாதீங்க. நீங்க சொல்ற பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்குனு சில ஆசைகள் இருக்கு. உங்களோட ஆசைக்கு என்னோட ஆசையை பலி கொடுக்க முடியாது. உங்க வீணா போன ஆசைய எல்லாம் குப்பையில போடுங்க.

உன் தங்கச்சி எங்க பேச்ச கேட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டா. அவ சந்தோஷமா தான இருக்கா. அவளுக்கென்ன குறைச்சல்.. ஆசை வேற. வாழ்க்கை வேற. ரெண்டுக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்கு. ஆசையே அழிவுக்குக் காரணம்னு புத்தர் கூட சொல்லி இருக்காரு.

இத சொன்ன அவருக்கு மட்டும் ஆசை இல்லையா? அவர் சொன்ன கருத்து எல்லாருக்கும் போய் சேரனும்னு அவரும் தான் ஆசைப்பட்டிருப்பாரு.

“விதண்டாவாதம் பேச நாங்க தயாரா இல்லடா. நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம். நாங்க சொல்றதை நீ செய்யற. அவ்வளவுதான். வானதி தன் மகன் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும்” என்று அவனது கண்களையே பார்த்தார்.

அம்மா திரும்ப திரும்ப சொல்றேன். எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஆகாது. அது கிராமத்து பொண்ணுனு வேற சொல்றிங்க. நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். என்னோட படிப்புக்கு ஏத்த மாதிரி இருந்தா தான் என்னோட லைஃப் பார்ட்னரா வரமுடியும். ஒரு பட்டிக்காட்டு பொண்ண கூட்டிட்டு வந்து நான் என்ன பண்றது. அவளுக்கு மொபைல்ல வொர்க் பண்ண தெரியுமா? என்னோட ஸ்டேட்டஸ்க்கு தகுந்த மாதிரி என்கூட வர தெரியுமா?

ஏண்டா இப்பதான் நண்டு சிண்டு எல்லாம் மொபைல வச்சுக்கிட்டு திரியுது. இதபத்தி தெரியாத பிள்ளைங்க யாரும் இருக்கவே முடியாது. அவங்க நல்ல குடும்பம்னு கேள்விபட்டேன். பொண்ணு தங்கமான பொண்ணு. மொபைல் போன் யூஸ் பண்ண தெரியுமா? நாகரீகமா இருப்பாளான்னு யோசிக்காம உன்னை நல்லா பாத்துப்பாளா? வாய்க்கு ருசியா சமைச்சு கொடுப்பாளா? அப்படின்னு பாரு. அதுதான் குடும்பத்துக்கு அழகு.

ஏம்மா. சமைச்சுப் போட தான் இங்க வேலைக்கு ஆள் இருக்காங்க. அப்புறம் என்னம்மா.

அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா. ஜாதகம் பார்த்தாச்சி. ரெண்டு பேருக்கும் பொருத்தம் சூப்பரா இருக்குனு ஜோசியர் சொல்லிட்டார். அவங்களுக்கும் உன்னோட போட்டோ அனுப்பிட்டேன். புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு சம்பிரதாயத்துக்கு பொண்ணு பார்க்க போறோம். நிச்சயதார்த்த தேதியை குறிச்சிட்டுவறோம். அவ்வளவுதான்.

என்னம்மா. நான் இவ்வளவு தூரம் சொல்றேன். என் மனச புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற. பொண்ணு வீட்ல நீங்க என்ன பொய் சொல்லி இருக்கீங்கனு தெரியும்ல. என்னைக்காவது அந்த உண்மை தெரியப்போகுது. அன்னைக்கு என்னோட நிலமை ரொம்ப கஷ்டம்மா.

பொய் சொல்லாம கல்யாணம் பண்றவங்க யாருமே கிடையாது. ஏதோ ஒரு சின்ன சின்ன பொய் சொல்றது தான். இதுல என்ன தப்பு இருக்கு.

நம்ம ஸ்டேட்டஸ்க்கு இப்படி பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாமா? அப்படி என்னம்மா அவசியம்.

“நல்ல குடும்பம் . நல்ல பொண்ணு வேணும்னா நாலு பொய் சொல்லலாம். தப்பில்லை யாஷ்மிகண்ணு. இந்த அம்மா வேணும்ன்னு நினைச்சா நாளைக்கு என்கூட பொண்ணு பார்க்க வர. இல்லனா வேண்டாம்னா நீ எப்படி வேணா இரு. ஆனா நான் இருக்க மாட்டேன்” என வானதி கண் கலங்கி நிற்க.

தாயின் கண்ணீரை தாங்க முடியாதவனாய் ஏறிட்டு பார்த்தான். ‘சரி பொண்ணு பாக்க தானே போறோம். இப்ப என்ன கல்யாணமா நடக்க போகுது. எப்படியும் அதுக்குள்ள அம்மா மனசை மாத்தி கல்யாணத்த நிறுத்திவிடலாம்’ என தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு, சரி நாளைக்கு போகலாம். நான் என்னைக்கும் உன் செல்லப்பிள்ளை தாம்மா. உன் பேச்சை மீற மாட்டேன் என்றான்.

“எனக்கு இது போதும் டா கண்ணு. இதை விட சந்தோஷம் வேற என்ன வேணும்” என சாம்பிராணி கரண்டியை பூஜை அறையில் வைத்து விட்டு வந்தார். “அவர்கள் ரெண்டு பேரையும் வந்து சாப்பிடுங்க. நான் டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்று கூறியவள் நேராக டைனிங் ரூமிற்கு சென்று ப்ளேட் எடுத்து வைத்தாள்.

இருவரும் மௌனமாக அந்த அமர. வானதி தட்டில் மல்லிகை பூ போன்ற இரண்டு இட்லியை எடுத்து வைத்து புதினா சட்னி, சாம்பார் கொஞ்சம் ஊற்றினாள்.

அம்மா எனக்கு ரெண்டு தோசை நெய்விட்டு நல்லா முறுகலா. லட்சுமிம்மா ரெண்டு தோசை முறுகலா என்றாள்.

“சில நிமிடங்களிலே அவனுக்கு தோசை வந்தது. அமைதியாக சாப்பிட்டுவிட்டு அம்மா நான் கம்பெனிக்கு போறேன். அப்போ இனி வரவேண்டும் ஓய்வெடுக்க சொல்லுங்க. நான் பலமுறை சொல்லிட்டேன். அப்பா கேட்கல” என்றான்.

என்னடா கல்யாணம்ன உடனே என்னை இப்பவே ஓரங்கட்ட பாக்குறியா? எனக்கு வேலை செய்யற அளவுக்கு உடம்பில தெம்பு இருக்கு மகனே.

“உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம். அதுக்கு மேல நீங்க அந்த பக்கமே வரக்கூடாது” என்று கூறிவிட்டு யாஷ்மிதன் வேகமாக வெளியில் வந்து தனது காரை எடுத்துக்கொண்டு சிந்தனையுடனே கிளம்பினான். திடீரென காரை ஓரமாக நிறுத்தி விட்டு தனது தாய்க்கு கால் பண்ணினான்.

என்னடா. இப்ப தான கிளம்பின. அதுக்குள்ள கால் பண்ற.

அது வந்து.. அம்மா.. அந்த பொண்ணு கிராமம்னு வேற சொல்றிங்க. ரொம்ப பட்டிக்காடா இருப்பாளா?. அவ என்ன படிச்சிருக்கானு கூட கேக்கல.

பைத்தூர் தான் பொண்ணு. அதான் நாளைக்கு போறோமே யாஷ்.

‘ஆமா. எப்படியும் மூஞ்ச பார்த்தாலே தெரியப்போகுது. எதுக்கும் போட்டோ மட்டும் கேட்டு பார்க்கலாமே’ என்று நினைத்தவன், அது வந்து..

என்னடா?

இல்ல. நாளைக்கு பொண்ணு பாக்க போலாம்னு சொன்னிங்க.

ஆமா. அதுக்கு என்ன?

“அந்த பொண்ணு தேவதை மாதிரி இருப்பான்னு சொன்னீங்க. போட்டோ எதுவும் இருக்கா?னு” என இழுத்தான்.

இதுக்கு தான் இந்த தயக்கமா. போட்டோ எதுவும் இல்ல யாஷ்.

அப்புறம் தேவதை மாதிரி இருப்பான்னு சொன்னிங்க. அதுவும் நீங்க சொன்ன பொய்ல ஒண்ணா.

இல்லடா தங்கம். அந்த பொண்ண புரோக்கர் மூலமா கோவில்ல வெச்சு பார்த்தேன். நல்ல குடும்பம். அவங்க நம்பர் வாங்கிட்டேன். சரி விடு. அதான் நாளைக்கு நேர்ல பார்க்க போறோமே. அப்புறம் அதுக்குள்ள என்ன அவசரம்.

இல்லம்மா. எதுக்கும் ஒரு முறை பார்க்கலாம்னு தான்.

ஒண்ணும் பிரச்சனை இல்லை யாஷ். அவங்க வீட்ல பேசிட்டு பொண்ணோட போன் நம்பரை வாங்கி தரேன். அந்த பொண்ணுகிட்ட பேசுவ பாரு.

பேச விடுவாங்களாம்மா.

அவ தான் என் வீட்டு மருமகனு உறுதியா பேசிட்டேன். அதெல்லாம் விடுவாங்க. கொஞ்சம் பொறு. நம்பர் வாங்கி தரேன்.

சரிங்கம்மா. ‘இப்போ பேசிப் பார்த்தாலே ரொம்ப பட்டிக்காடானு ஓரளவு தெரிஞ்சிடும். முயற்சி செஞ்சு பார்க்கலாம்” என நினைத்துக் கொண்டிருந்தான். கம்பெனிக்கு வந்து சேர்ந்தான்…

சிந்தித்துக்கொண்டே நேராக உள்ளே சென்றான். ஸ்டாஃப்ஸ் வைக்கும் குட் மார்னிங் எதுவும் யாஷ்மிதன் காதுகளில் விழவில்லை.

யாஸ்மிதன்.. எம்.பி.. ஏ மேனேஜிங் டைரக்டர் என்ற பெயரை அந்த பலகை தாங்கிக் கொண்டு இருந்தது. அந்த அறை கதவை திறந்துகொண்டு தனது சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

அப்போது வானதியிடம் இருந்து அழைப்பு வந்தது. யாஷ் பொண்ணு வீட்டிலேயே நேரடியாக பேசி அந்த பொண்ணோட நம்பர் வாங்கி உனக்கு செண்ட் பண்ணிட்டேன். மொதல்ல நம்பரை கொடுக்க கொஞ்சம் தயங்கினாலும் என் மருமக உங்க பொண்ணு தான்னு திரும்ப அடிச்சு பேசிட்டேன். அப்புறம் அவங்களும் சரின்னு நம்பர் கொடுத்துட்டாங்க.

“வார்த்தைய விடாம பார்த்து பேசுடா” என மகனுக்கு அறிவுரை கூற.

அதெல்லாம் நான் பேசிக்கிறேன். தேங்க்ஸ் செல்ல மம்மி என்றான்.

தனது தாய் அனுப்பிய மெசேஜ் எடுத்து பார்த்து அந்த நம்பரை அருகிலிருந்த பேப்பரை எடுத்து எழுதிக் கொண்டான். “எப்படி நல்லா பேசுவாளா? கிராமத்து பொண்ணுனு வேற சொன்னாங்க” என சற்று தயங்கினான்.

“பேசி தான் பாத்துடுவோம்” என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த எண்ணிற்கு கால் பண்ணினான். ஒரு கணம் யோசித்தவன் கால் கட் பண்ணினான்.

“அந்த பொண்ணு பேரு என்னனு கேட்கவே இல்லையே. அம்மாவும் சொல்லவே இல்ல. சரி அதான் போன் பண்றமே. கேட்டுக்கலாம்” என்று மீண்டும் அந்த எண்ணிற்கு உயிர் கொடுத்தான்.

இணைப்பு உயிர் பெற்றது. சற்றே தயக்கத்தை குறைத்துக் கொண்டு யாஷ் மெல்லிய குரலில் ஹலோ என்றான்.

“அலோ. யார் பேசுறீக” என எதிர்முனையில் வித்தியாசமான குரல் ஒலிக்க.

‘யாஷ் சற்று அதிர்ந்தான். என்னது அலோவாஆஆஆ.. பேசுறீகளாஆஆ.. அச்சோ.. மாட்டிக்கிட்டேனா?’ என நினைத்தவன், மீண்டும் நான் சேலத்தில இருந்து யாஷ்மிதன் பேசறேன்..

ஓஓஓ.. நீக தானா. செத்தநேரம் முன்னாடிதே உங்க அம்மா சொன்னாக. அதுக்குள்ள போன போட்டீக.

‘அச்சோ! பெருமாளே. இத்தனை நாளா உன்ன கும்பிட்டதுக்கு நல்ல பலன் கொடுக்கப்போறியா? என் வாழ்க்கை கோவிந்தா தானா?’ என யோசித்தவன், “நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என மெதுவாக கேட்டான்.

நான்தே உங்கள கட்டிக்கற போற பொண்ணு..

‘கடவுளே! இது உனக்கே அடுக்குமா? என் வாழ்க்கைல ஏன் கும்மியடிக்கிற. நான் அவ்வளவு பெரிய பாவமா பண்ணிட்டேன். இல்ல எங்க சொன்ன பொய்க்கு இது தண்டனையா?’ என நினைத்தான்.

எதிர்முனையில் இருந்து குரல் ஒலித்தது. ஏனுங்க.. அலோ.. அலோ ..

“அந்த கரகரப்பான குரல் யாஷ்மிதனை சுயநினைவிற்கு கொண்டு வந்தது. சற்று தயக்கத்துடன் உங்க பேரு என்ன?” எனக் கேட்டான்.

“என்ற பேரு அருக்காணி. ஆனா உங்க பேரு எனக்கு புடிக்கல. உங்க அம்மாதே உங்க பேர சொன்னாக” என்றாள்.

என்ன ? அ..அரு.. அருக்காணியாஆஆஆஆஆ என்றவனுக்கு தலை லேசாக சுற்றுவது போல தோன்றியது.. கண்கள் மெல்ல சொருகியது.. யாஷ்மிதன் சற்றே மயக்கநிலைக்கு போனான்..

தொடரும்….

Advertisement