Advertisement

மதுர ப்ரியம்!

9

ஸ்ரீயின் சந்தோஷ செய்தி கேட்டதும்.. எல்லோருக்கும் சந்தோஷம். பெரியவர்கள் எல்லோரும் ஸ்ரீ மற்றும் அபர்ணாவிடம் பேசினர். இறுதியாக ஸ்ரீ தன் அன்னையிடம் ”அம்மா… இப்போவாது கொஞ்சநாள் எங்க கூட வந்து இரேன்” என அழைத்தான்.

வித்யா முன்போல இல்லாமல் மனம் குழம்பினார்.. சரி எனவும் சொல்லவில்லை.. அன்று போல வரமாட்டேன் எனவும் சொல்லவில்லை.. “அப்புறம் பேசறேன் ப்பா..” என சொல்லி வைத்தார்.

தரணிக்கு, அழைத்து பேசினார் வித்யா. தரணிக்கு சந்தோஷம்.. தன் அண்ணனை அழைத்து பேசினான்.. அண்ணியிடமும் பேசினான். யாரும் ஒதுக்கம் காட்டாமல் பேசினர். 

மதுவின் காதுகளுக்கு விஷயம் வந்தது. அவள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை.. காதில் வாங்கிக் கொண்டு தன் வேலையை பார்த்தாள்.

தரணி இரவு அலுவலகத்திலிருந்து வந்து தன் அண்ணனுக்கு அழைத்தான்.. ஸ்ரீ எடுக்கவும் தரணி நேரடியாக “இன்னமும் நீ மதுவுக்கு கூப்பிட்டிட்டு இருக்கியா” என்றான்.

ஸ்ரீ “ஏன்.. என்ன.. உனக்கு யார் சொன்னா.. உனக்கு எப்படி தெரியும்..  நீ ஏன் கேட்க்கிற..” என்றான். ஸ்ரீக்கு, மது அவளின்.. தான் சம்பந்தப்பட்ட விஷயத்தை யாரிடமும் அவள் பகிர்ந்திருக்க மாட்டாள் என அவன் நம்பினான். அதுவும் தரணி ஷ்ரவன் இருவரிடமும் அவள் சொல்லியிருக்க மாட்டாள் என எண்ணினான்.. எனவே கொஞ்சம் பதறிவிட்டான் தன் தம்பிக்கு மதுவின் விஷயம் தெரியும் என்பதால்.

தரணி “ம்.. யார் சொல்லுவாங்க.. நீ இனி மதுவிற்கு போன் செய்யாத.. எதுக்கு அவளுக்கு நீ பேசற.. நீ நல்லவன்னு அவளுக்கு ப்ரூப் செய்யவா.. என்மேல தப்பில்லை.. நீயாக ஆசை வளர்த்துக் கொண்டாய்ன்னு இன்னும் இன்னும் அவளை காயப்படுத்த போன் செய்யறியா நீ…” என குறுக்கு விசாரனை செய்தான்.

ஸ்ரீ என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக நின்றான்.

தரணி “பதில் சொல்லு ஸ்ரீ..” என்றான்.

ஸ்ரீக்கு உண்மையாக ‘என் மீது தவறில்லை தானே.. அதனால் அவளிடம் நான் என்னை உணர்த்த வேண்டாமா.. நான் உனக்கு அத்தை மகன் மட்டுமே.. நானும் தரணி போலதான் என அவளுக்கு புரிய வைக்க வேண்டாமா’ எனதான் எண்ணம். அதனால்தான் அவளை அழைத்துக் கொண்டே இருக்கிறான். 

தரணி சொன்ன அதே எண்ணம்தான் ஸ்ரீக்கு. ஸ்ரீ “நீ ஏன்டா இதெல்லாம் சொல்ற.. மது எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசட்டும்.. உனக்கு மட்டும்தான் அக்கறையா, எனக்கு இல்லையா..“ என்றான்.

தரணி “ஏன் சொல்லமாட்ட.. நீ சந்தோஷமாக கல்யாணம் ஆகி மனதில் சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இருக்க.. அவ பாவம் இன்னும் கல்யாணம் செய்துக்க கூட யோசிக்கிறா.. நீ அவளுக்கு கால் செய்து.. உன்னை நினைவுப் படுத்துவ.. ம்.. இது உனக்கே கொஞ்சம் ஒருமாதிரி இல்ல..” என்றான்.

ஸ்ரீ “டேய், நான் அவளின் அத்தை பையன் டா.. உன்னை மாதிரிதான் நான் டா.. என்னை ஏன் நீயும் இப்படி சொல்ற.. அவளுக்கு நான் மட்டும் எதிரியாகனும்.. எல்லோரும் ஒண்ணா வளர்ந்தவர்கள் டா.. நான் என்ன கெடுதலா செய்ய போறேன் அவளுக்கு..” என்றான்.

தரணி “நல்லதும் செய்யலை.. அவள், கொஞ்சம் ப்ரீயாக இருக்கணும்.. நீ இனி அவளுக்கு கால் செய்யாதே.. விடு.. கொஞ்ச நாள் சென்று, எப்படி சொல்றது.. அவளுக்கு நல்லது நடக்கணும்ன்னு நினைச்சா போன் பண்ணாதே..” என்றான், குரலில் இறுக்கம்தான் இருந்தது.

ஸ்ரீ ”டேய்..  நான் என்ன..” என அவன் எதோ சொல்ல..

தரணி முந்திக் கொண்டு “நீ உன்.. அண்ணி, குழந்தையை.. பார் போதும்.. மத்தது எல்லாம் அப்புறம் பேசலாம்.” என்றவன் அண்ணனின் பதிலை எதிர்பாராமல் போனை வைத்துவிட்டான்.

ஸ்ரீக்கு நான் என்ன செய்தேன்.. எனதான் எண்ணம். ஆனால், வீட்டில் எல்லோருக்கும் அவளுடைய எண்ணம் தெரிந்திருக்கும் போலவே.. என எண்ணி யோசித்துக் கொண்டிருந்தான்.

பாவம் உண்மையாகவே ஸ்ரீ ஒன்றும் செய்யவில்லைதான்.. என்னமோ எல்லோரின் பார்வையும் அவனை காயப்படுத்துகிறது. தம்பியே இப்படி சொல்லவும் தன்னால் மதுவிற்கு எதற்கு சங்கடம் என எண்ணி.. இனி போன் செய்யக் கூடாது என அமைதியாக யோசித்தான்.

தண்டபாணி சித்ரா என இரவும்.. வித்யாவை கிளப்பிக் கொண்டு பெங்களூர் சென்றனர். வித்யா முழு மனதாக மகன் வீடு செல்லவில்லை.. தன் தம்பி மகள் என்ன நினைப்பாளோ என எண்ணிக் கொண்டே தயங்கி நின்றார்.. அடிக்கடி மதுவின் முகத்தை பார்த்தார்தான். ஆனால் மது, வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை தன் அத்தையிடம். இது அவர்களின் விருப்பம் என அமைதியாக இருந்துவிட்டாள்.

தண்டபாணி தம்பதி ஸ்ரீயின் குடும்பத்தை பார்த்து விட்டு.. வருவதற்காக.. வித்யாவையும் அழைத்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக பெங்களூர் சென்றனர்.

மது ”நான் பார்த்துக்கிறேன்.. மெஸ்சை.. இதற்காகவெல்லாம் லீவ் விட முடியுமா.. நீங்க கிளம்புங்க” என்றாள். சில நேரங்களில் அந்த குரல்..  அடிபணிய செய்திடும்.. எதிரில் இருப்பவரை. அப்படிதான் பெரியவர்கள் மூவரும் முதல்முறை.. மதுவை மெஸ்சில் விட்டு.. பெங்களூர் சென்றனர்.

தரணி விடுப்பு எடுப்பதாக சொன்னான். மது முறைத்து “என்ன நான் குழந்தையா.. அதுதான் அத்தனை பேர் இருக்காங்கல்ல.. எல்லாம் பார்த்துப்போம்.. கிளம்பு நீ” என்றாள்.

மதுவிற்கு எல்லாம் நல்லபடியாக சென்றது. பொறுப்பாக நேரத்திற்கு உணவை அனுப்பினாள் மது. மறுநாளுக்கு தேவையான காய்கறிகளை ஏற்பாடு செய்தும் கொண்டாள்.

அன்று மாலை ஷிவாவிடமிருந்து போன் வந்தது மதுவிற்கு.

மது போனை எடுத்தாள். ஷிவா “மது நைட் சாப்பாடு வேண்டாம்ங்க.. சாம்க்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் செய்து இருகோம் அவனை, அதான்” என்றான்.

மது “என்னாச்சுங்க.. ஏன்” என்றாள்.

ஷிவா “எதோ தெர்மாகோல் பிஸ் எதோ கீழே இருந்திருக்கு போலிருக்கு.. அதை எடுத்து விளையாடி இருக்கான்.. மூக்கில் போயிடுச்சி போல.. எனக்கு தெரியவேயில்லை.. நம்ம வீட்டில் வேலை செய்யும் அம்மாதான் பார்த்துகிட்டாங்க, நான் மீட்டிங்கில் இருந்தேன். ஒரு மணி நேரம் சென்று அவங்க கிளம்பிட்டாங்க.. நானும் கவனிக்கலை.. கொஞ்ச நேரத்தில் மூச்சு விட கஷ்ட்ட்பட்டான்.. என்ன எதுன்னு புரியவே இல்லை.. எனக்கு. பாலாஜி ஊரிலில்லை, தினேஷை கூப்பிட்டேன்..  அவங்க, ஹாஸ்பிட்டல் பக்கத்தில் எங்க இருக்குன்னு சொல்ல.. சொல்ல.. நான் காரெடுப்பதற்குள் பிக்ஸ் மாதிரி வந்திடுச்சி.. அப்புறம்தான்.. ஹாஸ்ப்பிட்டல் வந்து சேர்ந்தேன்.. பார்த்தால்.. தெர்மாகோல் மூக்கில் போயிருக்கு. அது ஊறி ஊறி.. பெருசாக.. மூச்சுவிட முடியாமல் போச்சு.. ச்ச.. கொஞ்சம் ஏமாந்திருந்தால்…” என சொல்லி அமைதியாகி விட்டான் ஷிவா.

மது “இப்போ எப்படி இருக்கான் சாம்..” என்றாள்.

ஷிவா “அதை எடுத்துவிட்டனர்.. பீவர் குறையலை அப்சர்வேஷனில் இருக்கான்..” என்றான்.

மது “சரியாகிடும் ஷிவா சர்.. பயப்படாதீங்க.  எந்த ஹாஸ்ப்பிட்ட்லில் இருக்கீங்க” என கேட்டாள்..

ஷிவா, பதில் சொன்னான். கேட்டுக் கொண்டு போனை வைத்தாள் பெண். தரணி வந்ததும் சொன்னாள்.. மது. அவளுக்கு, சாம்’மை பார்க்க வேண்டும் போல இருந்தது. எனவே, தரணியிடம் ”இப்போ போலாமா தரு” என்றாள்.

தரணி “விளையாடுறியா.. காலையில் போலாம்.. இப்போ போயிட்டு எப்போ வருவது. காலையில் சீக்கிரம் கிளம்பலாம்.. மாமா அத்தை வந்திருவங்கல்ல.. போ.. நேரமாச்சு.. தூங்கு” என அனுப்பி வைத்தான்.

மதுவிற்கு இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லை.. எப்போதடா விடியும் என ஆனது. 

பெங்களூரில் வித்யாவை விட்டு விட்டு.. தண்டபாணி தம்பதி சென்னை வந்து சேர்ந்தனர்.

மது, தரணியோடே கிளம்பினாள், சாம்க்கு இட்லி எடுத்துக் கொண்டு.  தரணியும் ஏதும் சொல்லாமல் அவளை அழைத்து கொண்டு மருத்துவமனை கிளம்பினான். தரணி உள்ளே வரவில்லை.. நேரமாகியதால் அப்படியே அலுவலகம் கிளம்பிவிட்டான்.

மது மருத்துவமனையில் விவரம் கேட்டுக் கொண்டு.. சாம் இருக்குமிடம் தேடி சென்றாள்.

சாம் அறைக்கு வந்திருந்தான் இப்போது. விடியற்காலையில் எல்லாம் சரியாக இருந்ததால்.. அறையில் விட்டிருந்தனர் மருத்துவர்கள். ட்ரிப்ஸ் போட்டிருந்த மகனின் கையை ஆடாமல் பிடித்துக் கொண்டு.. தன்னுடைய மற்றொரு கையில் போன் வைத்து பார்த்தபடி இருந்தான் ஷிவா.

மது “சாம்..” என்றாள். அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான் ஷிவா.

Advertisement