Advertisement

தரணி “கதவை திற “என்றான். அப்போதுதான் வெளியே வந்தார் சித்ரா.. தரணி.. கதவை தட்டுவதும் பேசுவதும் காதில் விழ.. பதட்டமாக அவனையும் கதவையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

தரணி நான்கு முறை அழைத்ததும் கதவை திறந்தாள் பெண். அன்னை சித்ராவிற்கு உயிர் வந்தது. பெண்ணை அங்கிருந்தே பார்த்தார்.. முகம் வாடித்தான் இருந்தது. தரணி எதோ கேட்க்க.. மது “தலை வலி தரன்” என்றாள்.

சித்ரா, ‘ஏதும் பேசவோ கேட்கவோ கூடாது’ என சமையலறை சென்றுவிட்டார். 

இரவில், தண்டபாணி வந்ததும்.. எல்லாம் அவரிடம் சொன்னார் வித்யா. பெரிய ஏமாற்றம்தான் அவருக்கு. “மது எங்கே” என்றார், மனைவியை பார்த்து. 

“தரணி, ஷ்ரவன் கூட கோவில் போயிருக்கா..”  என்றார் சித்ரா.

தண்டபாணி “சரி கல்யாணம் ஏற்பாடு செய்திடலாம்.. போன் நம்பர் வாங்கிக் கொடு..பேசறேன்..” என்றுவிட்டார்.  

வித்யா “அண்ணா, என் மருமக மதுன்னு தானே இத்தனைநாள் நான் நினைச்சேன்.. இவன் இப்படி சொல்றான். நீ முடியாதுன்னு சொல்லு.. நீ சொன்னால், அவன் கேட்பான்.. சொல்லு சொல்லு அண்ணா” என அழுதார்.

கணேசன் இறுகிய குரலில் “நீ.. நான்.. நினைத்து என்ன நடக்க போகுது.. போ.. வேலையை பார்.. நல்லது நடக்கும் போது, அழாதே” என்றவர்.. தோட்டத்திற்கு, அதாவது வீட்டின் பின்பக்கம் சென்று உலாவ தொடங்கி விட்டார்.

இரவு உணவு யாருக்கும் இறங்கவில்லை. ஆனால், யாரும் எதையும் வெளியே காட்டிக் கொள்ள கூடாது என இரண்டு இட்டிலிகளை உள்ளே தள்ளினர்.

மீண்டும் கணேசன் உலாவுவதற்கு என பின்பக்க தோட்டத்திற்கு சென்றார். சித்ராவும் வேலை முடித்து.. கணவனை காண சென்றார். இப்படி கூட்டு குடும்பம் போன்ற அமைப்பில், கணவன் மனைவி இருவருக்கும் பேசுவதற்கு என தனிமை.. இப்படி அமைந்தால்தான் உண்டு.

சித்ரா “என்னங்க… மது முகமே சரியில்லை பார்த்தீங்களா” என்றாள்.

தண்டபாணி என்ன சொல்ல முடியும் என அமைதியாக நின்றார்.. இரண்டு நிமிடம். 

பின் “நாம்.. நான் தப்பு செய்துட்டேன், ஒரே இடத்தில் பிள்ளைகள் வளர்ந்ததால் அப்படி நினைச்சிட்டோம். அதைவிட தப்பு செய்திட்டோம்.. ஹாஸ்ட்டல் அனுப்பி இருக்கணும். ச்ச… பேசி ப்ரயோசனம் இல்லை.. மதுவை கவனிச்சிக்கோ.” என்றார் எங்கோ பார்த்துக் கொண்டு.

சித்ரா கொஞ்சம் சத்தமாகவே புலம்பினார் “என்னமோ இந்த காலத்து பிள்ளைகளுக்கு எல்லாம் பக்கத்தில் இருக்கிறவங்களோட அருமையே தெரியறதில்லை.. வேலையா ப்போரின், கல்யாணமா அசல்.. அப்புறம் எதுக்கு அத்தனை பெண், மாமா பெண்.. முறை எல்லாம். சொந்தம் எப்படி சேரும்..” என புலம்பினார்.

தண்டபாணி “அவனும் சொந்தத்தைதான் பார்த்திருக்கான்..” என நினைவுப் படுத்தினார்.

சித்ரா “கூடவே இருந்து பார்த்த என் பெண்ணை பிடிக்கலையாம்.. க்கும், “ என்றார்.

தண்டபாணி “அதான், கூடவே வளர்ந்ததாலதான் பிடிச்சிருக்காது. இப்போவெல்லாம் அப்படிதானே சொல்றாங்க.. கூடவே வளர்ந்ததால் தங்கச்சி மாதிரின்னு.. அப்படி ஏதாவது இருக்கும்.. விடு” என்றார்.

சித்ராவிற்கு கண்ணில் நீர் சுரந்துக் கொண்டே  இருந்தது.. பெண்  சரியாக இல்லை.. அதற்கு தாங்கள்தான் காரணம் என எண்ணம் வர வர  கண்ணில் நீர் வந்தது. அத்தோடு, ஸ்ரீயை பிடிக்கும்.. முத்தான பையன். அவனை மாப்பிளையாகவே பார்த்து விட்டவர்களால் சட்டென எதையும் ஏற்க முடியவில்லை.

சித்ரா “என்ன என்ன சொன்னீங்க, அப்படி எல்லாம் இல்லை.. கூடவே வளர்ந்தாலும் மாமா பெண் தங்கை ஆக முடியாதுங்க. அப்புறம் எதுக்கு முறை.. வழக்கமெல்லாம் வைச்சாங்க. ஒன்னு சொல்றேன், என்னை கோவீக்காதீங்க.. நம்ம வீட்டுப் பெண்களை மறந்து வேறு வீட்டுப் பெண்களுக்கு.. வாழ்க்கை கொடுக்கிறேன்னு கிளம்பறது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்..” என்றவர் கண்களை துடைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.

வித்யா, இன்னும் அறையில் ஸ்ரீயிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷ்ரவனும், தரணியும் ஹாலில் இழுத்து போர்த்தி படுத்திருந்தனர். சித்ரா, தங்களின் அறையை எட்டி பார்த்தார்.. அங்கே விளக்கு எரியவில்லை. பால் எடுத்துக் கொண்டு பெண்ணை பார்க்க சென்றார்.

மது, அமைதியாக படுத்திருந்தாள் போல.. சித்ரா “மது” என அழைக்க.. எழுந்துக் கொண்டாள்.

சித்ராவிடம் பாலை கொடுத்தார்.. மது “வேண்டாம் ம்மா… இப்போதானே சாப்பிட்டேன்” என்றாள்.

சித்ரா அதட்டலாக “குடி டி…” என்றவர். அவளின் காலருகே அமர்ந்து அவளின் பாதங்களை அழுத்திவிட தொடங்கினார்.

மது “ம்மா.. வேண்டாம்மா..” என்றாள்.

சித்ரா “குடிச்சிட்டியா..” என்றார்.

மது “இல்ல…” என்றவள் பாலை குடிக்க தொடங்கினாள். குடித்து முடித்தவள் சற்று நேரம் அமர்ந்துக் கொண்டாள். அன்னை கால்களை அழுத்திவிட.. அழுத்திவிட.. அழுகை அதிகாமாக வந்தது.. முயன்று தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தாள். 

சித்ரா என்ன நினைத்தாரோ.. “சீக்கிரம் தூங்கு..” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

மறுநாள் ஞாயிறு. எனவே, மது வெளியே வரவேயில்லை. வீடு அமைதியாக இருந்தது.

ஸ்ரீ குளித்து கிளம்பினான். தன் மாமாவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. முயன்று “மாமா, மன்னிச்சிடுங்க மாமா.. எ.. எனக்கு இப்போது கல்யாணத்தில் அவசரமில்லை. ஆனால், அபர்ணாவிற்கு, மாப்பிள்ளை பார்க்கிறாங்க. அதான்..” என விளக்கம் கொடுத்தான்.

தண்டபாணி ஒன்றும் சொல்லவில்லை “புரியுது ப்பா.. பெரியவங்க பேசறோம்.. அவங்க வீட்டில் சொல்லிட்டியா” என்றார்.

ஸ்ரீ, பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் உண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

அண்ணியும் நாத்தனாரும் பேசவேயில்லை.

அவ்வபோது தரணி ஷ்ரவன் பேச்சு சத்தம் மட்டும்தான் கேட்டது. 

திங்கள் கிழமை..

மது நேரமாக கல்லூரி கிளம்பினாள்.. தரணி அவளோடு கிளம்பிவிட்டான். கல்லூரி பஸ் பயணம்தான். எனவே மது அமைதியாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்.

தண்டபாணி, ஸ்ரீ கொடுத்த எண்ணிற்கு அழைத்து பேசினார்.. எல்லாம் சொந்தம் என்பதால் ஒன்றும் மறுப்பு இல்லை.. சந்தோஷமாக அவர்களும் சம்மதித்தனர். ஒருநல்ல நாள் பார்த்து பெண் கேட்டு வருவதாக கூறி வைத்தார் போனை.

அந்த செய்தியை எல்லோரிடமும் பகிர்ந்தார்.

ஸ்ரீ “மாமா.. அம்மாவை பெங்களூர் கூட்டி போறேன் மாமா.. வீடு சொல்லி வைச்சிருக்கேன்.. சீக்கிரம் கிடைச்சிடும்..” என பேச பேச..

வித்யா நிமிர்வாக “எதுக்கு டா..” என்றார்.

ஸ்ரீ ”என்ன ம்மா.. நமக்குன்னு வீடு.. நீ சொல்லிட்டே இருப்பியே ம்மா.. நாளைக்கு மருமக வருவான்னு” என்றான் அமைதியான குரலில்.

வித்யா “டேய்.. நான் என்ன நினைச்சி சொன்னேன்.. நீ என்ன செய்துகிட்டு இருக்க.. விடுடா. நான் எங்கயும் வரல.. இந்த கல்யாணத்தில் கூட.. நான் முன்னே நிற்க மாட்டேன். இனி உன் வீட்டுக்கு வரமாட்டேன். இதுதான் என் வீடு.. போடா.. என் பேச்சை மீறி போறவன், என் கஷ்ட்டத்தில் கூட நின்ன சொந்தத்தை மதிக்காதவன்.. வேண்டாம் எனக்கும். என் அண்ணன் பொண்ணு வாடி நிக்குது டா.. “ என சொல்ல சொல்ல..

தண்டபாணி  “விஜயா…” என்றார்.

விஜயா கேவிக் கொண்டே “என்னமோ பண்ணு டா.. இனி இந்த அம்மா எதுக்கும் உனக்கு முன்ன நிக்க மாட்டேன்.. போடா.. கல்யாணம் தானே செய்துக்கோ.. யாரவேனா செய்துக்கோ.. நானும் தரணியும் இனி எங்கயும் வர மாட்டோம். என் மது.. மாணிக்கம் டா..” என பேச பேச..

மீண்டும் தண்டபாணி “விஜயா.. பெரியவங்க ஆசையை யார் மேலும் திணிக்க கூடாது. முடிந்து போனதை பேசாதே..” என்றவர். “ஸ்ரீ நீ போ பா… நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

ஸ்ரீ நிற்க.

விஜயா “ஜாம்ஜாம்ன்னு இருப்பாருடா… மது.“ என மூச்சு வாங்கினார் வீராவேசமாக.

பின் “உங்க அப்பா விட்டு போன நிலை மறந்துடுச்சா… அப்போது ஆதரவு.. இங்கதான் கிடைச்சது.. “ என பேச.

தண்டபாணி “எதையும் சொல்லி காட்ட கூடாது விஜயா.. வா என்கூட..” என தங்கையை அழைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.

ஸ்ரீ, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் “அத்தை.. எனக்கு இந்த குடும்பம் முக்கியம் அத்தை. இதை தவிர எனக்கு எதுவும் தெரியாது அத்தை. மதுக்கு கல்யாணம் முடித்துதான் நான் செய்துக்கனும்ன்னு நினைச்சிருந்தேன் அத்தை. ஆனால், அபர்ணாவும் பாவம் அத்தை.. அவளும் சொந்தம் தானே.. எனக்காக அங்க தினம் தினம் பொய் சொல்றா.. கஷ்ட்டப்படுறா.. நான் என்ன செய்ய..” என்றான் பாவமாக.

சித்ரா “மாமா பேசிட்டாரில்லா, பார்த்துக்கலாம் ஸ்ரீ.. நீ சாப்பிடு” என்றார்.

ஸ்ரீக்கு மனது கலங்க தொடங்கியது.

மதுவிற்கு, கல்லூரியில் தலை வலிக்க தொடங்கியது. கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முடியாமல். அடுத்த, பாட வகுப்பில் வெளியே வந்துவிட்டாள்.

தரணி மதியம் வந்து பார்த்தான். ஆனால், என்னவென கேட்பது “சாப்பிட்டியா மது” என ஆரம்பித்தான்.

மது அவனை பார்த்ததும் அழ தொடங்கினாள்.. தரணிக்கு இன்னும் சங்கடமாக போகிற்று.. தரணி “ஏன் டி அழற.. விடுடி.. அவன்.. அவன் நம்ம வீட்டு மனுஷனே இல்ல, உனக்கு அவன் வொர்த்தே இல்ல.. விடு டி” என்றான்.

மது “உனக்கு தெரியும்ல்ல டா.. நா.. நான் யார்கிட்ட சொல்லுவேன்.. நான் தப்பா டா செய்துட்டேன்… நான் அழகா இல்லையா டா” என்றாள் சின்ன குரலில்.

தரணி “ஏய்.. லூசு, எல்லோரும் பார்ப்பாங்க.. ஏன் கத்தற” என்றான்.

மது “அத்தானுக்கு, ம்கூம்.. ஏன் டா.. உங்க அண்ணனுக்கு, என்னை பிடிக்கலை..” எனக் கேட்டு அழ தொடங்கினாள்.

தரணி கையறு நிலையில் அவளை பார்த்திருந்தான்.. “ஏய்.. இவ்வளோ பிடிக்குமா உனக்கு அவனை.. என்ன டி.. இப்படி அழற..” என்றான்.

மது “ரொம்ப அழறன்னா, ஏன்னு தெரியலை டா.. “ என்றாள் பாவமாக.

மீண்டும் அவளே ”ஆனா, அவர் என்கிட்டே பேசினதே இல்லையில்ல… என்னை நிமிர்ந்து பார்த்ததே இல்லையில்ல.. நானாகத்தான் அத்தான் என்னை கட்டிப்பார்ன்னு நினைச்சிட்டனோ.. நான், எப்படி எடுத்துகிட்டேன்னா.. படிக்கிறேன்,அதனால் அத்தான் என்னை பார்க்கலைன்னு நினைச்சேன். அவருக்கு, நான் மேட்ச் இல்ல போல.. கொஞ்சம் கூட நான் அவரை பாதிக்கலை போல..” என பேசிபேசி அழ தொடங்கினாள்.

தரணி “மது.. என்ன பேச்சு இது. அவனை பற்றி இனி பேசாதே..” என்றான்.

மது “ம்… ஏன் டா.. என்னை பிடிக்கலை..” என்றாள், முதலிலிருந்து.

“யாரோ யார் யாரோ..

யாரோடு யாரோ..

எவர் நெஞ்சினில் தான் யாரோ..

காதல் தேன் தானோ..

கானல் நீர்தானோ..

விடை சொல்பவர்தான் யாரோ”

Advertisement