Advertisement

மது, கேக் கட் செய்ய.. அவனை, அந்த காரிலிருந்து  தூக்கி வரவும் லேசாக அழ தொடங்கினான். மது அந்த பெரிய கார் போன்ற அமைப்பு கொண்ட கேக் காட்டி, சமாதானம் செய்தாள்.. அவனை.

சாம்க்கு, மெல்லிய  பேபி பிங் ஷர்ட்.. ப்ளாக்பான்ட்.. போன்ட்டிலிருந்து, அவனின் தோள்பட்டை வரை இருபக்கமும் பெல்ட் கொண்டு இணைத்தபடி அந்த உடை இருக்க.. அதற்கு ஏற்றார் போன்று.. ஒரு ப்ளாக் கேப்… போட்டுவிட்டிருந்தாள் மது, குழந்தைக்கு. அவன் நடக்கும் போதும்.. ஓடும்போதும்.. சாம் நடனமாடுவது போலவே தெரிந்தது, அழகாக. தரணி சாம்மின் எல்லா பாவங்களையும் புகைபடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் சாம்’மை பாடல் பாடி உற்சாகமாகக.. சாம் தலையாட்டி.. கிளாப் செய்ய தொடங்கினான் மலர்ந்து சிரித்து.. மது, சாம்மின் .. கேக் கட் செய்து முடித்ததும்.. முதல் பீஸ் எடுத்து  “ம்மா.. ஆ…” என்றானே பார்க்கலாம்.. மதுவிற்கு.. கண்கள் நிறைந்து போனது. குழந்தை அனிச்சையாக “ம்மா..” என்றான். மது அதில்தான் கரைந்தாள்.

மது, யாரையும் பார்க்காமல்.. தன்னை யாருக்கும் காட்டாமல்.. இயல்பு போல, அவனிடமிருந்து கேக் வாங்கிக் கொண்டாள்.. தானும் எடுத்து.. மகனுக்கு ஊட்டி.. முத்தம் வைக்க.. சாம் பற்கள் தெரிய சிரித்தான்.. கொஞ்சலாக. அவனின் கை விரல்கள் முழுவதும் கீரீம்.. அதனால், அன்னையிடம் சாயாமல் சிரித்தான்.

ஷிவாவும் இதனை பார்த்து சிரிக்க.. மூவரும் பற்கள் தெரிய சிரித்தபடி இருக்க.. அதை தனது போனில் படம் பிடித்து, அவர்களுக்கே  கொடுத்தான் தரணி.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், மதுவின் மனதில் தோன்றுவது.. ‘இவனை நான்தான் பெற்றேன்..’ எனதான் தோன்றும். 

“காற்றை போல நீ வந்தாயே..

சுவாசமாகி நீ நின்றாயே..

மார்பில் ஊரும் உயிரே…”

தாய்மை பெண்களுக்கே இயற்கையாக இருக்கும் என்பர்.. சரிதான். ஆனால், அந்த தாய்மையை ஏற்றுக் கொண்டு.. சேய் செய்யும் பிரதிபலனான சேய்மை இருக்கிறதே.. அந்த இடம்தான் பெண்ணின் தாய்மையை கௌரவிக்கும் இடம். 

சாம் அப்படிதான்.. “ம்மா…” மீறினால் “மது..” என்ற வார்த்தைகள்தான் அவன் அதிகம் சொல்லும் வார்த்தை. எதற்கும் “ம் தூ..” என்பான். மது சாக்லேட் கொடுக்கமாட்டேன் என மிரட்டினாலும்.. அதட்டினாலும்.. அழுதபடியே அவளிடம்தான் வருவான் சாம். மூன்று சக்கர சைக்கில் ஓட்டும் போதும் அப்படியே.. அவன் சரியாக ஓட்டிவிட்டால்.. “ம….. து…” என அழைத்துதான் பெருமிதமாக சிரிப்பான் குழந்தை. மது கைதட்டி.. அவனை பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவனுக்கு சிரிப்பு வரும்.. மது கண்களை லேசாக சுருக்கி ‘வேண்டாம்..’ என்றாலே.. மகன் அந்த பொருளிடமிருந்து தள்ளி வந்திடுவான்.. ஆக, சேய்மையை நிறைவாக காட்டி, அவளை தாயாக செய்துக் கொண்டிருந்தான் சேய்.

மாதங்கள் நான்கு கடந்தது.

சாம்மின் பெயர் இஷாந்த் என மாற்றப்பட்டு.. முறையாக தத்தெடுத்துக் கொண்டனர், மது ஷிவா தம்பதி. 

ஷ்ரவன், கார் ஓட்ட.. ஷிவா, ஷ்ரவனோடு முன்பக்கம் அமர்ந்திருக்க.. மது இஷாந்தை.. மடியில் வைத்துக் கொண்டு.. கட்டிபிடித்துக் கொண்டு வந்தாள். குழந்தையும்,  அமைதியாக வந்தான். மதுவிற்கு, ஷிவாவை விட.. சாம்தான் எல்லாம். அவளை தேடும் ஜீவன் அவன்தான் முதலில். இப்போது அன்னையாகவே வரித்துக் கொண்டு, இன்னும் ஜம்பமாய்.. அவளின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டே வந்தான் சாம்.

“வாழ்வு தொடங்குமிடம் நீதானே..

வானம் முடியுமிடம் நீதானே..”

மதியம் மது வீட்டில் உண்டுவிட்டு, ஷிவா காரெடுக்க மது சாம் என இவர்கள் மூவரும் மட்டும் வீடு வந்து சேர்ந்தனர்.

மது அமைதியாக இருந்தாள். கணவன் மனைவியான இருவருக்கும் நிறைவாக இருந்தது. அவர்கள் காத்திருந்த நாள் இது எனலாம். ஷிவா, மகனை உறங்க வைக்க.. அறைக்கு தூக்கி சென்றான்.  

மது, தன் அத்தைக்கு போன் செய்து.. விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம்.. அதற்கு மேலும் ஆனது, சாம் உறங்குவதற்கு.

ஷிவா, மகன் உறங்கியதும் வெளியே வந்தான். அவன் மதுவை தேட.. தேவதையாக அமர்ந்திருந்தாள்.. அவள், சோபாவில். 

மது, தான் கட்டிச் சென்ற புடவையை கூட மாற்றாமல் அமர்ந்திருந்தாள்.. அழகான பட்டர் க்ரேப்.. சாக்லேட் வண்ணமும் பிஸ்தா பச்சையும் கலந்த அழகான முந்தானை அவளின் தோள் வழி வழிந்து.. எல்லா அழகையும் தனக்குள் விழிங்கிக் கொண்டு காற்றில் ஆட.. கால்களை கீழே நீட்டிக் கொண்டு.. ஏகாந்தமாக.. போனை பார்த்துக் கொண்டு.. அமர்ந்திருந்தாள்.

ஷிவா, சின்ன சத்தமும் செய்யாமல் அவளருகில் வந்து அமர்ந்தான், ஷன நேரத்தில் அவளின் மடியில் படுத்துக் கொண்டான். 

மது “என்னங்க..” என்றாள் அதிர்ச்சியாக.

ஷிவா “என்ன மது.. அழகா இருக்க இன்னிக்கு” என்றான் ரகசியக் குரலில்..

மது “ம்.. நான் எப்போதும் அழகுதான்..” என்றாள். 

ஷிவா “கண்டிப்பா.. ஆனால் இப்போதான் என் கண்ணுக்கு தெரியற..” என அவளின் வயிற்றில் முகம் புதைக்க.. மது “ஹோ..” என நெளிந்தாள்.

ஷிவா “ப்ரியா.. மது… மது.. ப்ரியா.. “ என பலவாறாக அவளை அழைத்து பிதற்ற தொடங்கினான்.

மது, சிவந்து போனால்.. அவனின் அழைப்பில்.. அவனின் ஒவ்வொரு அழைப்பிற்கும்.. “ம்..” ‘ம்’கொட்டவும் செய்தாள்.

ஷிவா “தேங்க்ஸ் மது..” என அவளின் முகம் பார்க்க.. ஷிவாவின் கண்கள் கலங்கியது.

மது “என்ன.. என்ன ஷிவா, ஏன் என்னாச்சு” என்றாள். 

ஷிவா, அவளின் வலது கையை எடுத்து தனது தலையில் வைத்தான்.. அவளும் புரிந்தவள் போல இதமாக வருடத் தொடங்கினாள். ஷிவா  “மது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அதைவிட திருப்தியா.. நிம்மதியா இருக்கேன். எஸ்.. இதுதான் கரெக்ட். அப்போ என்னுடைய கருத்து எப்படி மதிக்க்படாமல் இருக்கலாம்.. நான் எப்படி தோற்பேன்.. இது என் வாழ்க்கை என எதையும் யோசிக்காமல், ‘நான் என்..’ இப்படியே யோசித்துதான்.. சாம்க்கு அம்மா இல்லாமல்.. ஒரு குடும்பமில்லாமல் செய்திட்டனோன்னு தோணும். என்னைவிட, அவன் பாவமில்ல மது. அதான் அப்படிதான் எப்போதும் தோன்றும். ஆனால், இப்போ.. நீ அவனுக்கும் எனக்கும் கிடைக்கனும்ன்னு இருக்கு.. இந்த அமைப்பை எங்களுக்கு நீதான் கொடுத்த தேங்க்ஸ்..” என்றான்.

மது அவனின் தலையை கோதியபடியே.. இருந்தாள்.. ஏதும் பேச தோன்றவில்லை போல. 

ஷிவா “என்ன டி.. சத்தமே இல்ல.. அமைதியாகவே இருக்க.. ஏதாவது சொல்லேன்..” என எழுந்தான்.

மது “என்ன சொல்லணும்.. சும்மா சும்மா, சாம் என் பையனில்லன்னு சொல்லிட்டே இருக்கீங்க” என்றாள்.

ஷிவா “ஐயோ, அப்படி இல்ல.. அவன் உன் பையன்தான்.. நான் எதோ சும்மா சொன்னேன்” என்றான்.

மது “ம்.. அப்படிதான் சொல்லணும் இனி” என்றாள் மிரட்டலாக.

ஷிவா “மது உனக்கு என்னை ஏன் பிடிச்சது” என்றான்.

மது முறைத்தாள் அவனை.

ஷிவா “சொல்லேன்.. அதெப்படி.. கையில் குழந்தையோடு இருக்கும் என்னை பிடிக்கும்.. நீ கூட அன்னிக்கு எதோ சொன்னியே.. என்னை மா..திரி.. தோற்று.. என்ன பிரேக்கப்பா..” என்றான் சின்ன குரலில் தனது சந்தேகத்தை கேட்டான். அவளுக்கு வருத்தமாக இருந்தால்.. வலியை பகிரட்டுமே என்தான் கேட்டான்.

மது, கீழே குனிந்துக் கொண்டாள், கணவனிடம் ஏதும் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு. அத்தோடு, அந்த வலி எல்லாம் இப்போது இல்லை.. அவளிடம். ஷிவா, அவளை அப்படி பார்த்துக் கொள்கிறான். அத்தோடு, சாம். சாம், அவளை நின்று எதையும் யோசிக்க விடுவதேயில்லையே.. அதனால்.. அந்த காயம்.. தழும்பு.. என ஏதுமில்லை அவள் மனதில். இப்போது, கணவன் தன்னை கேட்டதில்.. கொஞ்சம் கலக்கம் வந்தது.. லேசாக வருத்தம், அதனால் மது “இதென்ன.. கேள்வி, இன்னும் மூன்று மாதத்தில்.. நம்ம ப்ர்ஸ்ட் ஆன்வசரி வரபோகுது.. இதென்ன கேள்வி..” என்றாள் அதட்டலாக.

அதிலேயே அவளுக்கு, சொல்வதற்கு விருப்பமில்லா என ஷிவாவிற்கு புரிந்தது. ஒன்றும் அதை துருவாமல்..உன்னை புரிந்துக் கொள்கிறேன் எனும் விதமாக அவளையே பார்த்தான். அவள் தன்னை பார்க்கவிலையே என உணர்ந்து.. ஷிவா அவளின் முகத்தை ஒருவிரல் கொண்டு நிமிர்த்தினான்.

மதுவின் கண்கள் தாழ்ந்தே இருக்க.. மென்மையான குரலில் ஷிவா “என் ப்ரியாவின் ப்ரியத்தை.. காயப்படுத்திட்டனா?, விடு,  அது எனக்கான ப்ரியம். அதான், அவனுக்கு அது கிடைக்கல. ஆனால், நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை.. நிராகரிப்பு. ம்.. சத்தமில்லாமல் அவாயிட் பண்ணிட்டாங்கல்ல.” என்றான் ஆழமான குரலில்.

மது அவனை பார்க்காது தலையசைத்தாள் ஆம் என்பதாக.

ஷிவா “விட்டுடுவோம்.. ஓகே” என்றான் அப்படியே அவளின் முகத்தை நிமிர்த்தி பிடித்து பார்த்தபடி. தனக்கும் அவளுக்குமாக சொல்லிக் கொண்டான்.

ஷிவா “நீ கொடுக்கிற அன்பிற்கு.. என்னால் சரிக்கு சரி.. நேர் செய்ய முடியுமா தெரியாது.. ஆனால், இந்த ப்ரியம் முழுவதும் எனக்குதான்ன்னு சொந்தம் கொண்டாடுவேன்.. முடிந்தால்தான் திருப்பி தருவேன்..” வியபாரியாக.

மது, கணவனின் வார்த்தையில் கண்மூடி.. இதழ் மலர..  அவளின் இதழ்களை நெருங்கி “ம்ம்ம்ம…து..வுவுவு..” என அவளின் உதடுகளை உரசி.. தன் மூச்சுக் காற்றால் உயிர் தீண்டும் முத்தம் மிட தொடங்கினான், ஷிவா..

இருவருக்கும் ஒரே அலைவரிசை.. எங்கே தொடங்கியது என புரியாத தூரம் வந்துவிட்டனர் இணைந்தே.. இப்போது இளைபாறவும்.. சொந்தம் கொள்ளவும்.. ஒருவருக்குள் ஒருவர்.. தொலைந்து போகவும்.. காலம் கைநீட்டி அழைக்க.. ஷிவா மதுவை கைகளில் அள்ளிக் கொண்டு.. மறு அறைக்கு வந்தான்.

அவளின் கணவன், அவளிற்கு மட்டும் கேட்க்கும் குரலில் “உன்னை நிறையநாள் தேடினேன்.. நானாக உன்கிட்ட வர தயக்கம்.. உன்னை காக்க வைக்கிறனோன்னு தோணும்.. க்கும்.. நீ.. அஹ.. சாரி டி” என்றான். அவளை இறக்கவிட்டு இருக கட்டிக் கொண்டு.

மதுவின் மனதும் உடலும் வெட்கத்தில்.. தடதடக்க.. அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள் பெண், அவன் முகம் பார்க்காமல்…

ஷிவா  “பேசுடி..” என்றான்.

மது “ப்ளீஸ்..” என்றாள்.. நாணங்கள் சிந்தி சிதற.. 

ஷிவா, அவளை சிந்தாமல் சிதறாமல் சேர்த்தணைத்துக் கொண்டான். 

“அறியாத புதுவாசம்

அகமெங்கும் இனி வீசும்..

அதில்தானே கரைந்திடும்..

நம் வாழ்வின் வனவாசம்…

கால் கொஞ்சம்..

காற்றுக் கொஞ்சம்.. 

சேர்த்துக் கொண்டு..

செல்லும் நேரம்.. ”

Advertisement