Advertisement

மதுர ப்ரியம்!..

25

இரவு ஷிவாவிடமிருந்து செய்தி வந்திருந்தது ‘கிளம்பிவிட்டேன்’ என.. மது மனதுக்குள் ‘போகும் போது சொல்லல, இப்போ எதுக்கு.. ஆர்த்தி கரைச்சு வைக்கனுமாமா..’ என முனகிக் கொண்டாள் தனக்குள். 

ஆனால், மனம் இதம் கொண்டது.. முதல்முறை என்னை கருத்தில் கொண்டு… செய்தினுப்புகிறான்.. என இதமாக உணர்ந்தாள். ஆனால், அந்த இதத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை.. நான் அவனை பயப்படுத்துகிறேன்.. வளைத்துவிட்டேன்.. ப்பா.. என்னென்னன சொன்னான், இப்போது எதற்கு செய்தி. ஆமாம், எப்படி இந்த வரவேற்புக்கு ஒத்துக்கொண்டார்.. என யோசனை ஓடியது அவளுள்.

சாம் மது இருவரும், உண்டு முடித்து.. தங்கள் வீட்டிலிருந்து தரணியோடு வந்து சேர்ந்தனர் ப்ளாட்டிற்கு, சாம்’க்கு மேலுக்கு குளிக்க வைத்து.. இரவு உடை மாற்றி.. என மது குழந்தையோடு கவனமாக இருந்தாள்.

சாம் “ம்.. வு.. ப்பா..” என போனை காட்டி காட்டி சொல்லிக் கொண்டிருந்தான். மது சிரித்துக் கொண்டே “வந்திடுவாங்க.. நீ தூங்கு நைட் வந்திடுவாங்க..” என அவனிடம் சொல்லி.. உறங்க வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

சாம் கொஞ்சம் சிணுங்கினான்.. மது “கதை சொல்றேன்.. நிலா கதை சொல்றேன்..” எனத் தொடங்கி கதை சொல்லத் தொடங்கினாள்.

இருவரும் உறங்கிவிட்டனர்.

ஷிவா பனிரெண்டு மணிக்கு மேல் வந்து சேர்ந்தான் வீட்டுக்கு. தன்னிடமிருந்த சாவிக் கொண்டு கதவை திறக்க.. கதவு திறக்கவில்லை ‘தாள் போட்டிருக்கிறாள் போல’ என எண்ணிக் கொண்டே காலிங் பெல் அடித்து மதுவை எழுப்பினான்.

மது வந்து கதவை திருந்தாள்.. ஷிவா அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ட்ராலி.. லாப்டாப் பாக் சகிதம் உள்ளே வந்தான். மது உண்டானா என கேட்க வேண்டும்.. அவனுக்கு என நான்கு சப்பாத்தி எடுத்து வந்திருந்தாள். இவள் கேட்கலாமா வேண்டாமா என யோசித்தபடியே தான் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு செல்ல.. அவளிற்கு முன் ஷிவா அங்கே சென்றான்.

மது, அப்படியே நின்றுக் கொண்டாள். ஹால் சோபாவை நோக்கி வந்தாள்..  சட்டென தான் அந்நியமானது போல உணர்ந்தாள்.. அவனை மனதால் மிகவும் தேடுகிறாள் பெண்.. வந்தவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. சின்ன புன்னகை கூட இல்லாமல், உள்ளே வந்தவன்.. நேராக மகனிடம் செல்லவும்.. நேசம் கொண்டவளுக்கு.. கண்கள் கரித்தது. அப்படியே சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள். குழந்தைதான் முக்கியம் என புரிகிறது.. மதுவிற்கு.. ஆனால், கணவனின் பாராமுகம் என்னமோ செய்கிறது அவளை..

ஷிவா, மகனை ஆசையாக அலுங்காமல் கையில் ஏந்திக் கொண்டான்.. பிறந்ததிலிருந்து, மகனை பிரிந்ததேயில்லை.. எல்லாம் அவன்தான் பார்த்து பார்த்து செய்தான்.. தான் என்ன கஷ்ட்ட்பட்டாலும்.. மகனை கவனித்துக் கொண்டான் பொறுப்பாக. முதல்முறை பிரிந்ததில்.. ஷிவா எதையும் கவனிக்காமல்.. நேரே தன் கைகளை கழுவிக் கொண்டு.. மகனை அள்ளி.. நோகாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். வேறு சிந்தனைகளே இல்லை ஒருபத்து நிமிடம். 

சாம் தந்தையின் அணைப்பில் எழுந்துக் கொண்டு.. விழித்து பார்த்து.. தயங்கி.. அழுது.. சிரிக்கத் தொடங்கி.. அடிக்க தொடங்கினான். இருவரும் சற்று நேரம் எல்லாம் மறந்து விளையாடி.. அழுது.. சாம் “ம்..தூ..” என கேட்கத் தொடங்க இருவரும் வெளியே வந்தனர்.

மது குஷனால் முகத்தை மறைத்துக் கொண்டு.. படுத்திருந்தாள். ஷிவா, குழந்தையை அவளின் முன் கீழே இறக்கிவிட்டான்.. சாம் வாய்கொள்ள புன்னகையோடு.. சிரித்தபடியே மது வைத்திருந்த குஷனை தள்ளி “ம்.. ஊ… ப்பா.. ப்பா..” என அழுத்தி அழுத்தி சொல்லி எழுப்பிவிட்டது.

மது குழந்தையை தட்ட முடியாமல் “என்ன டா.. என்ன..” என விளையாட்டாக அவனிடம் கடிந்துக் கொண்டு எழுந்துக் கொண்டாள்.

சாம் தன் கையை தந்தையை நோக்கி காட்டி “ப்பா..” என சொல்லியவன் தன் தந்தையின் கால்களை கட்டிக்கொண்டான்.

மதுவிற்கும் ஷிவாவிற்கும் என்ன சொல்லுவது என தெரியவில்லை.. இருவரும் தாங்கள் பெற்றோர்.. என நொடியில் உணர்த்தினான்.. சாம்.

ஷிவா, மகன் மேலிருந்து பார்வையை எடுத்து.. மதுவின் மீது வைத்தான்.. அவளின் முகம்.. சாம்’மை பார்த்துக் கொண்டு சிரித்தபடியே இருந்தது.. அவளின் சிரிப்பில் அவனால் கலக்க முடியவில்லை.. நெருடியது அந்த சிரிப்பு அவனுக்கு.. என் சுமையை இவளிடம் இறக்கவிட்டேனோ.. நானாக எங்கே இறக்கினேன்.. அவளாக எடுத்துக் கொண்டாள்.. ஏன். எப்படி, அவளைப்போல.. இவளை, முழுமனதாக ஏற்பேன்..முடியுமா என்னால்’ என எண்ணம் ஓட.. 

சாம் மதுவின் மேல் ஏறி.. அமர்ந்துக் கொண்டான், அவளின் மேல் சாய்ந்துக் கொண்டான்.. ஷிவா இதை பார்த்துவிட்டு.. உடைமாற்ற சென்றான்.

மது, சாம்’மை தன் நெஞ்சின் மேல் சாய்த்துக் கொண்டு எதோ பேசிக் கொண்டிருந்தாள். 

ஷிவா வெளியே வந்து.. இவர்களை பார்த்தபடியே டேபிள் சென்றான்.. அங்கே இருந்த பாத்திரங்களை திறந்து பார்க்க.. சப்பாத்தி இருந்தது.. மதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அமர்ந்து உண்டான்.

சாம், விளையாட தொடங்கிவிட்டான்.. அங்குமிங்கும் நடந்தான்.. ஓடினான்.. தன் தந்தையிடம் புதிதாக வாங்கிய விளையாட்டு பொருட்களை காட்டினான்.. வீடு அந்த இரவிலும் உயிர்புடன் இருந்தது.

ஷிவா விளையாட்டுவாக்கில் மகனிடம் “போங்க.. நீயும் மதுவும்.. உள்ள போய் தூங்குங்க” என்றான்.

மது உள்ளே சென்று.. அன்று போல விரிப்பு போர்வை எடுத்து வந்து.. ஹாலில் படுத்துக்கொண்டாள்.. ”சாம்.. வா..” என மகனையும் அழைத்து  தன்னோடு வைத்துக் கொண்டாள்.

ஷிவாவும் ஏதும் பேசாமல் அவர்களோடே தனியாக விரிப்பு விரித்து படுத்துக்கொண்டான். ஷிவாவின் மனது முழுவதும் பாரமேறிக் கொண்டது.. தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான்.. இப்படிதான்.. என புரிந்ததும்.. நிம்மதி. ஆனால், அதை எப்படி எடுத்துக் கொண்டு போவது.. எந்த சிக்கலும் இல்லாமல்.. என் கடந்த காலம்.. அவளிடம் வெளிபடாமல் எப்படி அவளை நெருங்குவது.. என யோசனை. உறக்கம்,  அசதியில்தான் வந்து சேர்ந்தது அவனிடம்.

மறுநாள் காலையில் தாமதமாகதான் எழுந்தனர் மூவரும்.

இன்று கிளம்ப வேண்டும் சேலத்திற்கு. மதிய உணவு முடித்து மதுவின் குடும்பம் தன் சொந்தங்களோடு.. வேன் எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர். ஷிவா சாம் மது மூவர் மட்டும் தனியாக காரில் வரட்டும்.. அப்போதாவது அவர்கள் பழக நேரம் கிடைக்கும் என ஸ்ரீ சொல்லி இருந்தான். அதன்படி நடந்துக் கொண்டிருந்தது எல்லாம்.

மது, காலை உணவுக்கு அங்கே வருவதாக சொல்லி இருந்தாள். எனவே, எழுந்து குளித்து வந்தாள். பாலெடுத்து வைத்து.. காபி கலக்கும் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

அந்த சத்தத்தில் ஷிவாவும் சாம்’மும் எழுந்துக் கொண்டனர்.

ஷிவா, சாம்மோடு பாத்ரூம் சென்றான். 

மது எல்லாம் தயாராக வைத்திருந்தாள்.. சாம் பால் குடிக்கும் போதே, மது “சாம்.. பாட்டி வீட்டுக்கு போலாமா.. அவங்க எல்லாம் சேலம் தாத்தா வீட்டுக்கு.. கிளம்பறாங்க… நாம எப்போ போறோம்.. எப்படி போறோம்.. கேளு” என்றாள்,கணவனை கடைக்கண்ணால் பார்த்தபடி.. மகனிடம் கேட்டாள்.

ஷிவா கையில் காபியோடு சேரில் அமர்ந்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான்.. இவளின் பேச்சை.தன்னைத்தான் சொல்லுகிறாள் கேட்க்கிராலேன தெரிகிறது.. மனது ஒருபக்கம் மீண்டும் சோக கீதம் பாட.. ஆனால், நிகழ்காலம் அவனை உயிர்பிக்க, அவனே அந்த சோக கீதத்தை கேட்க்காமல் “ஏன், என்கிட்ட கேட்க மாட்டாங்களா உங்க ம்..தூ..” என்றான், இவனும் மகனிடம்.

மது அமைதியாக இருந்தாள்.. ஷிவா “சாம், எப்படி போகணுமாம்.. சொல்ல சொல்லு..” என்றான் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து.

மது “நான் எதுக்கு சாம் குட்டி, சொல்லணும்..” என்றாள் லேசாக சிரித்துக் கொண்டு தொடர்ந்து “என்னை பார்த்தால் பயமா இருக்காமே.. நான்தான் வ..ளைச்..சிட்டனாமே போடா.. நான் சொல்லமாட்டேன்.” என்றாள் குரல்கம்ம. பின் அவளே தொடர்ந்து “என்னமோ சொய்யட்டும். எ..னக்கு.. இப்போ.. கொஞ்சம் டென்ஷனா இருக்கு.. எப்படியோ செய்யட்டும்.. நாம போகலாமா.. தாத்தா வீட்டுக்கு. உங்க அப்பா வராரா கேளு.. இல்லை, ஆட்டோல போலாம்“ என்றாள்.. மகனை எழுப்பிவிட்டு, தானும் எழுந்துக் கொண்டு. 

ஷிவாவிற்கு இந்த கோவம்.. உரையாடல்.. அழுகை.. அவளின் அதிகாரமான அன்பு.. எல்லாம் பிடித்திருக்கிறது.. ஆனால், அதனை ரசிக்க பயம்.. எப்போதும் போல. என்னை என்ன சொல்லுவார்கள்.. நாளை வருபவர்கள் எல்லோருக்கும் என் வாழ்க்கை தெரிந்திருக்கும்.. எப்படி மகனோடு.. அவளின் அன்பையும்.. நேசத்தையும் எப்படி தாங்கி நிற்க போகிறேன்.. என மீண்டும் சுருங்கிக் கொண்டான் தனக்குள்.

ஷிவா “இரு.. அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.

ஷிவா பேசி முடிக்கவும், மது சாம் இருவரும் கிளம்பி இருந்தனர். அதை பார்த்ததும் ஷிவாவின் முகம் புன்னகைக்கு தாவியது.. எதோ ஓட்டபந்தயத்தில் நிற்பவள் போல.. தயாராக நின்றாள்.. ஷிவா “சாம், அப்பா கிளம்ப வேண்டாமா..” என்றான், அவளை பார்த்துக் கொண்டே.. புன்னகையை அடக்கிய குரலில்.

சாம் கையில் வீட்டின் கீயை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். தந்தை கேட்டதும் தனது பச்சை விழியை விரித்து பார்த்தான்.. பின் சாவியிடம் விளையாட தொடங்கினான்.

மது, அமர்ந்துக் கொண்டாள்.

ஷிவா குளித்து கிளம்பினான்.. அரை மணிநேரம் எடுத்தது.

மூவரும்.. மதுவின் பிறந்த வீடு நோக்கி கிளம்பினர். அங்கு எல்லோரும் இருந்தனர்.. வித்யாவின் புகுந்த வீட்டு சொந்தம்.. சித்ராவின் பிறந்த வீட்டு சொந்தம்.. பங்காளி வகை உறவுகள் என முப்பது நாற்பது நபர்கள் இருந்தனர். 

ஷிவா மது சாம் என மூவரும் வந்தனர்.. வீட்டினுள். ஆண்களில் பெரியவர்கள் வாயிலில் அமர்ந்திருக்க மது “மாமா எப்படீயிருக்கீங்க, அண்ணா வாங்க, பெரியப்பா எப்படியருக்கார்..” என்றவள் ஷிவாவிடம் திரும்பி அறிமுகம் செய்தாள். ஷிவாவின் மேல் பதியும் ஆண்களின் பார்வை.. மரியாதையாகத்தான் இருந்தது.. ஆனால், ஆராய்ந்தது. 

தண்டபாணி வந்து சேர்ந்தார் இப்போது ”மாப்பிள்ளை வாங்க.. மது உள்ளே வாம்மா..” என அழைத்துக் கொண்டு சென்றார். 

வீட்டினுள் பெண்கள் இருக்க.. மணமக்கள் உள்ளே வந்ததும் ஒரு அமைதி சட்டென.. யாரின் முகமும் மலர்ச்சியை காட்டவில்லை.. எல்லோரின் பார்வையும் ஷிவாவை ஆராய்ந்தது மீண்டும்.

ஷிவா நேவி ப்ளூநிற செக்குடு ஷர்ட்.. ஜீன் அணிந்திருந்தான்.. நல்ல உயரம்தான் அவன்.. அடர்சிகை.. அதை கோதிய கைகள்.. இறுகிய முகபாவம்.. பார்த்தும் நம்பும் படி அமெரிக்கன் ரிட்டனாகதான் அவனின் நிறம்.. இருந்தது. பார்த்த உறவு பெண்மணிகளின் கண்கள் கொஞ்சம் வியப்பில் விரிந்து.. பின் பொறாமையில் பொரிந்தது. சின்ன குரலில்.. ஒரு உறவு பெண்மணி  ‘ம்.. பெரும்புடி போல, அதான் சத்தமில்லாமல் கல்யாணம் நடந்திடுச்சி.. பாரன்.. அந்த பையனையும்.. அவரையும்.. ’ என்று கிசுகிசுத்தார். மற்ற இரண்டு பெண்மணிகளும் ‘க்கும்.. இருக்கும்.. இருக்கும்.. வரவேற்பு கூட அங்கதான் பாரேன்.. இவங்களுக்கு செலவே இல்ல..’  என்றார். மீண்டும் எதோ பேச்சு அவர்களுக்குள். இப்போது தரணி, அந்த  கூட்டத்தில் நுழைந்து.. பார்சல் எதோ எடுத்து வர.. இவர்களின் பேச்சு காதில் விழுந்தது. ‘தேவையா இது இவளுக்கு என’ எண்ணிக் கொண்டே சென்றான் அவன்.

Advertisement