Advertisement

விஜயா “நீ..உ.. உனக்கு, எப்படி சொல்றது, எங்க தப்புதான்..பிள்ளைகள் ஒன்றாக இருந்தால் பிடிப்பு வரும்ன்னு நினைச்சது எங்க தப்புதான்” என அழ தொடங்கினார்.

மது “அத்தை.. நீங்க தப்பு செய்துட்டு அவரை சொன்னால்.. போங்க, வேலையை பாருங்க. என்னை இனி நீங்க மனதில் நினைக்க கூடாது சொல்லிட்டேன். அப்படி ஏதாவது முரண்டு பிடிச்சிங்க.. நான் எங்கையாவது போயிடுவேன்” என்றாள் மிரட்டலாக.

விஜயா மீண்டும் அழுதார். பின் மருமகளின் பேச்சை ஏற்று அவனுக்கு எல்லாம் செய்தார். ஒன்றும் குறை வைக்கவில்லை.. அபர்ணாவிடம் பேசவில்லை.. பழகவில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் முன் நின்று, உறவுக்லோடு கலந்து பேசி.. மகனின் திருமணத்தை இனிதாக நடத்தினார். அதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் கணேசன் செய்து கொடுத்தார்.

ஸ்ரீயின் திருமணம் முடிந்தது.. நேரே பெங்களூர் கூட்டி சென்றுவிட்டனர் அவர்களை. கணேசனும் சித்ராவும், பெண் வீட்டாரோடு அங்கே இருந்து எல்லாம் செய்து கொடுத்து வந்தனர்.

விஜயா உடல்நலமில்லை என பெங்களூர் போகவில்லை.

நாட்கள் வேகமாக சென்றது.

ஸ்ரீ அபர்ணா விடுமுறைக்கு வந்தாலும்.. ஒருநாள் இருப்பர், பின் அபர்ணா வீட்டிற்கு கிளம்பிடுவார். பின் அதுவும் குறைந்து போகிற்று. மகன் எவ்வளவு அழைத்தும் விஜயா.. பெங்களூர் செல்லவில்லை.. ஒருமுறை கூட. அதிகம் பேசுவதும் இல்லை மகனோடு. மாதம் ஒருமுறை மட்டுமே.. என்ன ஏது என பேசுவார். அபர்ணா, போனில் மட்டும் பேசுகிறாள்.. நேரில்.. அபர்ணாவோடு பேசுவதில்லை விஜயா.

பெங்களூர்க்கு, கணேசன் சித்ரா தம்பதி சென்று வருவர். தரணி, ஷ்ரவன் விடுமுறைக்கு சென்று வந்தனர். வாரம் தவறாமல் ஸ்ரீ, மதுவிற்கு அழைத்துக் கொண்டிருக்கிறான்.

ஷ்ரவன் சென்னையில் உள்ள கல்லூரி சேர்ந்தான். இந்த முறை மது அவனை என்ன படிக்கலாம் என வழி நடத்தினாள்.. ஷ்ரவன் ஆர்கிடெக் படிக்கிறான். ஸ்ரீயிடம் யாருமே யோசனை கேட்கவில்லை.

மதுவின் இறுதி வருடம் படிப்பு முடிந்தது. வேலையும் சென்னையில் கிடைத்தது. எனவே அங்கே செல்ல காத்திருந்தாள் பெண். திருமணம் என பேச்சு எடுத்தனர் வீட்டில். மது “கொஞ்சம் டைம் வேணுமப்பா” என்று விட்டாள்.

ஒருநாள், விடுமுறை தினம் மது வீட்டிலிருந்தாள். தன் தந்தை, மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வந்தது. வீடே அதிர்ந்து அழுதுக் கொண்டே மருத்துவமனை கிளம்பினர்.

கணேசனுக்கு ஆக்சிடன்ட்.. கால்மேல் வண்டி ஏறி.. பலத்த அடி. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. எதோ ப்ளேட் வைக்க வேண்டும் என்றனர்.

பெரியவர்கள் எல்லோரும் செய்வதறியாது நின்றனர்.

மதுவும் தரணியும்தான் முடிவெடுத்து.. மருத்துவமனையில் தங்கள் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு எல்லாம் செய்தனர்.

கணேசனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து, அவர் நன்றாக இருப்பதாக சொல்லினர் மருத்துவர்கள். அதன்பின்தான் சித்ராவிற்கு, உயிரே வந்தது. தன் கணவரை.. இப்படி ஒருநாளும் பார்க்காமல் இருந்ததேயில்லை சித்ரா. ம்.. எங்கு சென்றாலும் கணேசன் வீடு வந்து விடுவார். குறிப்பா எங்கு சென்றாலும் பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே செல்லுவர். எனவே, சித்ரா உடைந்துவிட்டார். மருத்துவர்கள், கணேசன் நன்றாக இருக்கிறார்.. நான்கு மாதம் நடப்பதற்கு சிரமம்.. பின் சரியாகிடும் என சொல்லவுதான் சற்று நிமிர்ந்தார் சித்ரா.

பிள்ளைகள் இருவரும்தான், எல்லாம் பார்த்து நின்றனர். இரு தாய்மார்களும் அமைதியாக அவர்கள் சொல்லுவதை செய்தனர். 

மறுநாள், கணேசன் கண் விழித்ததும், சித்ரா முதலில் பார்த்து வந்தார்.. பின்தான் அவருக்கு  சுற்றம் புரிய தொடங்கியது.

தன் மகளிடம் “ஸ்ரீக்கு சொல்லிட்டியா” என்றார்.

மது “இல்லை… இப்போது சொல்லவும் வேண்டாம்” என்றுவிட்டாள்.

சித்ரா தரணியை பார்த்து “ஏன் டா.. அண்ணனுக்கு சொல்லலையா நீ” என்றார் அதட்டலாக, விஜயாவும் அப்போதுதான்.. அதை உணர்ந்தார்.

தரணி “மதுதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டா” என்றான்.

சித்ராவிற்கு கோவமாக வந்தது. தன் மகளை முறைத்தார்.

மது “என்ன, எல்லாத்துக்கும் அத்தான் வேண்டுமா… நான் பார்க்கிறேன். என் அப்பா. எனக்கு தெரியும்.. அப்புறம் அவர் வந்தால், நான் இங்க இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.. அப்பா வீட்டுக்கு வந்ததும் சொல்லிக்கலாம்.. தரணி வாடா.. வீட்டுக்கு போய் இவங்களுக்கு துணி எடுத்துட்டு  வருவோம். அத்தை, உங்க மகன் கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் தன் அத்தையையும் பார்த்து.

இரு தாய்மார்களும் என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றனர்.

மது எதையும் மறக்கவில்லை என எல்லோருக்கும் புரிந்தது. அன்றிலிருந்து மதுதான் எல்லாம். 

கணேசன் வீடு வந்தார். ஸ்ரீயும் அபர்ணாவும் ஒருநாள் வந்து பார்த்து சென்றனர். ஸ்ரீ, அந்த வீட்டை அன்னியமாக உணர்ந்தான். ஆனாலும் கோவப்படவில்லை.

மது வேலைக்கு செல்லவில்லை.. தந்தைக்காக கூடவே இருந்தாள். விஜயா வேலைக்கு சென்றார். விபத்து காரணமாக கணேசனுக்கு வேலையில்லை என்றனர். என்ன செய்வது என எண்ணிக் கொண்டே நாட்கள் நகர்ந்தது.

அப்போது இவர்களின் வீட்டை ஏதோ வியாபார கட்டிடம் கட்ட.. விலைக்கு கேட்டனர். கணேசன் கொடுக்கமாட்டேன் என்க. மதுதான் சென்னை போயிடலாம்.. எல்லோரும் படிக்கறோம்.. ஷ்ரவனும் அங்கேதானே இருக்கான்.. இங்க என்ன பண்ண போறோம் என கேட்டாள்.

அதில் முடிவெடுத்துதான் சென்னை வந்தனர், எல்லோரும். மது, வேலைக்கு சேராததால்.. அவளுக்கு வேலை இல்லாமல் போனது. அப்போதுதான் என்ன செய்வது என..  இரு பெண்களும் வீட்டில் சமையல் பொடி வகைகள் செய்ய தொடங்கினர். அதில், தரணியும் மதுவும் “மெஸ் வைத்தால் என்ன” என யோசனை சொல்லினர். 

அதை நடைமுறை படுத்தவும் தொடங்கினர். சென்னையில் முக்கிய இடமாக பார்த்து.. பெரிய வீடாக லீசுக்கு எடுத்தனர்.. மெல்ல மெல்ல சமைக்க தொடங்கி.. விளம்பரம் செய்து.. அக்கம் பக்கத்தில் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக உணவகத்தை வளர்த்தனர், தரணியும் மதுவும்.

சரியாக கொரானாவும் தொடங்கியது.. தங்களின் சின்ன உணவகமும் சிதைந்திடும் என எண்ணியவர்களுக்கு அதிர்ச்சியாக.. இவர்களின் சின்ன மெஸ் வளர தொடங்கியது. அப்போது, தரணிக்கும் ஷர்வனுக்கும் கல்லூரி இல்லை எனவே, வீடுகளுக்கே சென்று உணவு கொடுத்து வந்தனர். கொஞ்சமாக வேலைக்கு என ஆட்கள் சேர்த்தனர். இப்போதும் அதே முறையில் நடக்கிறது மெஸ்.

!@!@!@@!@!@!@!@!@!@

இன்று,

கோவித்துக் கொண்டு மது, தனதறைக்கு செல்ல.. இப்போது ஷிவாவிடமிருந்து அழைப்பு வந்தது மதுவிற்கு. என்னமோ தரணி பேசியதே மனதில் நின்றது, அதனால் போனை எடுக்கவில்லை, அவள்.

அரைமணி நேரம் சென்று மீண்டும் அழைத்தான். மது எடுத்து  “ஹலோ” என்றாள்.

ஷிவா “ஹலோ, நான் ஷிவாங்க.. பிசியா” என்றான்.

மது “அப்படி இல்லை.. நாளைக்கு என்ன காய் வாங்கனும்ன்னு பார்த்துட்டு இருந்தேன்.. சொல்லுங்க” என்றாள்.

ஷிவா “ரெண்டு நாளைக்கு புட் வேண்டாங்க.. நாங்க இரண்டு பேரும் திருப்பதி போறோம்..” என்றான் சந்தோஷமான குரலில்.

மதுவிற்கு என்ன சொல்லுவது என்ன தெரியவில்லை.. “ம்.. சரிங்க” என்றாள். 

ஷிவாவிற்கு,  அவளின் ஒரேழுத்து பதில் என்னமோ போலானது.

அன்று அவளிடம் பேசியதோடு சரி, அதன்பின் எந்த பேச்சும் இல்லை.. இருவருக்கும் இடையே. எனவே, இப்போது பேசவும்.. அவனுக்கே அன்றைய குரல் போல அவளின் குரலில்லை என தோன்றியது. 

அத்தோடு, இவன், தன் மகனின் பர்த்டே பார்ட்டிக்கு காலையில் சமைத்து தருவீர்களா என கேட்க கூப்பிட்டான். இவளின் குரலின் சோர்வில் கேட்பதா? வேண்டாமா? என எண்ணம்.

ஷிவா “இல்லைங்க.. நீங்க“ என எதோ சொல்ல வர.. எதிர்புறம், போனில் வேறு குரல் கேட்டது.

அங்கே, தரணி “மது.. சாரி” என சொல்லியபடி மதுவின் அறைக்குள் வரவும்.. மது போனில் பேசிக் கொண்டிருக்கவும். தரணி “இந்த நேரத்தில் யார் மது” என்றான், நின்று.

மது.. இப்போது ஷிவாவிடம் “ஒரு நிமிஷம்..” என்றவள். தரணியை பார்த்து “என்ன “ என்றாள்.

தரணி “யாரு போனில்” என்றான்.

மது “நீ எதுக்கு கேட்க்கிற, என்னோட வேலை இது.. “ என சண்டைக்கு தயாரானாள்.

தரணி “ச்ச போடி.. பசிக்குது, நீ வந்து சாப்பாடு போட்டால் தான் சாப்பிடுவேன் சீக்கிரம் வா” என்று விட்டு அறையின் கதவை சாற்றிக் கொண்டு வெளியே சென்றான்.

ஷிவாவிற்கு அங்கே நடந்த பேச்சு வார்த்தை காதில் விழுந்தது.. மனது சட்டென இருகிக் கொண்டது ‘நீ வந்து சாப்பாடு போட்டால்தான் சாப்பிடுவேன்..’ என்ற வார்த்தையில். 

மது “ஹலோ சொல்லுங்க..” என்றாள்.

ஷிவா அதே உணர்வோடு “நீங்க அவருக்கு சாப்பாடு போட்டுட்டு வாங்க.. அன்பை.. நேசத்தை.. எப்போதும் உதாசீனப் படுத்தாதீங்க..” என்றான் உறைந்த குரலில்.

மீண்டும் அவனே “சாரி உங்க பெர்சனலில் தலையிட்டதுக்கு.. நாளைக்கு காலையில் பேசறேன் பைங்க..” என்றான்.

மது “பர்சனல் எல்லாம் இல்லைங்க.. அவன் என் ப்ரெண்ட்.. இப்போ அவன்தான் என்கிட்டே சண்டை போட்டான் தெரியுமா.. நீங்க சொல்லுங்க” என்றாள் அசால்ட்டான குரலில்.

ஷிவா “அது எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. சரி, நான் மோர்னிங் பேசறேன்” என்றவன் போனை வைத்துவிட்டான்.

ஷிவாவிற்கு, மனம் அலைபாய தொடங்கியது.. 

“வெண்மதி வெண்மதியே நில்லு..

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு..”

Advertisement