Advertisement

மதுர ப்ரியம்!..

21

ஸ்ரீக்கு, இரவில் நெடு நேரம் உறக்கம் வரவில்லை. மது தன்னிடம் சொல்லி இருக்கிறாள்.. அவள் எங்களை நம்பி சொல்லிருக்கிறாள்.. என்ன வேண்டும் கேள் என நான்தான் சொன்னேன், அதான் கேட்டாள் போல.. ஆனால், அவளின் மனம் ஏன் இப்படி சென்றது.. அதுவும் ஒரு குழந்தையின் தகப்பனை.. இது சரி வருமா? மாமா அத்தை என் அம்மா எப்படி ஒப்புவர்.. உண்மையாகவே  இவளுக்கு, அவரை பிடித்திருக்குமா? இரக்கம் கொண்டு சொல்லுகிறாளா.. என யோசனையோட சென்றது அந்த இரவு.

அதிகாலையில் நேரமாக எழுந்து கொண்டான் ஸ்ரீ. பெரியவர்கள் யாரும் எழக்கூட இல்லை.. கிளம்பி வாக்கிங் சென்றுவிட்டான். இவள் ஏதேனும் கோவத்தில்.. அவன் மேல்கொண்ட இரக்கத்தில் சொல்லுகிறாளா.. எப்படி, மதுவிற்கு தோன்றி இருக்கும்.. எனதான் அவனின்  சிந்தனை எல்லாம்.

பெரியவர்கள் எழுந்து வேலையை தொடங்கினர். அந்த சத்தத்தில் மது எழுந்துக் கொண்டாள். தரணி எழுந்தான்.. இவளை முறைத்தபடியே இருந்தான். மது அதை எல்லாம் கண்டுக் கொள்ளவில்லை.. காலை உணவை அபர்ணாவின் அன்னை, மற்றும் சித்ரா பார்க்க தொடங்கினர்.

மது, குளித்து பால்கனியில் வந்து அமர்ந்துக் கொண்டாள். ஸ்ரீ விடுமுறை எடுத்திருந்தான், எனவே, நண்பர்களோடு பேசியபடியே நின்றான்.. தாமதமாகத்தான் வீடு வந்தான்.

தரணி  டிவி முன் அமர்ந்திருந்தான். ஷ்ரவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். இளையவர்கள் என்னமோ போல இருப்பது.. சித்ராவிற்கும் வித்யாவிற்கும் புரிய.. அவர்கள் மேல் ஒருகண் வைத்திருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் இரவுதான் ட்ரைன்.

அபர்ணா எழுந்து வந்தாள். சித்ரா “சாப்பிடு அபர்ணா..” என்றார்.

அபர்ணா ”எங்க சித்தி அவர்,” என்றாள்.

வித்யா “வாக்கிங் போயிருக்கான் போல..” என்றார்.

அபர்ணாவின் அன்னை “பூரி பொங்கல் ரெடியாக இருக்கு டா.. சாப்பிடு முதலில்” என்றார்.

அபர்ணா “வரட்டும், எல்லோரும் வரட்டு.. அவர் வரட்டு ம்மா” என்றாள்.

பெண்கள் ஒன்றும் சொல்லவில்லை.. சிரித்தபடி அமைதியாகிவிட்டனர்.

தரணிக்கு, மது மேல் கோவமாக வந்தது. நான் அந்த ஷிவாவே வேண்டாம் என சொல்லுகிறேன்.. இவள் ஸ்ரீயிடம் வந்து நிற்கிறாள்.. அப்போ இங்கே இவள் வந்தது இதற்குதானா? எத்தனை நாள் ஸ்ரீயோடு பேசாமலிருந்தாள்.. இப்போது எதற்கு பேசுகிறாள்.. இப்படி மாறிட்டியே மது.. அந்த அளவுக்கா.. அவன் உனக்கு வேண்டும்.. என தீராத கோவம் அவனுக்கு.

ஷ்ரவன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.. மதுவிடம் வந்து சொல்லிக் கொண்டு சென்றான் மது “ஈவினிங் சீக்கிரம் வந்திடு..” என்றாள். தம்பி தலையசைத்து சென்றான்.

ஸ்ரீ, வாக்கிங் முடித்து வந்து, காலை உணவை மனையாளோடு பேசியபடியே உண்டான். மற்ற யாரும் அங்கே வரவில்லை. இருவர் மட்டுமே இருந்தனர்.

மது தரணி இருவரும் தாமதமாகத்தான் அமர்ந்து உண்டனர். பெரியவர்கள் எல்லோரும் உண்டு முடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் உண்ணவில்லை.

ஸ்ரீ, வந்து “மதுவோடு மருத்துவமனை செல்ல வேண்டும் தரணி நீ. அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கு பதினோரு மணிக்கு, நான் வர முடியலை.. போயிட்டு வாங்க.” என சொன்னதால்.. இருவரும் உண்டு கிளம்பினர்.

கால் டாக்ஸியில் சென்றனர்.

போகும் போதிலிருந்து மது பேச தொடங்கிவிட்டாள் ”ஏன் தரணி, என்கிட்ட பேசவேயில்ல நீ. நான் என்ன அவ்வளோ பெரிய தப்பா செய்தேன்” என்றாள்.

தரணி “ஏன் மது உனக்கு புரியலையா.. ஏன் நீயாக சென்று பிரச்சனைக்குள் சிக்குற.. இதில் எதுக்கு ஸ்ரீ. அவன் உனக்குன்னா.. யோசிக்கவே மாட்டான்.. செய்வான். ஆனால், ஷிவா வேண்டாமே” என்றான் மீண்டும்.

மது “ஏன் தரணி ஷிவா மேல அப்படி என்ன கோவம் உனக்கு. என்னை மாதிரி ஏ.. ஏமார்ந்து வந்திருக்கார்.. என்போல.. அவ்வளவுதானே” என இவள் சொல்ல.. தரணி திரும்பி பார்த்தான் இவளை.

மதுவின் கண்ணகள் கலங்கி இருந்தது.. அ.. அன்று போல. இப்போது மீண்டும் கலங்குகிறாள்.. எனத்தான் முதலில் தோன்றியது, தரணிக்கு. ஏதும் பேசவில்லை மது. அவனும் அமைதியாகிவிட்டான்.

மருத்துவமனை வந்து இருந்தது. இருவரும் உள்ளே சென்றனர் எந்த இடம்.. எங்கே.. என விசாரித்து அமர்ந்தனர். அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவரை சந்தித்தனர். மதுவின் ரிபோர்ட்ஸ் எல்லாம் பார்த்தார்.. அவளின் இப்போதிய நிலையும் பரிசோதித்தார், மருத்துவர்.

அரை மணி நேரத்தில் வெளியே வந்தனர். மதுவின் பின்கை விரலின் தோல் சுருங்கி இருப்பதை பார்க்க வந்தனர். சர்ஜரி ஆப்ஷ்ன் இருக்கு, வேண்டுமானால் செய்யலாம், ஆனால், அதன் பிறகு அதிக கவனம் தேவையாக இருக்கும். வெயிட் எடுக்க கூடாது சூடுபட கூடாது.. என நிறைய சொல்லினர். அவரின் அறிவுரை.. இப்படியே இருக்கட்டும் என சொல்லி, லேசர் சிக்கைக்கு வழி சொன்னார். அத்தோடு சிலபல களிம்புகள் தந்தார்.

மது பெரிதாக மருத்துவரின் அறிவுரையை காதில் வாங்கவில்லை.. நான் வந்த காரியம் வேறு.. இது பெரியவர்களின் பேச்சுக்காக என அமர்ந்துக் கொண்டாள்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து நின்றனர் இருவரும். வந்தது போலவே மீண்டும் டாக்ஸியில் வீடு சென்றனர். இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

தரணி எல்லோரிடமும்.. மதுவின் மருத்துவம் பற்றி எடுத்து சொல்லினான்.

மதிய உணவு நேரம் பெரியவர்கள் எல்லோரும் உண்டனர். மது உண்பதற்கு வரவில்லை.. “பசிக்கலை, அப்புறம் சாப்பிடுகிறேன்” என்று விட்டாள்.

வீட்டில் எல்லோரும் அபர்ணா உற்பட ‘ஏன் பசிக்கலை.. கொஞ்சமாக சாப்பிடு..’ என்றனர். 

தரணிதான் “இல்ல, ஹாஸ்ப்பிட்டலில் இருந்து வரும் போதே.. ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம்.. விடுங்க, பசிக்கும் போது சாப்பிடட்டம்” என்றான், அவளை ஒத்து பேசி.

தரணி உண்டு முடித்து, ஸ்ரீயோடு மது இருக்கும் இடம் சென்றான். மது தனி அறையில் இருந்தாள். தரணி “நீ என்ன நினைக்கிற ஸ்ரீ. அவள் உன்னை தேவையில்லாமல் இதில் இழுத்து விடுறா.. அவனை பார்த்தாலே உனக்கு பிடிக்காது.. கையில் குழந்தை.. இது சரி வராதுன்னு சொல்லிடு” என்றான்.

மது “ஸ்ரீ, பரவாயில்ல.. நான் பார்த்துக்கிறேன் ஸ்ரீ.. நீங்க எல்லாம் என் சொந்தம்ன்னு நினைச்சி இதை சொன்னேன். நா.. நான் பார்த்துக்கிறேன்.. இ..இப்படி  நடக்கும்ன்னு தெரியலை.. ஷிவா கிட்ட சொன்னேன்.. அவரும் புரிஞ்சிக்கலை.. க்கும்..” என சொல்லி எழுந்துக் கொண்டாள், அடுத்து என்ன பேசுவது என தெரியாமல்.

ஸ்ரீ “என்ன சொன்னார்.. அவர்..” என்றான்.

மது “அவர் இது சரியில்ல.. என்னால் ஏற்க முடியாதுன்னுற மாதிரி   சொல்லிட்டார். உண்மையாகவே எனக்கு புரியலை.. நான் என்ன அவ்வளவு தப்பான மனிதரைய தேர்ந்தெடுத்திருப்பேன்.. இல்லை, இப்படி உலக வழக்கில் நடந்ததே இல்லையா.. என்ன தரணி, நான் இப்போ.. உன் அண்ணனிடம் சொன்னது தப்பு அப்படிதானே.. நானே பார்த்துக்கிறேன்.. போட, சாரி ஸ்ரீ அத்தான்” என்றவள் அப்படியே வெளியே சென்றாள்.

ஸ்ரீ “மது.. மது” என அழைக்க அழைக்க வெளியே சென்றுவிட்டாள் பெண்.

ஸ்ரீ “ஏன் டா” என்றான்.

தரணி “வேற எப்படி சொல்றது, நல்லா இருக்கா.. இது. கோவிச்சா.. கோவிச்சுக்கட்டும். நீ ஏதும் அவளுக்கு ஹெல்ப் பண்ணாத… அத்தையும் மாமாவும் எப்படி கஷ்ட்டபடுவாங்க.. அவளுக்கு என்ன.. ஏது.. என புரியலை.. இந்த கையை கொஞ்சம் கவனித்து.. கல்யாணம் செய்திடணும்..” என்றான் அக்கறையாய்.

ஸ்ரீ பொறுமையாக “ஷிவா எங்க வேலை பார்க்கிறார்.. என்ன செய்கிறார்” என்றான்.

தரணி “என்ன நீ.. நான் வேண்டான்னு சொல்றேன்..” என்றான்.

ஸ்ரீ “சரி டா, ஒரு பெண்.. அதுவும் மது, அவரை பிடிச்சிருக்குன்னு கேட்க்கிறா.. யாரு என்னான்னு பார்க்கணுமில்ல.. சும்மா, உன்னை போல, நான் சொல்ல முடியாதில்ல” என்றான்.

தரணி, வேண்டா வெறுப்பாக ஷிவா பற்றி தனக்கு தெரிந்ததை சொன்னான். 

ஸ்ரீ கேட்டுக் கொண்டான் “பெங்களூர்ல எந்த  கம்பனி” என்றான்.

தரணி “தெரியலை.. பாலாஜியை கேட்கனும்” என்றுவிட்டான்.

ஸ்ரீ, இப்போதே பாலாஜியிடம் பேசு என்றான்.

தரணி “டேய்.. ஏன் டா, உனக்கும் புரியாதா..” என்றான்.

ஸ்ரீ “நான் பார்த்துக்கிறேன் நீ பாலாஜி நம்பர் கொடு” என்றான்.

தரணிக்கு கோவமாக வந்தது.. தானே போன் செய்து ஸ்ரீயை பாலாஜிக்கு அறிமுகம் செய்தான்.

இப்படியாக ஸ்ரீயின் வேலை தொடர்ந்தது.

இரவு எல்லோரும் பத்துமணி ட்ரைன்னில் சென்னை கிளம்பினர்.

ஸ்ரீயும்.. ஷ்ரவனும் வழியனுப்ப வந்திருந்தனர். ஸ்ரீக்கு, மனையாளை பிரிவது கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. யாரிடமும் ஏதும் பேசவில்லை.  மதுவிடம் எந்த உறுதியும் தரவில்லை. 

மது, தரணியிடம் அதன்பின் ஏதும் பேசவில்லை.. தரணியும் அப்படியே.

காலையில் சென்னை வந்து இறங்கினர். அபர்ணாவின் குடும்பம் அப்படியே ஊர் சென்றனர். மதுவின் குடும்பம் வீடு வந்து சேர்ந்தனர்.

இயல்பான நாட்கள் தொடங்கியது.

மதுவிற்கு, ஏன் ஷிவா பேசவில்லை என தோன்றியது. தன் செய்தியை பார்த்தவன் ஏன் எனக்குப் பதில் அனுப்பவில்லை.. என தோன்றியது. ஆனால், அவனை அழைக்கவில்லை.. ஸ்ரீ அத்தான் பதில் சொல்லட்டும் பேசலாமென அமைதியாக இருந்தாள். ஸ்ரீயை முழுதாக நம்பினாள்.

ஸ்ரீ இந்த பதினைத்து நாளில் ஷிவாவை பற்றி எல்லாம் பாலாஜி மூலமாக தெரிந்துக் கொண்டான். இப்போது பாலாஜியும் ஸ்ரீயும் நன்றாக பழகி இருந்தனர். 

பாலாஜிக்கு, மதுவிற்கு தன் நண்பனை பிடித்திருக்கிறது என சொல்லி ஸ்ரீ பேசவும் பாலாஜி ஸ்ரீயின் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உண்மையான பதிலை சொன்னான்.

ஸ்ரீக்கு அந்த உண்மை கொஞ்சம் வலித்தது.. தரணி சொன்னது போல.. இது தேவையா இவளுக்கு.. எனத்தான் தோன்றியது.

அடுத்து பாலாஜி இவர்களின் விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டான், ஷிவாவின் பெற்றோரிடம் இதை கொண்டு சென்றான்.

நாட்கள் பறந்தது. 

ஷிவா சென்னை வந்து சேர்ந்தான். நான்கு நாட்கள் ஒய்வுக்கு என வந்தான். வந்தவனிடம், அவனின் தந்தை திருமண விஷயத்தை பேச தொடங்கினார்.

ஷிவாவிற்கு, யாரிடம் தன் ஆற்றாமையை காட்டுவது என தெரியவில்லை. எல்லோரும் குழந்தை குழந்தை என சொல்லி.. மதுவை உயர்வாக பேசி.. அவனை கார்னர் செய்தனர். ஆனால், ஷிவா.. மதுவை பற்றி மட்டுமே யோசித்தான்.

திருமணம் என்பதன் முழு பொருளும் இப்போது அவனுக்கு தெரியும்.. அதில் நிறைய கற்பனைகள் இருக்கும் அவளுக்கு.. இல்லை, எந்த பெண்ணுக்கும் அப்படிதானே.. தன் கணவன் இப்படி இருக்க வேண்டும்… ஆசையாக பேச வேண்டும்.. அன்பாக அணைக்க வேண்டும்.. இவர் என்னுடையவர்..  என்ற அந்த பிடிப்புதானே.. நீண்ட காலம்.. அந்த உறவை எடுத்து செல்லும்.. காலமும் சூழ்நிலையும் மாறும் போது. ஆனால், எனக்கு அன்பு காட்ட வருமா.. அவளை என்னால் பிடித்து வைக்க முடியுமா.. என மனம் மீண்டும் ஒரு பெண்ணை அந்த அளவுக்கு ஏற்குமா.. மனம் உண்டா.. என அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான்.

ஆனால், மது விரும்புகிறாள். குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாய்.. இந்திய சட்டபடி.. உனக்கு திருமணம் ஆனால்தான் தத்தெடுக்க முடியும்.. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பாய்.. முடிவெடு.. நாங்கள் சொல்லுவதை கேள். என பாலாஜி.. அன்னை தந்தை.. என எல்லோரும் விரட்டினர் ஷிவாவை.

ஷிவா முடிவை எடுக்கவேயில்லை. வீட்டில் நிற்கவேயில்லை.. எங்கோ வெளியிலேயே இருந்தான். வீட்டிற்கு வந்தாலே.. திருமணம் திருமணம் என பேச்சு எழ.. ஷிவா, கோவமாக என்ன செய்வது என  தெரியாமல்.. குழந்தையை தூக்கிக் கொண்டு.. பெங்களூர் சென்றுவிட்டான்.

பின் கோதை சென்றார்.

ஸ்ரீ இங்கே சென்னையில்.. அத்தை மாமாவிடம் பேசினான். எல்லோருக்கு அதிர்ச்சி.. என்னது.. மது விரும்புகிறாளா.. அதுவும் அந்த ஷிவாவையா? என அதிர்ச்சி.

சித்ரா ஒடிந்து போனார்.. மதுவிடம் பேசவேயில்லை.. வித்யாதான் தேற்றினார். தண்டபாணி அமைதியாகிவிட்டார். யாருக்கும் மனதில்லை.

மீண்டும் சிலநாட்கள் கடந்தது.

மது தன் தந்தையிடம் பேசினாள்.. ”ஏன் அப்பா, ஷிவாவை உங்களுக்கு பிடிக்கலையா.. ஸ்ரீ அத்தான் எல்லாம் சொன்னாரே நீங்க என்ன நினைக்கிறீங்க..” என்றாள்.

தந்தையாக அவருக்கு ஆற்றாமை “ஏன் மது அப்பாவை நீ நம்பவேயில்லையா.. எனக்கு ஒரு வாய்ப்பு தர மாட்டியா.. முன்பு எதோ நடந்துவிட்டது.. அதனால், என்னை நம்பவில்லையா ம்மா..நீ” என்றார்.

மது “அப்பா, என்ன அப்பா இப்படி எல்லாம் பேசறீங்க. என் மனசுக்கு பிடிச்சிருக்கே ப்பா..  நீங்க என்னை நம்பவில்லையா ப்பா… நான் நான், இவரை க்… கல்யாணம் செய்வது.. ஏன் ப்பா.. பிடிக்கலையா ப்பா” என்றாள்.

தண்டபாணி அமைதியாக “சரி, என் நிலையை சொல்லுகிறேன்.. உனக்கு தெரியாதது இல்லை.. கையில் குழந்தையோடு நிற்கிறான் ஒருவன்.. என் பெண் அவனை திருமணம் செய்து வை என்கிறாள்.. அவனும் ஏதேதோ.. சுமையை தோளில் சுமந்துக் கொண்டு நிற்கிறான். அத்தோடு.. இது அவனுக்கு இரண்டாம் திருமணமா.. இல்லை, முதல் திருமணமா தெரியவில்லை.. பெண்ணை பெற்றவன் என்ன செய்வான் சொல்லு.. எனக்கு தெரியவில்லை மது” என்றார்.

மது அமைதியானாள்.

தண்டபாணி “நீ நல்லா இருக்கனும்மா.. அதுபோதும் எங்களுக்கு..” என்றார் தழுதழுத்த குரலில்.

மது “ப்பா, யாருக்குதான் பிரச்சனை இல்ல.. ஏன் நம்ம குடும்பத்திலில்லை.. நாம் அதை பார்க்கலை..” என்றாள். 

அமைதியானார் தந்தை. மது தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டாள்.. இருவரும் ஏதும் பேசவில்லை.. இருவர் கண்ணிலும் வேறு வேறு ரூபத்தில் எதிர்காலம் தெரிந்தது. ஒருவருக்கு.. பயத்தை தந்தது. ஒருவருக்கு நம்பிக்கையை தந்தது. நம்பிக்கை தெரிந்த கண்கள்.. தந்தையின் பயந்த விழிகளை நோக்க.. அவரின் கண்களில் அமைதி வந்தது.

ஸ்ரீக்கும் அபர்ணாவிற்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதில் சற்று வீடு அமைதி நிலை கொண்டது. அந்த குழந்தையை பார்த்து வர.. பேர் வைக்க என பரபரப்பானது வீடு.

சில நாட்களில் ஷிவா வீட்டின் சார்பாக பாலாஜி வந்து பேசினான், மதுவின் பெற்றோரிடம். ஸ்ரீ பாலாஜி தண்டபாணி சித்ரா வித்யா பெரியவர்கள் மட்டுமே இருந்தனர்.

தரணி எதிலும் தலையிடவில்லை.. மதுவிடம் பேசவில்லை.. தன் அண்ணனோடு பேசவில்லை.. இப்படி நிறைய முரண்கள் அந்த வீட்டில்.

தண்டபாணி, பெண்ணின் முகத்தை பார்த்தார்.. அன்று போல.. அவளின் கண்ணில் ஏதும் கலக்கம் இருக்கிறதா என பார்த்தார்.. கலக்கம் ஏதுமில்லை.. ஆர்வம்தான் தெரிந்தது என கணித்தவர்.. சம்மதம் என்றார். சித்ரா ஒன்றும் சொல்ல முடியாமல் ஊமையானார். 

வேலைகள் வேகமாக நடந்தது..

கபாலீஸ்வரர் கோவலில் சிவஷங்கர் மதுப்ரியா திருமணம் எளிமையாக நடந்தது. பிரகாரத்தில் உமாமகேஷ்வரன் காட்சி கொடுக்க.. ஷிவா மது கழுத்தில் மஞ்சள்பொன் தாலி அணிவித்தான். எண்ணி எண்ணி பத்து நபர்கள்தான் திருமணத்தில். ஆசீர்வாதமும் வாழ்த்துகளும் மட்டும் கோடிகோடியாக தேவர்களிமிருந்தும்.. அங்கிருந்த எல்லோரிடமிருந்தும்  வந்து சேர்ந்தது. 

வேறு எந்த சம்பர்தாயமும் இல்லை.. சுவாமி அம்பாளை தரிசித்துவிட்டு.. நேராக மதுவின் வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

காலை உணவு உண்டனர். ஒரு சலசலப்போ.. சிரிப்போ.. குறுகுறு பார்வையோ பேச்சோ ஏதுமில்லை.. ஒரு கல்யாண வீட்டிற்கான இலக்கணம் ஏதுமில்லாமல் இருந்தது அந்த இடம்.

அடுத்து மணமக்கள் நேராக ஷிவாவின் வீடு சென்றனர். உள்ளே வந்தான் ஷிவா, மது ஹால் சோபாவில் அமர, ஷிவா எங்கே என பார்க்க.. எங்கும் அவன் இல்லை.. எங்கோ அவனை காணவில்லை. மதுவின் கண்கள் தேடலோடு கண்ணீரையும் மறைத்துக் கொண்டது.

Advertisement