Advertisement

தரணி “ஸ்ரீ கூப்பிட்டு சொன்னான்.. நீ வந்திருக்கேன்னு.. எங்க உன் புருஷன்.. அவ்வளோ பிசியா அவரு.. தாலி கட்டின கையோட வேலைக்கு போயிட்டார்.” என்றான்.

மது “சாம்..” என அழைத்தாள் மகனை “மாமாவை அடி..” என செய்கை செய்தாள்.

சாம் முதலில் தரணியை பார்த்தான்.. அவனின் உயரமும்.. முகம் அவனை பயப்படுத்தியது போல.. அப்படியே நின்றான் சாம். 

மது மீண்டும் “அச்சு.. அவனை, ராஸ்கல்.. அச்சு” என சொல்லிக் கொடுக்க.. சாம் தைரியமாக தரணியின் தோளில் அடித்து விட்டு நிற்க. மது “ஹேய் சூப்பர்.. சாம்குட்டி.. சூப்பர்” என சொல்ல தானும் குஷியாகி விளையாட திரும்பினான்.

தரணி சிரித்தான் குழந்தையை பார்த்து.. மது “போடா.. அவனை வண்டியில் எங்காவது கூட்டிபோட..” என்றாள்.

தரணி “எப்படி டி.. என்னையே அடிக்க வைப்ப.. நானே கூட்டி போகனுமா..” என்றான்.

மது “அப்புறம் என் புருஷனை தப்பா பேசுவியா..” என்றாள்.

தரணி அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் அவளை. 

மது “என்ன” என்றாள்.

தரணி “இப்போவும் அப்படியே உன்னை கன்னம் கன்னமா அடிச்சி.. ஏன் அவனை போய் கல்யாணம் செய்துகிட்ட.. இப்போ பார், தனியா நிக்கற.. என கத்தனும் போல கோவமா வருது” என்றான்.

மது “கூல் டா… வண்டியில் ரௌண்ட்ஸ் போலாம்..” என்றாள்.

தரணி வெடுக்கென எழுந்தான் “நீ வராத.. சாம், வா.. சாக்லேட் வாங்க போகலாம்” என்றான், என்னமோ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்ற குரலில் பேசினான் தரணி.

சாம், மதுவை தன் ஆலிவ் விழியால் பார்த்தான். மது பூரித்து போனால்.. என்னமோ எதுவென்றாலும் என்னையும் தேடுவதற்கு ஒரு ஜீவன் என பூரித்து போனாள் பெறாத அன்னை.

மது “டேய், அவனுக்கு சாக்லேட் எல்லாம் தெரியாது டா, தரணி மாமா கூட டாட்டா போறியா.. வண்டில போலாம்..” என ஆசை காட்டினாள். 

சாம், மதுவை விட்டு நகரவில்லை.. மாட்டேன் என தலையை ஆட்டினான்.

மது “போடா அவன் உன் கூடெல்லாம் வரமாட்டானாம்.. போ.. போ..” என சொல்லி சிரித்தாள்.

தரணி மதுவை அப்படியே பார்த்திருந்தான்.

மது, மனதுள் இவன் வேற.. வெட்டவா குத்த்வான்னு இன்னமும் கோவப்பட்டுகிட்டு.. என முனகியவள், சத்தமாக  தரணியிடம் “இன்னும் கொஞ்ச நாள் ஆகணும் போல.. பழகனுமில்லலையில்ல” என்றாள்.

தரணி “சரி நான் வெளியே போயிட்டு வரேன்” என சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

மது வேலையை முடித்து மேலே வந்தாள்.

பெரியவர்கள் எல்லோரும் அதற்குள்.. விருந்துக்கு என நாள் பார்த்து இருந்தனர், எங்கு வைப்பது.. என பேசிக்கொண்டிருந்தனர். விடுமுறை தினமாக பார்த்திருந்தனர். கணேசன் “நாங்க வரவேற்பு மாதிரி செய்திடுறோம். நீங்க எல்லோரும் அங்கே வந்திடுங்க..” என்றார்.

தண்டபாணி வரவேற்பு என்ற வார்த்தையில் கொஞ்சம் யோசித்தார்.. மாப்பிள்ளையிடம் எப்படி நாம் சொன்னாலும் ஓத்துக் கொள்ளமாட்டார். அவர்கள் வரவேற்பு போல செய்தால்.. மாப்பிள்ளையை ஒத்துக் கொள்ள வைப்பது அவர் பாடு.. செலவு பாதியாக பிரித்துக் கொள்வோம்.. என யோசித்தார்.. தண்டபாணி “சரிங்க, மாப்பிள்ளைகிட்ட பேசுங்க..” என்றார்.

மது சரியாக அப்போது மேலே வரவும்.. அவளை பேச சொல்லினர். மது “இதெல்லாம் பெரியவங்கதான் பேசணும்.. அப்பா நீங்க பேசுங்க” என்று விட்டாள். ‘சரிதான்.. ஆனால், மாப்பிள்ளை பேசணுமே’ என எண்ணிக் கொண்டே தண்டபானி, ஷிவாவிற்கு அழைத்து பேசினார் அப்போதே.

எப்படியோ எல்லோரும் அடித்து பேசி.. சேலத்தில், சின்ன ஹோட்டலில் வரவேற்பு.. சும்மா சின்ன அளவில்.. இருநூறு பத்திரிக்கை மட்டும் அடித்து.. விருந்தினர்.. நெருங்கிய நட்புக்கு மட்டும் அழைப்பு.. என பேசி முடித்து, ஷிவாவிடம் “என்னமோ செய்ங்க..” என்ற வார்த்தையை வாங்கிவிட்டனர்.

இரண்டு அன்னைகளுக்கும் சந்தோஷம்.. என்னமோ திருட்டு கல்யாணம்  போல.. கோவலில் வைத்து தாலி கட்டி, என்ன இது.. என எண்ணிக் கொண்டே இருந்தவர்களுக்கு.. ஷிவா சொல்லிய பதில் திருப்தியை தர.. அவ்வளவுதான்.. அடுத்த பத்து நிமிடத்தில்.. பல லட்சங்களுக்கு திட்டம் தீட்டி.. பேசி.. எப்படி செய்வது.. புடவை, நகை.. சீர்.. என எல்லாம் பேச தொடங்கிவிட்டனர்.

பொதுவாகத்தான் தொடங்கியது பேச்சு வார்த்தை.. இரண்டு வார்த்தில்.. வரும் விடுமுறை தினமாக பார்த்திருந்தனர். ஆனால், அது இவ்வளவு தூரம் சென்று நிற்கும் என தெரியவில்லை அவர்களுக்கு.. தங்கள் பிள்ளைகளுக்கு அவ்வளவு செய்து பார்க்க ஆசை கொண்டிருந்தனர் போல.

எல்லாம் பேசி முடித்து மதுவின் குடும்பம் வீடு வர.. பதினோரு மணிக்கு மேல் ஆனது. சாம் உறங்கிவிட்டான்.

மறுநாள் ஸ்ரீ அபர்ணா பெங்களூர் கிளம்பினர். மது அபர்ணாவின் கையை பற்றிக் கொண்டு “ரொம்ப நன்றி..” என்றாள்.

ஸ்ரீ “நன்றியை நாங்க ஏற்றுக்கனும்ன்னா.. எங்க முயற்சியின் விளைவை கண்களால் பார்த்துதான் ஏற்போம்.. என்ன அப்பு.. சீக்கிரம் அங்க வரணும் ரெண்டுபேரும் சேர்ந்து..” என சொல்லி விடைபெற்று கிளம்பினர்.

ஷிவா, அந்த வாரம் முழுவதும் சென்னை வரவில்லை. மதுவும் அவன் முகத்தை போனில் கூட பார்க்கவில்லை. சாம், பகலில்தான் தந்தையை தேடுவது.. ஆனால், அதற்கும் தேவை இல்லாமல்.. எல்லோரும் கடைக்கு செல்லுவது.. மதுவின் வீட்டிற்கு செல்லுவது என அவனை பிசியாக வைத்திருந்தனர். அதனால், இரவில்தான், தினமும் மகனோடு ஷிவா பேசுவான். மகனும் அன்று போல அழுவதில்லை.. விளையாடிபடியே பேசுவான். 

அடுத்தடுத்த நாட்கள் வேகமாக சென்றது.. ஷிவா, தன்னுடன் வரவில்லை என்ற எண்ணம் தவிர, மற்ற குறை ஏதுமில்லாமல்.. மதுவிற்கு பிடித்தது போல எல்லாம் நடந்தது. புடவை.. மேக்கப்.. மேடை அலங்காரம்.. எல்லாம் சிறப்பாக ஏற்பாடு செய்துக் கொண்டாள்.

ஷிவாவிற்கு, மகனோடான இந்த பிரிவு.. முதலில் ஒரு பெருமூச்சை தந்தது.. ‘ஹாப்பாடா… இனி சாப்பாடு ஊட்டனும்.. தூங்க வைக்கணும்.. டயப்பர் மாத்தனும் என இல்லை..’ எனதான் எண்ணினான். வேலை உணவு உறக்கம் என முதலில் சுதந்திரத்தை அனுபவித்தான். அதனால், மது நிறைய நேரம் அவனின் நினைவில் வந்தாள். 

ஷிவா, தினமும் இரவில் மகனோடு பேசும் போது அவளின் முகம் பார்க்க.. என் வீட்டில் அவள் சந்தோஷமாக இருக்கிறாளா.. என அவள் கண்கள் பார்க்க விழைந்தான்.

அந்தோ பரிதாபம்.. மது, மருந்துக்கும் தன் முகத்தை காட்டவில்லை அவனுக்கு. ஷிவாவும் வீடியோ காலில் பேசும் போது எப்படியும் மகனை உறங்க வைக்கும் நேரமாகதான் இருக்கும்.. எனவே, மது அறைக்கு வந்திடுவாள்.. போனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு.. சாம்’மை, அதற்கு எதிரில் இருக்குமாறு பார்த்துக் கொள்வாள். மகன் பேசியபடியே இருக்க.. இரவு அவனுக்கு பால் கொடுப்பது.. பழம் ஏதேனும் ஊட்டுவது.. என இவள் நின்றுக் கொண்டு செய்வாள் குழந்தைக்கு.

ஷிவா அப்போதும் அவளை பேச வைக்க.. அவளை பார்க்க வைக்க “பழ தோலை அங்கே வைக்காதே.. கொசு வரும்.. பால் அவன் குடித்துவிட்டால்.. சிப்பரை கிட்சனில் வை..” என அவளை கைட் செய்துக் கொண்டே இருப்பான்.. அப்போதும் அவள்.. வாய் திறக்கவே மாட்டாள்.. அவன் சொன்னதையும் கேட்கமாட்டாள். சாம் உறங்கும் நிலை என்று தெரிந்தால்.. மது “பை” சொல்லி கூட, ஷிவாவின் அழைப்பை துண்டிக்கமாட்டாள்.. அப்படியே கட்` செய்திடுவாள்.. மகராசி. பாவம் ஷிவா.. இன்னும் கோவப்படுவான்.. ஆனால், தான் பேசிய பேச்சும் நினைவிற்கு வரும் அவனுக்கு. ‘ம்.. அவள் அந்த அறையில் இருக்கிறாள்.. மகனை பார்த்துக் கொள்கிறாள்.. என்பதினால் ஏற்படும் ஒரு உணர்வில், நான் அவளிடம் பேசுகிறேன்.. ஆனால், எனக்கு அவளிடம் தனிப்பட்ட நேசம் வரவில்லை..’ என தனக்கு தானே சொல்லி, அந்த இறுகிய உதடுகள் கொஞ்சம் இளகி புன்னகைக்கும் படி.. தன்னை தானே தேற்றிக் கொள்வான், மனம் புண்பட்ட கிறுக்கன்.

ஆகிற்று நாட்கள். நாளை இரவு சென்னை வரவேண்டும் அவன். நேற்றே அவனின் அன்னை தந்தையும் சேலம் கிளம்பிச் சென்றுவிட்டனர். 

இன்று மகனிடம் பேசி முடித்தான்.. எப்போதும் போல.. அவள் முகம் கட்டாமல் வைத்துவிட்டாள். இவனும் கையில் கோப்பையுடம் அமர்ந்து விட்டான்.. தினமும் சொல்லிக் கொள்வான்.. ‘குடிக்காத.. நிறுத்திடு.. நிறுத்திடு’ என. ஆனால், உறக்கம் வருவதில்லை. இப்போதும் அவனுக்கு உறக்கம் வருவதில்லை.. எதோ குற்றயுணர்வு.. அப்போதும் வந்தது.. ஆனால், அதை மீறி.. அந்த அவளை தீண்டியவனின் மனம்.. இப்போது தவித்து போனது.. இந்த உணர்வில் சிக்கிக் கொண்டு.

அவளின் தூய்மை.. அவளின் மௌனம்.. அவளின் பிடிவாதம்.. அவளின் அக்கறை.. தன் மகன் மீதான அவளின் கரிசனத்தில், அவனின் குற்றயுணர்வு அதிகமாகிக் கொண்டே போகிறது.. அதை கடந்து அவனால் உறங்க முடிவதில்லை.. திணறுகிறான். 

“கேட்டதுமே மறக்காத

மெல்லிசையும் அவள்தானே..

அதன் பல்லவி சரணம் புரிந்தும் 

மௌனத்தில் இருந்தேன்..”

Advertisement