Advertisement

மதுரப் ப்ரியம்!

2

இரவு முழுவதுவும் சாம்’மும் அவனின் தந்தை ஷிவாவும் விளையாடியே தீர்த்தனர்.. இருவருக்கும் வயிறு நிறைந்து இருந்ததால் விளையாட்டு இயல்பாய் வந்தது. 

மகனுக்கு, இரவு  இரண்டு மணிக்கு பவுடர் பால் கலந்து கொடுத்தான் ஷிவா. அதன்பிறகும்.. அழுகை சாம். என்னவென தந்தை அவனை கவனிக்க.. டயப்பர் நிரம்பியிருந்தது. பின், அதனை சுத்தம் செய்து.. வெண்ணீரில் மகனை லேசாக துடைத்து.. தான் வாங்கி வந்த பவுடரை போட்டு விட்டு.. என ஷிவாவிற்கு வேலை சரியாக இருந்தது, அர்த்த ராத்திரியில்.

எப்போது உறங்கினரோ.. காலையில் பதினோரு மணிக்குதான் சாம் அழத் தொடங்கினான். தந்தைக்கு அது சுப்ரபாதமாக காதில் விழ, ஷிவா அரக்க பரக்க எழுந்து பால் கலந்தான், முதலில். 

ஷிவாவிற்கு அடுத்து அடுத்து என சாம்’மை கவனிக்க நேரம் சரியாக இருந்தது. அவனின் டயப்பர் பார்த்து.. அவனை குளிக்க வைத்து.. உடை மாற்றி.. என ஷிவாவும் மகனும் சேர்ந்து ஏதேதோ செய்துக் கொண்டிருந்தனர். உணவை ஆர்டர் செய்திருந்தான். அதனால் பயமில்லை.

ஆனால், ஜெயாம்மா இரண்டுமுறை ஷிவாவின் வீட்டை வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தார். கதவு திறக்கவில்லை.. குழந்தையின் அழுக் குரலும் கேட்கவில்லை எனவும், ஒன்றும் பயமில்லை என அவர் சமையலை முடித்தார்.

மதியம் தொடங்கும் நேரம் ஷிவாவின் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வந்தது. தனக்கு ஒரு பிட்சாவும், குழந்தைக்கு இட்லியும் ஆர்டர் செய்திருந்தான். மதிய நேரத்து இட்லி எப்படி இருக்கும்.. புளித்து.. காய்ந்து எதோ போல இருந்தது. பார்த்த ஷிவாவிற்கு என்னமோ போல ஆனது.

இப்போது தன்னுடைய உணவையும் உண்ண மனதில்லை அவனுக்கு. அடுத்து என்ன செய்வது என யோசித்த்தான். செக்யூரிட்டியை அழைத்தான். நேற்று கீழே சென்றிருந்த போது அவர்களிடம் எண் வாங்கி வந்திருந்தான். எனவே, அழைத்து “ப்ரெட் பாக்கெட்” வாங்கி வர சொன்னான்.

ஷிவா, அந்த ப்ரெட் துண்டுகளை பாலில் நனைத்து ஊட்டினான் மகனுக்கு. சாம்க்கு நல்ல பசி போல.. மறுக்காமல் உண்டது குழந்தை. ஷிவாவிற்கு மனதே சரியில்லை, என்னமோ குழந்தையை தான் கஷ்ட்டப்படுத்துவதாக ஒரு எண்ணம்.. எழுந்தது அவனுக்கு. 

‘நான் அங்கிருந்து வந்திருக்க கூடாதோ.. இவனை நன்றாக வளர்ப்பேன் என இங்கே வந்தது தவறோ.. பாவம் பிள்ளை, இந்த உணவுகளை பழக சங்கடப்படுமோ.. அத்தோடு அங்கே என்றால், சாம்மின் தாய்நாடாக அது இருந்திருக்குமோ.. அவனின் உறவினர்கள் குறிப்பாக ‘அவளின்’ அன்னையின் கவனிப்பில் இருந்திருப்பானோ.  என் மகன், என் ரத்தம்.. என பேசி வந்தது தவறோ..’ என சிதற தொடங்கியது அவனின் மனம்.

ஆக, காலையிலேயே மூட் அவுட் ஷிவாவிற்கு. மகன் கொஞ்சம் பசியாறியதும், தானும் வேண்டா வெறுப்பாக உண்டான். 

இப்போது ஷிவாவின் போன் அழைத்தது. பார்க்க, தனக்கு சென்னையில் வேண்டிய உதவிகள் செய்த தன் நண்பன் பாலாஜி அழைத்திருந்தான் அவனுக்கு. அழைப்பை ஏற்று காதில் வைக்க,  பாலாஜியோ “டேய்.. எங்க இருக்க.. என்ன செய்யற.. போனே காணோம்” என்றான்.

ஷிவா “ம்… இப்போதுதான் எழுந்தோம். சாப்பிட்டோம். அதான் கூப்பிட முடியலை, சாரி” என்றான்.

பாலாஜி “சரி.. நான் இப்போது அங்கு வரேன்.. என்ன வேண்டும் உனக்கு ஏதாவது வாங்கி வரணும்மா” என்றான்.

ஷிவா அதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டான்.

அரைமணி நேரத்தில் பாலாஜி வந்து சேர்ந்தான் ஷிவாவின் வீட்டிற்கு. பாலாஜி ஷிவாவின் நண்பன். இருவரும் நொய்டாவில் ஒன்றாக வேலை செய்தனர். அதில் பழக்கம் இருவருக்கு. பாலாஜியும், காடாறு மாசம் நாடாறு மாசம் என்பது போல.. வெளிநாடு பாதி இந்தியா பாதி என இருப்பவன். இப்போதுதான் எட்டு மாதம் ஆகிறது சென்னையில் செட்டிலாகி. இரண்டு வருடம் ஆகிறது திருமணம் முடிந்து.. அவனின் மனையாள் பிரசவத்திற்காக தாய்வீடு சென்றிருக்கிறாள்.

பாலாஜிக்கு, ஷிவாவின் கடந்த காலம் அறிந்த ஒரு சிலரில் அவனும் ஒருவன். 

பாலாஜி, வீட்டு வாசலில் நிற்க, கதவை திறந்த ஷிவாவின் கையில் இருந்தது பால் பாட்டில்தான். ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு வெற்று மேலுடம்போடு ஷிவா நின்றான், பாலாஜியின் எதிரே. ஷிவா “வா, பாலா..” என இன்முகமாக வரவேற்றான் தன் நண்பனை.

பாலாஜி, அதிர்ந்தான் ஷிவாவை பார்த்து.. அங்கே இவன் போஸ்டிங்க என்ன.. சம்பாதித்தது என்ன.. இப்போது, இங்கே வந்து அவஸ்த்தை படுவது எதற்கு.. அப்பா அம்மாவிடம் போகாமல்.. குழந்தையையும் அங்கேயே விட்டு வராமல்.. இப்படி தனியே இங்கு வந்து.. எதற்கு இதெல்லாம்’  என அவனுக்கு தோன்றியது. ஆனாலும், நண்பனின் பிடிவாதம் தெரிந்ததே என ஒரு பெருமூச்சு எழ.. சிரித்தபடியே உள்ளே வந்தான் பாலாஜி.

சாம், அழகாக.. தவழ முயன்றுக் கொண்டிருந்தான். பாலாஜியை பார்த்தும் அழுவதா.. வேண்டாமா.. என யோசனையோடு இருந்தான் போல குழந்தை.. உதடுகள் வெம்ம.. தன் தந்தையை பார்த்தான் சாம்.

ஷிவா, கைகழுவி வந்து மகனை எடுத்துக் கொண்டான் கைகளில். பின் நண்பனோடு பேச தொடங்கினான். அதன்பின் சாம்’ கொஞ்சம் இயல்பாக பாலாஜியிடம் பழக தொடங்கினான்.

பாலாஜி, ஷிவா இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.. பாலாஜி “ஷிவா, பெஸ்ட், நீ.. உங்க பரென்ட்ஸ் கிட்ட பேசறதுதான். கொஞ்சம் அவங்க வருத்தப்பட்டு பேசினாலும்.. உங்களை அவர்கள் விடமாட்டாங்க.. உங்க அப்பா என் கல்யாணத்திற்கு வந்தார் ஷிவா.. அதான் தெரியுமே உனக்கு. அவங்க அப்போதும் உங்களை கேட்டாங்க.. நீங்கதான் தெரியாதுன்னு சொல்ல வைச்சிடீங்களே.. என்னை” என்றான் ஒருமாதிரி குற்றம் சாட்டும் குரலில். 

மீண்டும் பாலாஜியே தொடர்ந்தான் “விடுங்க.. உங்களுக்காக வேண்டாம். சாம் இங்கேதான் இனி இருக்க போறான்னு முடிவு எடுத்திருக்கீங்கன்னா.. அவங்க கூட இருந்தால்தானே நல்லா இருக்கும்.” என்றான் ஆயிரத்து எழுநூற்றி எட்டாவது முறையாக.

ஆனால், அதற்கெல்லாம் ஷிவாவின் பதில் ‘மௌனம்’ மட்டுமே.

பாலாஜிதான் எப்போதும் போல வேறு பேசத் தொடங்கினான்.. “எப்போ, பர்னிச்சர் பார்க்க போகலாம்.. இங்கே, ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு.. அதில் சொல்லி.. வேலைக்கு ஆட்கள் பார்க்கலாம்.. இரு உனக்கு டீட்டைல்ஸ் அனுப்பறேன்” என சொல்லி, இந்த வீட்டின் ஓனர் அனுப்பிய செய்தியை அவனுக்கு அனுப்பினான்.

இப்படியே இருவரும் ‘எங்கே செல்லுவது பொருட்கள் வாங்க..’ என பேச்சை தொடர்ந்தனர். அது எங்கெங்கோ சென்றது, பேச்சின் சுவாரசியத்தில் குழந்தையை மறந்தனர்.

உறங்கி எழுந்திருந்த சாம், அழத் தொடங்கினான், இப்போது.

ஆண்கள் இருவருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்யாத தங்களின் தவறை உணர்ந்தனர். வேகமாக பாலாஜி உணவு ஆர்டர் செய்ய, ஷிவா மீண்டும் பால் கலந்தான். 

சாம், அந்த பாலை குடிக்கமாட்டேன் என அழ தொடங்கினான்.

நேற்று போல அழுகை அதிகமாக. ஜெயாம்மா வந்தார் இப்போதும். ஜெயாம்மாவை பார்த்ததும், சாம் குஷியாகி கை கால்களை உதைத்துக் கொண்டு தன் தந்தையிடமிருந்து.. தாவினான்.

ஜெயாம்மாவும் ஆசையாக குழந்தையை வாங்கிக் கொண்டு “காலையில் வந்து வந்து பார்த்தேன்.. சத்தமே வரலை.. எப்போ எழுந்தான் குழந்தை” என்றார்.

ஷிவா பதில் சொன்னான்.. என்ன சாப்பிட்டான் எனவும் அது சொல்ல.. ஜெயாம்மா “ஏன் பா, என்னை கூப்பிட்டிருக்கலாமே” என்றார்.

ஷிவா சங்கடமாக ஜெயாம்மாவை பார்த்தான்.

ஜெயாம்மா “நீ ஒன்னும் சங்கடப்படாத.. குழந்தைக்கு மட்டும்தானே கொடுக்க போறேன்..” என்றார் வாஞ்சையாய்.

ஷிவா “அது.. சரி ஆன்ட்டி, இன்னும் ரெண்டு நாளைக்கு நீங்க கொடுங்க, அதுக்குள்ளே நான் வேறு ஏற்பாடு செய்துக்கிறேன்.. அப்புறம், உங்களுக்கு தெரிஞ்ச.. இங்க.. வீட்டில் சமைக்கும்.. மெஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.. நாங்க பார்த்துக்கிறோம்.. ப்ளீஸ் தப்பாக நினைக்க கூடாது. அவனும் இந்த புட் ஹப்பிட்ஸ்க்கு பழகனுமில்ல..” என்றான்.

ஜெயாம்மாவும் “சரி ப்பா.. எத்தனைநாள் வேண்டுமானாலும் நான் கொடுக்கிறேன். நானும் அடுத்த மாசம் ஊருக்கு போயிடுவேன். ம், மெஸ்.. இங்க இருக்கு.. என் மருமகள் சொல்லுவாள்.. அவ அடிக்கடி வாங்கற இடம் இருக்கு.. ஆனால், சைவம் மட்டும்தான் இருக்குமாம்.. ஆனா, நல்ல இருக்கும்ன்னு சொல்லுவா.. கேட்டு சொல்றேன்.. நம்பர் வாங்கி தரேன்.. இப்போ, ஷ்யாமை நான் தூக்கி போறேன்.. பை சொல்லு ஷ்யாம்” என்றார் குழந்தையை பார்த்து சந்தோஷமாக சிரித்தபடி.

ஷ்யாம் சந்தோஷமாக, பை சொல்லி.. பாட்டியோடு சென்றான்.

பாலாஜி, அதன்பின் ’அவர்கள் யாரென’ வினவ,  நேற்று நடந்தவைகளை சொல்லினான் ஷிவா. பாலாஜிக்கு தோன்றியது ‘பா.. அழுதால் இப்படி யாரோ ஒருவர் வந்து எட்டியேனும் பார்க்கிறார்களே.. நல்ல இடம்தான்’ என தோன்றியது அவனுக்கு. 

உணவு வந்தது. இருவரும் உண்டனர். ஒருமணி நேரம் சென்று, சாம் வீடு வந்து சேர்ந்தான். சற்று அவனை உறங்க வைக்க ஆண்கள் இருவரும் நினைக்க.. அவர்கள்தான் உறங்கினர். சாம் விளையடிபடியே இருந்தான்.. பின்தான் உறங்கினான்.

மாலையில், மூவரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கிளம்பினர்.

நல்ல பெரிய கடைக்கு சென்றனர்.. பொருட்களை பார்த்து எடுத்தனர் இருவரும். பின் குழந்தைக்கு தேவையான உடைகள் வாங்கினர்.. சாம்மிற்கு என மார்டனான நடை வண்டி.. அமர்ந்து உண்ணும் சேர்.. உறங்கும் சேர்.. என வித விதமாக வாங்கினான் ஷிவா. பின் விளையாட்டு பொருட்கள் கடைக்கு சென்றனர்.. அங்கே கிரிகெட் பேட்.. ப்பால்.. வாங்கினர் இரு ஆண்களும் சேர்ந்து, பத்து மாத குழந்தை விளையாடுவதற்கு என. இப்படி தெரிந்தது தெரியாதது என வீட்டுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு இரவு உணவு முடித்து வீடு வந்தனர். மணி பத்து.

ஜெயாம்மா வாசலிலேயே நின்றிருந்திருப்பார் போல.. ஷிவா வந்ததும், அவன் வீட்டு கதவை தட்டி “ஷ்யாம் சாப்பிட்டானா..” என்றார்.

ஷ்யாம், ஜெயாம்மாவை பார்த்ததும் தாவியது, அவரிடம்.. அவர் சற்று நேரம் அவனை தூக்கி சென்றார் வீட்டுக்கு.. ஷிவா ”ஆன்ட்டி, எல்லோரும் தூங்க போடறாங்க டிஸ்டர்ப் செய்ய போறான்..” என்றான்.

ஜெயாம்மா “அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்று கூறி எடுத்து சென்றார் ஷ்யாம்’மை.

இவர்கள் வாங்கிய பர்னிச்சர் பதினோரு மணிக்கு மேல் வந்தது. எல்லாவற்றையும் இறக்கி வைத்து அரேஞ் செய்யவே மணி ஒன்று. அதுவரையில் சாம் விழித்துக் கொண்டு விளையாடியபடியே இருந்தான். பாலாஜி வீடு செல்லவில்லை.. மூவரும் ஹாலில் புது பெட் ஷீட்.. பில்லோவ்ஸ் வைத்து உறங்கினர் மூவரும்.

 

Advertisement