Advertisement

மதுர ப்ரியம்!

8

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காது. நிற்கவும் வேண்டாமே.. 

மது, சாம்’மோடு விளையாடிய படியே இருந்தாள். பாலாஜியும் ஷிவாவும்.. மது கொண்டு வந்த உணவு வகைகளை பாக்கு மட்டை தட்டுகளில் எல்லோருக்கும் எடுத்து கொடுத்தனர். பாலாஜி பாதாம் ஹல்வா வாங்கி வந்திருந்தான் இனிப்பிற்காக.

செக்கியூரிட்டியும்.. வேலை செய்வோரும் உணவுகளை வாங்கிக்கொண்டு கிளம்பினர். அவர்களை நல்லவிதமாக கவனித்து அனுப்பினான் ஷிவா.

தினேஷ் “இப்போது வேண்டாம் கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என்றான். எனவே ஆண்கள் பேச தொடங்கினர்  ’எங்கே வேலை.. எந்த கம்பெனி’ என பேச்சு தொடர்ந்தது அவர்களுக்குள். தேன்மொழியையும்  மது தன் பேச்சில் இணைத்துக் கொண்டாள்.. எல்லோரும் அப்படியே கலந்து பேசத் தொடங்கினர்.

பாலாஜி, எங்கு வேலை செய்கிறான் என சொன்னதும். மது “அங்கையா அங்கையா.. நீங்க இருக்கீங்க.. என்ன போஸ்ட்” என்றாள்.

பாலாஜி தயங்கியபடியே மதுவை பார்த்தான். மது “இல்ல, தரணி அந்த கம்பெனிலதான் இருக்கான்.. அதான் கேட்டேன்” என்றாள்.

பாலாஜி தன்னுடைய பொஷிஷன் சொன்னான்.. மது கொஞ்சம் உள்ளே சென்ற குரலில் “அவன் இப்போதான்..“ என அவனின் பொஷிஷன் சொன்னாள்.

பாலாஜி “ஒகேங்க.. ஓகே..” என்றான், இலகுவான குரலில்.

மதுவிற்கு அதிகமாக பேசிவிட்டோமோ என தோன்ற.. மீண்டும் சாம்’மோடு மட்டுமே விளையாட தொடங்கினாள். அவர்களோடு கலக்கவில்லை.

சற்று நேரத்தில் பாலாஜி “என்னாங்க அமைதியாகிட்டீங்க.. நீங்க என்ன படிச்சிருக்கீங்க” என்றான்.

மது “நான் இஞ்சினியரிங்க் முடித்தேன் எங்க ஊரில். அப்புறம் இங்க வந்தோம்.. எனக்கு வேலைக்கு போக பிடிக்கலை.. அதான் மெஸ் வைத்திட்டோம்..” என்றாள் கோர்வையாக.

பாலாஜி “அப்போ மெஸ்சியம்மா நீங்க..” என்றான் கிண்டலாக.

மது என்ன என்பதாக பார்த்தாள் பாலாஜியை. தேன்மொழி “அதாங்க பழைய படத்திலொரு மிஸ்சியம்மான்னு ஒரு கேரெக்டர் வருமே தெரியாது?” என்றாள்.

மது “அப்படியா.. தெரியலையே” என்றாள்.

பாலாஜி அதை விடுங்க மெஸ்சியம்மா.. இப்போது எத்தனை பேருக்கு டெய்லி சமைப்பீங்க” என்றான்.

மது குழந்தையோடு திரும்பி பாலாஜியை பார்த்து அமர்ந்து “தினமும் நூறு பேருக்கு சமைப்போம்.. கணக்கு முன்ன பின்ன வரும்.. ஆனால், எங்களோட கணக்கு அவ்வளவுதான். அதக்கு மேல ஆர்டர் எடுக்க மாட்டோம்.. ஞாயிறு அப்படின்னா கொஞ்சம் சாப்பாடு கம்மியாக போகும்.. ஆனால், டிபன் அதிகமாகிடும்..” என பொறுப்பாக பதில் சொன்னாள் மது.

பாலாஜி “நீங்க சமைப்பீங்களா” என்றான். மது முறைப்பாக பார்க்கவும் பாலாஜி “இல்லங்க.. சமையல் டேஸ்டா இருக்கே.. உங்க கைபக்குவமோன்னு.. கேட்டேன்” என்றான்.. குரலில் கேலி விளையாட்டுத்தனம் தான் இருந்தது.

மது “ம்.. எல்லா வேலையும் எல்லோரும்  செய்வோம்.. வேலைக்கு  ஆறு பேர் வைத்திருக்கோம்.. ஆனால் யாரவது லீவ் எடுத்தால்.. உடம்பு முடியலை என்றால் நானும் நிற்பேன்.. அத்தை விடமாட்டாங்க.. அப்பாவும் அப்படிதான். மற்றபடி மேல் வேலை எல்லாம் அம்மா, நான், அத்தை எல்லோரும் பார்ப்போம்.. மத்தபடி கைபக்குவம் அப்படின்றது.. அம்மா அத்தை இவங்களுக்குதான் சொந்தம். இப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கறேன்.” என்றாள் தன்னடக்கமாக.

பாலாஜி “என்னா அடக்கம்.. என்னா ஒடுக்கம்..இதுக்கு பேர்தான் அடக்கமான பொண்ணுன்றதோ” என்றான்.

தேன்மொழி, உடனே “எல்லா நேரமும் வேலை இருக்குமில்ல..” என்றாள்.

மது பாலாஜியை முறைத்தபடியே.. “ஆமாம்.. கண்டிப்பா இருக்கும் ங்க..” என்றாள்.

இப்படியே பேச்சு சென்றது.. சற்று நேரத்தில் ஷிவா, எல்லோரின் கையிலும் உணவு கொண்டு வந்து கொடுத்தான்.. மது “எனக்கு வேண்டாங்க.. தரணி வருவான்.. நாங்க வெளியே போறோம்.. நீங்க எல்லோரும் சாப்பிடுங்க” என்றாள்.

பாலாஜி “அதெப்படி, மெஸ்சுக்காரங்களை சாப்பிடாமல் அனுப்பறது.. அதுவும் உங்கள் சாப்பாட்டை” என்றான் பாலாஜி கிண்டலாக.

மது முறைத்தாள்.. உணவு கொடுத்துக் கொண்டிருந்த ஷிவாவை பார்த்து மது “இவரு உங்க ப்ரெண்ட்தானா..” என்றாள்.

ஷிவா, நண்பனை பார்த்துவிட்டு, மதுவை பார்த்து “சுவாதி ஏதும் கேட்க்கிறதில்லைன்னு நினைக்கிறேன், சொல்லி வைக்கிறேன்.. அவங்ககிட்ட.. சரியாகிடுவான்..” என்றான்.

பாலாஜி, “டேய்.. ஒரு அழகான பெண்.. எங்க பார்ட்டிக்கு வந்திருக்கு.. நாலு வார்த்தை.. கலகலன்னு பேசலைன்னா.. அது பார்ட்டியா.. நீங்களும்  எங்களை பற்றி என்ன நினைப்பீங்க..” என்றான் நல்லவனாக.

மது “பாவம் சுவாதி” என்றாள் முறைத்த படியே.

பாலாஜி “தேங்க்ஸ்..அவள் கேட்டாள் சந்தோஷப்படுவா.. உணமையாகவே அவள் பாவம்தான்.. சரியா தூங்க முடியலையாம்.. அழறா.. தூக்கமா வருது.. படுத்து தூங்க முடியலைன்னு  அழறா.. இன்னும் பத்துநாளில் என் சிங்கக்குட்டி வெளியே வந்திடுவான்.. அப்புறம் உனக்கு என்ன வேலை நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும்ன்னு சொல்லி வைச்சிருக்கேன்..” என்றான் அமைதியான குரலில் ரசனையாக பேசினான்.

மது இமைக்காமல் பார்த்திருந்தாள்.  தேன்மொழியும், தினேஷும் ஏக்கமாக பார்த்தனர் பாலாஜியை.. ஷிவா பால்கனியில் சென்று நின்றுக்கொண்டான். அவனுக்கு, ‘இது தனக்கான பேச்சு இதில்லை’ என தோன்ற, அமைதியாக இங்கே வந்துவிட்டான்.

தேன்மொழிக்கு குழந்தையில்லை. எனவே, அவள்.. கணவனை பார்த்தாள்.. ஏக்கமாக, சங்கடமாக.. இதெல்லாம் நம் வாழ்வில் நடக்குமா எனும் பார்வையது.

இப்போது, உணவு தினேஷ் தேன்மொழிக்கும் இறங்கவில்லை.. 

மது.. பாலாஜியை பார்த்து “உங்க வைஃப் லக்கிங்க..” என்றவள் எழுந்து.. சாம்’மிடம் சென்றாள்.. சாம் சற்று தூரத்தில் வாக்கரில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே சென்று “சாம்..இன்னிக்கு என்கூட டாடா வரியா” என பேசத் தொடங்கினாள்.

எல்லோரும் கொஞ்சம் இயல்புக்கு வந்தனர், யாரும் சட்டென பேசிடவில்லை.. பாலாஜி “என்னாங்க அமைதியாகிட்டீங்க..” என்றான் தினேஷை பார்த்து.

தினேஷ் “ஒண்ணுமில்லை எங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிய போகுது.. இன்னும் குழந்தையில்லை.. அ..” என ஏதோ சொல்ல வர.

பாலாஜி “அஹ.. அதுக்கென்ன சீக்கிரம் கிடைச்சிடும்.. கடவுள் எப்போதும் பொக்கிஷங்களை, ஏழு கடல்.. ஏழு மலை.. தாண்டிதான் வைச்சிருப்பார்.. சிலருக்கு அதற்கான மேப்.. சீக்கிரம் கிடைச்சிடுத்து.. சிலரை தேட வைப்பார் அவ்வளவுதான். தேடுறவன் கண்டிப்பா பெரிய பொக்கிஷத்தை எடுப்பான்” என்றான் இத்தனை நேரமிருந்த விளையாட்டு கேலி குரலெல்லாம் மாறி.. ஒரே சிந்தனையில் உணர்ந்து சொன்னான் பாலாஜி. 

தினேஷ் என்ன சொல்லுவதென தெரியாமல் அமர்ந்திருந்தான். தேன்மொழி “தேங்க்ஸ் ங்க..” என்றாள்.

பாலாஜி “அட.. சாப்பிடுங்க.. தெம்பா பேசுவோம்..” என்றான் சிரித்துக் கொண்டு.. அவனின் கேலி பேச்சு மீண்டிருந்தது. பின் அவனே மதுவிடம் “மெஸ்சியம்மா எங்க போறீங்க சாப்பிட, எங்களை எல்லாம் கூப்பிட மாட்டீங்களா” என்றான்.

மது “நானே அவன் கிட்ட பிச்சை எடுக்காத குறையாக கேட்டு வெளிய போறேன்.. இதில் நீங்க வேறையா.. உங்க பார்ட்டிக்கு வந்த என்னை நீங்கதான் கூட்டிட்டு போகணும்.. எங்க சாப்படையே எங்களுக்கு தரீங்க” என பலநாட்கள் பழகியவள்  போல் சண்டையிட தயாரானாள்.

தேன்மொழி “ஹா…ஹா… சரிதான்.” என்றாள்.

பாலாஜி “இப்படியோரு ஹோம்லி புட் கிடைக்கும் போது.. எதுக்கு வெளியே போகணும்.” என்று அவளை பார்த்து. 

மது “தேங்க்ஸ்..” என சொல்லி தரணிக்கு போனில் அழைத்தாள்.

அதற்குள் பாலாஜி “ஷிவா.. வா சாப்பிடலாம்” என, ஷிவாவை அழைத்து வந்தான். தினேஷ்க்கும் தேன்மொழிக்கும் என்ன வேண்டும் என கவனித்தான். இருவரும் உண்டு முடித்தனர். எல்லோரிடமும் விடை பெற்று கிளம்பினர்.

தாரணி கீழே வந்துவிட்டதாக மது சொல்லிக் கொண்டு கிளம்ப எண்ண, ஷிவா “மேலே வர சொல்லுங்க மது.. நாங்க பார்க்க வேண்டாமா” என்றான்.

மது தட்ட முடியாமல் தரணியை மேலே வர பணித்தாள்..  தரணி சலித்துக் கொண்டு மேலே வந்தான். முறையாக வரவேற்றான் ஷிவா.. பாலாஜியை பார்த்ததும் தரணி தெரிந்தது போல “சர்.. நீங்க..” என வினவினான்.

பாலாஜி, அவனின் ஆபீஸ்சில் மேலதிகாரி.. தரணி கண்டதும் பேச தொடங்கிவிட்டான். பாலாஜி பதில் சொல்லியபடி பேச்சை தொடர்ந்தான்.

மதுவிற்கு, லேட் ஆகிக்கொண்டிருந்தது.. மணி இப்போதே 8:30. எனவே மது ஏதும் பேச முடியாமல் நின்றிருந்தாள்.

ஷிவா அவர்களின் பேச்சில் கலந்து எதோ பேசிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் பாலாஜியே “தரணி.. உன் கேர்ள் ப்ரெண்ட் எனக்கு சாபம் விட்டுடுவா போல..” என மதுவை காட்டி சொல்லவும்.. தரணி “அய்யோ சர், அவ என் மாமா பெண்.. என் கேர்ள் ப்ரெண்ட்க்கும் மேல.. எ.. எங்க வீட்டு ராட்சஸி.. ‘தேவதை’ன்னு சொன்னால் அவளுக்கு பிடிக்காது.” என்றான் ஆர்வமான குரலில்.

மது, வாஞ்சையாய் சிரித்தாள் தன் நண்பனை பார்த்து.

பாலாஜி “அதான் கன்னாபின்னான்னு திட்டினாங்களா உங்களை.. நான் கூட எப்படி ஒரு பாய் பிரெண்ட்டை இப்படி திட்டாறாங்கன்னு யோசிச்சேன்..” என விஷமமாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

தரணி சிரித்தான் பாலாஜியின் கிண்டல் உணர்ந்து.. மது “டேய்.. இவர் சரியில்ல டா, வந்ததிலிருந்து ஏதாவது பேசிகிட்டே இருக்கார் டா..” என்றாள் முறைத்த படி பார்த்து.

தரணி ஒன்றும் சொல்லவில்லை.

பாலாஜி “அஹ.. நான் விளையாட்டுக்கு பேசினேன்.. ஒரு ரா.. எப்படி சொல்றது எந்த ஒப்பனையுமில்லாமல் பேசும் உங்களின் சுபாவம் பார்த்து அப்படி வம்படித்தேன்.. எங்கயும் தப்பாக பேசலை மெஸ் மேடம்” என விளக்கம் சொன்னான்.

தரணி “மதுவிற்கு விளையாட்டு தனமிருக்காது.. அதெல்லாம் எங்கள் வீட்டில் யாருக்கும் இருக்காது.. சரி சர்… நாங்க கிளம்பறோம்.. ஓ.. சாரி, பர்த்டே பாய்க்கு விஷ் பண்ணலை..” என சொல்லி. ஷிவாவின் அருகில் அமர்ந்திருந்த சாம்’மிடம் சென்றான்.. குழந்தைக்கு வாழ்த்து சொல்லி.. அவனை தூக்க முற்பட்டான்.. சாம் அழத் தொடங்கினான். தரணி “நோ.. தொடலை..” என எழுந்துக் கொண்டான்.

ஷிவா “புதுசா பார்க்கராணில்ல.. “ என மகனை தூக்கிக் கொண்டு எழுந்து தரணியிடம் பேசினான்.

மது, “சாம்குட்டு பை.. பை.. எங்க வீட்டுக்கு ஒருநாள் வாங்க..” என்றாள்.

சாம் அவளின் ஜிமிக்கை அசைவதை பார்த்து, தாவி இழுத்தான்.. மது “ஸ்..ஆ… குட்டு.. வலிக்கிறது” என அவனின் கையை பிடித்துக் கொண்டாள்.

சாம் இரண்டு பற்கள் தெரிய.. அழகாக சிரித்தான். ஷிவா என்ன செய்வது என தெரியாமல் மகனிடம் “சாம்.. வலிக்கும் டா… விடு” என சொல்ல சொல்ல.. சாம் சிரித்தான் ‘க்கு.. க்க..பிக்க..’ என.

மது அந்த சிரிப்பை பார்த்து “டேய் ரவுடி.. விடு டா..” என சொல்லி அவனின் விரல்களை விலக்கி “டேய்.. இந்த ஜிமிக்கிதானே.. நாளைக்கு இவன்கிட்ட கொடுத்து விடுறேன்.. ரவுடி.. ரவுடி.. பை..” என சொல்லி, ஷிவாவிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டு.. மீண்டும் ஷிவாவிடம் கொடுத்தாள் மது.

மதுவும் தரணியும் விடைபெற்று கிளம்பினர்.

மது, தரணியோடு வெளியே செல்லுவதை மிகவும் விரும்புவாள்.. எப்படியும் மாதத்திலோரு முறை தரணியோடு வெளியே வருவாள். இன்று அந்த நாள்.. நேராக ஒரு ஸ்நாக்ஸ் கடைக்குத்தான் சென்றனர்..  அமைதியாக அமர்ந்தாள்.. மது.

மதுவிற்கு பாவ்பாஜி என்றால் மிகவும் பிடிக்கும். அதை வாங்கிக் கொண்டு, தனக்கு ஒரு பேல்பூரி வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான் தரணி. 

மது ஆரம்பித்தாள் “தாங்க முடியலை டா.. என்னால்… வீட்டில் எல்லோரும் கல்யாணம் கல்யாணம்ன்னு  தொரத்தறாங்க. என் ப்ரெண்ட்டுக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. எனக்கு கம்பெனிக்குன்னு இருந்த ஒரே.. ஆளு அவதான், அவளுக்கும் கல்யாணம்.. பத்திரிக்கை வந்தது.. அதிலிருந்து ஆரம்பிச்சிட்டாங்க டா.. முடியலை. எனக்கு பிடிக்கலை கல்யாணம் வேண்டாமே.. ஏன் இப்படி தினமும் புலம்பறாங்க..” என பொரிய தொடங்கினாள்.

தரணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான் “ஆனாலும், மது நீ ரொம்ப ஓவரா போற.. அப்போவே கல்யாணம் செய்ய கேட்டாங்க.. நீதான் டைம் வேண்டும் சொல்லிட்ட.. அதை நம்பிதானே.. அமைதியாக இருந்தோம்.. இப்போ வந்து எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்ற.. இது எப்படி சரியாகும்” என நியாம் கேட்டான் நண்பன். 

மது அமைதியாகிவிட்டாள்.

தரணி “மது.. எல்லோரும் தனியாவே வாழ முடியாது.. அது ஒரு சாபம். வேண்டாமே மது.. அந்த சாபம் உனக்கு. உனக்கு என்ன இல்லை.. யார் இல்லை.. எல்லோரும் உன் கூடவே இருக்கோம்.. ஏன் பயமா, இல்லை.. ஒதுக்கமா.. என்னதான் காரணம்.. உனக்கான நேசம், வாழ்க்கை இதெல்லாம் கிடைக்கும் மது.. நீ இழந்ததையே பெருசா பார்க்கிற.. அதைவிட பெருசா கிடைக்கும் மது” என்றான்.

மது அமைதியாகிவிட்டாள்.

தரணி “இன்னமும் அவன் கால் பன்றானா” என்றான்.

மது பதிலே சொல்லவில்லை.

தரணி “கொஞ்சம் யோசி மது. உனக்குன்னு நாலு பேரை வைச்சிகிட்டு அவங்க கூட மட்டும் வட்டம் போட்டு பேசாதே.. நிறைய பழகு.. உலகம் நமக்கு தேவையாதை தரும் மது.. அதுவும் எங்கள் மதுவிற்கு நல்லதாகவே தரும் டா..” என்றான்.

மது பேசவில்லை.

தரணி “உன் பிறந்தநாள் வருதில்ல.. அதிலிருந்து ஜாதகம் எடுக்க போறோம்.. கண்டிப்பா இந்த வருடம் எடுப்போம். நல்ல மாப்பிள்ளையாக பார்ப்போம்..  எங்கள் வீட்டிலிருந்து ராட்சஸியை வெளியே அனுப்பபோறோம்..” என்றான் விளையாட்டாகதான்.

மது கோவமாகிவிட்டாள் அவனின் வார்த்தைகளில்.. “போடா… அவ்வளவு சீக்கிரம் அனுப்பிடுவியா நீ.. வேலையை பார்.. உன் கிட்ட சொன்னேன் பார்.. நீயும் அவங்க கட்சியில சேர்ந்திட்டியில்ல…” என்றாள்.

தரணி “ஆமாம்.. என்ன இப்போ.. உன்னை வீட்டில் வைச்சி சமாளிக்க முடியலை.. கிளம்பு கிளம்பு” என்றான்.

மது “முடியாது டா.. பார்க்கலாம் டா..” என்றாள்.

தரணி “ம்…பார்க்கலாம்” என்றான்.

மது “நீயெல்லாம் ப்ரெண்டு..” என்றாள்.

தரணி “ம்.. நல்ல நண்பன் நான்னு.. நீதான் பலமுறை பாராட்டு பத்திரம் கொடுத்த” என்றான்.

மது “தப்புதான்.. தப்புதான்” என்றாள்.

தரணி “அப்பா டா… தப்பை ஒத்துகிட்டாடா.. மது..” என்றான்.

மது அமைதியாகிவிட்டாள்.

தரணி  “ஒய்… மிஸ் மதுப்ரியா அவர்களே.. கோவம் இஞ்சுரியஸ் டு ஹெல்த்.. சிரிங்க.. இயற்கையோடு.. ஒட்டி வாழுங்க.. புரட்சி எல்லாம் வேண்டாம்.. யாரும் அவார்ட் கொடுக்கமாட்டாங்க” என்றான்.

மது ”போதும் நிறுத்து.. இல்ல, கிளம்பலாம்” என்றாள்.

தரணி ”நிறுத்தினேன்.. அடியேன்.. பேச்சை நிறுத்தினேன். பொன்னியின் செல்வன் படத்துக்கு எப்போ போலாம்..” என்றான்.

மது, சற்று நேரம் எடுத்து தன்னை சமன் செய்துக் கொண்டாள்  “ஷ்ரவன் எப்போ ப்ரீ.. அவன் இந்த வாரம் வந்தால் போலாம்..” என்றாள்.

தரணி, பின் தன் அலுவலகம், அதில் பாலாஜி.. என பேச தொடங்கினான். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

தரணிக்கு, மதுவிற்கும்  ஸ்ரீக்குமான நிலை குறித்து யோசனை சென்றது. மதுவை எப்படி திருமணத்திற்கு தயார் செய்வது.. என்ற பாதை நோக்கி அது பயணித்தது. ‘இன்னும் அவள் சின்ன பெண்ணில்லையே.. இன்னும் அவள் மனதில் பழைய எண்ணம் இருக்குமா.. அதை எப்படி விடுவிப்பது.. முழுதாக மூன்று நான்கு வருடம் ஓடிவிட்டது. இனி, அவளை அப்படியே விட கூடாதே’ என நண்பன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

மதுவை சுற்றியே பின்னி பிணைந்திருந்தது குடும்பம்.. அதனால், இந்த யோசனை தரணிக்கு வருவதில்லை ஆச்சர்யம் இல்லையே.

அடுத்த வாரத்தில் ஒருநாள் ஸ்ரீ, தன் அன்னைக்கு அழைத்தான். அபர்ணா உண்டாகி இருப்பதாக கூறினான். வித்யாவின் முகத்தில் ஆனந்தம் கூத்தாடியது.. நெஞ்சு நிறைந்து போனது.. அது கண் வழி வழியத் தொடங்கியது.

“நிலவினை நம்பி இரவுகள் 

இல்லை…

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின்

எல்லை..

ஒரு வாசல் மூடி 

மறுவாசல் வைப்பான் 

இறைவன்..”

 

Advertisement