Advertisement

லியோனாவிற்கு ஆத்திரம்தான் அதிகமாகியது.  அந்த மாடியிலிருந்து தானே விழுந்தாள்.. உருண்டு பிரண்டாள். தரை அதிர குதித்தாள்.. சுவற்றில் முட்டிக் கொண்டாள் எல்லாம் கோவத்தில். ‘வேண்டாம் வேண்டாம்’ என கதறினாள்.. தன் அன்னையை அழைத்து.. பேசினாள். அவர் பெரிதாக ஏதும் கண்டுக் கொள்ளவில்லை. இன்னும் கோவமாகினாள், பெண்.

லியோனா ஆத்திரத்தில், ஷிவாவை  திட்ட தொடங்கினாள்.. அடிக்க தொடங்கினாள்.. சண்டையிட்டாள்.. பேசாமல் இருந்தாள்.. பார்க்காமல் இருந்தாள்.. உண்ண மறுத்தாள்.. ஏமாற்றிவிட்டாய்.. நம்ப வைத்து ஏமாற்றி விட்டாய் என கத்தினாள். ஒன்றுக்கும் ஷிவா பதில் பேசவில்லை “பார்த்து.. சாப்பிட்டு பேசு.. சண்டை போடு” என அவளை தாங்கினான்.

லியோனாவிற்கு கோவமே பிரதானமாக வந்தது.. எப்படியும் கருவை களைத்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டாள்.. பெண்கள் அமைப்பில் ஷிவாவை பற்றி புகார் சொன்னாள். ஆனால், ஷிவா ‘தெரியாமல் குழந்தை வந்துவிட்டது.. இருவரும்தான் பொறுப்பு’ என நின்றான். மேலும் மருத்துவர்கள் அறிவுரை பற்றி அவர்களிடம் கூறினான். ரிபோர்ட்ஸ் காட்டினான். நான் என செய்ய வேண்டும்.  குழந்தைக்கு நான் பொறுப்பு என பணிவாக நின்றான். கம்ப்ளைன்ட் ஒன்றுமில்லாமல் ஆனது.

லியோனா விலக விலக அவளை நெருங்கி அவளை கவனித்துக் கொண்டான் அன்பாக. அவளுக்கு எந்த உணவு  பிடிக்குமோ அதை செய்து தந்தான்.. மருத்துவரை தனியே சந்தித்து ஆலோசனை செய்தான். அவளை கண்ணாக பார்த்துக் கொண்டான். 

ஆனால், லியோனா, ஒன்றுமறியாத பிள்ளையை வெறுத்தாள். குழந்தை என்ற வார்த்தையை கூட வெறுத்தாள். அத்தோடு, ஷிவாவை கண்ணால் காணவே பிடிக்காமல் போனது, அவன் செய்து தந்த உணவுகளை மறுத்தாள்.. அன்னையும் தன்னுடன் பேசாததால்.. குறுகி போனாள் பெண். கடைசியில் ஒன்றும் முடியாது எனும் நிலையில் தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டாள். 

ஷிவாவிடம் ‘நான் உன்னை பார்க்க விரும்பவில்லை.. மீறி என்னை சந்தித்தால்.. நான் தற்கொலை செய்துக் கொள்வேன்..’ என வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு, தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டாள், பெண்.

ஷிவா, உடைந்து போனான். அவன் செய்த கற்பனை.. கனவு எல்லாம்.. அவள்முன் பலிக்காமல் போனது. அதைவிட பெரிய நிகழ்வாக.. அவனை விட்டு விலகி சென்றுவிட்டாள் அவள். அவனை பார்க்க மறுத்துவிட்டாள்.. அவனின் வாட்ஸ்அப் செய்தியை கூட படிப்பதில்லை.. பிளாக் செய்திட்டால் போல.. அவனோடு எந்த விதத்திலும் அவள் தொடர்பிலில்லை.

ஷிவா, லியோனாவின் அன்னையை பார்த்து பேசி.. அவளை கவனித்துக் கொள்ள, தனியாக நர்ஸ் வைத்தான்.

தூரமாக இருந்தது  நர்ஸ் எடுக்கும் புகைப்படம் பார்த்துதான்.. அவளை அவன் கண்டுக் கொண்டான்.

நாட்கள் கடந்தது, பிரசவக் காலமும் வந்தது. லியோனா அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். மயக்கம் தெளிந்ததும்.. மருத்துவமனையிலிருந்து.. சென்றுவிட்டாள், பெண்.

தகவல் தெரிந்து ஷிவா, அவளை பார்க்க வர.. அங்கே குழந்தை மட்டும்தான் இருந்தது.

மருத்துவமையில்.. எல்லோருக்கும் இவர்களின் விஷயம் தெரியும் என்பதால்.. குழந்தையின் தந்தை என அவனின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு, அவனிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தையோடு வீடு வந்தான், ஷிவா. 

அவளை தேடினான்.. எல்லாவகையிலும் கம்ப்ளைன்ட் கொடுத்தான்.. தான் மட்டுமாகவும் அவளை தேடினான்.

குழந்தையை, தான் மட்டுமாக வளர்க்க தொடங்கினான்.. தனியே பேபி சிட்டேர் வைத்தான். சில சமயம்.. அந்த குழந்தையின் கண்களை பார்க்கும் போது.. அவளை நினைவுப்படுத்தும்.. அப்போது குழந்தையின் மீது கூட கோவம் வரும் ஷிவாவிற்கு. ஆனால், அது தவறு என புரியத் தன் மீதே கோவப்பட்டுக் கொள்ள தொடங்கினான் ஷிவா.

ஷிவா, மூன்று மாதத்தில்.. அவளை கண்டுக்கொண்டான்.. நண்பன் ஒருவன்.. ஷிவாவை அழைத்து லியோனா இங்கே இருப்பதாக தகவல் சொன்னான்.

பத்துமணி நேர பயணமாக ஷிவா, குழந்தையை, லியோனாவின் அன்னையின் பாதுகாப்பில் விட்டு, அங்கே சென்றான். 

ஷிவாவின், நண்பன் தங்கியிருக்கும் ஹோட்டலின் அருகே.. ஒரு பெரிய உல்லாச விடுதியில், நாற்பது வயது மதிக்க தக்க வாலிபரோடு.. கை கோர்த்துக் கொண்டு கடலை வெறித்தபடி நின்றிருந்தாள் லியோனா.

ஷிவாவிற்கு கண்ணில் நீர்தான் வந்தது. சுவரில், தன் தலையை இடித்துக் கொண்டான்.. வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு. அந்த கைகளில் எத்தனை முத்தம் தந்திருப்பேன்.. என ஏங்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. என் உயர்.. என் உடல்.. என் கௌரவம்.. அங்கே, வேறு யாரோடோ.. என அவனின் நெஞ்சினுள்ளே.. மூச்சு காற்று போக முடியாத படி.. அவளின் பிம்பம் அழுத்திக் கொண்டது போல.. தடுமாறி அந்த சுவரின் மீதே சாய்ந்துக் கொண்டான் ஷிவா. வாழ்க்கையில் தோற்று  விட்டதாக, தனக்கு தானே.. ஒத்துக்கொண்டான் இந்த வாழத் தெரியாதவன்.

யாரிடமும் தன்னுடைய உணர்வுகளை பகிர முடியவில்லை அவனால்.. எல்லோரும் ஏளனமாக தன்னை பார்ப்பதாக உணர்ந்தான். இப்போது இருந்த அவனின் நண்பன் “என்ன டா.. அவ்வளோ லவ் பண்ணியா.. விடுடா.. உன் அருமை தெரியலை.. விடு.”என தேற்றினான்.

ஷிவாவிற்கு வலி.. மனதெல்லாம் வலி. வாய் திறந்து பேச முடியவில்லை. தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

முதலில் தன்னை அங்கே பொருத்திக் கொள்ள முடியாமல் திண்டாடினான். லியோனாவின் அன்னை, குழந்தையை தான் வளர்ப்பதாக கூறினார். ஷிவா சம்மதிக்கவில்லை. அங்கிருக்க முடியாமல்.. இந்தியா வர எண்ணினான்.  

இந்தியாவில்.. பாலாஜியிடம் எல்லாம் பகிர்ந்தான்.. இருவரும் சேர்ந்து ஒரு சின்ன சாஃப்ட்வேர் கம்பெனியை தொடங்கினர். ஷிவா, குழந்தையோடு, இந்தியா வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டான்.

அங்கே, சேர்ந்து வாழும் உறவில் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி உண்டு. எனவே, குழ்ந்தையை பற்றி பெரிய பிரச்சனை இல்லை, அங்கே. ஆனால், அவனை இந்தியா எடுத்து வருவதுதான் சிரமமாகியது. அதற்காக.. லியோனாவின் முறையான விலகல் கடிதம்.. உரிமை ரத்து கடிதம்..  என்ற ஆவணங்கள் தேவைப்பட்டது.

ஷிவா, அதனை.. லியோனாவின் அன்னை.. லீகல் ஆட்கள்.. மூலம் வாங்கிக் கொண்டான். அவளை நேரில் பார்க்கவில்லை. குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டான். குழந்தை அந்த  நாட்டு பிரஜைதான். எனவே, அவனின் ஐந்து வயது வரை.. வருடம் ஒருமுறை.. வர வேண்டும் இங்கே.. என அவர்கள் சட்டம் சொல்லியது. அதற்கெல்லாம் கட்டுப்பட்டுதான்.. ஷிவா சாம்’மோடு இங்கே வந்திருக்கிறான்.

வாழ்க்கையை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ.. அப்படி உணர்ந்து.. அதற்கு எதிர்பதமாக, அந்த வாழ்க்கையை எவ்வளவு காம்ப்ளிக்கேட் செய்துக் கொள்ள முடியுமோ.. அப்படி தானே செய்துக் கொண்டு.. நண்பர்கள்.. பெற்றோர் உற்றோர் என.. எல்லோரின் முகத்தை பார்க்க கூசி.. தன்னுடைய முகவரி.. தொலைபேசி எண்.. என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு.. அனாதையாக நிற்கிறான் சொந்த மண்ணில்,ஷிவா.

!@!@!@!@!@!@@!@!@!

இன்று,

சாம்’மின் பிறந்தநாள்.

மொட்டை போட்டுக் கொண்டு.. குறும்பு விழியால்.. எல்லோரையும் பார்த்துக் கொண்டு.. தனக்கு முன் இருந்த கேக்கை கைகள் நீட்டி எப்போது தொடலாம் என நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை.

ஷிவா, எப்போதும் போல ஒரு ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு நின்றிருந்தான். பாலாஜி, காலையிலேயே வந்துவிட்டான். அவனுக்கும் சேர்த்துதான் காலையில் உணவு சொல்லி இருந்தான் ஷிவா. சாம்மோடு அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

இப்போது மாலையில் கேக் வெட்டுவதற்கு என பக்கத்து வீட்டிலுள்ள.. தேன்மொழி, தினேஷ் இருவர், மற்றும் கீழே இருக்கும் இரண்டு செக்யூரிட்டிகள்.. தங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா.. மற்றும் மதுப்ரியா. அவ்வளவுதான், அழைப்பு.

ஷிவா அழைத்திருந்த நபர்கள் எல்லாம் வந்துவிட்டனர்.. மதுவை தவிர. மது இரவு உணவையும் எடுத்து வந்துவிடலாம் என எண்ணிக் கொண்டே இருந்தாள்.. அதனால் வருவதற்கு லேட்.

அதனால், குழந்தையை கருத்தில் கொண்டு கேக்.. வெட்டினான் ஷிவா. பாலாஜி, வந்தவர்கள் எல்லோருக்கும் கேக் கொடுத்துக் கொண்டிருந்தான். சாம் எல்லோரோடும் விளையாட தொடங்கினான்.

மதுப்ரியா, ஏழுமணிக்கு மேல்.. உணவோடு வந்து சேர்ந்தாள். சரியாக அவனிடம் டோர் எண் வாங்கிக் கொண்டதால், வந்து நின்றாள்.. கதவு திறந்துதான் இருந்தது. மது “ஹலோ.. ஷிவா சார்..” என அழைத்தாள்.

பாலாஜி.. அந்த பாகை பார்த்தே யார் என கண்டுக் கொண்டான்.. “வாங்க நீங்கதானே மெஸ்காரங்க” என்றான்.

மது தலையசைத்தாள்.

ஷிவா குழந்தையோடு வந்தான்.. “வாங்க” என்றான்.

ஷிவா “குழந்தைங்க யாரும் வரலையா” என்றான்.

மது “தெரியலையே.. யார் குழந்தைங்க..” என்றாள். ஷிவா, தன் மகனின் பர்த்டே பார்ட்டிக்கு அழைக்கும் போதே சொன்னான் ‘குழந்தைகளோடு வாங்க..’ என.. அவளென்ன பதில் சொல்லுவது என  தெரியாமல், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டாள், அன்று, அதனால், இன்று இப்படி கேட்டான் ஷிவா.

மதுவும் ஒன்றும் தெரியாதவள் போல.. ‘யார் குழந்தைகள்’ என்றாள்.

பாலாஜிதான் மதுவின் கழுத்து கால்களை பார்த்துவிட்டு சின்ன குரலில் “டேய்.. இன்னும் கல்யாணமே ஆகலைடா..” என்றான்.

ஷிவா ஓ என உணர்ந்து “வாங்க.. உள்ளே வாங்க..” என்றான்.

பாலாஜி உணவுகளை எடுத்து வைத்தான் கிட்செனில். மது, சாம்’மை பார்த்தாள்.. குழந்தை வெளிநாட்டு ஜாடையில் இருக்கவும் அதிர்ந்தவள் “எங்க, இவங்க அம்மா” என்றாள் ஆர்வமாக. அவளுக்கு புரியும், உணவு தினமும் தங்களிடம்தான் வாங்குகிறான் ஷிவா என. ஆனால், குழந்தையை பார்த்த அதிர்ச்சியில் அப்படி கேட்டுவிட்டாள்.

ஷிவா ஒன்றும் அதிரவெல்லாம் இல்லை “அவங்க இப்போ இல்லை..” என சொல்லியபடியே.. கேக் இருந்த சின்ன பேப்பர் பிளாட் ஒன்றை நீட்டினான் அவள்முன்.

மது அவனின் பதிலையும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை போல.. “ஓகே.. ஒகே..” என்றாள்.

அவள் கவனம் முழுவதும் சாம்’மிடமே. இன்னமும் அவன் கையிலிருந்த குழந்தையை பார்த்தே முடிக்கவில்லை போல.. அப்படியே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், மது.

ஷிவா ”இந்தாங்க” என கேக்கை நீட்டினான்.

மது அதை வாங்கி, அதே டேபிள் மேல் வைத்துவிட்டு.. வண்ண காகிதம் சுற்றி எடுத்து வந்திருந்த ஒரு பரிசை சாம் முன் நீட்டினாள்.

குழந்தை அதை வாங்க கை நீட்டவும்.. ‘தரமாட்டேன்’ என மறைத்துக் கொண்டாள் தனக்குப்பின், மது. சாம்.. அவளை நிமிர்ந்து ‘வட போச்சே’ என பார்த்தது.

மது இரு கைகளையும் சாம் முன் நீட்டி புன்னகையோடு ”வாடா..” என்றாள்.

சாம், தன் ஆலிவ் விழிகளோடு.. மதுவை பார்த்தான் ஆராய்ச்சியாய். நொடிகளில் திரும்பி தன் தந்தையை பார்த்தான்.. மீண்டும் மதுவை பார்த்தான். 

மது “வா டா..” என்றாள்.

சாம் இப்போது தந்தையை பார்த்தான். ஷிவா.. “போ.. கோ சாம்.. “ என்றான். சாம் படாரென தாவினான் மதுவிடம். மது சிரித்தபடியே வாங்கிக் கொண்டாள்.. குழந்தையை.

சாம் இப்போது அவளையே ஆராய்ச்சியாய் பார்த்தான். அவளின் காதில் ஆடிய பெரிய ஜிமிக்கையை இழுத்தான். அதை மது பிடித்துக் கொள்ளவும்.. அவள் கைகளில் ஆடிய வளையலை இழுத்தான்.. சாம்.

மது இப்போது அந்த பரிசு பொருளை கொடுக்கவும்.. வாங்கிக் கொண்டு.. மதுவை பார்த்து, தயக்கமாக சிரித்தான் குழந்தை. மது அந்த சிரிப்பில் மயங்கித்தான் போனாள்.

Advertisement