Advertisement

மதுர ப்ரியம்!

5

கால சக்கரம் எப்போதும் விடைகளை உடனே கொண்டு வந்து கொடுப்பதில்லையே. அப்படிதான் மதுவின் நிலை.. எதற்கும் அவளுக்கு விடை தெரியவில்லை. வீட்டில் அவளால் சகஜமாக இருக்க முடியவில்லை. விஜயாவை மதுவினால் எதிர்கொள்ள முடியவில்லை. விஜயாவிற்கும் தன் மருமகளை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. 

விஜயா தன் அண்ணியிடம் ஏதேதோ பேசினார் தனக்கு விருப்பமில்லை என புரியவைத்தார் சித்ராவிடம். ஆனால், சித்ராவிற்கு வருத்தம் இன்னும் போகவில்லை. அதிகமாக பேசுவதில்லை விஜயாவிடம்.

அடுத்த வாரத்தில்தான் நல்ல நாள் என்பதால்.. ஸ்ரீ பெங்களூர் கிளம்பிவிட்டான். 

ஸ்ரீ, ஊருக்கு சென்று மதுவிற்கு போனில் அழைத்தான். சித்ராவின் எண்ணுக்குதான் அழைத்தான் ஸ்ரீ. அந்த போனை மதுதான் பெரும்பாலும் வைத்திருப்பாள் என தெரியும் அவனுக்கு. 

மது போனையே பார்த்திருந்தாள்.. ஸ்ரீ அழைப்பது தெரிகிறது.. இரண்டாம் முறை அழைக்கிறான்.. எடுப்பதா! வேண்டாமா! என யோசனை, அவளுக்கு. சற்று நேரம் விட்டு மீண்டும் அழைத்தான் ஸ்ரீ.

ஆதங்கத்தில் இருந்த பெண் மனது.. அழைப்பை ஏற்றது. நிரம்ப அமைதி அவளிடம்.. பேசவில்லை அவள். ஸ்ரீ பேசினான் “மது” என்றான்.. தயக்கமான அழைப்பு அவனிடமிருந்து வந்தது.

மதுவிற்கு, ஸ்ரீயின் குரலில் அழுகையாக வந்தது ‘இது எனக்கான குரலில்லையா.. மதுன்னு என்னை இப்படி கூப்பிட்டதே இல்லையே அத்தான் நீங்க..’ என நினைக்க நின்னைக்க வற்றியிருந்த கண்ணீர் துளிர்க்க தொடங்கியது.

ஸ்ரீ “மது.. சாரி மது. உன்னை கஷ்ட்ட்படுத்தி விட்டேனா” என்றான். 

மதுவின் மனது ‘என்னை தெரிகிறது அத்தானுக்கு’ என நினைக்க  அந்த மனதின் ஓரத்தில் சந்தோஷம்.. அந்த ஓரம் தவிர மற்ற இடம் முழுவதும் வருத்தம்தான். கேவினால் மது.. அத்தானின் வார்த்தையை கேட்டு.

மது அமைதியாக அழுதாள்.

மது “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ப்ளீஸ் பெர்மிஷன் கொடேன்..” என்றான்,

மதுவின் மனம் கோவம்தான் கொண்டது ‘என்னமோ என்னை கேட்டு எல்லாம் செய்வது போலதான் பேச்சு.. இப்போது பேச தெரிகிற அத்தானுக்கு, அப்போதே ஏன் என் நிலை புரியவில்லை..’ என தோன்றியது. மது அமைதியாக இருந்தாள்.

ஸ்ரீ அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டான் போல, முதல்முறையாக திருவாய் மலர்ந்தான் ஸ்ரீ “எனக்கு.. இல்ல, எங்க எல்லோருக்கும் நீ எப்போதும் ஸ்பெஷல் மது. அது.. எப்படி சொல்றது.. நீ ராணி மாதிரி மது. நீ சுப்பிரீயர் மது. நா.. நான் எப்படி சொல்றது..” என்றான் தயங்கிய குரலில்.

மது “ப்ளீஸ் அத்தான்..” என்றாள், உடைந்து அழுதாள் பெண்..

ஸ்ரீ “நான் உண்மைதான் மது சொல்றேன்.. எனக்கு உன்மேல நிறைய அக்கறை இருக்கு. ஆனா, என் அம்மா சொல்றா மாதிரி நான் ஒருநாளும் உன்னை நினைச்சதில்லை.. அப்படி நினைக்கும் சக்தியும் எனக்கில்லை மது. நீ தேவதை மது.. என்னை மீறிய ஒரு விஷயம்..” என சொல்ல சொல்ல..

மது “ஐயோ அத்தான்…” என அழுதாள் பெண்.. 

ஸ்ரீ “ஒன்றுமே இல்லாமல் வந்த எங்களுக்கு.. நீங்கள் கொடுத்த அடைக்கலம்.. ரொம்ப பெருசு மது.. அந்த மனசு எனக்கே கூட வருமா தெரியாது.. அதனாலோ என்னமோ இங்கே வந்த நாள் முதல்.. என்னால் முடிந்த உதவியை.. வேலையை.. அத்தைக்கு மாமாக்கு உனக்கு எல்லோருக்கும் செய்தேன்.. இனியும் செய்வேன். இப்பவும் நீ ஏதாவது வேணும்ன்னு கேளு வாங்கி தரன்.. இல்லை, அபர்ணாவை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு சொல்லு.. நான் செய்துக்கல, ஆனா.. உன்னை.. என்னால் எப்போதும் க….. செய்துக்க முடியாது மது. சாரி.. மது சாரி.” என்றான் தெளிவான குரலில்..

மது “என்னை பார்த்தால் பையித்தியம் மாதிரி தெரியுது எனக்கே.. நீங்க ஏதேதோ சொல்லி என்னை குழப்பறீங்க.. ஆனால், ஒன்னு.. புதுசா இருக்கு நீங்க சொல்றது..” என்றாள் அழுகையை நிறுத்தி.

ஸ்ரீ ”மது புதுசு இல்லை.. எல்லோருக்கும் சிலது தெரியும், நம்ம மனசு சிலதை ரசிக்கலாம்.. ஆனால் அதன் அருகில் நெருங்க முடியாது.. அப்படிதான் நீ எனக்கு. உன் கூடவே நான் வளர்ந்ததால்.. அப்படி அட்மைர் ஆகிட்ட என்கிட்ட.. ஜஸ்ட் நானுனக்கு ஒரு ஹீரோ மாதிரி இருந்திருக்கலாம் அவ்வளவுதான். நீ எங்க வீட்டு தேவதை..” என அவன் பேச பேச மீண்டும் வெடித்தாள் மது.

மது “அத்தான் போதும்.. நீங்க என்னை எதோ சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்க.. அப்போ உங்களுக்கு, நான்.. உங்களை  நினைப்பது தெரியும்.. அதுதானே உண்மை.” என்றாள் தெளிவாக பெண்.

ஸ்ரீ “நான் சொல்றது உண்மை மது. உண்மையா, ரெண்டுநாள் முன்னாடிதான் பார்த்தேன்.. உன் கண்ணிலொரு ஸ்பார்க் தெரிந்ததை. அதுவரை, உன்னிடம் நான் பேசியது கூட இல்லை மது. எப்படி எனக்கு உன் எண்ணம் தெரிந்திருக்கும்.. தெரிந்திருந்தால், கண்டிப்பாக நான் உனக்கு விளங்க வைத்திருப்பேன்” என்றான்.

மது “தேங்க்ஸ்.. எனக்கு விளங்க வைத்ததுக்கு. எனக்கு ஒரு விஷ் செய்வீங்களா..” என்றாள்.

ஸ்ரீயின் மனம் பதறித்தான் போனது “என்ன..” என்றான்.

மது “தயவு செய்து.. நீங்க என் கண்ணில் படாதீங்க ப்ளீஸ்.. ஐயோ எப்படி நடக்கும் அதெல்லாம்.. நடக்காதில்லை.. என் விருப்பம் எதுவும் நடக்காதில்ல.. “ என்றவள் ”பை அத்தான்..” என்றாள்.

ஸ்ரீ “மது நானும் உனக்கு தரணி மாதிரி நல்ல ப்ரெண்ட் எப்போதும்.. நான் இதெல்லாம் மனதில் வைக்க மாட்டேன்.. முன்போல நான் உன்னிடமிருந்து ஒதுங்கியும் இருக்க மாட்டேன். வாரத்திற்கு ஒரு முறை அழைப்பேன்.. நீ எப்போது சமாதானம் ஆகி.. நான் சொன்னது சரின்னு   நினைக்கிறியோ அப்போது என்னுடன் பேசு மது.. அதுவரை இந்த அத்தானை.. எதிரியா கூட பாரு மது, ஆனால் வெறுத்திடாதே..” என்றான்.

மதுவிற்கு பொங்கி பொங்கி அழுகைதான் வந்தது.. அவளால் ஸ்ரீயின் பேச்சுகளை கேட்க்க முடியவில்லை.. அவளின் எண்ணத்திற்கும்.. இவனின் பேச்சிற்கும்.. நடுவில் இழையோடிய ஒரு பந்தம்.. இதம்..  என்னவென அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீ என் தங்கை என எல்லோரும் சொல்லும் பதில் சொல்லவில்லை..அவன். அரகென்ட்டாக, நீ மனதில் நினைச்சதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் எனவும் சொல்லவில்லை.. இதமாக, காயத்தில் மயிலிறகு கொண்டு மருந்திட்டான், ஸ்ரீ. அது நேசம் கொண்ட மனதில்.. கோவத்தை கொடுத்தது.

“எங்கே எனது கவிதை..

கனவிலே எழுதி மடித்த கவிதை..”

மது போனை வைத்துவிட்டாள். அதன்பின் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அதிகம் பார்த்துக் கொள்ளவில்லை. திருமணத்தின் போது கூட.. கண்ணில் படவில்லை மது. மதுவிற்கு விட்டு போகிற்று, எல்லாம்.

நாட்கள் நகரத் தொடங்கியது.. 

விஜயா, மிகவும் பிடிவாதம் பிடித்தார்.. என்னமோ புலம்பினார். ஸ்ரீ எவ்வளவோ எடுத்து சொன்னாலும், தன் அண்ணன் வீட்டிலிருந்து பெங்களூர் வர மாட்டேன் என்றுவிட்டார். பெண் பார்க்க ஒரு பிடிவாதம்.. அழுகை என விஜயா நிறைய ஆர்பாட்டம் செய்தார். 

அண்ணன் கணேசன் அதட்டி அதட்டி வேலை நடந்தது விஜயாவிடம். சித்ரா தேறிக் கொண்டார்.. மகளை பார்த்தவருக்கு, அவளுக்கு ஒன்றுமில்லை.. என தோன்ற, தானும் முகத்தில் ஏதும் காட்டாமல்.. தன் கணவரோடு சேர்ந்து எல்லாம் செய்தார்.

அபர்ணா, விஜயாவிடம் எவ்வளவு நெருங்க நினைத்தாலும்.. விஜயா அனுமதிக்கவேயில்லை. பேசவில்லை.. தன் மருமகள் என அந்த பெண்ணை பார்க்கவேயில்லை விஜயா. அபர்ணாவிடம், ஸ்ரீ புரிய வைத்திருந்தான், அவரின் நிலையை.. எனவே, பொறுமையாக இருந்தாள் அபர்ணா.

விஜயா, நிச்சய புடவை எடுக்க போகும்போது, வேலை இருக்கு வரவில்லை என ஆர்பாட்டம்.

ஸ்ரீக்கு.. மண்டை காய்ந்தது. வெறுத்து போகிற்று “போ ம்மா.. எனக்கு, அப்பா மட்டுமில்ல, அம்மாவும் இன்றிலிருந்து இல்லை. நீங்க வாங்க மாமா” என்றான். அவனுக்கும் என்ன செய்வது என புரியவில்லை. பலமுறை தன் அன்னைக்கு எடுத்து சொல்லிவிட்டான்.. ‘மது என் பொறுப்பு.. நான் நல்ல வரனாக பார்க்கிறேன், மாமா அத்தையை நான் இறுதி வரை விடமாட்டேன். அதற்காக என்னை, மதுவோடு இணைக்காதே’ என பலமுறை மன்றாடி விட்டான் மகன். ஆனால், பிறந்த வீட்டு பந்தம்.. இத்தனை ஆண்டுகள் முகம் சுளிக்காமல் தன்னை காத்து நின்ற சொந்தத்தை விட, காதல் பெரிதா எனதான் அந்த அன்னையின் ஆதங்கம்.

மது அன்று வீட்டிலிருந்ததால் தன் அத்தையிடம் “என்ன அத்தை.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்றாள்.

விஜயாவும் அழ தொடங்கினார்.

மது “போ அத்தை, என்னை மனசில் வைத்து, உங்க பையனை ஒதுக்காதீங்க.. அவருக்கு உங்களை விட்டால், வேறு யாரு.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. சொல்ல போனால்.. நீங்க இப்படி செய்யறதாலதான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு. எனக்காக ப்ளீஸ் நீங்க, அங்க பாரு.. நீங்களே இப்படி இருந்தால், அப்பாவு அம்மாவும் எப்படி பீல் பன்னுவாங்க.. போங்க அத்தை” என்றாள்.

Advertisement