Advertisement

விஜயாவின் கணவர், ஒருசில மாதங்களாக.. திருவண்ணாமலை கிரிவலம் சென்றார்.. எதோ இமயமலை பயணம் என ஒருமுறை நண்பர்களோடு சென்று வந்தார். அடுத்து வந்து பொறுப்பாக வேலைகளை பார்த்தார்தான். ஆனால், அடுத்த ஆறுமாதத்தில் மீண்டும் இமயமலை செல்லுகிறேன் என சென்றார்.. ஆள், வரவேயில்லை. அப்போதெல்லாம் போன் வசதி, அவ்வளவாக இல்லை.. எனவே தொடர்பு கொள்ள முடியவில்லை. 

விஜயா ஆறுமாதம் கணவரை எதிர்பார்த்தார். எதோ இருப்பதை கொண்டு.. வாழ்க்கை நடத்தினார். நல்ல பள்ளியில் படித்த பெரிய மகனை, அரசு பள்ளியில் சேர்த்தார். பெரிதாக படிக்கவில்லை விஜயா. எனவே, ஒரு கிளினிக்கில் OP சீட்டு கொடுக்கும் வேலைக்கு சேர்ந்தார், சொற்ப வருமானத்தில். ஆனால், வாடகை கொடுக்கவே அது போதவில்லை. எனவே தன் அண்ணனுக்கு அழைத்து பேசி அழுதார் விஜயா.

பின், அவரும் சென்று சம்பந்திகளிடம் பேசினார். அதற்கான பதில் யார் சொல்லுவார்கள்.. யாருமில்லை, மீறி பேசினால்.. பதில் வேறாக வந்தது. எனவே, தங்கையை தனியே விட மனதில்லாமல், தங்களோடு அழைத்துக் கொண்டார் தண்டபாணி. சித்ரலேகாவும், மறுப்பு சொல்லவில்லை. 

உறவுகள்  எல்லோரும் வருந்தியது.. வந்து பார்த்து பேசி விஜயாவிக்கு ஆறுதல் சொல்லி சென்றது.

தண்டபாணி, தான் வேலைக்கு செல்லும் கடையிலேயே, தன் தங்கை விஜயாவை விற்பனை பெண்ணாக சேர்த்தார். அவர்களுடைய வீடு சொந்த வீடு என்பதால்.. பெரிய செலவுகள் அதிகம் இல்லை. இவர்கள் இருவரும் வேலைக்கு செல்ல.. பிள்ளைகள் நால்வரும் அரசு பள்ளிக்கு சென்றார்கள். ஒரு ஆட்டம் கண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது அவர்கள் காலம்.

ஸ்ரீனிவாசன்,  விஜயாவின்  பெரிய மகன் இஞ்சினியரிங் முடித்தான்.. நல்ல வேலையும் கிடைத்தது. விஜயாவிற்கு பெரும் நிம்மதி வந்தது.. இனியாவது தன் அண்ணனுக்கு பாரமாக இருக்க கூடாது, தன் மகனோடு சென்று இருக்கலாம் என எண்ணியது அன்னையின் மனம். அப்படி இருந்தாள் தானே.. கௌரவமாக, தன் அண்ணன் மகளையும் தன் பிள்ளைக்கு கேட்க்கலாம். என எண்ணம் அவருக்கு. எல்லா பெரியவர்களுக்கும் அந்த எண்ணம் உண்டுதான். பெரிதாக சொல்லிக் கொண்டதில்லை என்றாலும் அந்த எண்ணம் எல்லோருக்கும் உண்டு. 

ஸ்ரீயின் குணம் அப்படி.. அமைதியானவன்.. தங்களின் நிலை உணர்ந்து நன்றாக படித்தவன்.. செலவில்லாமல், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க நன்றாக படித்தான். தன் மாமாவிற்கு தேவையான உதவிகள் செய்வான்.. தன் முறை பெண் என தெரிந்தும் மதுவோடு அதிகம் பேசமாட்டான். அவள் இங்கே என்றால்.. அவன் வேறு இடத்தில்தான் நிற்பான். பொறுப்பானவன்.. வீட்டின் தலைமகனாக மாமாவோடு கலந்து எல்லாம் செய்தான், படிக்கும் வரை.

ஸ்ரீக்கு, படிப்பு முடிந்தது. பெங்களூரில் வேலை.. வேலைக்கு செல்ல தொடங்கினான். பெங்களூர் என்பதால்.. கொஞ்ச மாதங்கள் சென்று, அன்னையை அழைத்துக் கொள்கிறேன் என தன் மாமாவிடம் கூறினான். அப்போதும் தண்டபாணி பெருமையாகவே மருமகனை பார்த்தார் “என்ன டா.. வேலைக்கு போனதும் வளர்ந்திட்டியோ.. நீ வேலையை பாரு.. உடம்பை பார்.. அம்மா இங்க வேலைக்கு போறா.. தரணி படிக்கிறான். நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்.. நீ கொஞ்சநாள் வேலைக்கு போய்.. அடுத்து என்னான்னு பாரு” என சொல்லி அனுப்பி வைத்தார் ஸ்ரீயை. மது அப்போது இஞ்சினியரிங் இரண்டாம் வருடம்.

பெரியவர்களுக்கு ஆயிரம் கனவுகள். எல்லாவற்றையும் அவன் மேல் இறக்கி வைக்க தயாராக இருந்தனர்.. மது படிப்பு முடிக்கும் வரை.

பொதுவாகவே மதுவிற்கும், ஸ்ரீயை பிடிக்கும். தான் இருக்கும் இடத்தில் அவன் இல்லாத ஒதுக்கம் பிடிக்கும்.. அவனின் உயரம் பிடிக்கும்.. தன்னை தவிர, ஷ்ரவனுக்கு, தரணிக்கு கணக்கு சொல்லி தரும் அவனின் அறிவு பிடிக்கும், தான், வந்து சந்தேகம் கேட்டால்.. “அப்புறம் வரேன்..வேலை இருக்கு..” என தங்களின் அறைக்குள் நுழைந்து கொள்ளும் கூச்சம் என ஸ்ரீயை பிடிக்கும் மதுவிற்கு.

மதுவை எல்லோரும் தாங்குவர் வீட்டில். ஒன்றுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்ததால்.. எல்லா வேலைகளும் அவர்களே செய்வார்கள், அதுவும் மதுவை, சித்ரா ஏதேனும் வேலை சொன்னால்..  ஒன்றும் பெரிதாக இல்லை, உணவு எடுத்து வைக்க சொல்லுவார்.. பாத்திரம் தேய்க்க.. சொல்லுவார், அவ்வளவுதான். அப்போதெல்லாம் தரணி உதவிக்கு வருவான். இல்லை என்றால் ஸ்ரீ ”போடா.. மது தனியா செய்யறா பாரு.. போய் ஹெல்ப் பண்ணு “ என தானே தம்பியை அனுப்புவான். தரணி சென்றால், அவன் உடனேயே ஷ்ரவன் செல்லுவான்.. மூவரும் பேசியபடியே வேலையை முடிப்பார்.

அத்தோடு, விடுமுறை நாட்களில் விஜயா துணி துவைக்க.. மது தானும் வருவாள் அத்தையோடு. கல்லில் அத்தை துவைக்க.. இவள், அலசி பிழிந்து காய வைப்பாள். அப்போதெல்லாம், ஸ்ரீ வந்து நிற்பான், “நீ தள்ளு மது” என எங்கோ பார்த்து ஒரு வார்த்தை சொல்லி.. தான் வந்து துணியை அலாசுவான். பிழிந்து தருவான்.. அவள், கொடியில் காய வைத்தாள் மட்டும் போதும்.

இதையெல்லாம் பெரியவர்கள் கண்டு, யாருக்கும் தெரியாமல் மகிழ்ந்து நெகிழ்ந்து போக்கினர். எனவே, வீடறிந்த ரகசியம்.. ஸ்ரீக்குதான், மது என்பது. அதனால், எதையும் யாரும் பேசிக் கொள்ளவில்லை.

ஸ்ரீ, வேலைக்கு சென்ற இந்த ஒரு வருடத்தில், நிறைய வீட்டுக்கு என பொருட்கள் வாங்கினான்.. அமர்ந்து உண்ண டேபிளில், வாஷிங் மெஷின், சோபாசெட்.. என வாங்கி போட்டான் வீட்டுக்கு. அத்தோடு அன்னைகள் இருவருக்கும் செல் போன் வாங்கினான். தண்டபாணி, இத்தனை வருடங்கள் சம்பாதித்து செய்ய முடியாததை, இவன் ஆறே மாதங்களிள் இட்டு நிரப்பினான். 

மதுவும், ஸ்ரீயை தேடினாள்.. அதிகம் ஸ்ரீ ஊர் வருவதில்லை. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வருவான்.. நான்கு நாட்கள் இருப்பான். இதனால் மதுவின் நேசம் அதிகமானது. எப்படியும் வாரத்திற்கு ஒருமுறை, தன் அன்னையின் செல்லிருந்து குட் மோர்னிங் செய்தி அனுப்புவாள்.. மது. அவனொரு ஸ்மைலி அனுப்பி விட்டு அமைதியாகி விடுவான். அதன்பின் எப்படி பேசுவது என தெரியாது. அவனாக, சித்ராவின் எண்ணிற்கு அழைக்க மாட்டான். இவளாக எப்படி தான் அழைப்பது என எண்ணி பேசாமல் கடந்தது இவளின் நாட்கள்.

எப்போதும் மதுவோடு ஷ்ரவன் தரணி இருவரும் இருப்பர். தரணி, மதுவோடு நன்றாக பேசுவான்.. எனவே, அவன் எப்போது தன் அண்ணன் போன் செய்தாலும் அதுபற்றி, மதுவோடு பேசுவான் “அண்ணன் கூப்பிட்டான் பெங்களூர்ல க்ளைமெட் சூப்பரா இருக்காம்.. நம்ம வீட்டுக்கு வாஷிங் மிஷின் வாங்குதாம் ஸ்ரீ” என எல்லாம் சொல்லுவான். ஸ்ரீயின் கனவுகள் அதிகமாகியது.

மீண்டும் ஒரு வருடம் சென்றது.

மூன்று மாதம் கழித்து, ஸ்ரீ வீடு வந்தான் இன்று. சனிக் கிழமை காலையில் வந்து சேர்ந்தான். மதுவிற்கு கல்லூரி விடுமுறை. தரணி கல்லூரி இரண்டாம் வருடம். அவனும் இஞ்சினியரிங். அவனுக்கும் விடுமுறை. ஷ்ரவன் பள்ளி படிப்பின் இறுதி வருடம். அவன் பள்ளி சென்றுவிட்டான். 

ஸ்ரீ, தன் மாமா கிளம்புவதற்கு ஏதுவாக அவரின் tvs5௦யை துடைத்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த தண்டபாணி “ஸ்ரீ நீ எதுக்கு இதல்லாம் செய்யற.. விடுப்பா..” என அவனை எழுப்பி நிறுத்தினார். மருமகன் சிரித்தான்.

தண்டபாணி வண்டி எடுக்க.. விஜயா வந்து “அண்ணா, இன்னிக்கு நான் லீவ்..” என்றார். அண்ணன் சிரித்தார் “மகனை பார்த்ததும் லீவ்வா.. ம்…” என கிண்டலாக சொல்லி கிளம்பி சென்றார்.

ஸ்ரீ, “ம்மா… உன்கிட்ட  பேசவேண்டும் இன்று விடுமுறை எடும்மா” என சொல்லி இருந்தான். எனவே அன்னை விடுமுறை எடுத்துவிட்டார் இன்று.

காலை உணவுக்கு என.. பூரி கிழங்கு செய்திருந்தனர் சித்ராவும் விஜயாவும். எனவே, பிள்ளைகள் மூவரும் அமர்ந்து உண்டனர். சித்ரா பரிமாற.. விஜயா அடுப்பின் அருகே நின்று பூரிகளை போட்டுக் கொண்டிருந்தார். 

உண்ணும் டேபிளில் சத்தம் இல்லை.. மதுவும்  தரணியும் எப்போதும்  பேசிக் கொண்டே உண்பர். ஸ்ரீ இருப்பதால்.. பேச்சு வரவில்லை மதுவிற்கு. தரணி எதேதோ பேசினான். ஆனால், மதுவின் கவனம் எல்லாம் ஸ்ரீயின் மீதுதான். மது, குனிந்துக் கொண்டே.. எதிரே இருந்த ஸ்ரீயை தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள்.. அவனின் உடைகள் மாறி இருக்கிறது இப்போதெல்லாம். முன்பெல்லாம், தன் தந்தையின் வேட்டிதான் அணிவான். இப்போது ட்ராக் பேண்ட்.. மேலே டீ ஷர்ட் அணிந்து கொஞ்சம் நிறம் கூடிய அமர்ந்திருந்தான் ஸ்ரீ. என்னமோ அவனின் சிகை பளபளவென.. ஃபேன் காற்றில் அசைய.. அதை தீண்டும் எண்ணம் வந்தது மதுவிற்கு.. தன் நாக்கை கடித்துக்கொண்டு.. ‘அய்யோ அம்மா இருக்காங்க..’ என சொல்லிக் கொண்டு தன் உணவை சுவைக்கத் தொடங்கினாள், பெண். 

சற்று நேரத்தில் மீண்டும் அவனிடம் சென்றது கவனம்.. அவனின் தட்டில் ஒரு பூரி.. கொஞ்சம் மசால் இருந்தது.. அதை, இரு விரல்களால் எடுத்து.. லவகமாக அவன் உண்ணும் அழகை பார்த்திருந்தாள், பெண். தரணி “ஏய், மது.. இன்னும் ரெண்டு பூரியை முடிக்கவேயில்லையா.. என்ன கனவா..” என்றான் சதாரனமானக் குரலில்.

இப்போது, சித்ரா அங்கே இல்லை. தரணி பேசியது ஸ்ரீ காதில் விழ.. இருவரையும் பார்த்தான், ஆராய்ச்சியாக. மதுவிற்கு, ஸ்ரீயின் பார்வையை சந்திக்க முடியவில்லை.. என்னமோ தன்னவனின்  பார்வையாய்.. உரிமையாய்  தன்னை பார்ப்பதாய், அவனின் பார்வை.. அவளை தாக்கியது. ஒருவழியாக அவனை நேருக்கு நேராக பார்க்க.. ஸ்ரீயின் பார்வை தரணியை முறைத்தது, இப்போது. அதில் மதுவிற்கு சிரிப்பு வர.. சிரித்தபடியே “வேணும் டா உனக்கு..”  என முனுமுனுத்தாள்.

இப்போது ஸ்ரீ “மது, எப்படி போகுது காலேஜ்.. இன்னமும் விளையாட்டும் சிரிப்புமாதான் இருக்கியா.. அடுத்த வருஷம் ப்பைனால் இயர்..” என்றான் கண்டிக்கும் குரலில்.

மது அதிர்ந்தாள் இந்த கேள்வியில். இதுவரை, அவன் மதுவிடம் இப்படி பேசவேமாட்டான்.. இன்றுதான் அருகில் அமர்ந்து உண்ணுகிறான்.. இல்லை, முன்னமே உண்டு சென்றிருப்பான். இல்லை, தாங்கள் உண்டபின்தான் உண்ணுவான். இன்று இப்படி அமர்ந்து உண்டு.. இயல்பாக கேள்வி கேட்கவும் மது “இல்ல அத்தான், அதெல்லாம் நல்லாத்தான் படிக்கிறேன்” என்றாள் வீம்பானக் குரலில். அவன் தன்னை பற்றி என்ன நினைத்திருக்கிறான்.. படிக்கவே மாட்டேன்னு நினைச்சிட்டான் போல..என தோன்ற உடனே பதில் சொன்னாள் பெண்.

ஸ்ரீ “காம்பஸ்ல செலக்ட் ஆகணும்.. அரியார் இருக்கா…” என்றான் மீண்டும்.

தன் அத்தானின் சாதாரன கேள்வியில்.. மதுவின் செல்லெல்லாம் புல்லரித்துப் போனது மது “ஹ.. அரியரா.. நோ.. நோ.. அப்படி எதுவும் இல்லை அத்தான். பாருங்க நானும் பெங்களூர்ல வேலைக்கு வருவேன்..” என்றாள், தன் அத்தானையே நேராக பார்த்து. இப்போது ஸ்ரீயும் மதுவின் பார்வையை நேராக சந்தித்தான்.. இரண்டு நொடிகள் அவளின் விழி வீச்சு அவனை ஸ்தம்பிக்க வைத்தது.. பின் முயன்று தன்னை மீட்டுக் கொண்டான் ஸ்ரீ.

மதுவிற்கு இந்த நொடிதான்.. அவளின் இத்தனை வருடங்களுக்கு கிடைத்த வரமாக இருந்தது. மீண்டும் அவளின் செல்லெல்லாம் புதுரத்தம் பாய.. முகம் முதல்முறை அத்தானின் உறைந்த பார்வையில் சிவக்க.. தன்னை மீட்பதற்கு தனக்குள்ளேயே போராடினாள் பெண்.

“அன்பே உன் புன்னகை கண்டு

எனக்காக தான் என்று..

இரவோடு நான் எறிவதும்..

பகலோடு நான் உறைவதும்..

நீ வாழும் அறைதனில் நின்று..

உன்வாசம் நாசியில் உண்டு..

நுரையீரல் பூ மலர்வதும்..

நோய் கொண்டு நான் அழுவதும்..

தித்திக்குதே… தித்திக்குதே..

தித்திக்குதே… தித்திக்குதே..”

 

Advertisement