Advertisement

மதுர ப்ரியம்!..

2௦

ஷிவா, இந்த மாத இறுதியில் சாம்’மோடு வெளிநாடு சென்று விட்டிருந்தான். 

கோதையும் கணேசனும் சொந்த ஊர் சென்றிருந்தனர். 

மது, இப்போது பெங்களூர் வந்திருந்தாள் குடும்பத்தோடு.. அபர்ணாவின் வளைகாப்பு விழாவிற்கு. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பலவாரு பேசி.. சொல்லி.. அப்படியே கைக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு வரலாம் என சொல்லி அவளை கறையாக கரைத்து கூட்டி வந்திருந்தனர்.

ஸ்ரீக்கு, மது வந்தது அவ்வளவு ஆனந்தம். விழாவின் முதல்நாள் இவள் வந்து சேரவும், ஸ்ரீ “வா மது.. வா.. எப்படி இருக்க, போட்டோஸ்லதான் பார்த்தேன் இத்தனைநாள்.. எங்க கை காட்டு.. எத்தனை முறை கூப்பிட்டேன் நீ இங்க வா.. நிறைய ஆப்ஷன் இருக்கும், பார்க்கலாம்ன்னு கூப்பிட்டேனே.. எங்க விரலை காட்டு..” என்றான்.

மது “அ..அது பரவாயில்லை.. நல்லாகிடுச்சி.. ஒண்ணுமில்ல..” என்றாள். ஆனால், மதுவிற்கு கண்ணில் நீர்தான் வந்தது அவனின் அக்கறையில், எதையும் காட்டாமல் தன் அம்மாவோடு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

ஸ்ரீ “அத்தை இங்க பார்க்கலாம் அத்தை இப்போதும் சுருக்கம் எல்லாம் போகிடும் அத்தை.. பார்க்கலாம்” என்றான்.

அபர்ணா “வாங்க மது, இவர் மேல உங்களுக்கு, கோவம்ன்னு சொல்லுவார். தினமும் உங்க பேரை எப்படியும் நாலுமுறை சொல்லிடுவார். நீங்க எப்போது கோவம் தீர்ந்து வீட்டுக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தார்..” என்றாள் எல்லாம் தெரியும் என்ற பாவனையில்.

மது அதிர்ந்து ஸ்ரீயை பார்க்க.. ஸ்ரீ சிரித்துக் கொண்டே நின்றிருந்தான். அபர்ணா இந்த பார்வையை உணர்ந்து “எனக்கு இவரை காலேஜ் படிக்கும் போதே தெரியுமே.. அதனால் எல்லாம் சொல்லுவார்.. அதனால் உங்கள் சண்டைகள், வீட்டு நடப்பு எல்லாம் சொல்லுவார்.. நீங்க தரணியின் நட்பு.. எல்லாம் எனக்கு தெரியும். நீங்க என்னை கல்யாணம்.. அதான், அவங்க அப்பா போனதால, அந்த சொந்தத்தில் என்னை கல்யாணம் செய்துகிட்டது உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லுவார்.. அதான் சொன்னேன்.. கோவப்படாதீங்க.. இப்போவாது வந்தீங்களே” என்றாள் சின்ன குரலிலே சொன்னாள் பெண்.

தரணிக்கு சிரிப்பே வந்தது “அண்ணி, போதும் உங்க புருஷன் பெருமை.. வாக்கிங் போறீங்களா.. என்ன இப்படி மூச்சு வாங்குது” என்றான்.

அபர்ணா “அதேங்க போறது, மழைதான். வீட்டிலேயே கால் விறு விறுன்னு இருக்கு.. எங்க வாக்கிங் போக.. இல்ல தரணி“ என்றாள்.

தரணி “என்ன நடக்கறதே இல்லையா, சாப்பாடு செய்யறீங்களா” என வாய் வளர்த்தான்.

அபர்ணா “நானேதும் செய்யறதில்ல.. அதான் பாட்டி வந்திருக்காங்களே.. அவங்கதான் எல்லாம்” என்றாள், தங்களின் அதாவது, தரணி ஸ்ரீ என இரு மகன்களை பெற்ற தந்தையின், பெற்றவரைக் காட்டி.

தரணி அமைதியாகிவிட்டான். அவன், தன் பாட்டியோடு பேசுவதில்லை. அத்தோடு அபர்ணாவின் அன்னை தந்தை, தன் அத்தை மாமாவோடு பேசுவதில்லை.. அவர்களாக “எப்படி இருக்கப்பா” என்றால்.

இவன் ‘நல்லா இருக்கேன்’ என பதில் அவ்வளவுதான்.

வித்யா, பேச தொடங்கிவிட்டார் எல்லோரோடும். ஆனால், தரணி இன்னும் சகஜமாகவில்லை. அதிலும், பாட்டியோடு அவன் பேசவே மாட்டான்.. முன்பு அவர்கள் பேசிய விதமும், தன் அன்னையை திட்டிய விதமும்.. இன்னும், அவன் மனதிலிருக்கிறது போல.. ஏதும் பேச மாட்டான், தரணி.

ஷ்ரவன் வந்து சேர்ந்தான் இரவு. தன் அக்காவிடம் எதோ மாற்றம் வந்துவிட்டதாக அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் “பரவாயில்ல கா, நீ வளர்ந்துட்ட.. கொஞ்சம் பக்குவம் வந்திடுச்சு” என சொல்லி கிண்டல் செய்துக் கொண்டே இருந்தான்.

ஸ்ரீதான் “ஏன் டா, அவளே இப்போதான் வந்திருக்கா.. பேசியே நீ தொரத்திடுவ போல.. அவளை விடு, நீ வா.. நாம பேசலாம்..” என மதுவிடமிருந்து, ஷ்ரவனை அந்த பக்கம் கூட்டி சென்றான், ஸ்ரீ.

மறுநாள் 

அபர்ணாவின் சொந்தம் என அன்னை தந்தை உற்பட பத்து நபர்கள் வந்திருந்தனர். ஸ்ரீயின் சார்பாக இவர்கள். சின்ன அளவிலான விழா.. வீட்டு மனிதர்கள்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என சின்ன கூட்டத்தோடு தொடங்கியது, விழா.

வித்யா திருமணத்தின் போது வேண்டா வெறுப்பாக இருந்தார்.. அதனால் தன் மருமகளுக்கு என தனியாக ஏதும் செய்யவில்லை.. இன்று செய்தார். பவுனில் நிறைவாக ஒரு அணிகலன் செய்திருந்தார். சித்ரா தண்டபாணிக்கு மட்டுமே தெரியும். ஸ்ரீயின் கையில் கொடுத்து அணிவிக்க சொன்னார்.. எல்லோருக்கும் ஆச்சர்யம்.. வித்யாவின் கோவம் தீர்ந்துவிட்டது என அபர்ணாவின் குடும்பம் முதலில் சந்தோஷம் கொண்டது.

உணவு வீட்டிலேயே பெண்கள் எல்லோரும் சேர்ந்து.. செய்திருந்தனர்.. எனவே, வேலை எல்லோருக்கும் சரியாக இருந்தது. மது, இயல்பாக கிட்செனில் நின்றாள்.. இத்தனை நபர்க்ளுக்கு அளவு பார்த்து சரியாக தன்  அத்தையோடு செய்தாள். அபர்ணா இதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

எல்லோரும் உண்டு முடித்தனர் அபர்ணாவிற்கு மதுவின் சமையல் அவ்வளவு பிடித்திருந்தது மனதாரப் பாரட்டினாள் ”மது, எப்படி மது.. சாப்பாடு சூப்பர்.. தேங்க்ஸ் மது” என்றாள்.

வித்யா “மது கைப்பக்குவம் எப்போதும் அருமையா இருக்கும்.. எல்லாம் என் வளர்ப்பாக்கும்” என்றார் பெருமையாக. எல்லோரும் உண்மை என ஒத்துக் கொண்டனர். வித்யாவின் சமையல் பற்றி எல்லோருக்கும் தெரியுமே. அவரும் அருமையாக சமைப்பார். 

நேரம் சென்றது, அபர்ணாவை அழைத்துக் கொண்டு, நாளைதான் அவர்கள், தங்கள் ஊர் செல்லுகிறார்கள். எனவே.. எல்லோரும் அன்று இரவு அங்கேயே தங்கினர்.

இரவு உணவின் போது வீடு கலகலப்பாக இருந்தது. அபர்ணாவின் சமையல் பற்றி ஸ்ரீ புகழ்ந்துக் கொண்டிருந்தான்.. “அவ சமையலிலே வெள்ளி கிழமை சமையல்தான் ரொம்ப சூப்பரா இருக்கும். அன்னிக்கு மட்டும் நாலு ஐந்து ஐட்டம் செய்வா.. தரணி. சாம்பார் கூட்டு ரசம்.. தனியாக பொறியல்ன்னு செய்வா.. அதே சமயம் சாமானும் அதிகம் இல்லாமல் செய்வாள்.. மது நம்ம அம்மா எல்லாம் என்ன சமைக்கிறாங்க.. நான் காலையில் வேலைக்கு போகறதுக்குள்ள இதெல்லாம் டேபிளில் தயாரா இருக்கும்.” என்றான் பெருமையாக.

அபர்ணா “வேண்டாங்க.. விட்டுடுங்க.. “ என்றாள்.

தரணி ”அண்ணி.. இருங்க.. அவன் மனக் குமறளையும் கேட்கனுமில்ல.. பாவம் பையன் எத்தனை நாள் அவஸ்த்தைப்பட்டானோ” என்றான்.

அபர்ணா “தரணி..” என்றாள்.

சித்ரா “டேய் பசங்களா மாசமாக இருக்கிறவளை ஏன் டா இப்படி படுத்துறீங்க.. நீ போடா அபர்ணா.. காலுக்கு தண்ணீர் ஊத்திக் கொண்டு படு.. இவங்களுக்கு என்ன வேலை” என்றார்.

ஷ்ரவன் “சும்மா ம்மா.. நீ டென்ஷன் ஆகாத.. நீ சாப்பிட்டியா” எனகேட்டு தன் அன்னையை அமைதியாக்கினான். 

ஸ்ரீ “ஆனால், அந்த டிஷ்க்கு என்ன பேருன்னு தெரியலை டா. மேலாக எடுத்தால் ரசம்.. ஒரு கலக்கு கலக்கி அப்படியே எடுத்தால் சாம்பார் டா.. அப்புறம் நல்லா கலக்கி கீழாக எடுத்தால்.. கூட்டு டா.. தனி தனியா ஒரு சின்ன டப்பால போட்டு தருவாடா.. அப்பு. நாளைக்கு அதை சமைச்சிட்டுதான் ஊருக்கு போகனும் அப்பு நீ.” என்றான்.

ஸ்ரீ, பாதி சொல்லும் போதே.. எல்லோரும் சிரிக்க தொடங்கிவிட்டனர். ஷ்வரன்  “அக்கா, அப்படியா க்கா, எங்க அக்காக்கு இது தெரியாமல் தினமும் தனியா தனியா நாலு குண்டால சமைக்கிறா.. நீ ஒரு வாரம் வந்து இதை சொல்லி குடுக்கா” என்றான்.

அபர்ணா “இருங்க இருங்க… என்னை கிண்டல் பண்றீங்கல்ல.. நாளைக்கு அந்த சாம்பாரை வைக்கிறேன், எல்லோரும் சாப்பிட்டால்தான் ஊருக்கு.. என்ன சித்தி சரிதானே..” என்றாள் தனக்கு சப்போர்ட் செய்த சித்ராவை பார்த்து.

ஷ்ரவன் “மாம்ஸ்க்கு, ஒரு அபர்ணா அக்கா சாம்பார் பார்சல்.. பின்குறிப்பு பிரிட்ஜில் வைத்து சாப்பிடுமளவு செய்து வைக்கவும். என்ன மாம்ஸ் ஓகே வா..” என்றான் ஸ்ரீ பக்கம் திரும்பி.

ஸ்ரீ “நல்லவன் டா நீ” என்றான் முறைத்த படியே.

மது இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல்.. போனோடு பால்கனியில் அமர்ந்திருந்தாள். ஷிவா வெளிநாடு சென்றது தெரியாமல்.. அவனுக்கு மெசேஜ் செய்துக் கொண்டிருந்தாள்.. ‘நான் பெங்களூர் வந்திருக்கேன்’ என.  

ஆனால், அந்த எண் பாலாஜியிடம் இருந்தது இப்போது. ஷிவா வெளிநாடு சென்றிருப்பதால்.. அலுவலக அழைப்பு வரும் என எண்ணி, தன் எண்ணை கொடுத்து சென்றிருந்தான், ஷிவா. 

பாலாஜிக்கு இதுவரை வந்த செய்திகள் அழைப்புகள் எல்லாம்.. அலுவலக அழைப்புகள் செய்திகள்தான். இப்போது மதுவிடமிருந்து செய்தி வரவும்.. பாலாஜி யோசனையோடு அதை பார்க்க தொடங்கினான்.

பெரியவர்கள் எல்லோரும் ஹாலில் உறங்கத் தொடங்கினர்.

தரணி ஷ்ரவன் ஸ்ரீ மூவரும் வாசல் வராண்டாவில் பேசிக்கொண்டிருக்க.. அபர்ணா மதுவிடம் வந்தாள்.. இரவு உடை அணிந்து.. நன்றாக மேடிட்டிருந்த வயிற்றுடன்.. வந்து ஜுலோவில் அமர்ந்தாள்.

அபர்ணா “மது கிட்ட ஒன்னு கேட்க்கலாமா?” என்றாள், அமைதியான குரலில்.. வேண்டுதல் அதிலிருந்து போல.

மது யோசனையோடே “சொல்லுங்க அபர்ணா” என்றாள்.

அபர்ணா “ஏன்.. இன்னும் கல்யாணம் செய்துக்கலை நீங்க.. எ ..என் வயது உங்களுக்கு. இப்படியே வேலை வேலைன்னு எத்தனை நாள்.. பாவம் சித்த்ப்பா சித்திக்கும் ஆசை இருக்குமில்ல.. நான் கேட்பது அதிகப்படிதான். ஆனால், எனக்கு மனதில் வைக்க முடியலை.. இங்கே வந்திருக்கீங்க, மனது கஷ்ட்ட பட கூடாதுன்னு தான் நினைச்சு கேட்கலை. ஆனால், எல்லோரும் உங்களை நினைச்சு கஷ்ட்ட்படறாங்கன்னு உங்களுக்கு தெரியாமலா இருக்கும்.. அதுவும், உங்க அத்தை.. இங்க இருந்த நாளெல்லாம் ஸ்ரீ கிட்ட பேசின பேச்சு உங்களை பத்திதான். நான் பேசவா, எல்லோர் கிட்டயும்.. ஏதாவது மனதில் இருக்கா.. நான் சித்தப்பா கிட்ட பேசறேன்.. சொல்லுங்க, எப்படி மாப்பிள்ளை வேணும் உங்களுக்கு” என்றாள்.

மது அபர்ணாவின் கண்களை நேராக பார்த்தாள்.. என்ன நினைத்தாளோ “உண்மையாகவா, அபர்ணா..” என்றாள்.

அபர்ணா சந்தோஷமான முகத்தோடு “லவ்..வா.. ம்..” என்றாள் புருவம் உயர்த்தி.

மது, மனத்துள் அதுகெல்லாம் கொடுப்பனை இல்லை.. என தன்னை தானே எண்ணிக் கொண்டாள், சிரிக்க முடியாமல்  அமைதியானாள் ”நீ ஸ்ரீயை கூப்பிடுங்க..” என்றாள் திடமான குரலில். பாவம் அந்த வாயும் வயிறுமாக இருக்கும் பெண்ணுக்கு.. வர போகும் பூகம்பத்தின் அளவு தெரியவில்லை. சந்தோஷமாக போனில் தன் கணவனுக்கு அழைத்து “மது உங்ககிட்ட பேசனும்மாம்.. வாங்க” என சொல்லி, உள்ளே வர சொன்னாள்.

ஸ்ரீயோடு தரணி ஷ்ரவன் எல்லோரும் உள்ளே வந்தனர். இரண்டாவது மாடியில் வீடு. ஸ்ரீயின் அலுவலக்த்திருக்கு அருகில் என்பதால் கொஞ்சம் போக்குவரத்து சத்தம் கேட்க்கும். பொதுவான பால்கனிதான். ஹாலில் எல்லோரும் உறங்கியிருந்தனர்.

மூவரும் உள்ளே வந்தனர்.

அபர்ணா “சொல்லு மது.. என்ன விஷயம்ன்னு சொல்லு” என்றாள்.

மது அழுத்தமாக எல்லோரையும் பார்த்தாள்.

அபர்ணா “எதுவாக இருந்தாலும் சொல்லு மது பெரியவங்ககிட்ட நாங்க.. உங்க ஸ்ரீ அத்தான் பேசுவார்..” என்றாள்.

மது தரணியை பார்த்தாள்.

தரணி எழுந்துக் கொண்டான் என்ன சொல்லுவாளோ என அவனிற்கு பயம்.. பேசவும் முடியாமல்.. அமைதியாக இருக்கவும் முடியாமல் திணறினான்.

மது அமைதியாக இருந்தாள்.

ஸ்ரீ “எ..என்ன மது” என்றான்.

தரணி அமர்ந்தான் இப்போது.

மது “அ.. க்கும்.. அது கொஞ்ச நாள் முன்னாடி ஷிவான்னு ஒருவரை சந்தித்தேன்..” என தொடங்கினாள்.. தனக்கு தெரிந்ததை எல்லாம் சொன்னாள் “கையில் ஒரு வயது மகனோடு இருக்கிறார்.. நான் அவர்கள் வீட்டுக்கு சென்றேன்.. பேசினேன்.. பிடித்தது.. சாம் சமத்து.. எனக்கு அவரை பிடித்திருக்கிறது.. நீங்க அப்பா அம்மாகிட்ட பேசுங்க, அதுக்கு முன்ன ஷிவா கிட்ட பேசுங்க..” என்றாள்.

ஒருமணி நேரம் சத்தமே இல்லை அந்த இடத்தில்.. அபர்ணா வாயில் கை வைத்து அமர்ந்துக் கொண்டாள்.. ’என்னது குழந்தையோடு இருப்பவரை திருமணம் செய்து வைக்கணுமா’ என அதிர்ந்தவள் வாய்மூடவில்லை.

ஷ்ரவன், எழுந்து நின்றுக் கொண்டான். அவனுக்கு உலகம் இப்போதுதான் தெரிய தொடங்கி இருக்கிறது. வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறானே.. அப்போது உலகம் பிடிபட தொடங்கி இருக்குமே.. ஆனாலும், இதற்கு என்ன பதில் பேசுவது என தெரியாமல் நின்றுக் கொண்டு வானத்தை வெறித்தான்.

பின் திரும்பி ஷ்ரவன் “எப்படி தைரியமா பேசறா பாருங்களேன் மாமா..” என்றான் பற்களை கடித்துக் கொண்டு.

அபர்ணா “சத்தியமா நான் எதிர்பார்க்கலை மது.. சாரி மது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. வேண்டாம் மது.. வெளிநாட்டு தொடர்பு வேறு.. என்ன மது இது.” என்றாள் கரகரப்பான குரலில்.

தரணி “ஏன் மது.. அவன் திரும்பவும் அங்கேயே போயிட்டான் மது.. உனக்கு தெரியாது, அவர் இப்போ இந்தியாவில் இல்ல.. மது.. நீ வீம்புக்கு செய்கிறாய் மது.” என்றான்.

மது அமைதியாக இருந்தாள்.

ஸ்ரீ ”உனக்கு தெரியுமா டா… முன்னாடியே..” என்றான்.

தரணி “இப்போதான்… கை அடிபட்ட போதிலிருந்து தெரியும்.. நான் நிறைய சொல்லிட்டேன்.. கேட்கல.. இப்போ அவர் இங்க இல்லை..” என்றான்.

மது “அதெல்லாம் இங்கதான் வருவார்… இப்போது சாம்’மோட போகணும்ன்னு போயிருக்கார்.. வருவார்.” என்றாள் அழுத்தமாக.

தரணி “உனக்கு எப்படி தெரியும், உன்கிட்ட சொல்லிட்டு போனாரா.. சொல்லு.. இன்னமும் பேசுறியா.. உன் போனில் அப்படி ஏதுமில்லையே..” என்றான் அவசரமாக.

மது “ஓ.. இதெல்லாம் வேற செக் செய்யறீயா நீ.” என்றாள் முறைத்துப் பார்த்து. 

தரணியும் முறைத்தான்.

மது “இத்தனை பேர் இருக்கீங்க.. எனக்கு என்னான்னு சொல்லிட்டேன்.. இவனுக்கு அவரை தெரியும்.. பேசுங்க, ம் அவர் ஒத்துக்க மாட்டார்.. அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுங்க. எ.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. அவர் கூட இருந்தால்.. ச்ச.. பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்” என்றவள் எழுந்தாள்.

மற்ற நால்வரும் என்ன பேசுவது என தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

மது எழுந்து, தன் அன்னையின் அருகே சென்று படுத்துக் கொண்டாள்.

அன்பு சிலசமயம் வீரனாக்கிடும்.. சிலசமயம் கோழையாக்கிடும். இப்போது மதுவை வீரனாக்கி.. ஷிவாவை கோழையாக்கி விட்டது இந்த அன்பு.

 

Advertisement