Advertisement

சாம் முகம் உடல் என எல்லாம் சிவந்து இருந்தது.. நேற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை போல.. சாம் படுத்தபடியே அயர்வான கண்களினால் மதுவை.. பார்த்து சிரிக்க வேண்டுமே என சிரித்தான் போல குழந்தை.. மது அமைதியாக குழந்தையின் அருகில் சென்றாள் “என்ன சொன்னாங்க” என ஷிவாவிடம் வினவினாள்.

ஷிவா ”ஒண்ணுமில்ல.. நார்மல் ஆகிட்டான்.. அந்த தெர்மகோல்தான் பிரச்சனை.. பீவர் எல்லாம் குறைஞ்சிடுச்சி மிட்நைட்டில். மோர்னிங் ரூம்க்கு வந்துட்டோம்.. சாம் பயந்துட்டான் போல.. தொட்டாலே அழறான்.. மெடிசன் கொடுத்திருக்காங்க.. இன்னிக்கு ஒரு நாள் இங்க தங்கி இருக்க சொல்லி இருக்காங்க” என மகனை பார்த்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தான்.

மது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள் “இட்லி எடுத்து வந்திருக்கேன்.. நர்ஸ் யாரவது இருந்தால் கேளுக்கு.. பையனுக்கு கொடுக்கலாமான்னு” என்றாள். 

ஷிவா “அவனுக்கு ஹாஸ்பிட்டலில் புட் கொடுத்திருக்காங்க.. நானும் ஊட்டி பார்த்தேன் சாப்பிடலை, என்னமோ டயர்டா இருக்கான் போல..” என்றான், குரலில் அயர்வு தெரிந்தது.

மது “சரி நான் கொண்டு வந்த இட்லியை கொடுத்து பார்க்கிறேன்.. நா.. கொஞ்ச நேரம் இவனை பார்த்துக்கிறேன்.. நீங்க போய் சாப்பிட்டு வாங்க.” என்றாள்.

ஷிவாவிற்கும் பசிதான்.. ஆனாலும் எப்படி மதுவை விட்டு செல்லுவது என.. யோசனையோடு நின்றான். மது, ஷிவாவை பார்த்தாள்.. ஏதும் பதில் சொல்லவில்லை அவன். எனவே, தன்போல.. சின்ன டப்பாவில் கொண்டு வந்திருந்த இட்லியை எடுத்து சாம்’மிற்கு ஊட்டிவிட தொடங்கினாள்.

சாம்.. முதலில் தலையை திருப்பிக் கொண்டாலும்.. நான்காவது முறை.. மது கொடுத்த உணவினை வாங்கிக் கொண்டான்.

ஷிவாதை பார்த்துவிட்டு “நான் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறேன்.. ஒன் ஹௌவர்.. நீங்க இருங்க்கீங்களா..” என அனுமதி கேட்டான்.

மது “ம்.. நீங்க போயிட்டு வாங்க.. டாக்டர் ரௌண்ட்ஸ் வந்துட்டாரா.. “ என்றாள்.

ஷிவா “வந்துட்டு போயிட்டாங்க.. சீக்கிரம் வரேன்..” என அவளுக்கு பதில் சொல்லி கிளம்பினான்.

மது, சாம்க்கு உணவு ஊட்டி.. அவனோடு அமர்ந்துக் கொண்டாள். சாம்க்கு செவிலியர் வந்து மருந்து கொடுத்து சென்றனர்.. அவனும் உறங்கிவிட்டான். 

ஷிவா, சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டான். மகன் உறங்கிக் கொண்டிருந்தான். மதுவிடம், ஷிவா “தேங்க்ஸ் ங்க..” என்றான்.

மது “என்ன ஆச்சு எப்படி தெர்மகோல் வைச்சு விளையாடும் அளவுக்கு விட்டீங்க” என்றாள்.

ஷிவா “வேலை செய்யும் மங்கா அக்காதான் பர்த்துகிட்டாங்க.. நான் ஆர்டர் செய்த திங்க்ஸ் வந்தது.. நான் மீட்டிங்கில் இருந்தபடியே கொரியர் வாங்கிகிட்டு.. அதை ஓபன் செய்து பார்த்து, எடுத்துக் கொண்டு ரூமிற்கு போயிட்டேன். அதில் எதோ கீழே விழுந்திருக்கு.. நானும் கவனிக்கலை.. மங்காக்காவும் அப்போதுதான் துடைத்தாங்க வீட்டை..அதனால், கவனிக்கலை போல..  மங்காக்கா போனதும்.. இவன் ஒரே அழுகை மூக்கு சிவந்து போக.. மூச்சு விட முடியாமலாக.. எனக்கு என்னான்னு தெரியவே இல்லை. ஹாஸ்ப்பிட்டல் வந்துதான் அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியும்” என மகனையே பார்த்தபடி சொன்னான் ஷிவா.

மது “இவன் இருக்குமிடத்தில் கவனமா இருங்க. ஒரே நாளில் சாம் இளைச்சு போயிட்டான்.. நைட் வீட்டுக்கு வந்தால் கால் பண்ணுங்க.. நான் டிபன் இவனுக்கு தரணிக்கிட்ட கொடுத்து விடுறேன்.. எந்நேரமாலும் கூப்பிடுங்க” என்றாள்.

ஷிவா “சரிங்க.. உங்க அம்மாவும் அத்தையும் ஊருக்கு போயிட்டு வந்துட்டாங்களா.. நான் வெயிட் செய்ய சொன்னதால ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்றான் தயங்கிய குரலில்.

மது “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்க.. ரெண்டு பேரும் மெஸ்சை பார்த்துப்பாங்க.. சரி நான் கிளம்பறேன்.. நைட் எய்டு’க்கு கால் பண்றேன்.. சொல்லுங்க” என்றாள்.

ஷிவாவின் யோசனை வேறாக இருந்தது ’மதுவை டிஸ்டர்ப் பண்ணிட்டோமோ’ என இருந்தது.. எனவே, மது சட்டென எட்டு மணிக்கு அழைக்கிறேன் என சொல்லவும் ஷிவா “என்ன சொல்லணும்” என்றான்.

மது “ம்.. நேற்று சாப்பாட்டில் உப்பிருந்ததா.. இல்லையா…ன்னுதான்” என்றாள் கிண்டலாக முனகியபடியே.

ஷிவா “என்ன” என்றான் மரியாதையாக, அவளின் முனகல் புரியாமல்.

மது “பைங்க ஷிவா சர்..” என்றவள் கிளம்பிவிட்டாள்.

ஷிவா “எப்படி போவீங்க.. வண்டி எடுத்து வந்தீங்களா” என்றான்.

மது “தரணி ட்ரோப் பண்ணினான்.. இப்போ ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்..” என்றாள்.

ஷிவா “இருங்க.. நான் ஓலா டாக்ஸி புக் பண்றேன்.. இருங்க” என்றான்.

மது, ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். ஷிவா டாக்ஸி புக் செய்து.. அவளுக்கு ப்ரீபே செய்து அனுப்பி வைத்தான், பொறுப்பாக.

மதுவிற்கு அது தெரியாது.

வீட்டிலிறங்கிக் கொண்டு.. மது ‘எவ்வளவு’ என கேட்க. டிரைவர் ”கொடுத்துட்டாங்க அமௌன்ட்” எனவும்.. மது ‘ம்.. ஏன் என் வீட்டுக்குத்தானே வந்தேன்.. இவர் ஏன் கொடுத்தார்.. ம்ம்.. ’ என எண்ணிக் கொண்டே சென்றாள்.

அன்னை சித்ரா “ஏன் இவ்வளோ லேட்.. சீக்கிரம் போ.. பாதி அப்பாவே பேக் செய்துட்டார்.. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்றார்.

அதன்பிறகு மதுவிற்கு வேலை சரியாக இருந்தது.

தரணி அழைத்தான். இவள் வீடு வந்து ஒருமணி நேரம் சென்று அழைத்தான். ’போயிட்டு வந்துட்டியா.. எப்படி இருக்கான் சாம். நீ எப்போது வந்த.. எதில் வந்த.. வீட்டுக்கு வந்து ஏன் மெஸ்சேஜ் பண்ணல.. தகவல் சொல்லனும்ன்னு தெரியாதா உனக்கு..’ என பேசி சண்டையிட்டு வைத்தான் தரணி.

மது “மறந்துட்டேன் டா” என.. கெஞ்சினாள் “சாரி டா..” என மன்னிப்பும் கேட்டாள். ஆனால், சண்டைகோழியாக தரணி “போடி.. சண்டை சண்டைதான், பேசாத” என போனை வைத்தான். 

இவன் சண்டை போட்டால்.. இப்படிதான், இந்த மாதம் வெளியே செல்லும் போது அவள் செலவு. அதுவரையில் சண்டை நீடிக்கும்.

இரவு மறக்காமல் எட்டு மணிக்கு, ஷிவாவை அழித்தால் மது. ஷிவா அவளின் அக்கறையை மனதில் மெச்சியபடியே போனை எடுத்து “ஹலோ.. ஷார்ப்பா கூப்பிட்டீங்க.. நாங்க இன்னும் ஹாஸ்ப்பிட்டலில்தான் இருக்கோம். உங்களோட டிபன் இன்னிக்கு, சாம்க்கு கிடைக்காது போல.. எப்படிதான் இந்த ஹாஸ்ப்பிட்டல் புட்’டை சாப்பிட போறானோ..” என்றான் இலகுவானக் குரலில்.

மது “ஐயோ பாவம் சாம்… சரி இப்போது எப்படி இருக்கான்” என்றாள்.

ஷிவா “ம், அக்டிவ் ஆகிட்டான்.. ட்ரிப்ஸ் எடுத்தாச்சு.. அதனால் கையில் கொஞ்சம் வலி போல.. அப்போ அப்போ அழறான்.. மத்தபடி பரவாயில்லைங்க..” என்றான்.

மது “பெரியவங்க சொல்லுவாங்கல்ல.. சுத்தி போடனும்ன்னு, சுத்திபோட சொல்லுங்க அந்த மங்கா அக்காவை. பிறந்த நாள் அன்னிக்கு சுத்தி போடலையா..” என்றாள்.

ஷிவா சிரித்தான் மென்மையாக.. “என்னாங்க மது நீங்களும்மா..” என்றான்.

மது “என்ன என்ன இப்போ.. குழந்தை வெளிநாடாக இருந்தாலும்.. இங்க வந்தால் இப்படிதான். ஏன்?அங்கே கூட இவில் ஐ உண்டே.. கேள்விப் பட்டதில்லை. சுத்தி போடறது எல்லாம் நல்லதுக்குதானே.. ஏன் உங்க அம்மா எல்லாம் உங்களுக்கு செய்யாமலா இருந்திருப்பாங்க.. என்னமோதான்..” என்றாள்.

ஷிவா  “ம்.. என் அம்மா எனக்கு விவரம் தெரிந்தும் செய்தாங்க… ஆனா.. அ..” என இழுத்தான்.

மது “என்னாச்சு சர்.. உங்களை கேட்க்க கூடாதுதான்.. ஆனால், நீங்க இவனோட தனியா கஷ்ட்டபடுறீங்க.. அதனால் கேட்க்கிறேன்.. உங்களுக்கு பாமிலின்னு யாரும் இல்லையா..” என்றாள் தயங்கிய குரலில். பின்பும் “இல்ல, தனியா கஷ்ட்ட்படுறீங்களே.. அதான்.. கேட்டது தப்புதான்.. என்னமோ அந்த வெள்ளை பையன்.. அதான் சாம்.. எவ்வளோ அழகான குழந்தை.. அவனை யாருக்கு, பிடிக்காமல் போகும்.. அது.. தப்பாகக் கேட்டிருந்தால்  மன்னிச்சிடுங்க” என்றாள் கடைசி வார்த்தைகளை வேகமாக சொன்னாள் பெண்.

ஷிவா அமைதியாகவே இருந்தான்.. ‘இந்த பக்கம் இப்படி ஒரு வெள்ளையன் இருக்கானே.. அவர்களுக்கு தெரியாது. அந்த பக்கம் என்னை பிடிக்கலை அதனால்.. இவனையும் பிடிக்கலை. என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

சற்று நேரம் சென்று ஷிவா “இருக்காங்க.. ஆனால், அன்பு என்பதை அலட்சியம் செய்தேன்.. அதன் வலி என்னான்னு இப்போ புரிஞ்சிக்கிட்டு இருக்கேன் ஒருபக்கம். இன்னொரு பக்கம்.. ஏன் டா.. இந்த அன்பு.. காதல்.. எல்லாம் உண்மை போலவே தெரியுதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.. எது எப்படியோ, யாரின் வாழ்க்கையிலும் நாங்கள் பாரமாகவோ.. தொந்திரவாகவோ இருக்க நினைக்கவில்லை. அதனால், எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. அவ்வளவுதான்.. “ என்றான் குரலில் வெறுமைதான் இருந்தது.

மது ஏதும் பேசாமல் இருக்க…

ஷிவா “சாரி ங்க.. என்ன இப்போது சுத்தி போடணும் அவ்வளவுதானே.. சுத்தி போட்டுடறேன்.. சரிங்க, மோர்னிங் வந்ததும் கால் செய்யறேன்.. அப்போது சாப்பாடு கொடுங்க போதும், இங்க எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியாதே.. வைக்கறேங்க” என்றான்.

மது இன்னும் தெளியவில்லை.. முயன்று “சரிங்க..” என்றாள் போனை வைத்தும் விட்டாள்.

“அன்புக்கு உருவம் இல்லை..

பாசத்தில் பருவம் இல்லை..

வானோடு முடிவு இல்லை..

வாழ்வோடு விடையும் இல்லை..”

 

Advertisement